Thursday, November 10, 2016

36. டென்மார்க் தமிழர்களின் தமிழ் ஆர்வம்



இடைவிடாத பணிகளுக்கிடையேயும் தொடர்ச்சியான பயணங்கள் தரும் களைப்பையும் மீறி என் மனதில் புதிய உற்சாகத்தைத் தரும் வகையில் எனது அண்மைய டென்மார்க் வியன் நகருக்கான பயணம் அமைந்திருந்தது. டென்மார்க்கின் வியன் நகரில் நவம்பர் 5ம் தேதி நடைபெற்ற உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கக் கலை இலக்கிய விழாவிலும் அதற்கு மறுநாள் நடைபெற்ற இயக்கத்தின் நிர்வாகக்குழு சந்திப்பிலும் கலந்து கொண்டு இன்று பில்லுண்ட் விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட ப்ரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸின் வழி இல்லம் திரும்பும் போது இப்பதிவினை எழுதுகின்றேன்.

இந்த ஆண்டு மே மாதம் நான் சில நாட்கள் என் அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக்கொண்டு டென்மார்க் நகரின் தலைநகரமான கோப்பன்ஹாகனுக்குப் பயணித்திருந்தேன். இது தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு பணியாக அமைத்திருந்தேன். கோப்பன்ஹாகன் அரச நூலகத்தில் உள்ள ஜெர்மானிய லூத்தரன் பாதிரிமார்களின் கையெழுத்துச் சுவடிகளையும் ஏனைய சில ஆவணங்களையும் மின்னாக்கம் செய்வது என் நோக்கமாக இருந்தது. ஏறக்குறைய 300 ஆண்டுகள் பழமையான ஆவணங்கள் இவை. இவற்றில் முப்பத்தெட்டு ஓலைச்சுவடிக்கட்டுக்களை நான் அப்பயணத்தின் போது மின்னாக்கம் செய்து முடித்திருந்தேன்.அந்த நடவடிக்கைத் தொடர்பான தகவல்களை நான் இணையத்தில் பகிர்ந்து கொண்ட போது அதில் ஆர்வம் காட்டியவர்கள் பலர். அவர்களில் ஒருவர் தான் நண்பர் திரு.தர்மகுலசிங்கம் அவர்கள். உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் என்பதோடு, டென்மார்க் கிளையின் பொறுப்பாளர் என்ற பொறுப்பிலும் இருப்பவர் இவர். நவம்பர் மாதம் ஒரு கலைவிழா ஒன்றினை தாம் ஏற்பாடு செய்யவிருப்பதாகவும் அதில் நான் கட்டாயம் கலந்து கொண்டு உள்ளூர் மக்களிடையே இந்த அரிய ஓலைச்சுவடிகளைப்பற்றி நான் செய்திகள் பகிர்ந்து உரையாற்ற வேண்டும் என்று சில மாதங்களுக்கு முதலே எனக்குத் தெரிவித்து விட்டார். அன்புக்கட்டளை இது. அதிலும் நான் தொடர்ச்சியாக கடந்த ஆறு ஆண்டுகளாகத் தீவிரமாக ஆய்வு செய்து வரும் ஒரு துறை, இந்த ஜெர்மானிய லூத்தரன் பாதிரிமார்களின் 300 ஆண்டுகளுக்கு முன்னதான தமிழகப்பயணமும் அதன் தொடர்ச்சியாக அவர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட தமிழ்ப்பணிகளும், அதில் டேனிஷ் அரசின் தாக்கமும் என்பது. ஆக இதனை டென்மார்க் வாழ் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்வது எனக்கு நிறைந்த மனமகிழ்ச்சி அளிக்கும் ஒன்று என்பதாலும் ஆர்வத்துடன் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டேன்.

டென்மார்க் 400க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட ஒரு நாடு. ஜெர்மனியின் வடபகுதியில் நீண்ட தீபகற்ப நிலப்பகுதியும்,, ஓடென்சீ என்ற தீவும் கோப்பன்ஹாகன் இருக்கும் மற்றொரு தீவும் பூகோள வரைபடத்தில் அடையாளங்களான பெரிய நிலப்பகுதிகள். இந்தப் பெரிய நிலப்பகுதிகளுக்குச் சுற்றுப்புரத்தில் பல தீவுகளில் மக்கள் வாழ்கின்றனர்.

டென்மார்க்கின் மக்கள் தொகை ஏறக்குறைய 6 மில்லியன் தான். இதில் தமிழ் மக்கள் 11,000 பேர் வாழ்கின்றனர். டென்மார்க் தமிழர்கள் ஏறக்குறைய அனைவருமே இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழ்மக்கள்தான்.தாயகமான  இலங்கையில் போர் ஏற்படுத்திய இன்னல்களிலிருந்து தப்பித்து புதிய வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ள ஏதாவது ஒரு நாடு கிடைக்குமா எனத்தவித்த சில தமிழ் மக்களுக்கு டென்மார்க் நல்லதொரு புகலிடமாக அமைந்தது. தாயகத்தின் மனித உரிமை மீறல்கள் டென்மார்க்கின் குளிர் சீதோஷ்ண நிலையை மக்கள் மறந்து தங்கள் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை உருவாக்கிக்கொண்டு தொடர வாய்ப்பினை உருவாக்கிக்கொடுத்துள்ளது. போர்க் காலத்தில் வந்தவர்கள் மட்டுமன்றி அதற்கும் முன்னரே தொழிற்துறையில் முன்னேற்றம் பெற வேண்டும் எனச் சிந்தித்து டென்மார்க் நோக்கி வந்து பின்னர் இந்த நாட்டின் நிலை பழகிக்போக இங்கே தங்கள் குடும்பங்களை அமைத்து டென்மார்க்கிலேயே நிரந்தரமாகக் குடியேறிய தமிழர்களும் இங்கு கணிசமாக இருக்கின்றனர்.

தாயகத்தில் பழகிய சுற்றத்தார் இல்லை; அன்றாட வாழ்வில் அங்கமாகும் உணவு, வாழ்வியல் கூறுகள் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலில் பழகிய பண்பாட்டு அடையாளங்களை விட்டு புதிதாகக்குடியேறிய நிலத்திற்குச் சொந்தமான அடையாளங்களை உள்வாங்கிக் கொண்டு தங்கள் புதிய வாழ்க்கையை இங்கு டென்மார்க் மட்டுமல்ல, உலகின் எந்தெந்த நாடுகளுக்குத் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்திருக்கின்றனரோ அங்கெல்லாம் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய நிலை இருக்கின்றது.தமிழர் பண்பாட்டின் அடையாளங்களில் ஒன்றான பாரம்பரிய உடைகளை அணிந்து மகிழ விரும்பினாலும் புதிதாக வந்து குடியேறியுள்ள நாட்டின் சீதோஷ்ண நிலையின் தன்மைக்கேற்பவும் வாழ வேண்டிய சூழலில் இருப்பதாலும் துரித வாழ்க்கையில் பொருளாதாரம் ஈட்ட பல்வேறு வகையான தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு ஆணும் பெண்ணும் தாங்கள் வாழும் இடத்திற்கேற்ற குளிர்கால உடையணிந்து வாழ வேண்டிய நிலைதான் உள்ளது.  இத்தகைய சூழலில் தாயகத்தில் போர் ஏற்படுத்தியுள்ள வடுக்கள் காயங்களாக மனதில் மறையாத நிலையிலும் வாழ்ந்து பழகிய சூழல் கொடுத்த இயல்புத்தன்மை இழந்த நிலை புலம்பெயர்ந்த மக்கள் அனைவருக்குமே ஒரு தீராத ஏக்கம் தான். இந்தச் சூழலுக்கு நிரந்தரத்தீர்வு என்று ஒன்று இல்லாத போதிலும் அதன் ஏக்கத்தைக்குறைக்கும் ஒரு வழியாக தமிழ் மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகள் என்பன அவ்வப்போது ஐரோப்பிய நாடுகளில் நடைபெறுகின்றன. இப்படித் தமிழ் மக்கள் ஒன்றுகூடும் போது தமிழர் பாரம்பரிய ஆடைகள் அணிவதும், தமிழர் கலை கலாச்சார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் இசை, கூத்து நடனம் என மகிழ்வதும், தமிழில் பேசி மனம் மகிழ்வது என்பதுவும் வடிகாலாக அமைகின்றன.

உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் டென்மார்க் கிளை நடத்திய கலை இலக்கிய விழா இந்தச் சூழலை மிகத் தெளிவாகக்காட்டும் கண்ணாடியாக அமைந்திருந்தது. இதில் முக்கிய அம்சங்களாக உலகின் பல நாடுகளில் சிதருண்டு கிடந்தாலும் தமிழால் இணைந்த கலை ஜாம்பவான்கள், வந்து கலந்து கொண்டதும், உலகத் தமிழருக்குத்தேவையான தகவல்கள் சொற்பொழிவுகளாக வழங்கப்பட்டமையும், புலம்பெயர் வாழ்வில் பலருக்கு அமைந்த அல்லல்களை வெளிப்படுத்தும் குறும்படம் வெளியிடப்பட்டமையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தமிழரின் தாயகம் எது என்ற கேள்வி இத்தகைய சூழலில் நம் முன்னே நிற்கின்றது.

புலம் பெயர்ந்து வந்துவிட்ட சூழலில் புதிய நிலத்தில் பிறந்து வளர்ந்த குழந்தைகளுக்கு அவர்கள் வாழ்கின்ற நாடே தாயகமாகின்றது. தமிழ்மொழி அறிவினைச் சில குழந்தைகள் பெற்றோரிடம் கற்கின்றனர். தனி நபர்களும் தமிழ்ச்சங்கங்களும் நடத்தும் தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்மொழியைக் கற்கின்றனர். ஆயினும் கூட தமிழ்மொழியில் ஆர்வம் என்பது ஒரு சிலருக்கே ஏற்படுகின்றது என்பதோடு அதனைப் பயன்பாட்டில் கொள்வதும் குறைவாகவே உள்ளது என்பது நிதர்சனம்.

ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுகின்றனர் தமிழ் நாட்டுத்தமிழர்கள் என வருந்தும் அதே வேளை, டோய்ச் கலந்த தமிழ், பிரன்சு கலந்த தமிழ், இத்தாலி கலந்த தமிழ், ஸ்பேனிஷ் கலந்த தமிழ், டேனிஷ் கலந்த தமிழ் எனத் தமிழ் மொழி பேச்சு வழக்கில் கலவையின் பிரதிபலிப்பாக ஒலிக்கும் நிலையைப் பார்க்கத்தான் செய்கின்றோம்.

இந்தச் சூழலில் தமிழ் மொழி பயன்பாடு, தமிழர் வரலாற்றில் ஆர்வம், தமிழர் மரபைக்காத்தல் என்பன எவ்வாறு அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற கேள்வி தொடர்ச்சியாக எழுந்த வண்ணமே இருக்கின்றது.

டென்மார்க்கை பொறுத்தவரை இங்கே பிறந்து வளர்ந்த குழந்தைகளும் இளம் வயதில் இலங்கையிலிருந்து வந்து சேர்ந்த குழந்தைகளும் இங்குள்ள சூழலுக்குள் தங்களை முழுதும் ஐக்கியப்படுத்திக்கொண்டு விட்டனர்.தாயகத்தைப்பிரிந்த துயரம் என்பது அவர்களிடம் உணர்வுப்பூர்வமாக இல்லை ஆனால் தம் பெற்றோரின் தாயகம் இலங்கை அல்லது இந்தியா என்ற சிந்தனை மட்டும் மனதில் இருக்கின்றது. தாங்கள் வாழ்கின்ற நாடுகளில் முழுமையான பிரஜையாக அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வது அவசியம். தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தம்மை உயர்த்திக் கொள்தல் என அவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு  வாழ்க்கையில் வெற்றி காண வேண்டியது அவசியம். அதே வேளை தங்கள் தமிழர் மரபை மறவாத தமிழ்மக்களாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியதும் அவசியமாகின்றது.

புலம் பெயர்ந்த தமிழர்கள் இப்போது அனைத்துலகத் தமிழர்களாக மாறியுள்ளனர். இவர்களது கலாச்சாரமானது தாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள கலாச்சாரத்தையும் பண்புகளையும் உள்வாங்கியதொரு கலாச்சாரமாக புது வடிவமெடுத்துள்ளது. இது தவிர்க்கப்பட முடியாத ஒன்றே.மாற்றங்களுக்கு உட்பட்டதுதான் மனித வாழ்க்கை. மாற்றங்கள் தரும் சவால்களும் அதன் வழி நாம் பெறும் பரிணாம வளர்ச்சியும் தான் மனிதக் குலத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கின்றன. அப்படிப்பார்க்கும் போது டென்மார்க்கின் இரண்டாம் தலைமுறை ஆரோக்கியமானதொரு பாதையில் நடைபோட்டுச் செல்வதை நான் காண்கின்றேன். அத்தகைய சூழலில் அவர்களுக்குத் தொடர்ச்சியாக தமிழர் பண்பாட்டுக் கூறுகளையும், வரலாற்றையும், தமிழ் மொழியின் சிறப்புக்களையும் வழங்க வேண்டியது பெற்றோர் கடமை என்றாலும், உலகளாவிய சமூக இயக்கங்களின் பங்கும் இதில் முக்கியப் பங்களிக்க வேண்டியது அவசியமாகின்றது. இந்த வகையிலான நோக்கத்தை முன்னெடுத்துத்தான் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயல்பாடுகளும் தொடர்ந்து நடைபெறவேண்டும். உலகளாவிய தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாக இந்த இயக்கம் இயங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அன்றாட அலுவல்களுக்கிடையேயும் தமிழ் மொழி கலை கலாச்சாரம் என நினைத்து, தாய்மொழியாம் தமிழ் மொழியைச் சிறப்பிக்க விழா எடுத்த உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் டென்மார்க் கிளையினர் பாராட்டுதலுக்குரியவர்கள். அதிலும் குறிப்பாக இரவு பகல் பாராது, பசி தூக்கம் பாராது, வந்திருந்த அனைத்துப் பேராளர்களையும் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து சிறப்பு செய்த திரு.தர்மகுலசிங்கம்-பவானி தம்பதியரின் சேவையை வாழ்த்தி மகிழ்கின்றேன். இக்கலைவிழாவில், என்னைச் சிறப்பித்து ”தமிழ் மரபு நட்சத்திர நாயகி” என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தனர் டென்மார்க் கிளையினர். அவர்களது ஆர்வத்தைப் பாராட்டுவதில் மகிழ்கின்றேன். 

No comments:

Post a Comment