Saturday, September 10, 2016

27. மாமனிதர் வ.உ.சிதமிழகத்தில் ஒட்டப்பிடாரம் என்ற  ஒரு ஊரின் பெயரை 2009ம் ஆண்டு வரை நான் கேள்விப்பட்டதில்லை.

2009ம் ஆண்டின் இறுதியில் நான் தமிழகத்தில்  தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணிக்காக இரண்டு வார பயணம் ஒன்று ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். அந்தப் பயணத்தில் எட்டயபுரம் சென்று அங்கிருக்கும் எட்டயபுர ஜமீன் மாளிகையைப் பற்றிய ஒரு வரலாற்றுப் பதிவினைத் தயாரிக்க வேண்டும் என்பது அப்பயணத்தின் முக்கியக் குறிக்கோளாக இருந்தது. அப்பயண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோது   நண்பர்  மாலன் அவர்களை அணுகி  திட்டமிட ஆரம்பித்த வேளையில் எட்டயபுரம் செல்லும் முன், வழியில் ஒட்டப்பிடாரத்தைக் கடந்து சென்றால் அங்கிருக்கும் வ.உ.சி. நினைவு இல்ல அருங்காட்சியகமும் சென்று வரலாம். அது பயணத்திற்கு மேலும் வளம் சேர்ப்பதாக அமையும் எனக் குறிப்பிட்டார். இதன் அடிப்படியில் இந்த நினைவில்லத்திற்கான எனது பயணம் அமைந்தது.

ஒரு வீடாக இருந்த இந்தக் கட்டிடத்தை  அருங்காட்சியகமாகப் புதிதாக நிர்மாணிக்க திட்டம் எழ,  7.8.1957 அன்று அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த திரு.கு.காமராஜ் அவர்களால் இக்கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இக்கட்டிடம் முழுமையடைந்த பின்னர்  12.12.1961ல்  அன்றைய முதலமைச்சர் திரு.கு.காமராஜ் அவர்களால் இது திறந்து வைக்கப்பட்டது.

இந்த நினைவு இல்லத்தில் உள்ளே நுழைந்ததுமே நம்மை வரவேற்பது ஒரு இரும்புத் தகட்டில் எழுதப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் வ.உ.சி அவர்களின்  சிறு வாழ்க்கை குறிப்பு செய்திகள்.

வ.உ.சி. அவர்கள், 1872ம் ஆண்டு செப்டம்பர் 5  தேதி  ஒட்டப்பிடாரத்தில் பிறந்தார். 1895ம் ஆண்டு இவருக்குத் திருமணம் நடைபெற்றது. 1900ம் ஆண்டு  தூத்துக்குடியில் வழக்கறிஞர் பணி ஏற்றுக் கொண்டார் என்றும், 1908ல் 'சுதேசிக் கம்பெனி'  எனும் பெயரில் கப்பல் நிறுவனம் ஒன்றினை நிறுவினார் என்றும் இத்தகவல்கள் கூறுகின்றன. மேலும்,  பல்வேறு காலகட்டங்களில் பல போராட்டங்களில் ஈடுபட்டார் என்றும், அதன் தொடர்ச்சியாக அப்போதைய ஆங்கிலேய அரசால் 1908ம் ஆண்டு ஜூலை 7. வ. உ. சிக்கு மாவட்ட நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிரை சென்ரார் என்றும் அறிகின்றோம்.

 சமூக பணிகளுக்காகவே தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதர் வ.உ.சி எனச் சொன்னால் அது சிறிதும் மிகையில்லை. உணர்ச்சிப்பூர்வமான நிலையைக் கடந்து அறிவுப்பூர்வமான வகையில் செயல்பட்டு தமிழ் மக்களிடையே சுதந்திர சிந்தனையை வளர்த்தவர் இவர்.
காலணித்துவ ஆட்சியில் இருந்த இந்தியாவில் ஆங்கிலேய  ஆட்சியை எதிர்த்தவர்கள் கையாண்ட யுக்திகள் பலவிதம். இதில் வ. உ.சிதம்பரனாரின் உத்திகள் தனித்துவம் வாய்ந்தவை.  பொருளாதார அடிப்படையில் மக்கள் சுயமாக முன்னேறவும் ஆங்கிலேயர்களை அண்டி இல்லாமல் சுயமரியாதையுடன் பொருளாதாரத் தேடலில் இயங்கவும் புரட்சிகரமாகத் திட்டமிட்டு செயல்பட்டவர் இவர். வணிக குடும்பத்தில் பிறந்து வக்கீலாக கல்வித் தகுதி பெற்றதோடு நின்று விடாமல் வணிகத்திலும் இவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். தமிழர்களின் சரித்திரத்தில் கடந்த நூற்றாண்டில் வணிகத்திற்காகக் கப்பல் விட்டு சரித்திரம் படைத்தவர் இவர். இந்தச் செயல் இவருக்குக் கப்பலோட்டிய தமிழன் என்னும் மங்காப் புகழை இன்றும் நினைவு கூறும் வகையில் அமைத்துத் தந்தது. பெறும் செல்வந்தராக இருந்த போதிலும் மக்கள் நலனுக்காவும், நாட்டின் சுதந்திரத்துக்காகவும் மக்களோடு இணைந்து போராடி அவர்களுக்குச் சிந்தனை எழுச்சி ஊட்டியவர் இவர்.

அப்போதிருந்த ஆங்கிலேய அரசு இவர் மேல் குற்றம் சுமத்தி இவரைச் சிறைக்கு அனுப்பியதோடு மட்டுமில்லாது அவரது குடும்பச் சொத்துக்களையும் பறிமுதல் செய்தது. செல்வந்தரான வ.உ.சி அவர்களின் குடும்பத்தினர் அனைவருமே இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. நாட்டுக்காகத் தன் வாழ் நாளையே உழைத்து அர்ப்பணித்த இந்த நல்ல மனிதர்  தன் இறுதி நாட்களில் மிகுந்த பொருளாதார நிலையில் நலிவுற்று சிரமத்தில் இருந்தார் என்பதை எழுதும் போதே என் மனம் கலங்குகின்றது.

வ.உ.சி அவர்கள் தமிழக சரித்திரத்திலும் தமிழர் தம் வாழ்விலும் மறக்க முடியா அங்கம் வகிப்போரில் ஒருவர்.  உலகில் நிகழ்ந்த,  நிகழ்ந்து கொண்டிருக்கின்ற பல்வேறு மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைவதே தனி மனித முயற்சிகள் தாம்.  தனி மனிதரின் ஆன்ம பலமும்,  ஆய்வுத் திறமும் சிந்தனையும் முயற்சியுமே உலகில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.  அத்தகைய பண்புடன் கூடியவர்களில் ஒருவராகத்தான்  வ.உ.சி அவர்களை நான் காண்கின்றேன்.

அருங்காட்சியகத்தில் நான் பார்த்து எடுத்துக் கொண்ட குறிப்புக்கள் வழி அவரது குடும்பத்தினர் பற்றிய சில தகவல்களை நான் அறிந்து கொண்டேன்.  வ.உ.சி அவர்களின் முதல் மனைவியார் வள்ளியம்மை.  வள்ளியம்மை பிறகு இறந்து விட இவருக்கு இரண்டாம் திருமணமும் நிகழ்ந்தது. வள்ளியம்மையி மறைவுக்குப் பிறகு திருமணம் முடித்த இரண்டாம் மனைவியுடன்  இருப்பது போன்ற மூன்று படங்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.  இவை அக்கால சூழலில் செல்வந்தர்கள் வீட்டு ஆண் பெண்களின் ஆடை அலங்காரத் தன்மையை வெளிக்காட்டும் சிறந்த ஆவணங்களாக அமைகின்றன.  வணிக குடும்பத்தில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று வக்கீலாகத் தொழில் புரிந்த சிதம்பரனாரின் மேன்மை பண்புகளை வெளிக்காட்டும் மிடுக்கான தோற்றத்துடன் அவர் காட்சியளிப்பதை இப்படங்களில் காண முடிகின்றது.

சிதம்பரனார் நினைவு மண்டப அருங்காட்சியகத்தில் அவரது மறைவுக்குப் பின் அவருக்கு நடத்தப்பட்ட இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் உள்ளது.  அவரது அனைத்து சேவைகளையும் தெரிந்து அவரது இல்லத்திலேயே இருந்து உணர்ந்து இப்புகைப்படத்தைப் பார்க்கும் போது மனம் கலக்கம் கொள்வதை தடுக்கமுடியவில்லை.  இந்த இறுதி யாத்திரை புகைப்படத்தில் இவரது மகன்கள் வ.உ.சி. ஆறுமுகம், வ.உ.சி. சுப்பிரமணியம், வ.உ.சி. வாலேஸ்வரன்  ஆகியோர் இருப்பதாக இப்படத்தோடு உள்ள குறிப்பில் உள்ளது. இவர்களோடு இவரது நண்பர்கள் பெ.கந்தசாமி பிள்ளை, மாசிலாமணிப்பிள்ளை, பாபா ஜான் ஆகியோரும் இருப்பதாகவும் இந்தக் குறிப்பில் உள்ளது.

வ.உ.சி.  ஆங்கில ஆட்சியில் அடிமைப் பட்டுக் கிடந்த மக்களின் சிந்தனையில் புத்துணர்ச்சியை ஊட்டியவர் என்பது மட்டும் அவரது பண்பு நலனுக்கு மதிப்பளிக்கும் ஒன்றாக அமைந்து விடவில்லை. அவரது தத்துவ ஞான விசாரணை,  தமிழ்க்கல்வி,  ஓலைச்சுவடிகளிலிருந்து அச்சுப்பதிப்பாக்கத்திற்கு தமிழ் நூற்களைப் புதிய வடிவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்பு ஆகியவை அவரைப் பற்றிய நம் சிந்தனையை மென்மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்வதாக அமைகின்றது.  வ.உ.சி அவர்கள் எழுதி வெளி வந்த நூல்கள், மெய்யறிவு, மெய்யறம், எனது பாடல் திரட்டு, வ. உ.வி.கண்ட பாரதி, சுயசரிதை ஆகியவை. இவர் மொழி பெயர்ப்பு செய்த நூல்கள் என்றால், மனம் போல வாழ்வு, அகமே புறம், வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவர் உரை எழுதியவையாக குறிப்பிடப்படும் நூல்கள், சிவ ஞான போதம், இன்னிலை, திருக்குறள். ஏட்டுச் சுவடிகளிலிருந்து அச்சுப்பதிப்பாக  பதிப்பிக்கப்பட்ட நூல்கள், தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் (இளம்பூரனார் உரை), தொல்காப்பியம் - சொல்லதிகாரம் (இளம்பூரனார் உரை), சிவஞான போதம் ஆகியவை.

இத்தகைய இலக்கியப் பணிகள் மட்டுமின்றி இவர் பத்திரிக்கைகளையும் நடத்தியிருக்கின்றார். விவேக பாநு, தமிழ் நேஷனல், பத்திரிகை, இந்து நேசன் ஆகியவை இவ்வகையில் இணைகின்றன.


சைவ சித்தாந்த சபையில் முக்கியமான அங்கம் வகித்தும் சைவ சித்தாந்த தத்துவங்களில் ஆர்வம் கொண்டவராகவும் திகழ்ந்திருக்கின்றார் வ.உ.சி அவர்கள்.  தான் அச்சு வடிவத்தில் வெளியிட்ட சிவஞானபோத நூலுக்கு உரை எழுதுவதற்கு முன்னரே தூத்துக்குடியில் சைவ சித்தாந்த சபையில் அவர் பல சைவ  சித்தாந்தத் தத்துவக் கொள்கைகள் தொடர்பான உரைகளை தொடர்ந்து நிகழ்த்தி வந்துள்ளார்.   1934-35களில் அப்போது புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த தினமணி நாளிதழின் வருஷ அனுபந்தத்தில் தான் வ.உ.சிதம்பரம் பிள்ளை தனது சிவஞானபோத உரையின் முதல் வடிவை எழுதியிருக்கின்றார்.  பிறகு அந்த உரை, நூல் வடிவில் தூத்துக்குடி எட்டையபுரம் நெடுஞ்சாலையிலுள்ள குறுக்குச் சாலையில் அரங்கேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.  இவரது சொற்பொழிவுகள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பு 'எனது அரசியல் பெருஞ்செயல்'  என்ற தலைப்பில்  அச்சு வடிவம் கண்டுள்ளது.  இது அவரது அரசியல் அனுபவங்களை எடுத்துக் காட்டும் சிறந்த வரலாற்று நூலாகக் கருதப்படுகின்றது.

இந்த விவரங்கள் எல்லாம் இக்கால இளம் தலைமுறையினர் அறிந்து உணர்ந்து போற்ற வேண்டிய விஷயங்கள் அல்லவா? இவையெல்லாம் தமிழ் நாட்டு கல்விப்பாடத்திட்டத்தில் இடம்பெறுகின்றனவா?  வ.உ.சிதம்பரனார் பற்றிய தகவல்கள் செக்கெழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்ற மேல் நோக்கானப் புகழ்ச்சியோடு மட்டுமே என நின்று விடாமல் இம்மாமனிதரின் பரந்த சிந்தனை,  உயர்வான வாழ்வியல் நெறி முறைகள்,  தன்னலமற்ற சேவை, ஞானப் பரப்பு,  அறிவின் ஆழம் ஆகியவை பாடத்திட்டத்தில் கூறப்படுகின்றனவா என்று கேட்டு அவை இல்லையென்று அறிந்து சோர்ந்து ஏமாற்றம் அடைகின்றேன்.   இவர் எழுதி அவர் காலத்திலேயே வெளியிடப்படாத நூல்கள் எப்போது அச்சு வடிவம் பெறும்? என நினைக்கும் போதே அதனைத் தேடி அவற்றை பதிப்பிக்க வேண்டும் என்ற என் ஆர்வத்தையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.  தமிழகத்தில் உள்ளோர் இப்பதிவினை வாசிக்க நேர்ந்தால் நான் குறிப்பிட்டுள்ள நூல்கள் கிடைக்கும் இடத்தை எனக்கு அறியத்தருமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

வ.உ.சி அவர்களின் கையெழுத்தில் அமைந்த ஒரு கடிதம் ஒன்றினை எட்டயபுரம் இளசை மணியன் அவர்கள் எனக்கு இந்தப் பயணத்தின் போது காட்டினார். அதன் டிஜிட்டல் வடிவத்தை தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்தில் இணைத்து வைத்துள்ளேன்.  இக்கடிதத்தைப் பார்க்க விரும்புவோர் http://tamilheritagefoundation.blogspot.de/2010/05/blog-post.html பக்கத்தில் காணலாம்.

No comments:

Post a Comment