Wednesday, December 14, 2016

40. குறத்தியாறு - ஓர் ஆற்றின் கதை
நீர் வளமும் நில வளமும் மிக்க செழிப்பான ஒரு நாடு தான் தமிழ்நாடு. பண்டைய காலத்தில் தமிழகத்தில் ஆட்சி செலுத்திய பல்லவ, பாண்டிய, சோழ மன்னர்கள், மக்கள் வாழ்விற்கு ஆதாரம் விவசாயம் என்பதை நன்குணர்ந்து நாட்டு மக்கள் நலம் வாழ நீர் நிலைகளை உருவாக்கி விவசாயத்தைப் பராமரித்தனர். தமிழகத்தின் பல சிற்றூர்களுக்கும்  கடந்த சில ஆண்டுகளாக நான் பயணம் செய்து அதன் பல பரிமாணங்களை நேரில் பார்த்திருக்கின்றேன். என்னை வியப்பில் ஆழ்த்தும் இயற்கை அம்சங்களில் இங்கு பல ஊர்களில் காணக்கூடிய ஏரிகளும் குளங்களும் அடங்கும். அப்படிப் பல தென்படினும்,  பல ஏரிகள் தூர் வாரப்படாமல் சேதப்பட்டுப்போய் கிடப்பதும், பல ஏரிகளில் மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டு ஏரிகள் காணாமல் போன அவலங்களும் நடந்திருப்பது இயற்கைக்கு மனிதர்களால்  ஏற்பட்டிருக்கும் ஒரு பேரழிவு.   2015ம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் பாதிப்பிற்குப் பின்னரும் கூட,  ஏரிகளும் ஏனைய நீர்வளங்களும்  முறையாக  பாதுகாக்கப்படாத  ஒரு சூழல் தொடர்கின்றதே என்பது இயற்கை அழிக்கப்படுவதையும் அதனால் எழும் கடும் சேதங்களையும், அரசும் நில அமைப்பைப் பாதுகாக்கும் அமைப்புக்களும் இன்னும் உணரவில்லையே என்பதை  காட்டுவதாக இருக்கின்றது.  இந்தச்சூழலில், இயற்கையின் ஒரு அங்கமான நீர்வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என குரலெழுப்பும் பல தன்னார்வலர்களின் குரல்களோ, பொது மக்களின் வேண்டுதல்களோ பாதுகாப்பினை முறைப்படுத்தும் பங்கினை ஆற்றும் முக்கியமான அரசு அமைப்புக்களுக்குச் சென்றடைவதில்லை என்பதனையும் காண்கின்றோம்.

நீர்வளங்கள் எனப்படுவனவற்றுள் ஏரிகள், குளங்கள் போல ஆறுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. உலகின் பல நாடுகளில் மனித நாகரிகம் செழித்து வளர்ந்த பகுதிகளாக ஆற்றங்கரைப்பகுதிகளே அடையாளம் காட்டப்படுகின்றன.  தமிழகத்தின் காவிரி, வைகை, தாமிரபரணி போல முக்கியம் வாய்ந்த ஒரு ஆறு பாலாறு. தொண்டைமண்டலப்பகுதியில் கிளைத்து ஓடும் ஆறு இது. இதற்கு    கொசத்தலையாறு , கொற்றலையாறு என்றும் பெயர்கள் உண்டு. இதற்கு குறத்தியாறு என்றும் ஒரு பெயர் இருக்கின்றது என்ற செய்தியை அந்த ஆற்றின் வழி வழி நாட்டார் கதைகளை மையமாகக் கொண்டு இந்த ஆற்றிற்கு ஒரு காப்பியத்தை வடித்திருக்கும் எழுத்தாளர் கௌதம சன்னாவின் நூலின் வழி நான் அறிந்து கொண்டேன்.

இந்த  நாவலை வாசிக்கத் தொடங்கியபோது  முதலில் என்னை திகைக்க வைத்தது இந்த நாவலின் மொழி நடை. அன்றாட இயல்பான மொழி நடையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் கவித்துவம் நிறைந்த எழுத்து நடையில் இது படைக்கப்பட்டுள்ளது. இந்த நூலை எடுத்து வாசிக்கும் முன் வாசகர் தம்மை அதனுள் பிரவேசிக்கத் தயார் படுத்திக் கொள்ளத்தான் வேண்டும். நூலின் வரிகள் ஒவ்வொன்றும் வாசிப்போரைத் தனி ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய தன்மை படைத்தவை. நூலை அதன் மொழி நடையில் வாசித்துக் கொண்டு, அதன் கதை மாந்தர்களுடன் சேர்ந்து பயணிக்கத் தொடங்கினால், அது அழைத்துச் செல்லும் உலகங்களில், அது சொல்லும் எல்லா அனுபவங்களையும் நேரில் உணரும் வகையில், நாவலின் ஒவ்வொரு பக்கமும் நிகழ்வின் காட்சிகளைப் படம் பிடித்தார் போல அமைத்திருக்கின்றார் இதன் ஆசிரியர். பிரமிக்க வைக்கும் ஒரு எழுத்து நடை இது.

அரசகுல வரலாற்றை சிலர் எழுதுகின்றனர். வீரமிக்கச்செயல் புரிந்தோரின் வரலாற்றைச் சிலர் நாவலாக வடிக்கின்றனர். சாமானிய மனிதர்களைப் பற்றி ஒரு சிலரே எழுதுகின்றனர்.  மனிதர்களை மையப்படுத்திய உத்திகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில்  இயற்கையைப் பொருளாகக் கொண்டு, அதனையே கதையின் மையப்புள்ளியாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு காப்பியமாகத் திகழ்கின்றது குறத்தியாறு நாவல். முன்னர் பாலாறு என அழைக்கப்பட்ட ஆறு இன்று கொற்றலை அல்லது கொசத்தலை ஆறு என மக்கள் வழக்கில் அமைந்துவிட்டது. இந்த ஆறு உருவாகி எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் கடந்திருக்கலாம். இந்த ஆற்றிற்க்கு என அமைந்த தொண்மக் கதைகள் பல இருந்திருக்கின்றன; அவற்றுள் சில மறைந்திருக்கலாம். இந்தக் கதைகள் அனைத்தும் இந்த மண்ணுக்கே உரியவை. இதன்  நுணுக்கமான நிகழ்வுகளுக்கு  கற்பனைகளையும் உட்புகுத்தி புதிய பரிமாணத்தை வழங்குவதாக அமைகின்றது இந்த நாவல்.   இந்தத் தொண்மக்கதைகள் வழியாக இந்த ஆற்றிற்குக் குறத்தியாறு என்று ஒரு பெயரும் இருந்தது என அறியமுடிகின்றது.

தமிழகத்தின் ஒவ்வொரு சிற்றூரிலும் எத்தனை எத்தனையோ  கோயில்கள். அவற்றின் வரலாறுகள் வேறுபடுபவை.  கடவுள்கள் நித்தம் நித்தம் உருவாகிக்கொண்டே இருக்கின்றனர். அந்தக் கடவுளர்களுக்கு அவர்களின் புராணத்தைப் பாடும் கதைகளும் இணைந்தே பிறக்கின்றன. இவை நாட்டார் கதைகள் என அறியப்படுபவை. இந்த நாட்டார் கதைகள் பெரும்பாலும் வாய்மொழிச் செய்திகளாக வருபவை. இவை பலகாலங்களாக அந்த நிலப்பகுதியின் வரலாற்று அம்சங்களை உள்வாங்கி சிலவற்றை இணைத்துக் கொண்டும், சிலவற்றை உதறிவிட்டும், விரிந்தும் சுருங்கவும் கூடிய தன்மை படைத்தவை.

தமிழக நாட்டார் வழக்காற்றியல் என்பது ஏராளமான புனைக்கதைகளையும், புராணங்களையும் தன்னிடத்தே கொண்ட வளமானதொரு களம். தமிழகம் மட்டுமல்ல, உலகின் ஒவ்வொரு கிராமமும், ஊரும்  தன்னிடத்தே ஆயிரமாயிரம் கதைகளைப் புதைத்து வைத்திருக்கின்றது. காலங்காலமாக மக்கள் சொல்லி வரும் கதைகள் சில வேலைகளில் அச்சு அசல் மாறாது தொடரும் வகையிலும் கிடைக்கின்றன. சில வேளைகளில் அக்கதைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அடிப்படைகள் திரிக்கப்பட்டு புது வடிவமெடுக்கும் கதைகளும் இருக்கின்றன. கிராமங்களில் இருக்கும் கதைகளும் நமக்குக்  கதையின் மையப் புள்ளியாக இருக்கும் சாமிகளும் ஒவ்வொரு ஊருக்கும்   அடையாளச்சின்னங்களாக அமைந்து விடுகின்றன. இந்தக் காரணத்தால், இப்புனைக்கதைகளும் புராணங்களும் அந்த  கிராமத்திலிருந்து பிரித்தெடுக்கமுடியாத சொத்துக்களாக அமைந்து விடுகின்றன.

குறத்தியாறு,  ஒரு கதை சொல்லியின் முயற்சியில் வெளிவந்திருக்கும் ஒரு  காப்பியம். இதன் கவித்துவம் நிறைந்த எழுத்து நடையும், சொல்வளமும் இதற்கு காப்பிய இலக்கிய வகைக்கான அங்கீகாரத்தை வழங்கும் எனக்கருதுகின்றேன்.   இந்த நாவலில் வரும் செய்திகள் வழிவழியாக மக்களால் கதைகளாகச் சொல்லப்பட்டு மக்கள் மனதில் நிலைத்து விட்ட சம்பவங்களே. இதில் வரும் சம்பவங்கள் நிகழ்ந்த காலம் எதுவாக இருக்கும் என்பதை அறிய முயல்வது என்பது ஒரு வகை ஆய்வாக அமையும் என்றாலும்  இக்கதை விட்டுச் செல்லும் செய்திகளை ஆராய்வது சுவாரசியமான ஆய்வாக அமைகின்றது.  அன்று குறத்தியாக உருவகப்படுத்தப்பட்ட பெண் இன்று அந்தச் சிறிய கிராமத்தில் குறத்தி அம்மனாக வழிபடப்படுகின்றாள் என்பதை அறிந்த போது இந்தப் பகுதிக்கு ஒரு வரலாற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்கு எழ இதனை நாவலாசிரியர் திரு,கௌதம சன்னாவிடம் தெரிவித்த போது அதற்கு ஆவன செய்து நான் இந்த ஆற்றையும் இந்த நாவலின் நாயகியான குறத்தி இன்று வழிபடப்படுகின்ற  கோயிலையும் பார்த்து வர ஏற்பாடுகள் செய்திருந்தார். இன்று  அங்காளபரமேஸ்வரி  என்ற கூடுதல் பெயரையும் இந்த அம்மனுக்குக் கிராம மக்கள் வழங்கியிருக்கின்றனர் என்பதை இந்த நேரடி வரலாற்றுப் பயணத்தில் அறிந்து கொண்டு, அத்தகவல்களையும் இந்த அம்மனைச் சுற்றி நிகழும் பூசைகள் சடங்குகள் ஆகியனவற்றைப் பற்றியும் ஒரு விழியப்பதிவாக வெளியிட்டேன்.

சாமிகள்  உருவாக்கப்படுவது தமிழர் பண்பாட்டில் காலம் காலமாக இருக்கும் நிகழ்வு தான். அந்தச் சாமிகளைச் சிறப்பிக்க அவர்களுக்கென்று சிறப்பு வழிபாடுகள், ஆண்டு விழா என்பன தோற்றுவிக்கப்பட்டு  கோயிலும், கோயிலைச் சார்ந்த நிகழ்வுகளும் என்ற வகையில்  ஒவ்வொரு கிராமங்களிலும் பல  சடங்குகள் நிறைந்திருக்கின்றன. கடந்த சில நூற்றாண்டுகளில் தமிழகத்தை விட்டு மலேசியாவிற்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் தங்கள் கிராமத்து கடவுளர்களைத் தாங்கள் புலம்பெயர்ந்த பகுதிகளுக்குக் கொண்டு வந்து கோயில்கள் கட்டி வழிபாடு செய்வதை இன்றும் மலேசியா முழுவதும் பார்க்கின்றோம். முனியாண்டி சாமி, வீரபத்திரன், காளியம்மன், பேச்சியம்மன், சுடலை மாடன் போன்ற தெய்வங்கள் இப்படி தமிழகத்திலிருந்து மலேசியாவிற்குக் கொண்டு வரப்பட்ட தெய்வங்களே. தாயகத்தில் தங்கள் இறை உணர்வு சார்ந்த நம்பிக்கைகளுக்கு வடிகாலாக இருக்கும் அதே தெய்வங்களே புலம் பெயர்ந்த தேசத்திலும் பிரதிட்டை செய்யப்பட்டு வழிபடும் தெய்வங்களாக மலேசிய,சிங்கை மண்ணில் இடம்பெறுகின்றார்கள்.

குறத்தியாற்றின் வரலாற்றினை நோக்கும் போது,  வழிவழியாக மக்கள் மனதில் கதையாக நிலைத்திருந்த ஒரு பெண் இன்று குறத்தியம்மனாக, அங்காளபரமேஸ்வரியாக பரிணாமம் பெற்று கிராம மக்கள் வாழ்வில் அவர்களைக்காக்கும் அன்னையாக அமர்ந்திருக்கின்றாள் என்பதைக் காண்கின்றோம். நான் எனது களப்பனிக்காக அப்பகுதிக்குச் சென்றிருந்த போது கோயில் பூசாரியும் குறத்தியாறு நாவலின் ஆசிரியர் திரு.கௌதம சன்னாவும் அவரது நண்பர்களும் குறத்தி அம்மன் பற்றியும் கோயிலில் நடைபெறும் சடங்குகள், பூசைகள், திருவிழாக்கள் பற்றியும் இந்தப் பதிவின் போது எனக்கு விளக்கமளித்தார்கள். அவற்றை ஒரு குறும்படமாகத் தயாரித்துத் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடாக இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டிருந்தேன். கிராமங்களில் தொன்மக்கதைகள் கதைகளாகவே இருந்து படிப்படியாக மக்கள் மனதிலிருந்து மறைந்து போய்விடாமல், மாற்று உருவம் பெற்று வேறொருவகையில் நீளும் ஒரு தொடர்ச்சியாக இந்தக் கோயில் அமைந்திருப்பதை இந்தப் பதிவிற்கான ஆய்வில் நான் அறிந்தேன். இப்படி ஏராளமான சம்பவங்கள் நாம் இருக்கும் ஒவ்வொரு ஊர்களுக்கும் சொந்தமாக இருக்கும். ஆனால் அவற்றை நாம் பதிகின்றோமா? ஆவணப்படுத்துகின்றோமா? அவற்றிற்கான ஒரு விளக்கத்தினைத் தரும் ஆய்வுகளை முன்னெடுக்கின்றோமா என்னும் கேள்விகள் முக்கியமானவை.

குறத்தியாறு நாவல், தமிழ் எழுத்துலகிற்கு பழமையும், புதுமையும், நிஜங்களும் கற்பனைகளும் கலந்ததொரு வித்தியாசப் படைப்பு.  ஒரு கிராமத்து நிகழ்வு கதையாகப் புனையப்பட்டு வழிவழியாக மக்கள் மனதில் நம்பிக்கையாகப் பதியப்பட்டு, வணங்கப்பட்டு வரும்   நிகழ்வை மிக உன்னதமாக இந்த நாவலில் புதுமைப்படைப்பாக வழங்கியிருக்கின்றார் திரு.கௌதம சன்னா. மலேசியத் தமிழ் எழுத்துலகில் இத்தகைய நாவல்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டியது அவசியம் எனக் கருதுகின்றேன். மக்களின் வாய்மொழிச் செய்திகளின் தகவல் களஞ்சியங்கள் இலக்கிய அங்கீகாரம் வழங்கப்படாமல், பதிவு செய்து  ஆராயப்படாமலேயே போய்விடுவதால் ஏற்படக்கூடிய இழப்பு என்பது வரலாற்றுப் பார்வையில் மிகப்பெரிது.  மக்கள் வாழ்வியல் செய்திகளை அந்த நிலத்தின் நாட்டார் கதைகளுடன் இணைத்து வழங்கும்  இத்தகைய தரமான படைப்புக்களை மலேசிய வாசகர்கள்  அறிந்து கொள்வதன் வழி நாவல் அல்லது காப்பியப்படைப்புக்களை இக்கால சூழலில் மாற்றுக்கோணத்தில் உருவாக்கும் உத்திகளை பரிச்சயம் செய்து கொள்ளும் வாய்ப்பு நிச்சயம் கிட்டும்.  இந்த நாவலின் எழுத்து நடை கவிதை நயத்துடன் கூடிய இலக்கிய வகையாக அமைந்திருக்கின்றது. இலக்கியப் படைப்புக்களின் தரம் உயர்வாக அமைய வேண்டியதும் வாசகர்கள் தங்கள் வாசிப்புத்திறத்தினை உயர்த்திக் கொள்வதும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத்  தேவையே! 

1 comment:

  1. குறத்தியாறு பாலாறு தோன்றும் இடம் பெங்களூருக்கு வடக்கே 20 கி.மீ. உள்ள நந்திமலை.

    ReplyDelete