Thursday, April 5, 2018

86. பூரி ஜெகநாத்
ஒடிஷா இந்தியாவின் கிழக்குப் பகுதி மாநிலங்களில் ஒன்று. வங்கக்கடலை எல்லையாகவும் மேற்கு வங்கத்தையும், ஜார்கந்த், சட்டீஷ்கர், ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களையும் எல்லையாகக் கொண்ட மாநிலம். முதலாம் ராஜேந்திரச் சோழனின் திருப்பதி கல்வெட்டில் ”ஒட்ட விசயா” எனப் பெயர் குறிப்புள்ளது. இன்று ஒடிஷா என அறியப்படும் இந்த மாநிலம் கலிங்கம் என வரலாற்றுப் பெயர்கொண்டு திகழ்ந்த ஒரு நிலப்பகுதியாகும். இன்றும் ”கலிங்கா” என்ற பெயருடன் பல நினைவுச் சின்னங்களும், அமைப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் இந்த மாநிலத்தில் செயல்பட்டு வருவதை பரவலாகக் காண முடிகின்றது.

மௌரியப் பேரரசை ஆட்சி செய்த அசோக மாமன்னன், தனது ஆட்சிக் காலத்தின் 8ம் ஆண்டில் கலிங்கத்தை நோக்கிப் படையெடுத்தான். இது நிகழ்ந்தது கி.மு.261ம் ஆண்டில். இந்த கலிங்கப் போர் வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கும் ஒரு நிகழ்வாக அமைந்தது. இப்போரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறந்தார்கள் என்றும் ஒன்றரை லட்சம் பேர் சிறைக்கைதிகளாக சித்ரவதைக்குள்ளாயினர் என்றும் கல்வெட்டுச் சான்றுகள் சொல்கின்றன. அதே வேளை இந்தப் போர் அசோகமன்னனை போரை கைவிட்டு, பௌத்த மதம் தழுவி, இன பௌத்த அறத்தை இந்தியா முழுமைக்கும் மற்றும் இலங்கை, ஏனையை கிழக்காசிய, தூரக் கிழக்காசிய நாடுகளுக்கும் பரவச் செய்த அரசியல் முன்னெடுப்பை நிகழ்த்திய ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.

நெடு நாட்களாக ஒடிஷா சென்று வரவும், அங்குள்ள வரலாற்றுச் சான்றுகளைப் பதிவாக்கி ஆராய்ந்து வரவும் எனக்கு ஆழ்ந்த விருப்பம் இருந்தது. எனது இனிய நண்பர் திரு.பாலகிருஷ்ணன் IAS அவர்கள் ஒடிஷா அரசில் மிக உயர்ந்த பதவி வகிப்பவர். அவரது உதவியுடன் நான்கு நாட்கள் ஒடிஷாவின் பல வரலாற்றுப் பகுதிகளுக்குச் சென்று பதிவுகளைச் செய்து வந்தேன். அப்படிச் சென்ற பகுதிகளில் வைணவப் பாரம்பரியத்தின் கூறுகள் கொண்டதாக அடையாளப்படுத்தப்படும் ஸ்ரீ ஜெகநாத் கோயிலுக்குச் சென்று வந்தேன். புவனேஸ்வர் நகரிலிருந்து ஏறக்குறைய 1 மணி நேர கார் பயணம் அது. இக்கோயிலுக்குள் கைப்பேசி புகைப்பட கருவிகள் ஏதும் எடுத்துச் செல்ல அனுமதியில்லை.

சாதாரண நாளில் ஒரு நாளுக்கு முப்பதாயிரம் பேர் வந்து செல்லும் ஒரு கோயில் இது. நினைக்கவே மலைப்பாக இருந்தது. நான் உள்ளே செல்ல எனக்கு ஒரு சுற்றுலாத்துறை அதிகாரியும், பெண் போலிஸ் அதிகாரியும் உடன் வந்ததால் எல்லா முக்கியப் பகுதிகளையும் பார்த்து சுவாமி வழிபாடும் செய்து வர முடிந்தது.

உள்ளே நுழைந்ததுமே இக்கோயில், அதன் சுற்றுச்சூழல் அனைத்துமே ஒரு எல்லைக்குள் வைத்து ஒப்பிடப்பட முடியாத ஒரு தனி உலகம் என்று புரிந்தது. இக்கோயிலுக்குள் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். சிறிய கோயில்களாக பல நிறைந்திருக்கின்றன, ஒவ்வொன்றிலும் வழிபாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆங்காங்கே சன்னிதிகளில் சிவலிங்கங்கள் வழிபடப்படுகின்றன. நாகர் தெய்வ வழிபாடு, பெண்தெய்வங்களின் வெவ்வேறு வடிவங்களிலான சன்னிதிகள் நிறைந்திருக்கின்றன. இவை பூர்வகுடி மக்களின் வழிபாட்டின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தும் கூறுகளாக உள்ளன.

முதலில் வருவது பெரிய மடப்பள்ளி. இங்கு ஒடிஷாவில் இயல்பாக விளையும் காய்கறிகள் மட்டுமே சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மடப்பள்ளியைச் சுற்றி வருவதே ஒரு கண்காட்சி போலத்தான் இருக்கின்றது. பரங்கிக்காய், மரவள்ளிக்கிழங்கு போன்றவை அதிகம் காணப்பட்டன. உருளைக்கிழங்கு தக்காளி ஆகியவை பயன்படுத்தப்படுவதில்லை. விறகுகளை அடுக்கி அறைக்குள் பெரிய பெரிய அண்டாக்களில் பல அடுக்கு பாத்திரங்களில் சமையல் நடைபெறுகின்றது. தண்ணீரை அங்குள்ள குளத்திலிருந்து ஊழியர்கள் கொண்டு வந்து ஒரு பிரத்தியேக வழி அமைத்து அதன் வழி கொட்டி பாதை அமைத்து அனுப்புகின்றனர்.

அங்கு மண்பாண்டங்களில் சமையல் தயாரிப்புக்கள் செய்யப்படுகின்றன. ஒரு நாள் பயன்படுத்திய மண்பாண்டம் மீண்டும் பயன்படுத்தப்படுவதில்லை. அன்றே சமையல் முடிந்ததும் மண்பானைகள் உடைக்கப்படுகின்றன. தினம் தினம் ஆயிரக்கணக்கான மண்பாண்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கோயிலுக்கென்றே பிரத்தியேகமாக மண்பாண்டம் செய்ய ஒரு அருகாமை கிராமத்தில் தொழில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது என்பது வியப்பளிக்கின்றது.

இக்கோயில் வளாகத்தில் முதலில் ஒரு புத்த விகாரை இருந்து பின் அது பெர்ஷிய மன்னனின் படையெடுப்பின் போது அம்மன்னனின் படையால் அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தப் புத்த விகாரைக்குள் புத்தரின் பல் படிமத்தின் ஒரு பகுதி பாதுகாக்கப்பட்டதாகவும், புத்த விகாரைக்கு ஏற்பட்ட சிதைவு பாதிப்பினை ஏற்படுத்தும் என பயந்த பூர்வகுடி மக்கள் அவர்கள் வழிபாட்டில் உள்ள ”நீல் மாதவ்” என்ற கடவுளை இங்கு வழிபாட்டிற்காகப் பிரதிட்டை செய்திருக்கின்றனர். சிறிய கோயிலாக இது இன்றும் வழிபாட்டில் இருக்கின்றது. பழங்குடி இன மக்களின் இக்கடவுள் கருப்பு நிறத்திலான கடவுள். இந்த கடவுள் உருவத்தின் இருதயப் பகுதியில் முன்பிருந்த புத்த விகாரையில் பாதுகாக்கப்பட்ட புத்தரின் உடல் படிமத்தின் பல்லின் ஒரு பகுதி உள்ளே வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் இக்கடவுளின் மறு தயாரிப்பு நிகழ்த்தப்பட்டு அந்தப் படிமம் இருதயப் பகுதியில் வைக்கப்பட்டு வழிபாடு தொடர்கின்றது. 12ம் ஆண்டில் மாற்றப்படும் இந்தத் தெய்வச் சிலையின் உருவம் கோயில் வளாகத்தின் ஒரு புறத்தில் உள்ள கல்லறைப்பகுதி என அடையாளப்படுத்தப்படும் பகுதியில் புதைக்கப்படுகின்றது. அதன் எதிர்புரம் இருக்கும் கட்டிடத்தில் புதிய தெய்வ வடிவம் தயாரிக்கப்படுகின்றது. மிக நுணுக்கமான இந்த அமைப்பு வேறு எங்கும் நான் கேட்டிராத, கண்டிராத, அறிந்திராத ஒரு வழிபாட்டு முறை. மர வழிபாடு என்பது மிகப் பழமையான ஒரு வழிபாட்டுக் கூறு. நீல் மாதவ் தெய்வம் வேப்ப மரத்தினால் செய்யப்படுகின்றது என்பது இண்டஹ் மர வழிபாட்டுக் கூறுகள் தொடர்வதைக் காட்டுகின்றன.

இப்போதிருக்கும் ஜெகநாதர் ஆலயத்தை அமைத்தவர் கலிங்கமன்னன் இந்திரதியும்மன். இவர் அமைத்த கோயிலின் பிரகாரத்தில் ஸ்ரீ ஜெகநாதர் (கருப்பு வர்ணத்தில்) அவரோடு அவரது சகோதரி சுபத்திரா(மஞ்சள் நிறத்தில்), அவரது சகோதரர் பாலபத்திரன் (வெள்ளை நிறத்தில்) என வெவ்வேறு மாறுபட்ட வடிவங்களில் அமைத்திருக்கின்றார். மூலஸ்தானத்தில் உள்ள மூன்று தெய்வங்களின் வடிவங்களும் வேப்ப மரத்தினால் உருவாக்கப்படுகின்றன. சிறப்பான தகுதிகள் பெற்ற மரங்களே இத்தெய்வ வடிவங்களைச் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. மரத்தினால் சுவாமி வடிவம் அமைக்கப்படுவதால் இது அபிஷேகம் செய்யப்படாத மூலவர் வடிவமாக அமைகின்றது. சுவாமிக்குப் பண்டிகை காலச் சூழலைப் பொறுத்து உடை அலங்காரங்களைச் செய்கின்றனர்.

இன்றிருக்கும் கோயில் 11ம் நூற்றாண்டு தொடங்கி கட்டப்பட்டதாகும். கங்கா பேரரசின் கலிங்க மன்னர்கள் கட்டிய கட்டுமானப் பணி இது. வைணவர்களால் ஸ்ரீ ஜெகநாதர் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக, 9வது அவதாரமாக இக்கோயிலில் காட்டப்படுகின்றார். விஷ்ணுவின் அதே 9வது அவதாரமாகப் புத்தரும் இங்கு அடையாளப்படுத்தப்படுகின்றார் என்பது விந்தை. புத்தரின் படிமம் ஒன்று இங்குத் தொடர்ச்சியாக மாதுகாக்கபப்ட்டு வருவதால் இந்த நம்பிக்கை இருக்கலாம் என்று கருதத் தோன்றுகின்றது.

இக்கோயிலில் மகாலட்சுமிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. ஜெகநாதர் கோயிலில் நிகழ்த்தப்படும் அனைத்துச் சடங்குகளும் மகாலட்சுமி சன்னிதியில் அனுமதி பெற்றே நடத்தப்படுகின்றது.

ஸ்ரீ ஜெகநாதரும்,சுபத்திரா, பாலபத்திரன் ஆகிய மூவரும் இருக்கும் பிரகாரம் தான் இக்கோயிலின் மையப்புள்ளி. இங்கு எறும்பு ஊர்வது போல மக்கள் நெரிசல் அலை மோதுகின்றது. ஒரு சில விநாடிகள் தான் முதலில் சாமி தரிசனம் கிடைக்கின்றது. பின்னர் தூரச் சென்று நின்று இறைவடிவங்களைக் காண முடிகின்றது. கோயில் முழுக்க உள்ளே புடைப்புச் சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன. முன்னர் வர்ணப்பூச்சுக்கள் இல்லை. ஆனால் இப்போது சுவர் முழுக்க வர்ணச்சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன. வைஷ்ணவ தசாவதாரக் கதைகளைச் சித்திரமாகவும் சிற்பங்களாகவும் உருவாக்கியிருக்கின்றனர். இது பிரம்மாண்டக் காட்சியாக இருக்கின்றது.

மனிதர்கள் சாப்பிடுவது போலவே சுவாமிக்கும் அதி காலை உணவு, காலை 10 மணிக்கு ஒரு உணவு, மதிய உணவு, இடையில் மீண்டும் ஒரு உணவு, மாலை உணவு இரவு உணவு என ஆறு வேளை வெவ்வேறு வகையான உணவு (நைவேத்தியம்) சுவாமிக்கு இங்குத் தயாரிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு 9,12, அல்லது 19ம் ஆண்டில் குருமார்கள் குறித்துக் கொடுக்கும் நாளில் கருவறையில் உள்ள மூன்று தெய்வ வடிவங்களின் புதிய வடிவத்திற்கான உருவாக்கம் பெரும் நிகழ்வு நடைபெறுகின்றது, இதனை ”நபக்கலேபரா” என அழைக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட வேப்ப மரத்தில் புதிய சாமியின் உருவங்கள் தயாரிக்கப்பட்டு அவை பிரகாரத்தில் வைக்கப்படுகின்றன. இப்போது இருக்கும் இந்த மூன்று தெய்வ வடிவங்களும் 2015ம் ஆண்டு ஜூலை மாதம் புதிதாகத் தயாரிக்கப்பட்ட வேப்ப மரத்தினாலான வடிவங்களாகும். புதிய வடிவங்கள் தயாரிக்கப்பட்டு பழைய வடிவங்கள் கல்லறை தோட்டத்தில் தக்க சடங்குகளுடன் புதைக்கப்படுகின்றன.

மூலவர் வடிவங்கள் மூன்றும் ஏறக்குறைய இரண்டு அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

பூரி ஜெகநாதர், பௌத்தம்-பழங்குடி இன தெய்வம்-வைணவம் ஆகிய மூன்று வழிபாட்டு அம்சங்களையும் உள்ளடக்கிய வழிபாடு. இந்த ஆலயம் உலகின் வேறெங்கும் இல்லாத, தனித்துவமிக்க ஒரு வழிபாட்டு மையம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்!


No comments:

Post a Comment