Wednesday, May 24, 2017

57. செங்கம் லம்பாடி பழங்குடிமக்கள்இயற்கையோடு இயைந்த வாழ்வியலை நினைத்துப் பார்க்கும் போது நமக்குப் பழங்குடி மக்களைப் பற்றிய சிந்தனைகள் மனதில் எழுவதைத் தவிர்க்க இயலாது. பண்டைய காலத்தில் பழங்குடிகளாக நாம் இருந்த காலத்தில் அமைந்திருந்த எளிமையான வாழ்க்கை முறையை நாம் நினைத்துப் பார்த்தாலும் அதனை மீண்டும் பெற முடியாது. ஆடம்பரமற்ற, மன அழுத்தமற்ற, எளிமையான வாழ்க்கை நிலையே அடிப்படையாக இருந்தது. மனித உறவுகளுக்குள் நெருக்கம், இயற்கையோடு சேர்ந்து அதனைக் கெடுக்காமல் இயற்கையோடு இயற்கையாகத் தன்னையும் இணைத்துக் கொண்டு வாழும் ஒரு வாழ்க்கையாகப் பண்டைய பழங்குடி மக்கள் வாழ்வு என்பது இருந்தது. இன்று இந்தப் புவிக்கு ஆபத்து விளைவிக்கும் எண்ண ற்ற நாசச்செயல்களெல்லாம் இல்லாத ஒரு சூழல் அது. நினைத்துப் பார்த்தால் இப்போது நமக்குச் சாத்தியமற்ற ஒரு வாழ்க்கை நிலை தான். ஆனால் இந்த உலகில் இன்னமும் கூட சில குறிப்பிட்ட நிலப்பகுதிகளில் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர் என்பதும் உண்மையே. மலேசிய சூழலில் செமாங் அல்லது நெக்ரித்தோ சமூக மக்கள், செனோய் சமூகத்து மக்கள் ஆகியோரை மலேசிய நிலப்பகுதியின் பழங்குடி மக்கள் என்ற வகையில் கூறலாம். இவர்களது வாழ்க்கை முறை இன்றைய நாகரிக வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. காடுகளுக்குள் வேட்டையாடி உணவைத்தேடுதல் என்பதும், திருமணச் சடங்குகள், குழந்தைப்பெறுதல், இறப்பு ஆகியனவும் குழுக்களுக்கு குழு குறிப்பிடத்தக்க வகையில் வேறுபாட்டுடன் திகழக்கூடியது எனலாம்.

தமிழர்களின் தொல்குடிகளின் ஆய்வுகளில் இன்று நமக்குக் கிடைக்கும் சில குறிப்பிடத்தக்க ஆய்வுகள் எனக் கூறுவதென்றால் எட்கர் தர்ஸ்டன் அவர்களது ஆய்வுகளை நாம் கூறலாம். ஆங்கிலேய காலணித்துவ இந்தியாவில் அரசுப்பணியில் தமிழகத்தில் பணியாற்றிய ஒரு அரசு அலுவலகர் இவர். 1885ம் ஆண்டில் தமிழகத்தின் சென்னை அருங்காட்சியகத்தின் இயக்குநர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு மிகப்பெரிய அளவில் இந்த அருங்காட்சியகத்தை வடிவமைத்தவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. இந்தப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னர் இவர் லண்டன் கிங்ஸ் கல்லூரி அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனக்கு வழங்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்துவது என ஒரு எல்லைக்குள் தன்னை முடக்கிக் கொள்ளாமல் தென்னிந்தியாவின் பல பகுதிகளுக்கும் தனது உதவியாளர்களுடன் பயணித்து ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வுத்தரவுகளைச் சேகரித்து மானுடவியல் தொடர்பான மிகச் சிறந்த ஆய்வு நூல்களை வழங்கியவர் இவர். இவரது Castes and Tribes of South India என்ற பெரிய ஆய்வு நூல் இன்றளவும் மானுடவியல், சமூகவியல் ஆய்வுகளில் ஈடுபடுவோருக்கு மிக முக்கிய அடிப்படை நூலாக அமைந்திருக்கின்றது. தான் மேற்கொண்ட பல பயணங்களில் தாம் நேரில் பார்த்து பதிந்த எல்லா வகைச் செய்திகளையும் பதிந்து ஆய்வு நோக்கில் அவை அலசப்படும் நல் வாய்ப்பினை ஏனைய ஆய்வாளர்களுக்கு எட்கர் தர்ஸ்டன் வழங்கியிருக்கின்றார். இது மகத்தானதொரு பணியாகும்.

ஒரு நிலப்பகுதியின் தொல் பழங்குடிகளின் வாழ்க்கை முறையை அலசும் போது சில மையக்கூறுகளைச் சுற்றியே அவர்களின் வாழ்க்கை அமைந்திருப்பதை நாம் அறியலாம். உதாரணமாகப் பழங்குடி மக்களின் வாழ்வில் மிக முக்கிய இடம் வகிப்பவையாக அமைபவை சடங்குகளாகும். சடங்குகள் எனப்படும் போது அது திருமணச் சடங்கு, பிள்ளை பெற்றதும் நடத்தும் சடங்கு, இறப்பின் போது நடத்தப்படும் சடங்கு, கடவுளுக்கானச் சடங்கு என வகைப்படுத்தலாம். இந்தச் சடங்குகள் அனைத்துமே ஒவ்வொரு இனக்குழுவுக்கும் தனித்துவம் வாய்ந்தவையாக அமைகின்றன. ஒரு பழங்குடி இனத்தின் சடங்கிலிருந்து மற்றொரு பழங்குடி இனத்தின் சடங்குகள் மாறுபடுகின்றன. இறைவழிபாடு தொடர்பான சடங்குகள் ஏராளமான நுணுக்கமான பல மாறுபட்ட அம்சங்களைக் கொண்டவையாக இருக்கின்றன. சாமிக்குப் போடப்படும் படையல், வழிபாட்டின் போது கொடுக்கப்படும் உயிர்ப்பலி, பூசையில் இடம்பெறுகின்ற உணவு என்பன மாறுபட்ட தன்மைகளைக் கொண்டனவையாக இருக்கின்றன.

இதே போல தனித்துவம் கொண்ட மற்றொரு அம்சம் என்னவென்றால் இப்பழங்குடி மக்களின் கலை. இசை, நடனம் என்பவை குறிப்பாக ஒலிக்கப்படும் ஒலிகள், உடல் அங்கங்களின் அசைவுகள் என்பன சிறப்பாக கவனிக்கப்பட வேண்டியவை. அதே போல உடலில் ஏற்படுத்திக் கொள்ளும் அல்லது தீட்டிக்கொள்ளும் வர்ண ஓவியங்கள், அணியப்படும் அணிகலன்கள் ஆகியவை குழுக்களுக்கு குழு மாறுபாடான வடிவத்தைக் கொண்டவையாக இருப்பதையும் நாம் காணலாம். பழங்குடி மக்களின் இன்றைய நிலை சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போன்று இன்று இல்லை. பலர் காடுகளை விட்டு கிராமப்புறங்களுக்கு இறங்கி வந்துவிட்டதோடு நகர்ப்புற மக்களோடு கலந்து விட்ட நிலையையும் காண்கின்றோம். இது இக்காலச் சூழலில் மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒரு அம்சமே என்பதில் ஐயமில்லை.

எனது தமிழகத்துக்கானச் சில பயணங்களில் நான் சில பழங்குடி இன மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அப்படி ஒரு பழங்குடி இனம் தான் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் பகுதியில் வாழும் லம்பாடி பழங்குடிகள்.லம்பாடி இன மக்கள் ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இஸ்லாமிய படையெடுப்பின் போது இவர்களின் மன்னர் போரில் தோற்றவுடன் இம்மக்கள் அவர்கள் வாழ்ந்த பகுதியிலிருந்து வெளியேறி பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். பின்னர் இப்போதைய ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நாடோடிகளாக வந்து குடியேறினர். ஆரம்பக் காலத்தில் உப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு உழைத்தனர். கழுதைகள் மேல் உப்பை ஏற்றி ஓரிடத்திலிருந்து மற்றோரிடம் சென்று அவற்றை விற்பனை செய்து வருவதைத் தொழிலாகக் கொண்டிருந்தனர். ஆனால் படிப்படியாக இவர்கள் தொழில், வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் இவர்கள் வாழ்க்கையில் மேலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட சிலர் சொந்தமாக நிலம் வாங்கி ஓரிடத்தில் நிரந்தரமாகக் குடியேறி அங்கே தொழில் செய்தும், விவசாயம் செய்தும் வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும் இவர்கள் தங்கள் சமூகத்தினருடன் சேர்ந்து குழுவாக ஓரிடத்தில் இருப்பதையே காண முடிந்தது.

காலவோட்டத்தில் சமூக இயக்கத்தில் இனங்களுக்கே உரித்தான தனித்துவமான கூறுகளில் மாறுதல் ஏற்படுவது என்பது எல்லாச் சமூகத்திலும் நடக்கின்ற ஒன்றுதான். ஆனால் அவை படிப்படியாக வழக்கில் இல்லாது போவது மட்டுமின்றி அச்சமூக மக்களே அறியாத நிலை ஏற்படுவதையும் காண்கின்றோம். லம்பாடி இனமக்களின் வாழ்க்கையிலும் இந்த நிலை தான் ஏற்பட்டுள்ளது. ஒரு இடத்திலிருந்து வேறொரு இடம் பெயர்ந்து செல்லும் வகையில் தங்கள் கூடாரங்களையும் கையோடு கொண்டு செல்லும் வழக்கம் கொண்டவர்கள் லம்பாடி இன மக்கள். இந்தப் போக்கும் தற்சமயம் மாற்றம் கண்டுள்ளது. நிலையாக ஒரே இடத்தில் இருந்து அங்கேயே விவசாயம், கைத்தொழில்கள், கூலி வேலை எனச் சிறு சிறு வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர் இம்மக்கள். இதனால் நிலையான குடிசை, சிறு வீடுகள் என்று இவர்களின் அடிப்படை வாழ்க்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் சமூகத்து மக்களும் மிகக் குறைந்த அளவில் பள்ளிக்கூடம் சென்று கல்வி கற்று சற்று மேம்பாடு அடைந்தும் வருகின்றனர் என்பதைக் காண முடிந்தது.

நாங்கள் பேட்டி காணச் சென்ற கிராமத்தின் பெயர் பரிசல் பட்டு பி.எல்.தண்டா. இங்கு ஏறக்குறைய 450 குடும்பத்தினர் வாழ்கின்றனர். அனைவருமே லம்பாடி இன மக்கள் தான். இவர்கள் இங்கேயே குடியேறி திருமணம் செய்து குழந்தைகள் ஈன்று வாழ்கின்றனர். குழந்தைகள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்று சிலர் அரசாங்க வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இங்கேயே பிறந்து வளர்ந்து இங்குள்ள பள்ளியிலேயே கல்வி கற்று நன்கு தேறி திருவண்ணாமலை நகராண்மைக் கழகத்தில் பணியாற்றும் திருமதி. லதாமம்மா எங்களைக் காண வந்திருந்தார்.

லம்பாடி பழங்குடியினர் மராத்தியும் குஜராத்தி மொழியும் கலந்த வகையில் அமைந்த கோரெர் (Gorer) என்னும் ஒரு மொழியைப் பேசுகின்றனர். பொதுவாக வீட்டில் இவர்கள் தாய்மொழியில்தான் உரையாடுகின்றனர். ஆனாலும் குடும்பத்தை விட்டு வெளியே வரும் போது தமிழ்மொழி முக்கியமாகிப் போவதால் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களின் தாய் மொழியை இளம் குழந்தைகள் மறக்கும் நிலையும் உருவாகி உள்ளது. தற்சமயம் இம்மக்கள் தமிழகத்தில் வாழ்கின்ற மக்களோடு கலந்து இச்சூழலுக்கேற்றவாறு தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டுள்ளமையால் இவர்கள் தங்கள் தாய்மொழியை விடத் தமிழை பேசுபவர்களாக உள்ளனர். இளைஞர்களோ குழந்தைகளோ இம்மொழியைப் பேச அவசியம் இல்லாத நிலை இருக்கின்ற காரணத்தால் இம்மொழி இம்மக்களின் அன்றாட வழக்கிலிருந்து குறைந்து தற்சமயம் அரிதாகி விட்ட நிலை இருப்பதை உணர முடிகின்றது. வயதான சில பெண்களும் ஆண்களும் மட்டும் தங்களுக்குள் இம்மொழியில் உரையாடிக் கொள்கின்றனர்.

திருமணம் தான் இவர்கள் வாழ்கையில் மிக முக்கிய நிகழ்வாக இருக்கின்றது. திருமணச் சடங்கைப் பற்றி விசாரித்த போது மிக ஆர்வத்துடன் தங்கள் வழக்கத்தை எங்களிடம் பகிர்ந்து கொண்டனர். பொதுவாகவே இவர்கள் திருமணம் 4 நாட்கள் நடக்கின்றது. மாப்பிள்ளை வீட்டில் இரண்டு நாள், அதன் பின்னர் பெண் வீட்டில் இரண்டு நாள். மாப்பிள்ளை வீட்டில் இரண்டு நாட்கள் சடங்குகளைச் செய்து முடித்த பின்னர் மாப்பிள்ளையைப் பெண் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். அதற்குப் பிறகு வீட்டிற்குள் அவர் திருமணம் முடிவதற்கு முன் வருவதற்கு அனுமதி இல்லை.

பெண் பார்க்கும் சடங்கு என்பது தமிழர் சமூகத்தில் உள்ளது போன்று நிச்சயதார்த்தம் இல்லாமல் வேறு விதமாக நிர்ணயிக்கப்படுகின்றது. மாப்பிள்ளை வீட்டார் 5 கிலோ வெல்லம் கொண்டு செல்வர். அத்தோடு சாராயமும் வெற்றிலை பாக்கும் கொண்டு செல்வர். சாராயம், வெல்லம், வெற்றிலை பாக்கை பெண் வீட்டாரிடம் கொடுத்து விட்டால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது என்று முடிவாகின்றது. திருமணத்தில் மாப்பிளை பெண்ணுக்கு ஜாதகம் பார்க்கும் வழக்கமும் இவர்களுக்கு இல்லை. இந்த மூன்று பொருட்களையும் கொடுத்து 1 ரூபாய் (பரியா பணம்) கொடுத்து விட்டால் கல்யாணம் உறுதி செய்யப்பட்டு விட்டது என முடிவாகின்றது. பின்னர் பெண்ணுக்கும் மாப்பிளைக்கும் ஒத்து வராமல் போய் பிரிய வேண்டும் என அவர்கள் நினைத்தால் அந்த ஒரு ரூபாய் பணத்தைத் திருப்பித் தந்து விடுவார்களாம். இப்படித் தந்தால் விவாகரத்து நடந்ததற்குச் சமம். அதற்காகத் திருமணத்திற்காகக் கொடுத்த அதே ஒரு ரூபாயைக் கணவன் மனைவி இருவரும் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஏதாவது ஒரு 1 ரூபாயைக் கொடுத்தே மண வாழ்க்கையிலிருந்து விலகிக் கொள்ளலாம். இதனைக் கணவன் மாத்திரம் தான் செய்வது வழக்கம். மனைவி செய்யும் வழக்கமில்லை. பஞ்சாயத்தில் ஊர் பெரியவர்களின் முன் கணவன் மனைவி வந்து 1 ரூபாயைக் கணவன் கொடுத்து மணவிலக்கு வேண்டும் என்று கேட்டால் மனைவியிடமிருந்து விலகிச் செல்ல அவருக்கு அனுமதி அளிக்கப்படுகின்றது.

இவர்களின் திருமணச் சடங்கு மிக வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது. திருமண தினத்தின் முதல் நாள் இரவில் பெண் வீட்டில் உள்ள அனைவரும் அழ வேண்டுமாம். தங்கை எப்படி அழவேண்டும் அண்ணன் எப்படி அழ வேண்டும் என முறை வைத்திருக்கின்றனர். எப்படி ஒவ்வொருவரும் அழ வேண்டும் என்று அந்த நேரத்தில் தான் அனுபவசாலி பெரியவர்கள் கற்றுத் தருவார்களாம். அதனைக் கற்றுக் கொண்டு குடும்பத்தினர் ஒவ்வொருவராக அழ வேண்டும்.

திருமணத்திற்கு முதல் நாள் வீட்டின் மூலையில் ஒரு உலக்கையை வைத்து அதில் கங்கணம் கட்டு விடுவார்கள். பக்கத்தில் ஒரு பானையை வைத்து அதில் நீரை ஊற்றி நிறைத்து வைத்து விடுவார்கள். திருமண ஏற்பாட்டுச் சடங்குகள் அனைத்தும் முடிந்த பின்னர் புது மாப்பிள்ளை இந்தத் தண்ணீரில் குளிக்க வேண்டும். இது கட்டாயமாகச் செய்ய வேண்டிய ஒரு சடங்கு. பிறகு மறு நாள் காலையில் பெண்ணும் மாப்பிள்ளையும் தனித் தனியாகத் தயார் செய்து அலங்கரித்துக் கொண்டு வந்து திருமணச் சடங்கில் தாலி போட்டு திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் பெண் வீட்டில் தான் நடக்குமாம். தமிழ் சமூகத் திருமணங்கள் போலக் கோயில்களில் இவர்கள் திருமணங்கள் நடப்பதில்லை. இக்கால லம்பாடி இனத் திருமணங்கள் தமிழர்கள் வழக்கம் போல கழுத்தில் தாலி கட்டி நடைபெறுகின்றது. கையில் அணியும் தாலி இப்போது வழக்கில் இல்லை. கணவன் உள்ள வயதான மூதாட்டிகள் மட்டுமே இந்த வகைத் தாலியை அணிந்திருக்கின்றனர்.

திருமணச் சடங்குகள் முடிந்த பிறகு மதிய வேளையில் ஆடு வெட்டி விருந்து தயாரித்து மாப்பிள்ளை வீட்டார் அனைவருக்கும் திருப்திகரமாக விருந்தளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுவார்கள். பின்னர் மாப்பிள்ளை வீட்டார் பெண் விட்டாரை அழைத்துச் சென்று இதேபோல விருந்து கொடுத்து அனுப்பி வைப்பார்கள். இதே போல மூன்று முறை மாற்றி மாற்றி இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெறுமாம்.

கணவர் இறந்த பெண்கள் தங்கள் கையில் அணிந்துள்ள தாலியை எடுத்து விட வேண்டும். இந்தத் தாலி திருமணம் நடந்த நாள் முதல் கணவர் இறக்கும் வரையிலும் கையில் அணிந்திருக்க வேண்டும்.


இவர்களின் கடவுள் மூடுபுக்கியா என அழைக்கப்படுகின்றது. ஆண் பெண் என உருவமில்லாத ஒரு கல் வடிவில் அமைந்த ஒரு வடிவமே இவர்கள் கடவுள்.

முன்னர் திருமணம் என்று வரும் போது மானின் கொம்பை வெட்டி எடுத்து அதைப் பதம் செய்து அதனை யானைத் தந்தம் போன்ற வடிவில் ஒரு வளையல் செய்து அதனைப் பெண்ணுக்கு அணிவித்துத் தான் திருமண நிகழ்வு நடக்குமாம். இது இப்போது வழக்கில் இல்லை. அதேபோல பெண்கள் திருமணத்திற்கு அணியும் முழு ஆடையையும் அப்பெண்ணே முழுதாகத் தயாரிப்பதும் வழக்கமாக இருந்திருக்கின்றது. ஒரு ஆடையை முழுமையாக்க ஏறக்குறைய ஆறு மாத காலங்கள் எடுக்குமாம். திருமணத்தில் தாலியை அணிந்து திருமணச் சடங்கு முடிந்த பின்னர் மணப்பெண்ணைக் காளைமாட்டின் மேல் அமர வைத்து ஊர்வலமாக வீட்டிற்குக் கொண்டு வருவார்களாம்.

இன்னொரு சுவாரசியமான தகவலும் இவர்களுடன் உரையாடும் போது அறிந்து கொள்ள முடிந்தது. அதாவது குழந்தைகள் பிறக்கும் போது எந்த நாளில் ஒரு குழந்தை பிறக்கின்றதோ அந்த நாளைப் பிரதிநிதிக்கும் பெயரைத்தான் குழந்தைகளுக்குச் சூட்டுவார்களாம். திங்கள் கிழமை பிறந்த குழந்தைக்கு சோமார் என்றும், செவ்வாய் என்பது மங்களவார் என அழைக்கப்படுவதால் இந்த நாளில் பிறக்கும் பெண் குழந்தைக்கு மங்கினி என்றும் ஆண் குழந்தையாக இருந்தால் மணி என்றும் அந்தக் கிழமையின் ஆரம்பச் சொல்லை எதிரொலிக்கும் வகையில் பெயர்கள் அமையுமாம். புதன்கிழமை பிறந்த ஆண் குழந்தை பத்தியா என்றும் பெண்குழந்தை பத்தி என்றும் பெயரிடுவதும், வழக்கமாக இருக்கின்றது. முக்கியமாக அந்தக் கிழமையின் முதல் எழுத்து குழந்தையின் பெயரில் இருக்க வேண்டும் என்பது அக்காலத்தில் இவர்கள் கடைப்பிடித்து வந்த வழக்கங்களில் ஒன்று.

ஆண் குழந்தைகள் இச்சமூகத்தில் மிக முக்கியமாகக் கருதப்படுகின்றனர். ஒரு தாயாருக்கு 2 ஆண் குழந்தைகள் இருந்தால் அப்பெண்மணி தன் கழுத்தில் ஒரு சங்கிலியில் இரண்டு பொட்டு இருக்கும் வகையில் ஒரு அட்டிகை போட்டுக் கொள்ளும் வழக்கம் உள்ளது. 5 ஆண் குழந்தைகள் என்றால் ஐந்து பொட்டு, 6 ஆண் குழந்தைகள் என்றால் ஆறு பொட்டு என தனக்கு பிறந்துள்ள ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையை மற்றவர்களுக்கு வெளிக்காட்டிக் கொள்ள இவ்வகை அட்டிகையைக் கழுத்தில் அணியும் வழக்கமும் இவர்கள் சமூகத்தில் உண்டு. ஆனால் இளம் பெண்கள் இதனை அணிவதைத் தவிர்த்து விட்டனர் என்பதை நேரிலேயே காண முடிந்தது. இந்தத் தகவல்களெல்லாம் ஒலிப்பதிவுகளாகவும் விழியப் பதிவுகளாகவும் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. பழங்குடி மக்கள் வாழ்வியலில் ஆர்வம் உள்ளோர் இவற்றைப் பார்த்தும் கேட்டும் பயன்பெறலாம்.


1 comment:

  1. அரிய தகவல்.., அன்புகலந்த நன்றி சகோதரி.

    ReplyDelete