அக்காலகட்டத்தில் கிழக்கு ஜெர்மனியில் மக்கள் சுதந்திரத்திரத்தை இழந்திருந்தனர். அச்சம் அவர்கள் மனதை நிறைத்திருந்தது. உளவு பார்ப்பது என்பதும் தீவிரவாத, பயங்கரவாத செயல்பாடுகள் என்பதும் விரிவாகியிருந்தன. ஒரு குடும்பத்திற்குள்ளேயே தந்தை மகனை நம்பமுடியாது; தாய் மகனை நம்ப முடியாது; மனைவி கணவனை நம்ப முடியாது; சகோதரன் சகோதரியை நம்ப முடியாது. இப்படி குடும்பங்களுக்குள்ளே கூட உளவு என்பது வேரோடிப் போயிருந்த காலகட்டம் அது. யாரால் எப்போது என்ன துன்பம் நிகழக் கூடும் என அச்ச உணர்வு மேலிட மக்கள் வாழ்ந்த காலகட்டம் அது. கருத்துச் சுதந்திரம் தடைப்பட்டிருந்தது. தண்டனைகள் , தண்டனைகள், தண்டனைகள் - எதற்கெடுத்தாலும் தண்டனைகள். இந்தச் சூழலில் பொதுமக்கள் அமைதி காக்கவில்லை. பல கோணங்களிலிருந்து உயிரைப் பணயம் வைத்து எதிர்ப்பு வலுவாகக் கிளம்பத்தான் செய்தது. இதுவே படிப்படியாக விசுவரூபம் எடுத்து கிழக்கையும் மேற்கையும் பிரித்த பெர்லின் சுவரை இடிக்கக் காரணமாகியது. பிரிந்த கிழக்கும் மேற்கும் படிப்படியாக இணைந்தன. அக்டோபர் 3ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் இணைந்த நாளைக் கொண்டாடுகின்றன. இன்று ஜெர்மனி உலக அரங்கில் ஒன்று பட்ட ஒரே நாடாக இயங்குகின்றது. உலகம் முழுவதிலுமிருந்து வாழ்விழந்து அகதிகளாக வருவோருக்கு வாழ்வளிக்கும், மனித உரிமைக்குக் குரல் கொடுக்கும் நாடுகளின் வரிசையில் முதல் வரிசையில் இடம் பெறும் நாடுகளில் ஒன்றாகவும் இருக்கின்றது.
பழைய சம்பவங்களின் நினைவுகளினால் இன்றும் கூட கிழக்கு ஜெர்மனியின் பெயரைக் கேட்டால் ஒரு வகையான அச்ச உணர்வு மேற்கில் உள்ளவர்களுக்கு எழுவது இயல்பு. அயல் நாட்டினர் மட்டுமல்ல. உள்ளூர் ஜெர்மானியர்களும் விரும்பி கிழக்கு மாநிலங்களுக்குச் செல்வது குறைவு என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு ஒரு வகையில் கடந்த சில ஆண்டுகளில் இப்பகுதியில் பெருகி வரும் நாசி சிந்தனை ஆதரவு செயல்பாடுகளும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது தான்.
பொருளாதார ரீதியில் கிழக்கு ஜெர்மனியின் மாநிலங்கள் பின் தங்கியிருந்த சூழல் கடந்த இருபது ஆண்டுகளில் படிப்படியாக மாற்றத்தைக் கண்டிருக்கின்றது எனலாம். பொருளாதார ரீதியில் வலுவிழந்த பகுதி என்றாலும் அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கும், ஆய்வுகளுக்கும், தத்துவத் தேடல்களுக்கும், பதிப்பக முயற்சிகளுக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும் தனிப்பெருமை வாய்ந்த பகுதி கிழக்கு ஜெர்மனி என்பதை மறுக்க முடியாது. இன்று பெர்லினில் உள்ள அருங்காட்சியகத் தீவு முழுமையும் கிழக்கு ஜெர்மனி பகுதியில் தான் உள்ளது. பல ஆய்வுக்கூடங்கள், தொழில்நுட்ப முயற்சிகள் என வியக்க வைக்கும் பிரமாண்ட கட்டிட வளாகங்கள் நிறைந்த பகுதியாக கிழக்கு ஜெர்மனி விளங்குகிறது . இங்குள்ள பல்கலைக்கழகங்களோ மருத்துவம், தத்துவம், விண்ணியல், பௌதீகம், கணிதம் , தொழில்நுட்பம் என பல துறைகளில் உலகளாவிய நன்மதிப்பையும் உயர் தரத்தையும் பெற்று விளங்கும் கல்விக்கூடங்களாக உள்ளன.
ஜெர்மனி கிருத்துவ மதத்தை அதிகாரப்பூர்வ மதமாக ஏற்ற நாடு. கி.பி.16 வரை ஜெர்மனி முழுமையும் ரோமன் கத்தோலிக்க மதத்தைத் தழுவியிருந்தது. கி.பி. 16ல் கிழக்கு ஜெர்மனியில் ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக போர்க்கொடியை உயர்த்தியவர் மார்ட்டின் லூதர். இவர் கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாலே - தமிழகத்தோடு 300 ஆண்டுகளுக்கு மேல் தொடர்பில் உள்ள கிழக்கு ஜெர்மனியில் உள்ள ஒரு நகரம். இங்குள்ள ஃப்ராங்கன் கல்விக்கழகத்திலிருந்து தான் கி.பி 1705ம் ஆண்டு தமிழகத்துக்குச் செல்ல 2 ஜெர்மானிய பாதிரிமார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு டென்மார்க் அரசரின் அரச ஆணையைப்பெற்று நீண்ட நாட்கள் கடலில் பயணித்து வந்தனர். பாதிரியார் சீகன்பால்கும் பாதிரியார் ப்ளெட்சோவும் 1706ம் ஆண்டு தமிழகத்தின் தரங்கம்பாடி வந்தனர். அதுவே சீர்திருத்தக் கிருத்துவம் (ப்ரோட்டஸ்டண்ட் கிருத்துவம்) தமிழகத்தில் காலூன்றிய வரலாற்று முக்கியத்துவம் பெறும் நிகழ்வு.
ஜெர்மனியில் கடந்த பல ஆண்டுகளாக நான் வசித்தாலும் கிழக்கு ஜெர்மனியில் அவ்வப்போது நிகழும் நாசி ஆதரவு சம்பவங்களைக் கருதி இப்பகுதிக்கு நான் வருவதில் தயக்கம் இருந்து வந்தது. ஆயினும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஃப்ராங்கன் கல்விக்கழகத்தை நேரில் கண்டு அங்கு ஆவணப்பாதுகாப்பகத்தில் பாதுகாக்கப்படும் தமிழ் ஆவணங்கள் சிலவற்றை ஆராய அனுமதி கேட்டிருந்தேன். தமிழ்ச்சுவடிகளையும் காகித ஆவணங்களையும் காணவும் ஆராய்ந்து குறிப்பெடுக்கவும் அனுமதி கிடைத்ததன் பேரில் இரண்டு நாட்கள் அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு வார இறுதி வரை ஹாலே நகரில் இருந்து இவற்றை ஆராயும் பணிக்காக கடந்த வாரம் இந்த நகரம் சென்று வந்தேன்.
ஹாலே செல்லும் முன் அலுவலக பணிக்காக லுட்விக்ஸ்ஹாஃபன் நகரம் வந்திருந்ததால் அங்கிருந்து நேரடியாக எனது பயணம் அமைந்தது. வாகனத்தில் ஐந்தரை மணி நேரப் பயணம். ரைன்லாண்ட் பால்ஸ், ஹெசன், தூரிங்கன், செக்சனி அன்ஹால்ட்..... என நான்கு மாநிலங்களைக் கடந்து எனது இந்தப் பயணம் அமைந்தது.
சில ஆண்டுகள் பல நூல்களையும் ஆய்வுக்கட்டுரைகளையும் வாசித்து, பல மாதங்கள் தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, சில வாரங்கள் பயணத்தை திட்டமிட்டு
சில மணி நேரங்கள் பயணித்து, மூன்றரை நாட்கள் கிழக்கு ஜெர்மனியின் ஹாலே நகரத்து ப்ராங்கன் கல்விக்கூடத்திலும் இந்த நகரின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள என் பயண நோக்கத்திற்குத் தொடர்புள்ள வரலாற்றுச் செய்திகளையும் தரவுகளையும் நேரில் சென்று பார்த்துக் குறிப்புக்கள் சேகரித்துக் கொண்டு திரும்பினேன்.
ஹாலே நகரில் முதல் நாள் (20.9.2018) காலை 8 மணிக்கு ப்ராங்கன் கல்விக்கூடத்தின் அரிய ஆவணங்களின் பகுதி பொறுப்பாளர் திரு.க்ரோஷலைச் சந்திப்பதாகக் கூறியிருந்தேன். எனது தங்கும் விடுதியிலிருந்து ஒன்றரை கிமீ தூரத்தில் இக்கல்விக்கூடம் இருப்பதால் நடந்தே செல்வது நகரையும் பார்த்து வர சரியாக இருக்கும் என நினைத்து நடந்து சென்றேன்.
ஹாலே நகரில் சாலையில் பொது வாகனங்கள் சிறப்பாக இயங்குவதைக் காணமுடிந்தது. ட்ராம்கள் வந்து போய்க்கொண்டிருக்கின்றன. சைக்கிள் பயணிகளும் அதிகமாக உள்ளனர். ப்ராங்கன் கல்விக்கூடத்தின் பின்பகுதி வழியாக நுழைந்து தோட்ட வளாகத்தைப் பார்த்தவாறு சென்று கொண்டிருந்தபோது இந்தக் கல்விக்கூடம் நடத்தும் சிறார்களுக்கான பள்ளிக்கூடத்துக் குழந்தைகள் பந்து விளையாட்டை ரசித்துக் கொண்டே சென்றது இனிய நிகழ்வு.
ப்ராங்கன் கல்விக்கூடத்தின் வளாகம் பெரியது. ஒரு பல்கலைக்கழகம் போன்ற அமைப்பில் இந்த நிறுவனத்தைக் கட்டியிருக்கின்றனர். கட்டிடங்கள் ஒவ்வொன்றும் எண்களால் அடையாளப்படுத்தப்பட்டு ஒவ்வொரு கட்டிடமும் அல்லது பகுதியும் ஒரு தனிப்பட்ட துறைக்காக என இயங்கி வருகின்றன. இக்கல்விக்கூடத்தின் பெரும்பகுதி இன்று விட்டென்பெர்க் பல்கலைக்கழகத்தின் பல்வேறு ஆய்வுத்துறைகளுகுவாடகைக்கு விடப்பட்டுள்ளன என்பதையும் அறிந்து கொண்டேன்.
திரு.க்ரோஷல் எனது வருகைக்குக் காத்திருந்தார். பொதுவான அறிமுகங்கள். தமிழ் மரபு அறக்கட்டளை பற்றிய எனது விளக்கம் எனக் கேட்டபின் எனக்குப் பயன்படுமே என ஒரு கோப்பினைக் கொடுத்தார். அது லைப்சிக் மிஷனின் ஆவணங்களின் தொகுப்பு. மேலும் நூலகத்தில் ஒரு பகுதியில் உள்ள லூத்தரன் சபையின் இந்தியாவிற்கான செயல்பாடுகளைப் பற்றிய ஆய்வு நூல்கள் வரிசையைக் காண்பித்தார். சில முக்கிய நூல்கள் அந்த வரிசையில் இருந்தன. அவற்றை வாசிக்க நிச்சயமாக நான் ஒதுக்கியிருந்த மூன்று நாட்கள் போதாது தான். பின்னர் வளாகத்தின் சிறிய அருங்காட்சியகப் பகுதிக்கு நான் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தியாவில் பணியாற்றிய பாதிரிமார்கள் திரும்பி வந்த போது கொண்டு வந்த சில பொருட்களின் சேகரிப்பு அங்கிருப்பதாக அறிந்து கொண்டதோடு மதியவேளையில் அப்பகுதிக்கும் சென்று பார்த்து வந்தேன்.
மதியம் ஆய்வு மாணவர்களோடு இணைந்து மதிய உணவு பல்கலைக்கழக வளாக மென்சாவில் (உணவகம்) எடுத்துக் கொண்டேன். மருத்துவமனையில் கொடுக்கப்படும் உணவை அந்த உணவு நினைவு படுத்தியது.
மாலையில் ஹாலே நகர வீதியில் உலாவிய போது நகர மையத்தின் அழகை ரசிக்க முடிந்தது. கிழக்கு ஜெர்மனி என பொதுவாக மனதில் நான் ஏற்றி வைத்திருந்த சில கணிப்புக்களை இந்த அனுபவம் மாற்றியது. இங்கு பல இன மக்கள் வாழ்கின்றனர். ஆப்பிரிக்கர், இசுலாமியர், இந்தியர், அரேபியர்கள். கால மாற்றமும் அரசியல் மாற்றமும் ஏற்படுத்திய சூழலின் நல்ல விளைவு இது.
கிழக்கு ஜெர்மனியில் பொருட்களின் விலை மேற்கு மாநிலமான பாடன் உர்ட்டெம்பெர்க் விட சற்று மலிவாகவே உள்ளது.
எனது ஆய்வின் முதல் இரண்டு நாட்களும் கிழக்கு ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள ப்ராங்கன் கல்விக்கழக நூலகத்தின் ஒரு பகுதியில் நீண்ட நேரத்தைச் செலவிட்டு இங்குச் சேகரிப்பில் உள்ள தமிழ் ஓலைச்சுவடிகள், காகித ஆவணங்களை ஆராய்ந்தேன். முப்பது தமிழ் ஓலைச்சுவடிகள்; ஏறக்குறைய 20 காகித ஆவணங்கள் என் ஆய்விற்காகப் பட்டியலிலிருந்து தேர்வு செய்து கொடுத்திருந்தேன். கேட்ட அனைத்து ஆவணங்களையும் என் ஆய்விற்கு நூலகத்தார் வழங்கினர்.இந்த ஓலைச்சுவடிகளும் காகித ஆவணங்களும் அனைத்துமே ஜெர்மானிய பாதிரிமார்கள் தானே கைப்பட எழுதிய நூல்கள் மற்றும் கடிதங்கள் தாம். இந்த ஆவணங்கள் பற்றி பெரிதாகத் தமிழாய்வாளர்கள் மத்தியில் இன்று வரை விரிவாகப் பேசப்படாதது தமிழக வரலாற்றில் ஒரு குறையாகவே கருதுகிறேன்.
இன்றைக்கு முந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலகட்டத்தில் தமிழகம் வந்த ஜெர்மானிய பாதிரிமார்கள் தமிழ் மொழியைப் படித்து, நூல்கள் எழுதி பயிற்சி செய்து அதனை டோய்ச் மொழியிலும் குறிப்பு எழுதி வைத்த வரலாறு ஆச்சரியம் தருவதாக அமைகின்றது.
எனது ஆய்வில் தமிழகத்தின் தரங்கம்பாடி வந்த ஜெர்மானிய பாதிரிமார்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு எழுதிய முறையில் சில குறிப்பிடத்தக்க விசயங்களை அடையாளம் காணமுடிந்தது. குறிப்பாகத் தமிழ் நெடுங்கணக்கு எழுத்து முறை, சில குறிப்பிட்ட எழுத்துக்களின் வடிவம், சொல்லாடல், பேச்சுத் தமிழ், ஓலையில் ஜெர்மானிய எழுத்து, ஓவியங்களுடன் கூடிய ஓலைச்சுவடிகள், சீர்திருத்த கிருத்துவத்துக்குப் பிரத்தியேகமாக மொழிமாற்றம் செய்யப்பட்ட கதைகளின் தமிழ் மூல நூல், தமிழ் போற்றிப்பாடல்கள், கடிதங்கள் என இவை பன்முகத்தன்மையுடன் விளங்குகின்றன.
இந்தச் சுவடிகள் ஆய்வு ஜெர்மானியர் தமிழ் கற்ற படிப்படியான வளர்ச்சி நிலை, தரங்கம்பாடி, கடலூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட சீர்திருத்த கிருத்துவ அமைப்பு செயல்பட்ட போது நிகழ்ந்தவை, தரங்கம்பாடி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்ட பிரசுரங்கள் மற்றும் கடிதங்களின் அசல் போன்றவற்றைப் பற்றிய முதல் நிலை தகவல்களை வழங்குவதாகவும் அமைகின்றன.
பாதிரிமார்கள் எழுதிய நூல்களில் காணப்படும் எழுத்துக்கள், தமிழ் எழுத்துக்களை அவர்கள் கையாண்ட முறை என்பன சில புதிய செய்திகளைத் தருகின்றன. இவை சுவாரசியமான ஆய்வுக்களனை நமக்கு அமைக்கின்றன. உலகின் பல இடங்களில் இயங்குகின்ற பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைகள் இத்துறைகளில் மேலும் ஆராய்ந்து இவை கூறும் செய்திகளை வெளிக்கொணர முயற்சிக்க வேண்டும். தமிழ் ஆய்வில் புதிய பார்வைகளை உட்புகுத்த வேண்டும் என விரும்பும் பல்கலைக்கழக, மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் எம்மைத் தயங்காது தொடர்பு கொள்ளுங்கள்; உங்களிடம் ஆய்விற்குத் தயாராக இருக்கும் மாணவர்களை இவ்வகைப் பணியில் ஈடுபடுத்துங்கள் .
தமிழ் மொழியையும் தமிழர் வரலாற்றையும் நமக்குக் கிடைக்கின்ற, இருக்கின்ற சான்றுகளை ஆவணப்படுத்தல் முயற்சியும் அவற்றை ஆராய்ந்து வெளியிடும் முயற்சிகளும் தான் நமக்கு இன்றைக்குத் தேவையானது. இவற்றைச் செய்வதை விடுத்து ’உலகில் தோன்றிய முதல் குரங்கே தமிழ் குரங்கு தான்’ என்பது போல பேசிக்கொண்டிருப்பதால் தமிழுக்கும் தமிழருக்கும் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. ஆய்வுலகில் இத்தகைய மிகைப்படுத்தப்பட்ட விசயங்கள் கேலிக்குட்படுத்தப்படுவதுடன் தமிழர் தம் வரலாறு பற்றிய பொய்யான தகவல்கள் பரவுவதுடன், உலகளாவிய அளவிலான ஆய்வுகளில் தமிழை தரம் தாழ்த்தும் செயல்பாடாகவும் இப்போக்கு அமைந்துவிடக்கூடிய அபாயம் இதனால் ஏற்படும் என்பதை மறக்கலாகாது!
தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்த ஆய்வு முயற்சியில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் நூல் வடிவில் வெளியிடப்படும். அவை ஆய்வுலகில் ஈடுபடுவோருக்கு நிச்சயம் புதிய செய்திகளை வழங்கும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்.
அரிய பணி சகோதரி., தங்கள் பணிகளுக்கு தமிழ்கூறும் நல்லுலகம் என்ன கைம்மாறு செய்திட இயலும்?!!! உளமார்ந்த பாராட்டுக்கள் சகோதரி.
ReplyDeleteதங்கள் பணி மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்
ReplyDelete