Thursday, September 6, 2018

92. நோர்வே - பயணமும் பார்வையும்



ஐரோப்பாவில் இன்னமும் இலையுதிர் காலம் தொடங்கவில்லை. ஐரோப்பா கண்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்கேண்டிநேவியன் நாடுகளுக்குச் சென்று சுற்றிப்பார்ப்பதற்குத் தோதான காலம் கோடைதான். சற்று மத்தியிலும் தெற்கிலும் உள்ள ஏனைய ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் சுட்டெரிக்கும் போது ஸ்கேண்டிநேவியன் நாடுகளான நோர்வே, சுவீடன் டென்மார்க் மற்றும் ஃபின்லாந்து ஆகிய நாடுகளில் கோடை மிக இதமான தட்ப வெட்பத்துடன் அமைவதால் கோடைக்காலமே அயல்நாட்டினர் இந்த நாடுகளுக்குச் செல்ல மிகப் பொருத்தமான காலமாக அமைகின்றது. 

பாய்ந்துவரும் சிங்கம் போன்ற தோற்றத்துடன் உலக வரைபடத்தில் இடம்பெறும் நாடு நோர்வே. சில நாட்களுக்கு முன்னர் இதன் தலைநகரான ஓஸ்லோவில் ஒரு வரலாற்றுத் தேடுதல் பயணமாக சில நாட்களைக் கழித்து இந்த நாட்டைப் பற்றியும் இங்கு வாழும் தமிழ் மக்கள் பற்றியும் சில செய்திகள் சேகரித்து வந்தேன். 

ஆயிரக்கணக்கான தீவுகளைக் கொண்ட நாடு நோர்வே. நோர்வேஜியன் கடல் ஒரு புறமும் சுவீடன், பின்லாந்து, ரஷியா ஆகிய நாடுகளை நில எல்லைகளாகவும், டென்மார்க் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைக் கடல் எல்லையாகவும் கொண்டது நோர்வே. இந்த நாட்டைப் பற்றி குறிப்பாகச் சில செய்திகளைப் பார்ப்போம். 

நோர்வே நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளாக நோர்வேகியன் மொழியும் சாமி (வடக்குப் பகுதியில்) மொழியும் உள்ளன. இவை தவிர குவேன், ரொமானி, ரோமானுஸ் ஆகிய மொழிகளும் இங்கு சிறுபாண்மையினத்தோரின் அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன. நோர்வேயின் அதிகாரப்பூர்வ மதம் சீர்திருத்த கிருத்தவ மதம் (லூத்தரன் ப்ரொட்டஸ்டன்). இங்கு மக்களாட்சியுடன் கூடிய பாராளுமன்றம் உள்ளது. அதிகாரப்பூர்வ மன்னராக இன்று 5ம் ஹரால்ட் இருக்கின்றார். 2ம் உலகப்போர் காலத்தில் ஜெர்மானிய ஆட்சிக்குட்பட்டு பின் 1945ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி முதல் சுதந்திர நாடாக இருக்கின்றது நோர்வே. டென்பார்க், சுவீடன் ஆகிய இரு நாடுகளின் கீழ் பல ஆண்டுகள் இருந்து பின்னர் ஜெர்மானிய படையின் தாக்குதலுக்கும் ஆட்பட்டு பின்னர் சுதந்திரம் பெற்றது நோர்வே. 


வறுமையான நாடுகளில் ஒன்றாக அறியப்பட்ட நோர்வே, கடந்த இரு நூற்றாண்டுகளில் அதன் எண்ணெய் வள கண்டுபிடிப்பினை அடுத்து மிகத் துரிதமாக வளமானதொரு நாடாக உருமாற்றம் பெற்றது. ஓஸ்லோ உலகின் விலையுயர்ந்த நகரங்களில் இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. உணவு, உடைகள், பொருட்கள், தங்கும் விடுதிகள் என எல்லாமே இங்கு விலை அதிகமாகத்தான் இருக்கின்றது. இங்குப் பணப்புழக்கம் எனும் போது அதிகமாகக் காசுகளையும் பனத்தையும் மக்கள் பயன்படுத்துவதில்லை. மாறாக வங்கி அட்டைகளின் மூலமாகவே இங்கு எல்லா இடங்களிலும் விற்பனை நடக்கின்றது. இதே போன்ற நிலையைத்தான் டென்மார்க், சுவீடன் ஆகிய நாடுகளிலும் காண்கின்றோம். உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகத் திகழும் நோர்வேயின் மொத்த மக்கள் தொகை ஏறக்குறைய ஐந்து லட்சம் தான். இது வியப்பளிக்கலாம். ஆனால் இதே நிலையைத்தான் டென்மார்க், சுவீடன் போன்ற ஏனைய ஸ்கேன்டிநேவியன் நாடுகளிலும் காண்கின்றோம். 

நோர்வே நாட்டில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இலங்கையில் தொடங்கிய யுத்தத்தின் போது தமிழ் மக்களில் பலர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாகப் புலம்பெயர்ந்தனர். அப்படிப் புலம்பெயர்ந்த நாடுகளில் நோர்வே நாடும் ஒன்று. இன்றைய நிலையில் ஏறக்குறைய இருபதாயிரம் தமிழர்கள் நோர்வே முழுமைக்கும் இருக்கலாம் என நான் அங்குள்ள தமிழ் நண்பர்களிடம் பேசியபோது அறிந்து கொண்டேன். தமிழர்களிலும் பெரும்பகுதியினர் நோர்வே தலைநகர் ஓஸ்லோவிலும் மற்றும் பெர்கன் நகரிலும் வாழ்கின்றனர். எனது பயணம் ஓஸ்லோவில் மட்டுமே என்பதால் அங்கிருக்கும் புராதன, வரலாற்றுச் சின்னங்கள் அருங்காட்சியகங்கள், தமிழர் அமைப்புக்கள் என்ற வகையிலேயே எனது பயணத்தில் நடவடிக்கைகள் அமைந்தன. 

ஏறக்குறைய ஆயிரம் ஆண்டு பழமை கொண்ட நகர் ஓஸ்லோ. கி.பி 1040ம் ஆண்டு மன்னன் ஹரால்ட் ஹர்டாடாவினால் உருவாக்கப்பட்ட நகர் இது. நோர்வே நாட்டின் அரசு தொடர்பான முக்கிய அலுவல்களுக்கும் பொருளாதார தொடர்புகளுக்கும் முக்கியம் வாய்ந்த ஒரு நகர் ஓஸ்லோ தான். உலக நாடுகளில், மக்கள் வாழ்வதற்குச் சிறந்த ஒரு நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நகரம் என்ற பெருமையும் ஓஸ்லோவிற்கு உண்டு. ஓஸ்லோ நகரில் மட்டும் 106 அருங்காட்சியகங்கள் உள்ளன. இங்குச் செல்வோருக்கு இதில் எந்த அருங்காட்சியகத்திற்குச் செல்வது என்பது குழப்பமான காரியம் தான். 

இதில் தவிர்க்கப்படக்கூடாத சில அருங்காட்சியகங்களுக்குச் செல்வதை நான் கட்டாயமாக்கிக் கொண்டேன். அதில் ஒன்றுதான் அமைதிக்கான நோபல் பரிசு மையம் (Nobel Peace Center). ஒவ்வொரு ஆண்டும் அமைதிக்கான நோபல் பரிசு நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் தான் வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10ம் தேதி உலக அமைதிக்காகச் செயலாற்றியோரில் சிறந்த சேவையாளருக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்படுகின்றது. ஓஸ்லோ நகராண்மைக் கழக மண்டபத்தில் அந்தப் பிரம்மாண்டமான நிகழ்வு நடைபெறுகிறது என்றாலும் அந்த நிகழ்வை ஒட்டி பரிசு பெறுபவரைச் சிறப்பிக்கும் நிகழ்வும் ஒரு ஆண்டு காலத்திற்கு அவரது செயல்பாட்டினைச் சிறப்பு செய்யும் கண்காட்சியும் இந்தக் கட்டிடத்தில் தான் ஏற்பாடு செய்யப்படுகின்றது. இந்தக் கட்டிடம் 2005 பழைய ரயில் நிலையத்தை மாற்றி அமைதிக்கான நோபல் பரிசினைச் சிறப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட நினைவு மண்டபமும் அருங்காட்சியகமுமாகும். 1901ம் ஆண்டு தொடங்கி அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஒவ்வொருவரைப் பற்றிய தகவல்களும் அவர்கள் தேர்தெடுக்கப்பட்டமைக்கான காரணங்களும் இங்கு வழங்கப்பட்டுள்ளன. 

நோபல் பரிசுகள் சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்ஃப்ரெட் நோபெல் அவர்களின் பெயரால் வழங்கப்படும் உலகின் தலைசிறந்த ஆய்வாளர்களுக்கும் சாதனை படைத்தோருக்கும் வழங்கப்படும் ஒரு உயரிய விருது. சுவீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் பிறந்தவர் ஆல்ஃப்ரெட் நோபெல் . தனது மறைவுக்குப் பின்னர் அவரது உழைப்பில் ஈட்டிய சொத்துக்கள் அனைத்தும் ஒரு அறக்கட்டளையின் வழி திறன்படைத்த ஆய்வாளர்களைக் கவுரவிப்பதற்காகவும் சிறப்பிப்பதற்காகவும் என அவர் சட்டப்படி தமது உயிலை எழுதி வைத்தார். இதன் அடிப்படையில் 1901ம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் இவ்விருது சுவீடனிலும் நோர்வேயிலும் என இரண்டு நாடுகளில் வழங்கப் படுகின்றது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் ஓஸ்லோ நகரில் வழங்கப்படுகின்றது. அறிவியல், உளவியல், இலக்கியம், மருத்துவம் ஆகிய ஏனைய ஐந்து துறைகளுக்கான நோபல் பரிசுகள் சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டோக்ஹோம் நகரில் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

இது தவிர ஓஸ்லோவில் மிக முக்கியமாக அமைந்திருக்கும் அருங்காட்சியகங்களான ஃப்ரெம் அருங்காட்சியகம், வைக்கிங் அருங்காட்சியகம், மக்கள் அருங்காட்சியகம், கடலாய்வுகள் அருங்காட்சியகம் என சில அருங்காட்சியகங்களுக்குச் சென்று அங்குக் காட்சிப்படுத்தியிருந்த அரும்பொருட்களை காணும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டேன். இதில் ஃப்ரெம் அருங்காட்சியகம் சிறப்பானது. ஏனெனில் உலகில் மனிதன் உலக உருண்டையின் வடக்கு தெற்கு துருவங்களுக்குச் சென்ற வரலாற்றுச் செய்திகளையும் நோர்வே ஆய்வாளர்களின் சிறப்பையும் அந்த ஆய்வுப் பயணங்களில் பயன்படுத்தப்பட்ட மரக்கலங்களையும் பாதுகாக்கும் ஒரு அருங்காட்சியகமாக இது திகழ்கின்றது. 

நோர்வே நாட்டிற்கு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழ்மக்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனர். அவர்களில் மிகப் பெரும்பாலோர் உள்ளூர் நோர்வேகியன் மொழியைக் கற்றுக் கொண்டு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் ஓஸ்லோ நகர மையத்தில் ஓடுகின்ற பேருந்துகளில் பேருந்து ஓட்டுநர்களாகவும், கட்டிடங்களில் காவல்துறை அதிகாரிகளாகவும், பாதுகாப்பு அதிகாரிகளாகவும் எனது சில நாள் பயணத்திலே பல தமிழர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அவர்களின் இரண்டாம் தலைமுறையினர் உள்ளூரில் கல்வி கற்று சிறப்பான வளர்ச்சியைப் பெற்று நோர்வே நாட்டின் வளர்ச்சிக்குத் தங்கள் உழைப்பையும் தருகின்றார்கள் என்பதும் பாராட்டத்தக்கது. மிகச் சிறப்பாக மேலும் சொல்வதென்றால் ஓஸ்லோவின் துணை மேயராக இன்று பொறுப்பில் இருப்பவரும் ஒரு தமிழ்ப்பெந்தான். கம்சாயினி என்ற பெயர் கொண்ட இளம் ஈழத்தமிழ்ப்பெண் அரசியல் ஈடுபாட்டில் நாட்டம் கொண்டு நோர்வே நாட்டின் தலைநகரின் துணை மேயராக இருப்பது உலகத் தமிழர்களுக்குப் பெருமையல்லவா? 

இங்கு ஓஸ்லோ நகரில் இயங்கும் தமிழ்ப்பள்ளிகளுக்குச் சென்று அங்குள்ள சூழலை அறிந்து வரும் வாய்ப்பும் அமைந்தது. ஓஸ்லோவில் மட்டும் ஐந்து தமிழ்ப்பள்ளிகள் இயங்குகின்றன. இவை ஐந்துமே அன்னை பூபதி என்ற ஒரு அமைப்பின் வழி நடத்தப்படுகின்றன. மேலும் பெர்கன் நகரிலும் இத்தகை தமிழ்ப்பள்ளிகள் இதே அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறுகின்றது. வெள்ளிக்கிழமை மாலை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என மூன்று நாட்கள் இங்குப் பள்ளிகள் இயங்குகின்றன. சொந்த இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றிலேயே இயங்கும் ஒரு தமிழ்ப்பள்ளிக்கூடத்திற்குச் சென்று வந்தேன். அங்கு 650 மாணவர்கள் தமிழ் மொழி படிக்கின்றனர் என்பதைக் கேட்ட போது மகிழ்ச்சியாக இருந்தது. 

ஓஸ்லோவில் மட்டுமே இரண்டு இந்துக் கோயில்களும் இருக்கின்றன. ஒரு சுப்பிரமணியர் கோவிலும் ஒரு அம்மன் கோவிலும் இருக்கின்றன. 

எனது ஓஸ்லோ வருகையை அறிந்து இணையம் வழி தொடர்பு கொண்டு நோர்வே தமிழ்ச்சங்கத்தினர் ஒரு மாலை நேரச் சந்திப்பிற்கு திடீர் அழைப்பினைத் தந்தார்கள். ஞாயிற்றுக் கிழமை மதியம் ஓஸ்லோ நகரில் இந்தச் சந்திப்பு ஒரு நால் ஏற்பாட்டில் நடைபெற்றது என்றாலும் ஆக்ககரமான செய்திகளைப் பகிர்ந்து கொள்ள நல்லதொரு தளமாக இந்தச் சந்திப்பு திகழ்ந்தது. 

ஐரோப்பா முழுமைக்கும் உள்ள பல்வேறு நாடுகளில் பல தமிழ்ச் சங்கங்களும் அமைப்புக்களும் இயக்கங்களும் இயங்குகின்றன. ஆனால் இவை அனைத்தையும் ஒன்றிணைத்து இயங்கும் வகையிலான ஒன்றியம் ஒன்று இது காறும் ஐரோப்பாவில் தோன்றவில்லை. உருவாக்கப்படவும் இல்லை. எதனால் இந்த முயற்சி தொடங்கப்படவில்லை என்ற கேள்வியை நான் முன் வைக்க இந்தத் தளம் பொறுத்தமானதாக எனக்கு அமைந்தது. இந்தச் சந்திப்பு நிகழ்விலேயே ஐரோப்பாவிற்கான ஒருங்கிணைந்த தமிழ்ச்சங்கங்களின் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற என் கருத்தையும் விருப்பத்தையும் முன் வைத்தேன். இதனை நோர்வே தமிழ்ச்சங்கத்து செயலைவக் குழுவினர் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு அத்தகைய முயற்சியில் தங்களது ஒத்துழைப்பு நிச்சயம் இருக்கும் என்று தெரிவித்ததோடு இதில் இணைகின்ற முதல் அமைப்பாக நோர்வே தமிழ்ச்சங்கத்தின் பெயரை இணைக்குமாறு ஒருமித்த குரலில் என்னிடம் கேட்டுக் கொண்டனர். இதனை மிக ஆரோக்கியமானதொரு ஒத்துழைப்பாகவே நான் காண்கின்றேன். 

புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தங்களுக்கிடையே நிலவும் அரசியல் கருத்து வேறுபாடுகளைத் தள்ளிவைத்து நமது அடுத்த தலைமுறையினர் ஐரோப்பாவில் ஊன்றிக் கால்பதித்து இங்கு வாழும் நிலையில் தமிழர் மரபு, மொழி, பண்பாட்டினை மறவாது இயங்க சீரிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும். கலை, இசை, நடனம் என்ற குறுகிய வட்டத்திற்குள் மாத்திரம் ஐரோப்பியத் தமிழர்களின் ஆர்வத்தைக் குறுக்கிவிடாமல் பல்வேறு ஆய்வுத்தளங்களில் தமிழ்ச்சிந்தனைகள் பதிவாக்கம் பெறவும், புலம்பெயர்ந்த தமிழர்களின் வரலாற்றைச் சரியாக ஆவணப்படுத்தவும் இது முன்னெடுக்கப்பட வேண்டிய மிக முக்கிய ஒன்று என்பதை ஐரோப்பா வாழ் தமிழர்கள் மனதில் நிறுத்திச் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்!