Wednesday, October 12, 2016

32.பேராசிரியர்.டாக்டர்.ரெ.கா



திங்கட்கிழமை காலை எனக்கு மலேசிய நண்பர்களிடமிருந்து வந்து சேர்ந்த செய்தி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. என் இளம் வயது முதல் நன்கறிந்த நண்பர், பேராசிரியர்.டாக்டர்.ரெ.கார்த்திகேசு அவர்கள் மறைந்தார் என்ற செய்தி தான் அது. 

பினாங்கு எழுத்தாளர் சங்கம் எனக்கு மலேசிய தமிழ் இலக்கிய ஆளுமைகளை இளம் வயது முதல் அறிமுகப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பினை வழங்கியிருந்தது. என் தாயார் ஜனகா சுந்தரம் அவர்கள் பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் செயலவைக்குழுவில் இருந்தவர். என் இளம் வயது முதலே இந்தச் சங்கம் ஏற்பாடு செய்து நடத்திய பல தமிழ் இலக்கிய நிகழ்வுகளில் நான் பங்கெடுத்துக் கொண்டிருக்கின்றேன். அதில் என் அன்னையார் வழியாக நான் அறிந்து கொண்டவர்களில் ஒருவர் தான் பேராசிரியர். டாக்டர். ரெ,கா அவர்கள். 

சுங்கைப்பெட்டாணி நகரில் பிறந்து மலேசியாவில் உயர்கல்வியை முடித்து பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் இவர். பல்கலைக்கழகப்பணி மட்டுமே என்றில்லாது தனது ஆர்வத்தைச் சமூக நலனை முன்வைத்து, பினாங்கில் இயங்கிய அமைப்புக்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் டாக்டர்.ரெ.கா. மலேசிய இந்து சங்கம், பினாங்கு பயனீட்டாளர் சங்கம் ஆகியவை இவற்றுள் சில. 

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தமிழ்ப்பிரிவு நடத்திய பல கருத்தரங்கங்களில் டாக்டர். ரெ.கா அவர்களது சொற்பொழிவுகளை நான் கேட்டிருக்கின்றேன். அம்மாவின் சொற்பொழிவுகளும் பேராசிரியர் ரெ.காவின் சொற்பொழிவும் என்னை பொதுப்பேச்சுக்களுக்குத் தயார் செய்ய ஒரு வகையில் உதவின என்பதை என்னால் மறுக்கமுடியாது. ஆங்கிலச் சொற்கள் கலக்காது சரளமாகத்தமிழ் பேசும் கலையை இவர்களிடம் நான் கற்றுக்கொண்டேன். மிகத்தெளிவான உச்சரிப்புடன், மிகுந்த ஈடுபாட்டுடனும், ஆய்வு நெறியை மனதில் வைத்தும் இவரது சொற்பொழிவுகளும் கருத்தரங்க உரைகளும் இருக்கும். 

தமிழ்மொழி மட்டுமன்றி இசை, நடனம் என பாரம்பரியக் கலைகளில் மிகுந்த நாட்டம் கொண்டவராக டாக்டர்.ரெ.கா அவர்கள் திகழ்ந்தார்கள். பாரம்பரிய கர்நாடக இசைப்பிரியர் இவர். இசையின் மீதிருந்த தீராத ஆர்வத்தினால் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தமிழகத்தில் நடைபெறும் இசைவிழாவிற்குத் தவறாமல் சென்று விடுவார். அவ்வப்போது நான் தொலைப்பேசி வழியாகப் பேசும் போது தான் கேட்டு மகிழ்ந்த இசைக் கச்சேரிகள், கீர்த்தனைகள் பற்றி என்னிடம் அவர் பேசியதும் உண்டு. 

தமிழ் மரபு அறக்கட்டளைத் தொடங்கப்பட்ட ஆரம்பகாலகட்டத்திலிருந்து இந்த அமைப்பின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார் டாக்டர்.ரெ.கா அவர்கள். 2001ம் ஆண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற உத்தமம் மாநாட்டில் தமிழ் மரபு அறக்கட்டளையின் தேவைபற்றி பேசி அதனை நிலையான ஒரு அமைப்பாக உருவாக்கினோம். அன்று தொடங்கி இன்று வரை எமது தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழுவில் அங்கம் வகித்து அவ்வப்போது தகுந்த ஆலோசனைகளையும் வழங்கிவந்தார். 

மலேசிய வரலாறு, அதிலும்குறிப்பாக தமிழ் இலக்கிய வரலாறு எனும் போது டாக்டர்.ரெ.கா அவர்களது நினைவாற்றலைக் கண்டு நான் வியந்து போனதுண்டு. அவரது அனுபவங்களையெல்லாம் பதிந்து வைக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் நான் மலேசியாவிற்கு இருவார விடுமுறைக்குச் சென்றிருந்த போது அவரை ஒரு விழியப் பதிவு பேட்டி செய்ய விரும்புவதாகச் சொல்லி 20ம் நூற்றாண்டு மலேசியா பற்றி விவரிக்கச் சொல்லிக் கேட்டேன். எப்போதும் போலவே என்னை ஆர்வத்துடனும் அன்புடனும் வரவேற்று உபசரித்து நீண்ட நேரப்பேட்டி ஒன்றினையும் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கியிருந்தார் டாக்டர்.ரெ.கா அவர்கள். இப்பேட்டியில், 20ம் நூற்றாண்டின் மலாயாவின் ஆரம்ப நிலை, மலேசியத் திராவிடர் கழக உறுப்பினர்களின் தமிழ் முயற்சிகள், மலேசிய தமிழ் பத்திரிக்கைகள், மலேசியாவில் பெரியார் ஏற்படுத்திய திராவிடர் கழகத் தாக்கத்தால் விளைந்த தமிழ் முயற்சிகள், தமிழர் திருநாளும் திரு.கோ.சாரங்கபாணியும், இசை ஆர்வம், தன் சகோதரர் ரெ.சண்முகம், மலேசியாவில் இந்தியர்களுக்கான என்ற அடையாளம், மலேசிய இலக்கிய முயற்சிகள், இலங்கைத் தமிழர்களின் இலக்கிய முயற்சிகள், மலேசியாவில் வெளிவந்த முன்னோடி நாவல் படைப்புக்களான பத்துமலை மர்மம், கோரகாந்தன் கொலை, மலேசியாவில் ரப்பர், செம்பனை தோட்டத் தமிழர்களின் நிலை, மலேசியாவில் தற்காலத் தமிழர்களின் நிலை, மலேசியத் தமிழர்களின் பொருளாதார வளர்ச்சி, மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் எனப் பல கோணங்களில் தனது அனுபவக் கருத்துக்களைப் பதிந்திருக்கின்றார். 

அந்தப்பேட்டியை மலேசியத் தமிழர்களின் வரலாற்றை மிகுந்த யதார்த்தத்துடன் கூறும் மிகச் சிறந்த ஆவணமாகக் கருதுகிறேன். அப்பேட்டியை ஏற்பாடு செய்து அதனை நான் பதிந்து தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடாக வெளியிட்டமைக்காகவும் பெருமை கொள்கிறேன். தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்று ஆவணச் சேகரிப்புக்களில் இது தனிச்சிறப்பு பெற்றிருக்கும் ஒரு பதிவு இது எனக்கூறுவது மிகையன்று. 

கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் கோலாலம்பூரில் கணியாழிக்கு பொன்விழா எடுக்க ஏற்பாடு செய்த போது பொன்விழா மலரில் டாக்டர்.ரெ.கா அவர்களின் எழுத்தும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என ஆசைப்பட்டு அவரைத் தொடர்பு கொண்டு நான் கேட்டுக் கொண்டபோது அவரது உடல் நிலையை ஒரு காரணமாககூறாமல் விரைந்து ஒரு படைப்பாக்கத்தை எனக்கு அனுப்பி வைத்தார். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகத் தனது உடல் நிலையை அவர் ஒதுக்கி வைத்து விட்டுத்தான் இயங்கினார் என்பதை அந்த ஒரு உதாரணமே சான்று சொல்லும். 

நான் ஜெர்மனிக்கு உயர்கல்வியைத் தொடரச் சென்ற பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மலேசியாவிற்கு விடுமுறைக்குத் திரும்பும் போது ஏதாவது ஒரு நிகழ்வில் டாக்டர்.ரெ.கா அவர்களை நான் சந்திப்பதுண்டு. அது அனேகமாகத் தமிழ் மொழி தொடர்பான கருத்தரங்கமாக இருக்கும். என்னை அவர் வாழ்த்திப் பாராட்டி ஊக்கம் கொடுக்கும் சொற்களைக் கூறி மகிழ்ந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. 

விடுமுறையில் நான் மலேசியா செல்லும் போது அவரது நாவல்கள், நூற்கள் ஏதேனும் வெளியிடப்பட்டிருந்தால் தவறாது எனக்கு ஒரு நூலை வழங்கி விடுவார். அதோடு நிற்காது நூலுக்கு ஒரு விமர்சனம் தருமாறும் அன்புக்கட்டளையிட்டுவிடுவார். அந்த வகையில் அவரது நாவல்களான சூதாட்டம் ஆடும் காலம், காதலினால் அல்ல, இன்னொரு தடவை, அந்திம காலம் ஆகியனவற்றை வாசித்து நூல் விமர்சனமும் அவருக்கு வழங்கியிருந்தேன். தொலைப்பேசியில் உரையாடும் போது அவரது படைப்புக்களில் உள்ள மையக் கருத்துக்கள், கதாமாந்தர்களின் தன்னியல்புகள், கதைக்களம் என என் மனதில் பதிந்த விசயங்களைப் பற்றிச் சொல்வேன். ஆர்வத்துடன் கேட்டு மகிழ்வார். 

மலேசியாவில் இலக்கியப்படைப்புக்களின் தரம் பற்றிய அவரது அவதானம் கூர்மையானது. உள்ளூர் படைப்புக்கள், அவை மண்வாசனையோடு இருக்கின்றனவா என்பதைப் பற்றிய அக்கறை கொண்டவர் அவர். ஆக்கப்பூர்வமான விமர்சனக் கருத்துக்களைத் தயங்காது உரக்கச் சொல்லக்கூடியவர். பல்வேறு இலக்கியப்படைப்புக்களுக்குத் தான் எழுதிய விமர்சனங்களைத் தொகுத்து விமர்சன முகம் என்ற தலைப்பில் ஒரு நூலினையும் வெளியிட்டிருந்தார். அந்த நூலில் அவர் விமர்சனம் என்பதைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகின்றார். " ... அடுத்தவர்களின் படைப்பைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடும் போது இப்படி விமர்சனம் செய்வது ஒரு கட்டாயமாகவே ஆகிவிடுகின்றது. அதிலும் சிறந்த படைப்புக்களின் நுணுக்கங்களைக் கண்டு பிடித்துச் சொல்வதென்பது ஒரு தீவிரமான அறிவுப்பயணம் ஆகிவிடுகின்றது. படைப்பின் பரிமாணங்களை ஒவ்வொன்றாக ஆய்ந்து புரிந்து கொள்ளும் போது என் மனமும் அறிவும் விரிவடைவதையும் நான் காண்கின்றேன். ஆகவே விமர்சனம் என்பது பயனுள்ள ஒரு செயல் என்றே தெரிகின்றது" எனக் குறிப்பிடுகின்றார். 

நான் இறுதியாக தொலைப்பேசியில் உரையாடி ஏறக்குறை நான்கு மாதங்கள் இருக்கலாம். உடல் நிலை மிகவும் தளர்ந்த நிலையில் இருந்தாலும் அவரது தமிழ் இலக்கியத்தின் மீதான ஆர்வம் சற்றும் குறையவில்லை என்பதை என்றும் மாற்றம் பெறாத அவரது குரலின் வழி கேட்டு நான் உணர்ந்தேன். அந்த உரையாடலின் போது தாம் ஒரு நூலினை எழுதிக்கொண்டிருப்பதைப் பற்றி சில விபரங்கள் குறிப்பிட்டார். எப்போதும் போல தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்பாடுகளைப் பாராட்டிப் பேசி மகிழ்வதோடு மறைந்த எனது தாயார் ஜனகா பற்றியும் பேசாமல் எங்களது உரையாடல் இருந்ததில்லை. இறுதியாக நான் டாக்டர்.ரெ.கா அவர்களைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தமிழ் மரபு அறக்கட்டளையும் தமிழ் மலர் நாளேடும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கணையாழி பொன்விழா நிகழ்வில் சந்தித்தேன். தமிழ் மரபு அறக்கட்டளையின் நிகழ்வு என்பதற்காகவே எமது அழைப்பை ஏற்றுக் கலந்து சிறப்பிக்க வேண்டும் என்று வந்து, கலந்து கொண்டுசிறப்பித்தார். அன்று அந்த நிகழ்வில் அவரைப்பார்த்துப் பேசிய நினைவுகள் பசுமை குறையாமல் இருக்கின்றன. 

ஒரு பேட்டியில் டாக்டர்.ரெ.கா அவர்களை ஒரு நிருபர் கேட்கின்றார். "தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களின் எதிர்கால இலக்கு என்ன ?", என்று. அதற்கு அவரது பதில் , "தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதுதான்." இலக்கியம் படைக்க வேண்டும் . அதிலும் மலேசிய மண்வாசனை நிறைந்த படைப்பாகதமது படைப்பு இருக்க வேண்டும் என்பதை கடைப்பிடித்தவர். 

டாக்டர்.ரெ.காவிடம் நான் செய்த "20ம் நூற்றாண்டு ஆரம்பக் கால மலாயா செய்திகள்" எனும் விழியப் பேட்டியினை 2015ம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் சித்திரைத் திருநாள் சிறப்பு வெளியீடாக வெளியிட்டிருந்தேன். அப்பேட்டி தமிழ் மரபு அறக்கட்டளையின் சிறந்த வெளியீடுகளில் ஒன்று எனக் கூறிக் கொள்வதில் பெருமைப்படுகின்றேன். மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் சிகரமாக விளங்கியவர் இவர். இவரது புகழ் மலேசிய தமிழர் வரலாற்றிலிருந்து பிரித்தெடுக்க முடியாதது!

1 comment:

  1. ரெ கார்த்திகேசு அவர்களின் தமிழ்ப்பற்றையும் ,தமிழ் தொண்டையும் உங்கள் மூலமாக அறிந்து கொண்டோம்
    அவர் புத்தகங்களை படிக்கும் ஆவலாக உள்ளது

    ReplyDelete