Thursday, November 24, 2016

38. தஞ்சை பெரிய கோயில்



மலேசியாவிலிருந்து தமிழகம் செல்லும் அனைவரது சுற்றுலா தலங்களுக்கான பட்டியலிலும் தவறாது இடம்பெறும் ஒரு இடம் என்னவென்றால் அது நிச்சயமாகத் தஞ்சாவூரில் அமைந்திருக்கின்ற பெரிய கோயில் தான். அதனை ஏன் பெரிய கோயில் என அழைக்கின்றோம?  இதனை விடப் பெரிய கோயில்கள் தமிழகத்தில் இல்லையா? என்றால் சுற்றளவிலும் பரப்பளவிலும் பெரிய விரிவான ஏனைய கோயில்கள் இருந்தாலும், தென் இந்தியாவில் இருக்கும் மிக உயர்ந்த கோயில் விமானப்பகுதியைக் கொண்ட கோயில் இது என்பதால் இந்தக் கோயிலுக்குப் பெரிய கோயில் என்ற ஒரு தனிச்சிறப்பு வழங்கப்பட்டுள்ளது. 

90ம் ஆண்டுகளில் ஒரு முறை பேரூர் சாந்தலிங்க சுவாமிகளுடன் இணைந்து ஏனைய சில மலேசிய நண்பர்களும் என இக்கோயிலுக்குச் சென்றிருந்தோம். அப்போது கோயில் கருவறைக்குள் அனைவரையும் அழைத்துச் சென்று மலர் தூவி வழிபடச் செய்தார் பேரூர் சாந்தலிங்க சுவாமிகள். அந்த நிகழ்வுக்குப் பின்னர் நான்கு முறைகள் நான் இந்தப் பெரிய கோயிலுக்குச் சென்றிருக்கின்றேன். அதில் ஒருமுறை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக ஒரு பிரத்தியேகப் பதிவைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்றிருந்தேன். நண்பர் சுந்தர் பரத்வாஜ் அவர்கள் என்னை ஆய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களுக்குத் தொலைப்பேசி வாயிலாக அறிமுகப்படுத்தி வைக்கக், கோயிலுக்கு நான் சென்றதுமே என்னை இன்முகத்துடன் வரவேற்று தஞ்சை பெரிய கோயில் பற்றிப் பல வரலாற்றுத் தகவல்களை அவர் கூறினார். அவை ஒலிப்பதிவுகளாகவும் விழியப் பதிவுகளாகவும் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 

முனைவர். குடவாசல் பாலசுப்ரமணியம் அவர்கள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கல்வெட்டு, தமிழ் எழுத்துக்கள் ஆய்வுத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். கல்வெட்டு ஆய்வுலகில் நன்கு அறியப்பட்டவர் என்பதோடு ராஜராஜேச்சுவரம், தஞ்சாவூர் எனக் குறிப்பிடத்தக்க நூற்களின் ஆசிரியர் என்ற சிறப்புக்களைக் கொண்டவர். இன்றும் தொடர்ந்து வரலாற்று ஆய்வுகளில் தம்மை ஈடுபடுத்தி வருபவர் இவர். 

இந்தக் கோயிலுக்கு பிரஹதீவரம், என்ற பெயருடன் இராஜராஜேச்வரம் என்ற பெயர்களும் உண்டு. 

ஆரம்பத்தில் எந்த மன்னனால் இந்தக் கோயில் கட்டப்பட்டது என்பது அறியப்படாமலேயே இருந்தது. 1886ம் ஆண்டில் அக்கால ஆங்கிலேய அரசு திரு.ஹூல்ஸ் என்ற ஜெர்மானிய ஆய்வறிஞரைத் தமிழகத்தில் கல்வெட்டாய்வாளராக நியமித்தது. இவர் பெரிய கோயிலின் கல்வெட்டுக்களைப் படியெடுத்துப் படித்து, இக்கோயிலைக் கட்டிய அரசன் முதலாம் இராசராசனே என அறிவித்தார். பின்னர் 1892ல் திரு.வெங்கையா பதிப்பித்த தென் இந்தியக் கல்வெட்டுக்கள் என்னும் நூலில் இரண்டாம் தொகுதியில் இடம்பெறும் முதல் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள 
"பாண்டிய குலாசினி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் 
தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம் "
என்னும் கல்வெட்டினால் இச்செய்தி மேலும் உறுதியானது. 

இந்தக் கோயிலைக் கட்டிய சிற்பிகளின் பெயர்களும் இக்கோயில் கல்வெட்டுக்களில் இடம்பெற்றிருக்கின்றன. அந்த வகையில் நாம் அறிகின்ற பெயர்களாக தலைமைக் கட்டடக் கலைஞனான வீரசோழன் குஞ்சரமல்லன் ராசராசப் பெருந்தச்சன், இரண்டாம் நிலை கட்டடக் கலைஞனான மதுராந்தகனான நித்த வினோதப் பெருந்தச்சன் மற்றும் மேலும் ஒரு இரண்டாம் நிலைப்பெருந்தச்சனாகிய இலத்தி சடையனான கண்டராதித்த பெருந்தச்சன் ஆகிய பெயர்களைக் கூறலாம். 

இக்கோயிலின் ஏனைய கல்வெட்டுக்களில் உள்ள தகவல்களின் படி மாமன்னனின் தமக்கையார் குந்தவைப்பிராட்டியார், மகன் இராஜேந்திர சோழன், ராஜராஜனின் ராஜகுரு சர்வசிவ பண்டிதர், சைவ ஆச்சாரியார் அல்லது தலைமை குருக்களான பவனபிடாரன், சேனாதிபதி கிருஷ்ணன் ராமன் எனும் மும்முடிச் சோழப் பிரம்மராயன், கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஸ்ரீ காரியம் பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் என்ற பெயர்களும் அவர்கள் தொடர்பான செய்திகளும், இன்னும் ஏனைய பல செய்திகளும் உள்ளன. 

இராஜராஜேச்சுரத்தின் நுழை வாசலில் அமைந்திருக்கும் கோபுரம் கேரளாந்தகன் திருவாயில் என அழைக்கப்படுகின்றது. ராஜராஜனின் காலத்திற்கு முன்னர் எழுப்பப்பட்ட கோயில்கள் அனைத்தும் உயரங் குறைந்த கோபுரங்கள். முதன் முறையாக உயரமாக அமைக்கப்பட்ட கோயில் கோபுரம் என்றால் அது பெரிய கோயிலில் உள்ள இந்த கேரளாந்தகன் நுறைவாயில் கோபுரம் தான். கி.பி988ம் ஆண்டில் கேரள நாட்டிலுள்ள காந்தளூர்ச்சாலையை (அதாவது இன்றைய திருவனந்தபுரம் அருகில் உள்ள பகுதி ) வென்றமையால் கேரளாந்தகன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான். அதன் நினைவாக இந்த நுழைவாயில் கேரளாந்தகன் நுழைவாயில் எனப்பெயரிடப்பட்டது. மிக அகலமான அதிட்டானத்தின் மேல் இக்கோபுரம் எடுப்பிக்கப்பெற்றுள்ளது. இதில் கருங்கற் வேலைப்பாடுகளும் சுதையினால் செய்யப்பட்ட சிற்பங்களும் சேர்ந்தே அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரத்தின் வடபகுதி முழுவதும் சதாசிவ மூர்ஹ்ட்தியின் சிற்பங்களே நிறைந்திருக்கின்றன. 

இந்த நுழைவாயிலைக் கடந்து சென்றால் அடுத்து வருவது இராசராசன் திருவாயில். இப்பகுதியில் மிகப்பெரிய உருவத்தில் கல்லிலே செதுக்கப்பட்ட நந்தி ஒன்று உள்ளது. இது பிற்காலத்தில், அதாவது நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. ராசராசன் காலத்தில் கட்டப்பட்ட நந்தி கோயிலினுள்ளே திருச்சுற்று மாளைகையில் வராகி அம்மன் கோயிலுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. 

பெரிய கோயிலின் இராசராசன் திருவாயில் முழுவதும் பல சிற்பவேலைப்பாடுகள் நிறைந்திருக்கின்றன. சிற்பத்தொகுதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புராணக் கதையை விளக்கும் வகையில் அமைக்கப்பெற்றிருக்கின்றன. அதில் ஒன்றாக திரிபுரத்தை சிவபெருமான் தகனம் செய்து பின் அந்த அசுரர்களுக்குக் காட்சி அளித்தமையைக் காட்டுவதாக உள்ளது. இந்தச் சிற்பம் இருக்கும் பகுதியில் இருக்கும் துவாரபாலகர் வடிவம் தான் உலகிலேயே மிகப் பெரிய துவாரபாலகர்கள் சிற்பங்கள். இப்பகுதியிலேயே சண்டீசர் கதைத் தொகுப்பாக ஒரு சிற்பத் தொகுதி ஒன்று உள்ளது. அதில் விசாரசர்மன் (சண்டீசர்) மழுவால் தன் தந்தையின் காலை வெட்டும் காட்சியும் பசுக்கூட்டமும் காணப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக மீனாட்சி சுந்தரேசுவர திருக்கலியாணக் காட்சிகள் சிற்பத்தொகுதியாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கடுத்தார்போல, மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைத் தழுவுவது போன்ற காட்சி சிற்பத்தொகுப்பாக அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இதன் தொடர்ச்சியாக வள்ளியை மணமுடிக்கும் முருகன் கதையை விளக்கும் சிற்பத் தொகுப்பு அமைந்துள்ளது. இப்படி வரிசையாகப் பல புராணக்கதைகளைச் சிற்பங்களாக வடித்ஹ்டு அமைத்துக் கொடுத்திருக்கின்றனர் இக்கோயிலைக் கட்டிய சிற்பிகள். சிற்பக்கலைக்கூடமாக இது இன்று நம் கண்முன்னே திகழ்கின்றது. 

தஞ்சைப் பெரியகோயிலின் விமானப்பகுதியே சதாசிவ லிங்கமாக வடிக்கப்பெற்றது. இதனைக் காட்ட மாமன்னன் இராஜராஜன் சதாசிவ வடிவத்தின் ஐந்து திரு உருவங்களையும் தனித்தனியே வடித்து அதற்கேற்ற திக்குகளில் பிரதிட்டை செய்து வழிபாடு செய்துள்ளான். பல மைல் தூரத்திலிருந்து பார்க்கும் போதே சதாசிவலிங்கமாகக் காட்சியளிக்கும் பெரிய கோயில் ஸ்ரீவிமானத்தை நன்கு காணலாம். 

சிற்பங்கள் மட்டுமே இக்கோயிலில் இருப்பதாக எண்ணிவிட வேண்டாம். கலாரசிகனான ராஜராஜன் இக்கோயிலின் கருவறை இரு சுற்றுச் சுவர்களுக்கு இடையே உள்ள சாந்தாரம் எனும் சுற்றுக்கூடத்தில் ஓவியங்களை தீட்டச் செய்துள்ளான். இந்த ஓவியங்கள் அடங்கிய தொகுப்பு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வெளியீடாக வந்துள்ளது. 

இக்கோயிலின் ஒவ்வொரு பகுதியும் நுண்ணிய கட்டுமானச் சிறப்பைக் கொண்டவை. இது தமிழகத்துக்கு மட்டுமல்லாது உலக அளவில் தமிழர் கட்டுமானக் கலையின் சிறப்பைப் பறைசாற்றும் ஒரு சிறந்ததொரு வாழும் ஆவணமாகத் திகழ்கின்றது. இந்தத் தகவல்கள் அடங்கிய ஒலிப்பதிவுகள் தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் வரலாற்றுப்பிரிவில் உள்ளன. இக்கோயிலைப் பற்றிய மேலதிக தகவல்களைப் பெற விரும்புவோர் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல் சேகரத்தில் உள்ள முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களது இராஜராஜேச்சுவரம் என்ற நூலையும் தரவிறக்கி வாசிக்கலாம். 

No comments:

Post a Comment