பண்டைய தமிழர் நிலப்பரப்பில் இருந்த இயல்பான வழிபாடுகளானவை குலதெய்வ வழிபாடு, இயற்கை தெய்வ வழிபாடு, தாய் தெய்வ வழிபாடு, இயற்கையாகிய காடு-மலை-தாவரங்கள்-மழை-நெருப் பு ஆகியவற்றைப் போற்றும் வழிபாடு என அமைந்திருந்தன. இவை மனிதர்களும் தெய்வங்களும் நெருக்கமான உறவினைக் கொண்டிருக்கும் வகையில் அமைந்த வழிபாடுகள். இந்த வழிபாட்டு முறையில் மனிதருக்கும் கடவுளுக்கும் இடையே இடைத்தரகர்களாக பலம் பொருந்திய ஒருவர் தேவை என்ற கருத்திற்கு இடமில்லை. ஆண் பெண் இருவருமே பூசாரிகளாக இருக்கத் தகுதி படைத்தோராகவே பண்டைய தமிழ்ச்சமூகத்தின் நிலை இருந்தது. இந்த இயல்பான தெய்வ வழிபாடு மக்களை இணைத்தது. அவர்கள் அஞ்சுகின்ற சக்திகளிடமிருந்து அவர்களைப் பாதுகாத்து நன்மை அளிக்கும் ஒரு சமூகப்பண்பாக இது அமைந்திருந்தது.
இது சாதிப்பிரிவினை அற்ற மிக இயல்பான திணை, அதாவது, நிலப்பகுதி அடிப்படையில் அமைந்த மனித வாழ்க்கையும் அதற்குரிய தெய்வ வழிபாடுகளும் என்ற வகையில் அமைந்த ஒரு சமூக நிலை.
இந்த வழிபாட்டு முறையில் மிகப்பெரிய மாற்றம் என்பது தமிழக நிலப்பரப்பிற்கு ஆரியர்களின் வேத நெறி அறிமுகப்படுத்தப்பட்டபோது நிகழ்ந்தது. அது வர்ண பேதங்களை, அதாவது மனு தர்மம் எனும் வேத சாத்திர நூலில் குறிக்கப்படும் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டும் மனிதருக்குள்ளே பிரிவினையை ஏற்படுத்தும் ஒரு கொள்கை. ஆரிய வேத தத்துவக்கருத்துக்களின் தாக்கம் அரசுகளை ஈர்த்த போது வேத சாத்திரங்கள் அதிலும் குறிப்பாக மனு தர்மம் சொல்லும் பிரிவினையை அரசியல் அமைப்புப்படி சட்டமாக்கி நடைமுறைப்படுத்தி அதனை விரிவாக்கின அன்றைய அரசுகள். வேத முனிவர்கள் செய்கின்ற வேள்விகளில் உயிர்ப்பலி கொடுக்கும் நடைமுறை வழக்கில் இருந்தது. உயிரினங்களை தாங்கள் செய்கின்ற யாகங்களில் பலி கொடுத்து மேல் உலகத்தில் இருக்கும் தேவர்களை மகிழ வைத்து தங்கள் விருப்பங்களை வரமாகப் பெறலாம் என்ற நம்பிக்கையை வைதீக சமயம் விரிவாக்கியிருந்தது. அதுமட்டுமன்றி ஞானக் கல்வி வாய்ப்புக்கள் என்பன குறிப்பிட்ட குலத்தோருக்கு மட்டுமே உரியது என்றும் ஏனையோர் தொழில் கல்வி செய்து வாழ்வதே குல தர்மம் என்ற கொள்கையையும் விரிவு படுத்தியிருந்தது வைதீக மதம்.
இதற்கு ஒரு மாற்றாகச் சமணமும் பௌத்தமும் விளங்கின. இறைவனை அடைய எல்லோரும் தவம் செய்யலாம்; நல்ல நெறிகளை ஒழுகினால் மோட்சம் பெறலாம்; கல்வி என்பது எல்லோருக்கும் சமமானது;. என்ற கருத்துக்களைச் சமணமும் பௌத்தமும் முன்வைத்தன. இதில் மேலும் விரிவாக அகிம்சை கோட்பாட்டை வலியுறுத்தும் பண்பைக் கொண்டிருந்தது சமணம். எந்த உயினங்களையும் வதைத்தல் கூடாது என்பதை மிக முக்கியக் கோட்பாடாக சமண சமயம் முன்வைத்தது. மக்கள் மத்தியில் அறத்தை உயர்வாக மதிக்க வேண்டும் என்ற சிந்தனையையும் எல்லோருக்கும் கல்வி என்ற கொள்கையையும் வைதீக மதம் சூழ்ந்திருந்த தமிழக நிலப்பரப்பில் சமணம் முன்வைத்துப் பரவலாக பொது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வளர்ந்தது.
சமணம் இன்றைய தமிழகம் என்று குறிப்பிடப்படும் நிலப்பகுதியில் கி.மு 5ம் நூற்றாண்டு வாக்கிலிருந்து வழக்கில் இருந்து வந்தமையை இன்று நமக்குக் கிடைக்கின்ற பல சான்றுகளிலிருந்து அறிகின்றோம். பொதுவாக பண்டைய தமிழி (பிராமி) எழுத்தால் அமைந்த கல்வெட்டுக்கள் இருக்கின்ற பகுதிகளான மாங்குளம், அரிட்டாபட்டி, கீழவளவு, ஆனைமலை, அறச்சலூர் போன்ற பகுதிகள் தமிழகத்தில் சமணத்தின் தொன்மையை உறுதி செய்வதாக இங்குள்ள கல்வெட்டுக்களும், சமணர் கற்படுக்கைகளும் அமைகின்றன.
சமண சமயம் இந்தியாவில் மட்டுமே தோன்றி வளர்ந்து இன்றளவும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களால் ஒழுகப்படும் ஒரு சமயம். தமிழகத்தில் கி.பி 7ம் நூற்றாண்டிற்குப் பின்னர் தோன்றிய சைவ வைணவ சமயங்கள் பெருமளவில் மன்னர்களின் ஆதரவைப் பெற்று வளர்ந்த போது சமணமும் பௌத்தமும் அதன் புகழை இழக்கத் தொடங்கின. அதன் பின்னர் மீண்டும் அச்சணந்தி முனிவரின் முயற்சிகளினால் கி.பி 9ம் நூற்றாண்டு முதல் மீண்டும் சமணம் அதன் சிறப்பைப் பெறத் தொடங்கியது. பிற்காலச் சோழ மன்னர்கள் ஆட்சியின் போது சைவ வைணவ சமயத்தோடு சமணமும் மன்னர்களின் ஆதரவைப் பெற்ற சமயமாகவே திகழ்ந்தது. அதிலும் குறிப்பாக மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் சமய வெறி அற்ற, எல்லா சமயத்தோரையும் ஆதரிக்கும் பொது நலச்சிந்தனை பரவியிருந்ததால் சமணமும் புத்துயிர் பெற்று வளர்ச்சி பெற ஆரம்பித்தது.
மாமன்னன் ராஜராஜ சோழனின் தமக்கையார் குந்தவைப்பிராட்டியார் சமண சமயத்தில் பற்று கொண்டவராக இருந்தார். தமிழகத்தின் திருவண்ணாமலைக்கு அருகே உள்ள திருமலை மற்றும் கரந்தை போன்ற பகுதிகளில் குந்தவை நாச்சியார் கட்டிய சமண ஆலயங்கள் இன்றும் சிறப்புடன் காட்சியளிக்கின்றன.
அதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரம்மாண்டமான கோயில் தான் சிகாமணி நாதர் சமணக்கோயில். இந்தக் கோயில் இருக்கும் இடம் எழில் நிறைந்த ஒரு பகுதி. தமிழகத்தின் போற்றத்தக்க வகையில் அமைந்த சமண சின்னங்கள் உள்ள ஒரு பகுதியாக இந்தக் கோயில் இருக்கும் திருமலை என்னும் ஊரைச் சொல்லலாம்.. திருமலை திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் அமைந்துள்ளது. திருமலை என்றாலே பொதுவாக பலரும் இது திருப்பதி வெங்கடாசலபதி இருக்கும் திருமலையோ என யோசிக்கலாம். இங்குக் குறிப்பிடப்படும் திருமலை ஆந்திரப்பிரதேசத்தில் இருக்கும் திருமலை அல்ல. இது தமிழகத்தில் இருக்கும் ஒரு சிற்றூர்தான். திருமலை என்ற இந்த ஊரில் வைகாவூர் என்னும் கிராமத்தில் தான் இந்தச் சிகாமணி நாதர் கோயில் இருக்கின்றது,
இந்தக் கிராமத்திற்கு நான் 2014ம் ஆண்டில் சென்றிருந்தேன். அங்கிருக்கும் சமண மடத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து அருகாமையில் இருக்கும் சமண சமயச் சின்னங்களைப் பார்வையிட்டும் மடாதிபதி ஸ்வஸ்தி ஸ்ரீ தவளகீர்த்தி பட்டாரக சுவாமிகளைப் பேட்டிகண்டேன். அந்த விழியப் பதிவு தமிழ் மரபு அறக்கட்டளையின் சமண சமய வரலாறு உள்ள பகுதியில் இடம்பெறுகின்றது.
இந்தக் கோயில் அமைந்திருக்கும் பகுதி பாறைகள் நிறைந்த ஒரு மலைப்பகுதி. மலையின் கீழடிவாரத்தில் ராஜராஜன் தன் தேவியருடன் இருக்கும் வகையில் அமைந்த சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதனைக் கடந்து சென்றால் பாறைகளுக்கு மேலே செல்ல அமைக்கப்பட்டுள்ள மலையின் மேற்கே படிகளில் ஏறிச்சென்றால் நாம் பிரம்மாண்டமான வடிவில் உள்ள ஸ்ரீசிகாமணி நாதர் புடைப்புச் சிற்பத்தை அங்குக் காணலாம். இச்சிலையின் மொத்த உயரம் 16 1/2 அடியாகும். தீர்த்தங்கரர் நேமிநாதரின் சிறப்புப் பெயரே சிகாமணிநாதர் என்பதாகும். இச்சிற்பம் சோழ இளவரசியார் குந்தவை பிராட்டியாரால் கி.பி.11ம் நூற்றாண்டில் மாமன்னன் ராஜராஜ சோழனின் மறைவுக்குப் பின்னர் கட்டப்பட்டது.
இந்தியாவிலேயே மிக உயரமான நேமிநாத தீர்த்தங்கரர் சிற்பம் என்ற சிறப்பைக் கொண்டது இந்தச் சோழர் காலத்துச் சிற்பம். மாமன்னன் ராஜராஜனின் சிறப்பை வெளிக்காட்டும் வகையில் அவருக்குப் பல பெயர்கள் உண்டு. மும்முடிச் சோழன், ஜனநாதன், அருண்மொழி, சத்திரிய சிகாமணி ஆகியவை அவற்றுள் அடங்கும். திருமலையில் செதுக்கப்பட்ட இந்த நேமிநாதரின் சிற்பத்தை தனது சகோதரன் மாமன்னன் ராஜரானின் மறைவுக்குப் பின்னால் கட்டியதால் ராஜரானின் நினைவாக 'சிகாமணி' என்று பெயரிட்டிருக்கலாம் என "திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு" என்ற நூலில் அதன் ஆசிரியர் ஆர்.விஜயன் குறிப்பிடுகின்றார்.
இச்சிகாமணி நாதர் புடைப்புச் சிற்பத்திற்கு பூஜையும் செய்யப்படுகின்றது. இந்த மலை இருக்கும் பகுதியில் மேலே செல்லச் செல்ல மேலும் பல சமண சின்னங்கள் இருப்பதைக் காணலாம்.
இந்தச் சிற்பம் அமைந்திருக்கும் சூழலும் இதன் அமைப்பும் இங்கு வருவோர் மனதில் ஆழ்ந்த தியானத்தை ஏற்படுத்டும் வல்லமை கொண்டவை. இத்தகைய சிறந்த கலைப்படைப்புக்கள் தமிழர் வரலாற்றின் சிறப்பிற்கு மேலும் சிறப்பு சேர்ப்பவையாக அமைந்திருக்கின்றன.
சமண நெறி என்றோ இருந்து என்றோ மறைந்தது எனவும், அதன் வரலாற்று அம்சங்களை முழு பரிமாணத்தோடு அறியாது ஒரு பகை சமயம் போலவும் கருதுவோரும் உள்ளனர். சமண சமயம் தமிழ் மொழிக்கும், தமிழ் பாரம்பரியத்திற்கும் கலைக்கும் வழங்கிய கொடைகள் ஏராளம். அவற்றை அறிந்து கொள்ள முனையும் போது தமிழர் வரலாற்றைப் பற்றிய விரிவான தகவல்களை நாம் பெற முடியும்.
EXCELLENT INFOS ....MY HUMBLE SALUTES MADAM
ReplyDeleteஅருமை
ReplyDeleteவரலாற்று செய்தியில் இன்றைய சமூக தேவையும், தொலைப்பை நினைவு படுத்திய வகையில் முகவுரை தொகுப்பு சிறப்பாக உள்ளது.
ReplyDeleteகட்டுரையின் ஓட்டம், தொகுப்பு, தகவல்கள் சிறப்பாக இருக்கின்றன. ஆனாலும் ஒரு நெருடல், தமிழர் வழிபாடுகளில் காணப்படுகின்ற பரிணாம மாற்றங்களுக்குப் பின்னால் விஞ்ஞானபூர்வ கருத்தியல்கள் எதனையும் காண முடியாமல் இருக்கின்றதே
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதிருமலை வையாவூரில் மலையின் மேல் பிரசன்ன வேங்கடாசலபதி கோவி்ல் தானே உள்ளது
ReplyDeleteதிருமலை வையாவூரில் மழையின் மேல் பிரசன்ன வேங்கடாசலபதி கோவி்ல் தானே உள்ளது ?
ReplyDelete