தமிழ் மரபு அறக்கட்டளை தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தொடர்ச்சியாக அரிய தமிழ் நூற்களை நாம் வலைப்பக்கத்தில் இணைத்துக் கொண்டே வருகின்றோம். நமது தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் வெளியீடுகளில் உமறுப் புலவர் சரிதை என்ற ஒரு நூலும் இடம் பெற்றுள்ளது. இது நமது சேகரத்தில் 148வது நூலாக உள்ளது. செய்யுளும் உரைநடையுமாக அமைந்த இந்த நூலைத் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னாக்கத்திற்காக வழங்கியிருந்தார் திருமதி சீத்தாலட்சுமி அவர்கள். தமிழகத்திலிருந்து அமெரிக்கா சென்ற போது அவர் தமது வாசிப்புக்காக எடுத்துச் சென்ற நூல்களில் இதுவும் ஒன்று. தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னாக்கப் பணிகள் தொடர்பான கலந்துரையாடல்களின் போது இந்த நூலைப் பற்றி அவர் மின் தமிழ் மடலாடற் குழுமத்தில் தெரிவிக்கவும் இதனையும் மின்னாக்கம் செய்து பொது மக்கள் வாசிப்பிற்கு வழங்க வேண்டும் என நானும் திருமதி.சீத்தாலட்சுமி அவர்களும் திட்டமிட்டோம்.
நூலை நான் மின்னக்கம் செய்து தருகின்றேன். எனது இல்ல முகவரிக்கு அனுப்பி வையுங்கள் என்று திருமதி.சீத்தாலட்சுமி அவர்களைக் கேட்ட உடன் எனக்குத் தபாலில் இந்த நூலை அனுப்பி வைத்தார்கள். இந்த நூல் மின்னாக்கம் செய்யப்பட்டு 10.10.2009 அன்று தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்தில் இணைக்கப்பட்ட செய்தியை மின்தமிழில் அறிவித்திருந்தேன். மின்னூலாக்கத்திற்குப் பின்னர் இந்த நூலை உமறுப் புலவர் சமாதியை மேற்பார்வை செய்து வருபவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது திருமதி.சீத்தாலட்சுமி அவர்களின் விருப்பம். எனது எட்டயபுரத்துக்கான பயணம் 2009ம் ஆண்டு டிசம்பர் ஆரம்பத்தில் என உறுதியானவுடன் நானே நேரடியாக அங்கே செல்லும் போது அவர்களிடம் ஒப்படைத்து விடுவதாக உறுதி கூறியிருந்தேன்.
2009ம் ஆண்டு தமிழகத்தின் எட்டயபுரம் செல்லவேண்டும். அந்தக் கிராமத்தின் அனைத்து வரலாற்று விசயங்களையும் சேகரித்து தொகுத்து தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அதனை மனதில் கொண்டு 2009ம் ஆண்டு டிசம்பரில் ஓரிரு நாட்கள் எட்டயபுரம் சிற்றூரில் இருந்தேன்.
எட்டயபுரத்தில் சில மணி நேரங்கள் ஜமீன்தாரின் அரண்மனையைச் சுற்றிப் பார்த்து பதிவுகள் செய்து கொண்ட பின்னர் நேராக அமுதகவி உமறுப் புலவர் சமாதி இருக்கும் இடம் நோக்கிப் புறப்பட்டேன். என்னுடன் மதுரையிலிருந்து வந்திருந்த இரண்டு நண்பர்களும் இணைந்து கொண்டனர். இந்த இடம் அரண்மனையிலிருந்து வெகு தூரமில்லை. சில குறுக்கு பாதைகளில் சென்று ஐந்தே நிமிடத்தில் அமுதகவி உமறுப் புலவர் மணிமண்டபத்தை வந்தடைந்தோம். எனது கற்பனையில் இது ஒரு இல்லம் போல இருக்கும் என முதலில் நினைத்திருந்தேன். ஆனால் அதற்கு மாறாக இந்த உமறுப்புலவர் மணிமண்டபம் ஒரு பள்ளி வாசல் போலவே அமைந்திருக்கின்றது. மணிமண்டபத்தில் உள்ளோருக்கு நாங்கள் முன் அறிவிப்பு ஏதும் தெரிவித்து விட்டு வரவில்லை. ஆனாலும் திருமதி.சீத்தாலட்சுமி அவர்கள் கொடுத்து நான் மின்னாக்கம் செய்து முடித்த நூலின் அசல் பிரதியை உமறுப்புலவர் மணிமண்டபத்தின் பொறுப்பாளர் ஒருவரிடம் ஒப்படைக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது.
உமறுப் புலவர் 1642ம் ஆண்டு பிறந்தவர். எட்டயபுரத்து அரண்மனை சமஸ்தானக் கவிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர். இவரது நூலாகிய சீறாப்புராணம் இலக்கிய கவித்துவச் சிறப்புடன் நோக்கப்படும் ஒரு நூல். உமறுப் புலவர் தமது இளம் வயதிலேயே தமது கவித்திறமையால் எல்லோரையும் கவர்ந்தவர். இவரது ஆசிரியரான கடிகை முத்துப் புலவரும் சமஸ்தானப் புலவர்களில் ஒருவரே. மத வேறுபாடுகள் இல்லாமல் அந்தக் காலகட்டத்தில் அரண்மனையில் புலவர்கள் சிறப்புச் செய்யப்பட்டுள்ளனர் என்பதற்கு இவரும் ஒரு சான்று. உமறுப் புலவர் 1703ம் ஆண்டு மறைந்ததாக நூல் குறிப்பு உள்ளது.
சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்தி விட்டு மணிமண்டபத்திற்குள் நுழைந்தோம். அழகான வடிமவமைப்பில் அமைந்த கட்டிடம்.
நாங்கள் சென்ற சமயத்தில் சிலர் அங்கிருந்தனர்.
உமறுப் புலவர் சமாதி, முதலில் பிச்சை என்பவரால் 1912ம் ஆண்டு நினைவுச் சின்னமாக உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர் 2007ம் ஆண்டு இப்போதிருக்கும் இந்தப் புதிய மணி மண்டபம் கட்டப்பட்டு சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. உமறுப் புலவர் சரிதை நூலை எடுத்துக் கொண்டு மண்டபத்திற்குள்ளே நுழைந்தோம். பச்சை நிறத்திலான துணியைக் கொண்டு சமாதியை அலங்கரித்திருக்கின்றனர். தினம் அங்கு மக்கள் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர் என்பதை சூழலைப் பார்க்கும் போது அறியமுடிந்தது.
மணிமண்டபத்தின் உள்ளே சென்று அங்கிருந்த இரண்டு பேரிடம் எங்களை அறிமுகம் செய்து கொண்டோம். நான் வந்த நோக்கத்தை அவர்களிடம் குறிப்பிட்டேன். உமறுப்புலவரின் சரிதத்தை அங்கே மணிமண்டபத்தில் வைக்க வேண்டும் என்ற திருமதி.சீத்தாலட்சுமிய் அவர்களது விருப்பத்தைத் தெரிவித்து இந்த நூல் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல் சேகரத்தில் இடம்பெற நான் ஏற்பாடு செய்டிருப்பதையும் தெரிவித்த போது அவர்கள் இருவரும் அகமகிழ்ந்தார்கள். அங்கிருந்தவரில் ஒருவர் மணிமண்டபத்தின் பொறுப்பாளரை அழைத்து வர அவரிடமே அந்த நூலை வழங்கினேன்.
இந்த உமறுப்புலவர் நினைவு மண்டபத்திற்கு பொது மக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக மந்திரிக்க வருகின்றனர் என்ற விபரத்தையும் தெரிந்து கொண்டேன். குழந்தைகள் உடல் வருத்தத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் உமறுப் புலவரின் சமாதி உள்ள இந்த மணிமண்டபத்திற்கு குழந்தைகளைப் பெற்றோர்கள் அழைனத்து வருவார்களாம். இங்கு வந்து மந்திரித்துச் சென்றால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கை பொது மக்களுக்கு இருக்கின்றது. இப்படி வரும் குழந்தைகள் அல்லது நோயால் பாதிக்கப்பட்டவருக்கு பூஜைக்கு வைத்துள்ள தண்ணீரைத் தெளித்து விட்டால் நோய் குணமாகும் என்பது இங்குள்ளோரின் நம்பிக்கையாக இருக்கின்றது.
இஸ்லாமியர்கள் மட்டுமன்றி இந்துக்களும் கிறித்துவர்களும் கூடத் தயக்கமின்றி சர்வ சாதாரணமாக தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டி இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றார்கள். சிலர் பிரச்சனைகள் நீங்கியதன் ஞாபகார்த்தமாக தங்கள் குழந்தைகளுக்குக்கும் உமர் என்று பெயர் வைப்பதும் இங்கு வழக்கத்தில் இருக்கின்றது என்பதை இந்த இஸ்லாமிய நண்பர் திரு. அகமது ஜலால் அவர்களிடம் பேசிய போது அறிய முடிந்தது.
அந்த மண்டபத்தை முழுதுமாகச் சுற்றிக் காண்பித்து அங்கு வந்து செல்வோர் பற்றியும் தொழுகை நடைபெறுவது பற்றியும் எங்களிடம் தகவல் பகிர்ந்து கொண்டனர் இந்த இஸ்லாமிய நண்பர்கள்.
வேறுபட்ட மதங்களைப் பேணுவோராக இருந்தாலும் எட்டயபுர கிராம மக்கள் மத வேறுபாடின்றி எல்லோரும் நட்புடனும் அன்புடனும் பழகும் சூழலை அங்கு நேரில் பார்த்து மகிழ்ந்தேன். மத நல்லிணக்கம் அமைதியான வாழ்க்கைச் சூழலை மக்களுக்கு வழங்கக்கூடிய நல்ல பண்பு இதனை மதித்துப் போற்றி வளர்ப்பது சமூக மேம்பாட்டிற்கு உறுதுணையாக நிற்கும்!