Wednesday, June 7, 2017

59. சேர்மன் மாணிக்கவாசகம் அரசு நடுநிலைப்பள்ளிதேவகோட்டையில் உள்ள சேவுகன் அன்ணாமலை கல்லூரியில் 2015ம் ஆண்டு ஒரு கருத்தரங்கத்தில் பேச என்னை அழைத்திருந்தார்கள். காலை தொடங்கி மதியம் வரை என அந்தக் கருத்தரங்கம் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. நிகழ்ச்சியின் போது தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தனது பள்ளியில் உள்ள மாணவர்களையும் நான் வந்து சந்தித்து அவர்களுடன் உரையாடி விட்டுச் செல்ல வேண்டும் என ஒரு அன்பர் என்னிடம் வந்து கேட்டுக் கொண்டார். அவரது அழைப்பைத் தட்டிக் கழிக்க எனக்கு மனம் வரவில்லை. அது தேவகோட்டை நகரிலேயே உள்ள ஒர் அரசு பள்ளி. அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடிவிட்டு  வருவோமே என என் உள்மனம் ஒப்புதல் அளிக்க, சரி எனச் சொல்லி கல்லூரி ஏற்பாடு செய்திருந்த காரிலேயே அங்கு சென்று சேர்ந்தேன்.

வயதில் மூத்த மாணவர்களிடம் பேசுவதென்றால் சற்று எளிது. விரைவில் புரிந்து கொள்வார்கள். தைரியமாகக் கேள்வி கேட்பார்கள்.  தயக்கமோ பயமோ விருந்தினர் மீது இருக்காது. ஆனால் வயதில் குறைந்த பள்ளிச் சிறார்கள் பொருமையாக உட்கார்ந்து நாம் பேசுவதைக் கேட்பார்களா.. அவர்களுக்கு நாம் சொல்லக்கூடிய செய்திகள் மனதில் சென்று சேருமா..  என்பன போன்ற கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டிருக்க நாங்கள் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் அப்பள்ளியைச் சென்றடைந்தது.

இந்தப்  பள்ளியின் பெயர் சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உயர் நிலைப்பள்ளி. என்னை வரவேற்று அழைத்துச் சென்ரவர் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.சொக்கலிங்கம்.   நான் உள்ளே வரும் முன் வாசலில் என் பெயர் எழுதி அறிவிப்புப் போடப்பட்டருந்ததைப் பார்த்தேன். அந்த குறுகிய நேரத்திற்குள் நான் வருவது அறிவிக்கப்பட்டு ஆசிரியர்கள் தக்க ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

மிக எளிமையான பள்ளிக்கூடம். பழமையான கட்டிடம். பள்ளிக்கூடத்தின் எல்லா பகுதியும் மிகத் தூய்மையாகக் காட்சியளித்தது. என்னோடு என் உடன் வந்திருந்த தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்களையும், அங்கிருந்த ஆசிரியர்களும் ஏனையோரும் முகமலர்ச்சியுடன் வந்து வரவேற்று அழைத்துச் சென்று அமர வைத்தனர். குறுகிய நேர அறிமுகத்துக்குப் பின்னர் நான் பேச ஆறம்பித்தேன். என்னுடைய இளைமை காலத்தில் மலேசியாவில் எனது பள்ளி அனுபவங்களை சிறிது விவரித்து விட்டு ஜெர்மனியில் எனது தொழில், நாட்டு நிலவரம், இயற்கை சூழல் என ஏறக்குறைய இருபது நிமிடங்கள் பேசி அமர்ந்தேன். தலைமை ஆசிரியர் மாணவர்கள் இப்போது உங்களிடம் கேள்வி கேட்பார்கள் எனச் சொல்ல, எவ்வகை கேள்விகளை இச்சிறார்கள் கேட்கப்போகின்றார்கள் என்ற ஆர்வம் எனக்கு மிகுந்தது.

அடுத்த ஒரு மணி நேரம் அங்கு அமர்ந்திருந்த ஏறக்குறைய ஐம்பது மாணவர்களில் ஏறக்குறைய அனைவருமே ஒரு கேள்வி என விடாது கேள்விக்கணைகளைத் தொடுக்க ஆரம்பித்து விட்டனர். நான் அவர்களுக்குக் கூறிய செய்திகளைக் கவனம் சிதறாது கிரகித்துக்  கொண்டு நான் சொன்ன செய்திகளோடு மேலும் அது சார்ந்தவகையிலான சில கேள்விகளையும் கேட்டனர். மாணவர்களின் சுறுசுறுப்பும் , விசயங்களை உடனுக்குடன் உள்வாங்கி யோசித்து அது பற்றிய வேறு கோணத்திலான விசயங்களை கேட்டு அறிதலில் இருந்த நாட்டமும் என்னை வியப்படைய வைத்தது. மாணவர்களின் புறத்தோற்றம்  அவர்களில் பொரும்பாலோர் வறுமை கோட்டிற்கும் கீழ் இருப்பவர்கள் என்பதைக் காட்டியது. ஆனால் அவர்களுக்குள்ளேயிருக்கும் உத்வேகமும் சுறுசுறுப்பும் அளப்பறியது என்பதை நான் உணர்ந்தேன்.

அன்று அப்பள்ளியில் நான் நினைத்ததற்கும் மேலாக கூடுதலாக நேரம் செலவிட்டு விட்டு பின்னர் திரும்பிச் சென்றேன். 2015ம் ஆண்டு தமிழகப் பயணத்தில் தேவகோட்டைக்கு வந்த பின்னர் நான் சென்னைக்கும் செஞ்சிக்கும் பயணம் செய்ய வேண்டியிருந்தது. எதிர்பாராத விதமாக மீண்டும் காரைக்குடிக்கு வரவேண்டிய ஒரு வாய்ப்பு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் வந்தது. அதற்காக காரைக்குடிக்குச் சென்றிருந்தேன். அந்த சமயத்தில் தேவகோட்டையில் நான் சந்தித்த சேர்மன்  மாணிக்க வாசகம் பள்ளியின் அந்த சுறுசுறுப்பும் அறிவுத்தாகமும் நிறைந்த குழந்தைகளின் முகம் என் மணக்கண்னில் வந்து போய்க்கொண்டிருந்தது. பக்கத்தில் தானே இருக்கின்றோம். அந்தப் பள்ளிக்குச் சென்று வருவோம் என நினைத்து பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.சொக்கலிங்கத்தைத் தொலைபேசியில் அழைத்து விசயத்தைச் சொன்னேன். அவருக்கும் மகிழ்ச்சி. நான் நிச்சயம் வரவேண்டும் என அவரும் அழைக்க, ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து கொண்டு பள்ளிக்குச் சென்று சேர்ந்தேன்.

இரண்டாம் முறை சென்றபோதும் அவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தேன்`. இவ்வளவு கெட்டிக்கார மாணவர்களாகிய உங்களுக்குப் பரிசு கொடுப்பது அவசியம் எனச் சொல்லி, எனது அடுத்த தமிழக வருகையின் போது அப்பள்ளி மாணாக்கர்களுக்கு ஒரு கணினியை அன்பளிப்பாக அளிக்கின்றேன் எனச் சொல்லி விடைபெற்று வந்தேன்.

சென்ற ஆண்டு நான் தமிழகம் சென்றிருந்த போது இப்பள்ளிக்குச் சென்று மாணவர்களைச் சந்தித்து உரையாடி ஒரு புதிய கணினியை வாங்கி பள்ளிக்குப் பரிசளித்தேன். மாணவர்களின் உற்சாகத்தை முகத்தில் பார்த்தபோது எல்லையில்லா ஆனந்தம் எனக்கு ஏற்பட்டது.

அவர்களிடம் அக்கணினியைப் பரிசளித்தபோது ஒரு செய்தியைக் குறிப்பிட்டு சொன்னேன். அதாவது, தேவகோட்டை, அதன் சுற்று வட்டார சூழலை மட்டும் அறிந்திருக்கும் உங்களுக்கு கணினியும் இணையத் தொடர்பும் உலகின் ஏனைய பாகங்களையும் மக்களையும் காட்டும் ஒரு ஜன்னலாக அமையும். வறுமை என்றுமே உங்கள் அறிவின் விரிவாக்கத்திற்கும் விசாலப்படுத்துதலுக்கும் தடையை ஏற்படுத்தி விடக்கூடாது. கல்வி கற்கவும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் என்றுமே நீங்கள் தயங்கக்கூடாது. மன உறுதியுடன் கல்வியைக் கற்றுக் கொண்டு வாழ்வில் மிகப்பெரிய சாதனைச் செய்ய வேண்டும் என்ற கனவும் என்றும் மனதில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்க வேண்டும். உங்கள் எதிர்காலத்தைக் கல்விதான் வடிவமைக்கும், என்று நான் கூறிய செய்தியை மாணவர்கள் இன்முகத்துடன் கேட்டு கல்வியில் கவனம் வைத்து முன்னேற்றம் காண்போம் என உறுதி கூறினர். இந்த நாள் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை என்னுள் ஏற்படுத்திய நாள்.

இந்தப் பள்ளிக்கூட மாணவர்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகைச்சூடி வருகின்றனர். இந்த மாணவர்களின் வெற்றிக்குப் பின்னால் இருப்பவர் ஒரு தன்னலமற்ற ஒரு பண்பாளர், சேவையாளர். அவர்தான் அப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.சொக்கலிங்கம். இவரது ஆலோசனையிலும் வழிகாட்டுதலிலும் இவருக்குத் தோள்கொடுத்துப் பயணிக்கும் இப்பள்ளியின் ஒவ்வொரு ஆசிரியரும்  நற்சேவையாளர்கள். இவர்களது அளப்பறிய சேவையே இந்தப் பள்ளியின் பெயர் அடிக்கடி செய்தித்தாட்களில் வருவதற்குக் காரணமாக இருக்கின்றது என்று சொல்வது மிகைக்கூற்றல்ல. மாதம் முடிந்தால் சம்பளம் வாங்கினோம், எனச் செயல்படும் எத்தனையோ ஆசிரியர்களுக்கிடையே இத்தகைய ஆசிரியர் பெருந்தகைகள் மாணிக்கங்களாக மிளிர்கின்றார்கள். இவர்களது சேவை எளிய குழந்தைகளும் கல்வி எனும் ஏணிப்படியில் ஏறி தனது வாழ்க்கைப் பயணத்தில் உயர்ந்த இடத்தை பெறுவதற்கு அடிப்படையை வகுத்துக்கொடுக்கும் ஆதாரத்தளங்களாக அமைந்திருக்கின்றன.

தானத்திலேயே சிறந்த தானம் கல்வி தானம் தான். ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி வாய்ப்பையும் பொது உலக வாய்ப்பையும் சிறப்புடன் அமைத்துக் கொடுக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் போற்றிப்பாராட்டத்தக்கவர்கள்.

No comments:

Post a Comment