Thursday, August 18, 2016

24. கேரித் தீவில் ஒரு நாள் பயணம்


கபாலி திரைப்படம் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களை மட்டுமன்றி அப்படம் திரையிடப்பட்ட அனைத்து மொழி மக்களையும் மலேசியாவின் பக்கம் திரும்பிப்பார்க்கச் செய்துள்ளது.  மலேசியா என்றால் சுற்றுப்பயணத்திற்கு பிரபலமான ஒரு நாடு என அறிந்திருந்தோர், இப்போது வேறொரு கண்ணோட்டத்திலும் மலேசியாவை நோக்கத் தொடங்கியுள்ளனர். ஆம். இங்கு பல்வேறு காலகட்டங்களில் இந்தியாவின் தென்திசையிலிருந்து கடல் கடந்து அன்றைய மலாயா வந்தடைந்த தமிழர்களின் தோட்டப்புற வாழ்வியல் நிலை பற்றிய ஒரு கண்ணோட்டம் தான் இப்போது பெருமளவில் பேசப்படும் பொருளாக இருக்கின்றது. இது ஒரு வகையில் ஆரோக்கியமான ஒரு நிகழ்வு என்றே கருதுகின்றேன். ஏனெனில் கால ஓட்டத்தில் வரலாற்று விசயங்கள் மறக்கப்படுதலும், அரசியல் காரணங்களினாலும் சுய நலப் போக்கினாலும் வரலாறு மறைக்கப்படுதலும், திசை திருப்பப்படுதலும் நடப்பதை  மலேசிய சூழலில் காணத்தானே செய்கின்றோம்!

புலம்பெயர்வு என்பது தொடர்ந்து நிகழ்வது. மலேசியாவில் கிள்ளானுக்கு அருகே  இருக்கும் கேரித் தீவு ஒர் அழகிய சிறிய தீவு.  20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் செம்பனைத் தோட்டங்களில்  பணி புரிய வந்த தமிழகத்தின் நாமக்கல் பகுதி மக்கள் இங்கே ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாக வாழும் மக்களில் அடங்குவர். அத்தகைய மக்களின் அக்காலப் பயணங்கள்,  அவர்களது வாழ்க்கை முறை, உள்ளூர் ஆதிவாசிகளுடன் அவர்கள் எவ்வாறு இணைந்து வாழப் பழகிக் கொண்டார்கள் என்ற வகையில் ஒரு பதிவினைச் செய்யவேண்டும் என்று எனக்கு ஆவல் எழவே தோழி 2013ம் ஆண்டில் காந்தியிடம் என் விருப்பத்தை தெரிவித்தேன். தோழி காந்தி கேரித் தீவில் பிறந்து வளர்ந்து தற்சமயம் பெட்டாலிங் ஜெயாவில் வசிப்பவர். அவரது சிற்றப்பா சின்னம்மா இருவரும் இன்றும் கேரித்தீவில் இருப்பதாகவும், அவர்களைச் சென்று பேட்டி கண்டு தகவல் சேகரித்து வரலாம் எனக் கூறவே, அப்படியே செய்வோம் என நாங்கள் புறப்பட்டு விட்டோம்.
அதிகாலையிலேயே புறப்பட்டு கேரித்தீவை அடைந்த போது காலை மணி ஒன்பது ஆகியிருந்தது.

கேரித்தீவிலேயே நல்ல காலை உணவை சுவைத்த பின்னர் எனது பதிவுகளைச் செய்ய ஆரம்பித்தேன். தமிழகத்தின் நாமக்கல்லிலிருந்து புலம்பெயர்ந்து சென்று மலேசியாவின் கேரித்தீவில் வசிக்கும் திரு முனுசாமி-காளியம்மாள் தம்பதியினர் எனக்கு இப்பேட்டியின் போது பல வரலாற்றுத் தகவல்களை வழங்கினர்.

ஒப்பந்தத் தொழிலாளிகளாக வந்த தமிழ் மக்கள் குறிப்பிட்ட ஒரு பணிக்காக குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு மட்டுமே அழைத்துச்சென்று அங்கு நிர்ணயிக்கப்பட்ட கால வரையறைக்குள் தொழில் செய்ய வேண்டும் என்ற வகையில் அக்கால பிரித்தானிய அரசின் தொழில் நிபந்தனைகள் அமைக்கப்பட்டிருந்தன.

கேரித் தீவு என்பது கிள்ளான் துறைமுகத்தின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தீவு.  இன்றைய சிலாங்கூர் மானிலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு சிறு தீவு. லங்காட் நதி இதனை சிலாங்கூர் மாநிலத்திலிருந்து பிரிக்கின்றது.  Edward Valentine John Carey  என்ற ஒரு ஆங்கிலேய விவசாயி இத்தீவை சிலாங்கூர் சுல்தானிடமிருந்து வாங்கி இங்கே பயிர்த்தொழிலைத் தொடங்கினார். அவரது நினைவாக இத்தீவு கேரித்தீவு என அழைக்கபப்டுகின்றது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பம்.  தொழில் புரட்சி விரிவாகிக் கொண்டிருந்த காலம் அது. முதலாம் உலகப்போரின் காரணமாகவும் ரப்பர் பயன்பாட்டின் தேவை அதிகரித்திருந்த காலகட்டம் அது என்பதால் பிரித்தானிய காலணித்துவ அரசு மலாயாவில் பல இடங்களில் ரப்பர் பயிரிடுதலை விரிவாக்கிக் கொண்டிருந்தது.

காடுகள் சூழ்ந்திருந்த இப்பகுதியில் மாமேரி இனத்து ஆதிவாசிகளே நிறைந்திருந்த வேலையில் இக்காடுகளை அழித்து இப்பகுதியை ரப்பர் தோட்டங்களாக மாற்ற எண்ணிய திரு.கேரிக்கு தக்க உடல் உழைப்பு மனித வளம் தேவையாக இருந்தது. அப்போதிருந்த இந்திய பிரித்தானிய காலணித்துவ அரசுடன் செய்து கொண்டஒப்பந்தப்படி இங்கு தொழில் புரிய தமிழகத்திலிருந்து ஊழியர்களைக் கொண்டு வந்தார் திரு.கேரி. 1905ல் கேரித்தீவில் ரப்பர் அறிமுகப்படுத்தப்பட்டது. 1907 ஆண்டு முதல் நிரந்தரமாக பல தொழிலாளர்கள் இங்கு தேவைப்படுவர் என்ற நிலை உருவாகவே தமிழகத்திலிருந்து கப்பல்களில் தமிழர்கள் வருவது தொடங்கியது.

தமிழகத்திலிருந்து கேரித்தீவிற்கு வந்த மக்கள் தமிழகத்தின் நாமக்கல் பகுதியைச் சார்ந்தவர்கள். இவர்கள் கப்பலில் பயணம் செய்து வந்தவர்கள். அக்காலகட்டத்தில் நாகப்பட்டினத்திலிருந்தும் சென்னையிலிருந்தும் மலாயாவின் துறைமுகங்களுக்கு வருவதற்கு இருந்த கப்பல்களில் இன்றும் மலேசிய தமிழ் மக்கள் நினைவில் வைத்திருப்பது ரஜூலா கப்பல் தான்.

கப்பலில் சென்னையிலிருந்து பயணித்து பின்னர் நாகபட்டினம் வந்து அங்கும் மக்களை ஏற்றிக் கொண்டும் வெங்காயத்தை ஏற்றிக் கொண்டும் வரும் கப்பல் மலேசியாவின் பினாங்குக்கு வந்து ஆட்களையும் பொருட்களையும் இறக்கிய பின்னர் போர்ட் க்ளேங் துறைமுகத்தில் நிறுத்தி பயணத்தை முடித்துக் கொள்ளுமாம்.  ஐந்து  நாட்கள் பயணமாக கடலில் இந்தப் பயணம் இருந்திருக்கின்றது. தோட்டத்தில் காடுகளை அழிக்கும் தொழில் செய்வதும், அழித்த காடுகளில்  பின்னர் ரப்பர் மரங்களை நடுவதும் செம்பனைகளை நட்டு அங்கு பணி புரிவதுமே தொழிலாகஅக்காலத்தில் இங்கு வந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு இருந்திருக்கின்றது.

குறைந்த ஓய்வூதியம், நீண்ட நேர வேலை நேரம் என்பன தவிர்க்கப்பட முடியாத சங்கடங்களாகவே இம்மக்களுக்கு அமைந்தன. 1920 தொடங்கி 1940 வரைக்குமான காலகட்டத்தில் நாமக்கல்லிலிருந்து  பிழைப்பிற்காக கேரித்தீவிற்கு வந்தவர்கள் பலர். இவர்களில் பலர் குடும்பங்களோடு வந்தமையால் சுதந்திரத்திற்கு பின்னரும் கூட மலேசியாவிலியே தங்கி விட்டனர்.

உழைக்க வேண்டும் வாழ்க்கை வளமாக அமைய வேண்டும் என வந்த மக்களுக்கு முதலில் தோட்ட நிர்வாகம் இத்தீவில் அவர்கள் குழந்தைகள் கல்வி கற்க என்று தோட்டப்புர தமிழ்ப்பள்ளியை உருவாக்கியது. ஆரம்பத்தில் ஒரே ஒரு தமிழ்ப்பள்ளி என்று இருந்த நிலை மாறி தற்சமயம் நான்கு தமிழ்ப்பள்ளிகள்  இந்தத் தீவில் உள்ளன. தமிழ் மக்களின் வாழ்க்கையில் பிரிக்கமுடியாத அங்கமாகி விட்ட தெய்வவழிபாட்டு தேவைகளுக்கென்று கோயில்களை கட்டவும் அனுமதி அளித்தது ஆங்கிலேய அரசு. ஆரம்பத்தில் ஓரிரண்டு கோயில்கள் இருந்த நிலை மாறி படிப்படியாக முப்பதுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் இந்த ஒரு சிறு தீவிற்குள்ளேயே இருக்கின்றன.

பொதுவாக மலேசியாவின் எல்லா மானிலங்களிலும் மாரியம்மனுக்கும், முருகக் கடவுளுக்கும், விநாயகக் கடவுளுக்கும், முனீஸ்வரருக்கும் என்றே அதிகமான கோயில்கள் அமைந்திருக்கும். கேரித்தீவிலும் இதே நிலையைத் தான் காண்கின்றோம். அதிகமான எண்ணிக்கையில் மாரியம்மன் பல்வேறு வடிவங்களிலும் சில வினாயகர் ஆலயங்களும் சில மதுரை வீரன், முனியாண்டி ஆலயங்களும் தீவு முழுக்க நிறைந்திருக்கின்றன. தமிழகத்தில் தங்கள் ஊரில் கிராமத்தில் என்ன சாமியை வழிபட்டார்களோ அந்த சாமிதானே அவர்களுக்கு எங்கு சென்றாலும் சாமி!  ஆக அதே சாமிகளையும் மலேயாவிற்கும் கொண்டு வந்து அவர்கள் பக்திக்கும், பயத்திற்கும், வேண்டுதலுக்கு ஊற்றூக்காலை அமைத்துக் கொண்டனர் இந்தக் கேரித்தீவு தமிழ் மக்கள்.

இங்குள்ள ஆதிவாசி இனமக்களான மாமேரி இனத்தவர்கள் இங்கு வந்து சேர்ந்த நாமக்கல் தமிழ் மக்களுடன் இணைந்து வாழப் பழகிக் கொண்டனர் என்பதை அவர்களில் பலர் தமிழ் மொழியும் பேசுவதிலிருந்து ஆதாரமாகக் காணமுடிகின்றது. தமிழ்மக்களில் இக்காலகட்டத்தில் வந்தவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் மாமேரி இனமக்களின் மொழியும் பேசுவர் என்பதையும் அறியமுடிகின்றது. இந்த மாமேரி இனக்குழுவினருக்கும் தமிழ் மக்களுக்கும் ஆரம்ப காலம் தொடங்கி எந்த ஒரு சமூகப்பிரச்சனைகளும் எழாத வகையில் சுமுகமாக இம்மக்கள் இத்தீவில் ஒற்றுமையாக  வாழ்கின்றனர். இத்தீவில் இன்றைய நிலவர்ப்படி தமிழ் மக்களின் எண்ணிக்கையே மிக அதிகமாக உள்ளது.

கேரித்தீவு தமிழ் மக்களில் பெறும்பாலோர் அன்றைய காலகட்டத்தில் இருந்ததைப் போலல்லாது இன்று தாமே சுயமாக நிலத்துக்குச் சொந்தக்காரர்களாக இருந்து தாமே பயிர் செய்து வருமானம் ஈட்டுபவர்களாக இருக்கின்றனர். இவர்களின் இரண்டாம் தலைமுறையினர் கேரித்தீவை விட்டு உயர்கல்விக்காகவும் தொழில்வாய்ப்புக்களுக்காகவும் வெளியேறி மலேசியாவின் பல பகுதிகளில் வசிக்கின்றனர். பலர் தீவிலேயே கடைகளை நிர்மாணித்து வர்த்தக வகையில் தங்கள் வாழ்வாதார நிலையை மாற்றிக் கொண்டனர்.

மலேசியாவின் வேறெங்கிலும் இல்லாத வகையில் கேரித்தீவில் தமிழிலேயே சாலைப் பெயர் இருப்பதையும் காணலாம்.   மலேசிய அரசியல் தலைவர் மறைந்த டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் அவர்கள் பெயரில் ஒரு சாலை இங்குள்ளது. அவரது பெயரைத் தாங்கிய பெயர்ப்பலகை தமிழிலும் மலாய் மொழியிலும் எழுதப்பட்டிருப்பது இத்தீவில் தமிழ் மக்களின் முக்கியத்துவத்தை சுட்டுவதை உணரலாம்.

இன்றைய நிலையில் பசுமையான இக்கேரித்தீவின் செம்பனைத் தோட்டங்களிலும் ரப்பர் தோட்டங்களிலும் பணிபுரிய தமிழ் மக்களில் பெரும்பாலோர் முன்வராத நிலையில் வங்காள தேசத்திலிருந்து ஒப்பந்த முறையில் தொழிலாளர்களைக் கொண்டு வந்து இங்கு பணிக்கு அமர்த்தியுளது சைம் டார்பி நிறுவனம். இந்த நிறுவனமே இங்குள்ள மிகப்பெரிய செம்பனை ஆலையாகத் திகழ்கின்றது. முன்னர் தொழிலாளிகளாக வேலை பார்த்தவர்கள் இப்போது நிலத்துக்குச் சொந்தக் காரர்களாகவும் இருப்பது பெருமையே. அதே வேளை, நகரமயமாக்கல் காரணத்தினாலும் தோட்டத் துண்டாடல் போன்ற நிகழ்வுகளாலும் முந்தைய கிராமப்புர வாழ்க்கை முறை என்பது இல்லாது போய்விட்ட,  நினைத்துப் பார்த்து பெருமூச்சு விட வைக்கின்ற ஒரு விசயமாகத்தான் போய்விட்டது.

கேரித் தீவு தொடர்பாக நான்கு வீடியோ பதிவுகள் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இணைத்துள்ளேன்.  அவற்றை http://www.tamilheritage.org/thfcms/ என்ற பக்கம் சென்று வரலாறு எனும் பகுதிக்குச் சென்று அதில் மலேசியா என்ற பகுதிக்குச் சென்றால் பார்த்து மகிழலாம்.
மலேசிய வரலாற்றில் தமிழர் வருகையும் வாழ்வும் பிரித்தெடுக்க முடியாதவையே!

முனைவர்.சுபாஷிணி

2 comments: