Wednesday, May 31, 2017

58. குவா கெலாம் - பெர்லிஸ் குகை



ஈய வளமுள்ள தென்கிழக்காசிய நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பதை பள்ளியில் படிக்கும் போதே நாம் வரலார்றுப் பாட வகுப்பில் படித்திருப்போம். 18ம் நூற்றாண்டின் இறுதியில் குறிப்பாக 19ம் நூற்றாண்டில் பல சீனர்கள் மலேசியா நோக்கி ஈயம் கண்டெடுக்கும் பணிக்காக வந்தனர் என்பது வரலாறு. ஆண்களும் பெண்களுமாக ஈயம் தோண்டும் தொழிலில் ஈடுபட்ட தகவல்கள் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பெர்லிஸ் மானிலத்தில் காக்கி புக்கிட் பகுதியில் (இது தாய்லாந்துக்கு மிக அருகாமையில் உள்ள அடர்ந்த காடுகள் கொண்ட ஒரு பகுதி) ஈயம் கண்டெடுக்கும் தொழிலில் ஈடுபட்ட சீனமக்களின் கதை கேட்பவர் மனதை உருக்கும் தன்மை வாய்ந்தது.

உலகில் வேறெங்கு ஈயம் குகைகளில் கண்டெடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் மலேசியாவில் பெர்லிஸ் மானிலத்திலும், சபா சரவாக் காடுகளில் உள்ள குகைகளிலும் ஈயம் கண்டெடுக்கும் தொழில் மிக விரிவாக 19ம் நூற்றாண்டில் நிகழ்ந்தது. பெர்லிஸின் காக்கி புக்கிட் பகுதியில் ஈயம் இருப்பதை யார் முதன் முதலில் கண்டுபிடித்தார்கள் எனபது ஒரு புதிர். ஆங்கிலேயர்களின் மூலமாகவா, அல்லது உள்ளூர் மற்றும் சயாமிய (தாய்லாந்து) மக்களா, அல்லது வணிகத்துக்கு வந்த சீனர்களா என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால், இங்கு ஈயம் உள்ளது என்ற செய்தி கிடைத்ததுமே சீனாவிலிருந்து ஆண்களும் பெண்களுமாக இப்பகுதிக்கு வந்து குவிந்திருக்கின்றனர்.

இந்த குகைகளுக்குள் சென்று,  ஈயம் தோண்டி எடுத்துக் கொண்டு வெளியே  வருவது என்பது சாதாரண காரியமல்ல. குகைக்குள் மிக நீண்ட தூரம் சென்று உள்ளே குழிகளைத் தோண்டி, அங்கே ஈயத்தை கண்டெடுத்துத் தூய்மை செய்து, அங்கிருந்து கொண்டு வருவது மிகக் கடிணமான ஒரு தொழில். இதனைச் சீன ஆண்களும் பெண்களும் அக்காலத்தில் செய்திருக்கின்றனர். ஈயம் அக்கால கட்டத்தில் செல்வம் தரும் ஒரு பொருளாக இருந்திருக்கின்றது. யார் ஈயம் உள்ள இடத்திற்குச் சொந்தக்காரராக இருக்கின்றாரோ அவர் மிக விரைவில் செல்வந்தராகி விடலாம் என்ற சூழலே இங்கு சீனர்கள் பலரை இந்தக் கடினமான வேலைக்கு வருவதற்கு ஒரு உந்து சக்தியாக இருந்திருக்கின்றது.

இந்த குவா கெலாம் குகைப்பகுதியின் ஒரு பகுதியில் இப்பகுதியின் வரலார்றைக் கூறும் ஒரு அருங்காட்சியகம் இருக்கின்றது. இங்கு வழங்கப்பட்டுள்ள தகவல்களின் படி, இந்தக் குகைகௌக்குள்ளேயே பல மாதங்கள் ஆண்களும் பெண்களும் தங்கியிருந்து பணி புரிவார்களாம். இரண்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து குகைக்குள்ளேயே உள்ளே  இருந்து பணியாற்றிவிட்டு சிறிய இடைவெளிக்கு மட்டும் வெளியே வருவார்களாம். சூரிய ஒளியே தெரியாமல் பல நாட்கள் இருட்டில் இருந்து வேலை செய்வார்களாம். நம்மால் இதனை இப்போது நினைத்துப் பார்க்க முடிகின்றதா? குகைக்குள் இருக்கும் போது பலர்  பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டு இறந்திருக்கின்றனர். இக்குறிப்புக்கள் குவா கெலாம் அருங்காட்சியகத்தில் உள்ள விளக்க அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஈயம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதன் முக்கியத்துவம் தொழில்மயமாக்கத்திற்கு அவசியமான தேவையாகியதால், இப்பகுதி  சற்று பிரபலமானவுடனேயே அப்போதைய ஆங்கிலேய அரசாங்கம் இப்பகுதியிலும் தனது ஆளுமையை செலுத்தியிருக்கின்றது. ஈயம் உள்ள பகுதிகளை தங்கள் வசமாக்கிக் கொண்டு அங்கு உழைப்பதற்காக பல சீனர்களை சீனாவிலிருந்து இப்பகுதிக்கு ஆங்கிலேயர்கள் வரவழைத்து வந்திருக்கின்றனர். எப்படி மரக்காடுகளை அழித்து ரப்பர் தோட்டங்களையும் செம்பனைத் தோட்டங்களையும் உருவாக்க தென் தமிழகத்திலிருந்து தமிழ் மக்களைக் கப்பல்களில் ஆங்கில காலணித்துவ அதிகாரிகள் கொண்டு வந்தார்களோ அதே போன்ற ஒரு காரணம் தான் ஈயம் தோண்டுதல் தொழில் அடிப்படையில் சீனர்கள் இங்கே கூட்டம் கூட்டமாக வந்து சேர காரணமாகியிருக்கின்றது.

உள்ளூர் மலாய் மக்கள் ஈயம் கண்டெடுக்க பயன்படுத்திய டூலாங் தட்டை தான் முதலில் சீனர்களும் பயன்படுத்தி ஈயம் தோண்டி கண்டெடுத்து சுத்தம் செய்து விற்பனை செய்து வந்திருக்கின்றனர். பின்னர் ஆங்கிலேயர்களின் நாட்டம் இப்பகுதியில் அதிகரிக்க பல புதிய கருவிகளை இத்தொழிலில் அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். சர்.ஜே. கேம்பல் என்ற ஆங்கிலேய அதிகாரி ஒருவரும் திரு.ஈ.க்ராஃப் என்ற சுவிட்சர்லாந்துக்காரர் ஒருவரும் இவ்வகையில் புதிய நவீனக் கருவிகளை இப்பகுதியில் இத்தொழிலில் அறிமுகப்படுத்தியதில் மிக முக்கியமானவர்கள். இரண்டாம் உலகப் போருக்குச் சற்று முன்னர் ஜப்பானியர்கள் இப்பகுதிக்கு வந்து தங்கள் வசமாக்கிக் கொள்ள முயற்சிகள் மேற்கொண்டிருந்த சமயத்தில் சர்.ஜே. கேம்பல் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்று விட்டார்.  ஆனால் திரு.ஈ.க்ராஃப் தொடர்ந்து இருந்து இப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்திருக்கின்றார். இரண்டாம் உலகப் போரின் போது இப்பகுதி முழுவதும் முற்றிலுமாக மூடப்பட்டு விட்டது. காக்கி புக்கிட் பகுதியில் எந்த ஈயம் தோண்டும் பணிகளும் நடைபெறவில்லையாம். ஆனால் போர் முடிவுற்ற பின்னர் மீண்டும் ஈயம் தோண்டும் பணிகள் தொடங்கிய போது திரு.ஈ.க்ராஃப் தானே முன்னின்று இப்பணிகளை மேற்பார்வை செய்து மீண்டும் தொடக்கி வைத்திருக்கின்றார். அத்துடன் ஈயம் கண்டெடுக்கும் பணியாளர் குழுவின் தலைவராகவும் பதவி வகித்திருக்கின்றார்.

இந்தக் கால கட்டத்தில் சர்.ஜே. கேம்பலின் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த லோ ஆ தோங், சர்.ஜே. கேம்பல் இங்கிலாந்து திரும்பியவுடன் அவருடைய சொத்துக்களில் குறிப்பிடத்தக்க அளவை தனது உடைமையாக்கிக் கொண்டார். இவர் லோ செங் ஹெங் என்ற போராட்டவாதியின் மகனுமாவார். இவரது கூர்மையான மதியினாலும், திறமையினாலும் அபார உழைப்பினாலும் காக்கி புக்கிட் பகுதியில் மிகப்பெரிய ஈய உற்பத்தி சாம்ராஜ்ஜியத்தையே ஏற்படுத்தினார். பின்னர் டத்தோ என்ற உயர்நிலை பட்டமும் கூட இவருக்கு வழங்கப்பட்டது. டத்தோ லோ ஆ தோங்கின் குடும்பத்தினர் பெர்லிஸின் காக்கி புக்கிட் பகுதியின் மிக முக்கியஸ்தர்களாக இருகின்றனர். டத்தோ லோ ஆ தோங் சுதந்திர மலேசியாவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பின்னர் சில காலங்கள் பதவி வகித்தார். இவரது குடும்பத்தினர் ஏறக்குறைய 600 பேர் இன்னமும் காக்கி புக்கிட் பகுதியில் இருக்கின்றனர் என்பது தகவல்.


தற்சமயம் இந்தக் காக்கி புக்கிட் பகுதியில் ஈயம் கண்டெடுக்கும் பணிகள் நடைபெறவில்லை. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி தற்சமயம் சுற்றுப்பயணிகள் பார்ப்பதற்காக மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

இந்தக் காக்கி புக்கிட் பகுதியில் ஈயம் தோண்டும் தொழில் நடைபெற்ற குவா கெலாம் குகையை எத்தனை பேர் இதுவரை பார்த்திருப்பார்கள் அல்லது கேள்விப்பட்டிருப்பார்கள் என்பது கேள்விதான். ஆக, பெர்லிஸ் சென்றிருந்தபோது இக்குகையை நேரில் பார்த்து பல வரல்லார்றுச் செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது.  குவாலா பெர்லிஸிலிருந்து ஏறக்குறைய 28 கிமீட்டர் தூரம் வடக்கு நோக்கி பயணிக்க வேண்டும். குகைக்குள் சென்று பார்வையிடமும் அருங்காட்சியகத்தைப் பார்க்கவும் கட்டணம் செலுத்த வேண்டும். உள்ளே செல்வதற்கு ஒரு ரயில் பெட்டி உள்ளது. அதில் ஏறி ஏறக்குறைய 2 கி.மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். அதன் பின்னர் குகையின் உட்பகுதிக்குப் பயண வழிகாட்டி அழைத்துச் செல்கின்றார்.

ஈயம் தோண்டும் பணி நடைபெற்ற இடங்கள், சிறிய குகைப் பாதைகள், சீனர்கள் குகைகளில் எழுதி வைத்த எழுத்துக்கள், நீர் தேங்கிக் கிடக்கும் சிறு குளங்கள் ஆகியவற்றைக் காட்டி பயண வழிகாட்டி மலாய் மொழியில் விளக்கம் அளிக்கின்றார். ஈயம் தோண்டும் பணியில் உபயோகப்படுத்திய கருவிகள் அங்கே உள்ளேயே காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குகையில் பல சிறிய குகைப்பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் வழியாக வெளியே நிலப்பகுதிக்கு வருவதற்கு ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். அதில் ஒரு குகைப்பகுதி ஏறக்குறைய 3 கி.மீட்டர் தூரம். இதன் வழியாக நடந்து சென்றால் தாய்லாந்து நாட்டிற்குச் சென்று விடலாம் என்றும் பயண வழிகாட்டி விவரித்தார்.  மிக வியப்பாகவும் இருந்தது.




இவற்றையெல்லாம் நேரில் பார்த்து விளக்கங்களையும் கேட்டு பின்னர்   மீண்டு ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்து வெளியே வந்தேன். குகையின் உள்ளே அரை மணி நேரம் இருப்பது எவ்வளவு சிரமம் என்பதை அறிந்து கொண்டபோது இங்கே மாதக் கணக்கில் இருந்து உழைத்த மனிதர்களை நினைத்து என் மனம் கணத்தது.

இந்த குவா கெலாம் குகையைப் பார்க்க வருபவர்கள் முக்கியமாக நுழைவாயிலின் வலது புறத்தில் உள்ள அருங்காட்சி நிலையத்திற்கும் வந்து செல்ல வேண்டும். காக்கி புக்கிட் பகுதி பற்றி நல்ல பல தகவல்கள் இங்கு உள்ளன. ஈயத்தொழிலில் பயன்படுத்திய நவீன கருவிகளையும் இங்கே வைத்திருக்கின்றனர். இவையனைத்தையும் பார்த்து விட்டு அங்கேயுள்ள சிறு உணவகத்தில் காப்பி அருந்தி அவற்றோடு சுவையான மலாய் பலகாரங்களையும் சுவைத்து வர சுற்றுப்பயணிகள் மறக்கக் கூடாது.

Wednesday, May 24, 2017

57. செங்கம் லம்பாடி பழங்குடிமக்கள்



இயற்கையோடு இயைந்த வாழ்வியலை நினைத்துப் பார்க்கும் போது நமக்குப் பழங்குடி மக்களைப் பற்றிய சிந்தனைகள் மனதில் எழுவதைத் தவிர்க்க இயலாது. பண்டைய காலத்தில் பழங்குடிகளாக நாம் இருந்த காலத்தில் அமைந்திருந்த எளிமையான வாழ்க்கை முறையை நாம் நினைத்துப் பார்த்தாலும் அதனை மீண்டும் பெற முடியாது. ஆடம்பரமற்ற, மன அழுத்தமற்ற, எளிமையான வாழ்க்கை நிலையே அடிப்படையாக இருந்தது. மனித உறவுகளுக்குள் நெருக்கம், இயற்கையோடு சேர்ந்து அதனைக் கெடுக்காமல் இயற்கையோடு இயற்கையாகத் தன்னையும் இணைத்துக் கொண்டு வாழும் ஒரு வாழ்க்கையாகப் பண்டைய பழங்குடி மக்கள் வாழ்வு என்பது இருந்தது. இன்று இந்தப் புவிக்கு ஆபத்து விளைவிக்கும் எண்ண ற்ற நாசச்செயல்களெல்லாம் இல்லாத ஒரு சூழல் அது. நினைத்துப் பார்த்தால் இப்போது நமக்குச் சாத்தியமற்ற ஒரு வாழ்க்கை நிலை தான். ஆனால் இந்த உலகில் இன்னமும் கூட சில குறிப்பிட்ட நிலப்பகுதிகளில் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர் என்பதும் உண்மையே. மலேசிய சூழலில் செமாங் அல்லது நெக்ரித்தோ சமூக மக்கள், செனோய் சமூகத்து மக்கள் ஆகியோரை மலேசிய நிலப்பகுதியின் பழங்குடி மக்கள் என்ற வகையில் கூறலாம். இவர்களது வாழ்க்கை முறை இன்றைய நாகரிக வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. காடுகளுக்குள் வேட்டையாடி உணவைத்தேடுதல் என்பதும், திருமணச் சடங்குகள், குழந்தைப்பெறுதல், இறப்பு ஆகியனவும் குழுக்களுக்கு குழு குறிப்பிடத்தக்க வகையில் வேறுபாட்டுடன் திகழக்கூடியது எனலாம்.

தமிழர்களின் தொல்குடிகளின் ஆய்வுகளில் இன்று நமக்குக் கிடைக்கும் சில குறிப்பிடத்தக்க ஆய்வுகள் எனக் கூறுவதென்றால் எட்கர் தர்ஸ்டன் அவர்களது ஆய்வுகளை நாம் கூறலாம். ஆங்கிலேய காலணித்துவ இந்தியாவில் அரசுப்பணியில் தமிழகத்தில் பணியாற்றிய ஒரு அரசு அலுவலகர் இவர். 1885ம் ஆண்டில் தமிழகத்தின் சென்னை அருங்காட்சியகத்தின் இயக்குநர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு மிகப்பெரிய அளவில் இந்த அருங்காட்சியகத்தை வடிவமைத்தவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. இந்தப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னர் இவர் லண்டன் கிங்ஸ் கல்லூரி அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனக்கு வழங்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்துவது என ஒரு எல்லைக்குள் தன்னை முடக்கிக் கொள்ளாமல் தென்னிந்தியாவின் பல பகுதிகளுக்கும் தனது உதவியாளர்களுடன் பயணித்து ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வுத்தரவுகளைச் சேகரித்து மானுடவியல் தொடர்பான மிகச் சிறந்த ஆய்வு நூல்களை வழங்கியவர் இவர். இவரது Castes and Tribes of South India என்ற பெரிய ஆய்வு நூல் இன்றளவும் மானுடவியல், சமூகவியல் ஆய்வுகளில் ஈடுபடுவோருக்கு மிக முக்கிய அடிப்படை நூலாக அமைந்திருக்கின்றது. தான் மேற்கொண்ட பல பயணங்களில் தாம் நேரில் பார்த்து பதிந்த எல்லா வகைச் செய்திகளையும் பதிந்து ஆய்வு நோக்கில் அவை அலசப்படும் நல் வாய்ப்பினை ஏனைய ஆய்வாளர்களுக்கு எட்கர் தர்ஸ்டன் வழங்கியிருக்கின்றார். இது மகத்தானதொரு பணியாகும்.

ஒரு நிலப்பகுதியின் தொல் பழங்குடிகளின் வாழ்க்கை முறையை அலசும் போது சில மையக்கூறுகளைச் சுற்றியே அவர்களின் வாழ்க்கை அமைந்திருப்பதை நாம் அறியலாம். உதாரணமாகப் பழங்குடி மக்களின் வாழ்வில் மிக முக்கிய இடம் வகிப்பவையாக அமைபவை சடங்குகளாகும். சடங்குகள் எனப்படும் போது அது திருமணச் சடங்கு, பிள்ளை பெற்றதும் நடத்தும் சடங்கு, இறப்பின் போது நடத்தப்படும் சடங்கு, கடவுளுக்கானச் சடங்கு என வகைப்படுத்தலாம். இந்தச் சடங்குகள் அனைத்துமே ஒவ்வொரு இனக்குழுவுக்கும் தனித்துவம் வாய்ந்தவையாக அமைகின்றன. ஒரு பழங்குடி இனத்தின் சடங்கிலிருந்து மற்றொரு பழங்குடி இனத்தின் சடங்குகள் மாறுபடுகின்றன. இறைவழிபாடு தொடர்பான சடங்குகள் ஏராளமான நுணுக்கமான பல மாறுபட்ட அம்சங்களைக் கொண்டவையாக இருக்கின்றன. சாமிக்குப் போடப்படும் படையல், வழிபாட்டின் போது கொடுக்கப்படும் உயிர்ப்பலி, பூசையில் இடம்பெறுகின்ற உணவு என்பன மாறுபட்ட தன்மைகளைக் கொண்டனவையாக இருக்கின்றன.

இதே போல தனித்துவம் கொண்ட மற்றொரு அம்சம் என்னவென்றால் இப்பழங்குடி மக்களின் கலை. இசை, நடனம் என்பவை குறிப்பாக ஒலிக்கப்படும் ஒலிகள், உடல் அங்கங்களின் அசைவுகள் என்பன சிறப்பாக கவனிக்கப்பட வேண்டியவை. அதே போல உடலில் ஏற்படுத்திக் கொள்ளும் அல்லது தீட்டிக்கொள்ளும் வர்ண ஓவியங்கள், அணியப்படும் அணிகலன்கள் ஆகியவை குழுக்களுக்கு குழு மாறுபாடான வடிவத்தைக் கொண்டவையாக இருப்பதையும் நாம் காணலாம். பழங்குடி மக்களின் இன்றைய நிலை சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போன்று இன்று இல்லை. பலர் காடுகளை விட்டு கிராமப்புறங்களுக்கு இறங்கி வந்துவிட்டதோடு நகர்ப்புற மக்களோடு கலந்து விட்ட நிலையையும் காண்கின்றோம். இது இக்காலச் சூழலில் மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒரு அம்சமே என்பதில் ஐயமில்லை.

எனது தமிழகத்துக்கானச் சில பயணங்களில் நான் சில பழங்குடி இன மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அப்படி ஒரு பழங்குடி இனம் தான் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் பகுதியில் வாழும் லம்பாடி பழங்குடிகள்.லம்பாடி இன மக்கள் ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இஸ்லாமிய படையெடுப்பின் போது இவர்களின் மன்னர் போரில் தோற்றவுடன் இம்மக்கள் அவர்கள் வாழ்ந்த பகுதியிலிருந்து வெளியேறி பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். பின்னர் இப்போதைய ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நாடோடிகளாக வந்து குடியேறினர். ஆரம்பக் காலத்தில் உப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு உழைத்தனர். கழுதைகள் மேல் உப்பை ஏற்றி ஓரிடத்திலிருந்து மற்றோரிடம் சென்று அவற்றை விற்பனை செய்து வருவதைத் தொழிலாகக் கொண்டிருந்தனர். ஆனால் படிப்படியாக இவர்கள் தொழில், வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் இவர்கள் வாழ்க்கையில் மேலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட சிலர் சொந்தமாக நிலம் வாங்கி ஓரிடத்தில் நிரந்தரமாகக் குடியேறி அங்கே தொழில் செய்தும், விவசாயம் செய்தும் வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும் இவர்கள் தங்கள் சமூகத்தினருடன் சேர்ந்து குழுவாக ஓரிடத்தில் இருப்பதையே காண முடிந்தது.

காலவோட்டத்தில் சமூக இயக்கத்தில் இனங்களுக்கே உரித்தான தனித்துவமான கூறுகளில் மாறுதல் ஏற்படுவது என்பது எல்லாச் சமூகத்திலும் நடக்கின்ற ஒன்றுதான். ஆனால் அவை படிப்படியாக வழக்கில் இல்லாது போவது மட்டுமின்றி அச்சமூக மக்களே அறியாத நிலை ஏற்படுவதையும் காண்கின்றோம். லம்பாடி இனமக்களின் வாழ்க்கையிலும் இந்த நிலை தான் ஏற்பட்டுள்ளது. ஒரு இடத்திலிருந்து வேறொரு இடம் பெயர்ந்து செல்லும் வகையில் தங்கள் கூடாரங்களையும் கையோடு கொண்டு செல்லும் வழக்கம் கொண்டவர்கள் லம்பாடி இன மக்கள். இந்தப் போக்கும் தற்சமயம் மாற்றம் கண்டுள்ளது. நிலையாக ஒரே இடத்தில் இருந்து அங்கேயே விவசாயம், கைத்தொழில்கள், கூலி வேலை எனச் சிறு சிறு வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர் இம்மக்கள். இதனால் நிலையான குடிசை, சிறு வீடுகள் என்று இவர்களின் அடிப்படை வாழ்க்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் சமூகத்து மக்களும் மிகக் குறைந்த அளவில் பள்ளிக்கூடம் சென்று கல்வி கற்று சற்று மேம்பாடு அடைந்தும் வருகின்றனர் என்பதைக் காண முடிந்தது.

நாங்கள் பேட்டி காணச் சென்ற கிராமத்தின் பெயர் பரிசல் பட்டு பி.எல்.தண்டா. இங்கு ஏறக்குறைய 450 குடும்பத்தினர் வாழ்கின்றனர். அனைவருமே லம்பாடி இன மக்கள் தான். இவர்கள் இங்கேயே குடியேறி திருமணம் செய்து குழந்தைகள் ஈன்று வாழ்கின்றனர். குழந்தைகள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்று சிலர் அரசாங்க வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இங்கேயே பிறந்து வளர்ந்து இங்குள்ள பள்ளியிலேயே கல்வி கற்று நன்கு தேறி திருவண்ணாமலை நகராண்மைக் கழகத்தில் பணியாற்றும் திருமதி. லதாமம்மா எங்களைக் காண வந்திருந்தார்.

லம்பாடி பழங்குடியினர் மராத்தியும் குஜராத்தி மொழியும் கலந்த வகையில் அமைந்த கோரெர் (Gorer) என்னும் ஒரு மொழியைப் பேசுகின்றனர். பொதுவாக வீட்டில் இவர்கள் தாய்மொழியில்தான் உரையாடுகின்றனர். ஆனாலும் குடும்பத்தை விட்டு வெளியே வரும் போது தமிழ்மொழி முக்கியமாகிப் போவதால் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களின் தாய் மொழியை இளம் குழந்தைகள் மறக்கும் நிலையும் உருவாகி உள்ளது. தற்சமயம் இம்மக்கள் தமிழகத்தில் வாழ்கின்ற மக்களோடு கலந்து இச்சூழலுக்கேற்றவாறு தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டுள்ளமையால் இவர்கள் தங்கள் தாய்மொழியை விடத் தமிழை பேசுபவர்களாக உள்ளனர். இளைஞர்களோ குழந்தைகளோ இம்மொழியைப் பேச அவசியம் இல்லாத நிலை இருக்கின்ற காரணத்தால் இம்மொழி இம்மக்களின் அன்றாட வழக்கிலிருந்து குறைந்து தற்சமயம் அரிதாகி விட்ட நிலை இருப்பதை உணர முடிகின்றது. வயதான சில பெண்களும் ஆண்களும் மட்டும் தங்களுக்குள் இம்மொழியில் உரையாடிக் கொள்கின்றனர்.

திருமணம் தான் இவர்கள் வாழ்கையில் மிக முக்கிய நிகழ்வாக இருக்கின்றது. திருமணச் சடங்கைப் பற்றி விசாரித்த போது மிக ஆர்வத்துடன் தங்கள் வழக்கத்தை எங்களிடம் பகிர்ந்து கொண்டனர். பொதுவாகவே இவர்கள் திருமணம் 4 நாட்கள் நடக்கின்றது. மாப்பிள்ளை வீட்டில் இரண்டு நாள், அதன் பின்னர் பெண் வீட்டில் இரண்டு நாள். மாப்பிள்ளை வீட்டில் இரண்டு நாட்கள் சடங்குகளைச் செய்து முடித்த பின்னர் மாப்பிள்ளையைப் பெண் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். அதற்குப் பிறகு வீட்டிற்குள் அவர் திருமணம் முடிவதற்கு முன் வருவதற்கு அனுமதி இல்லை.

பெண் பார்க்கும் சடங்கு என்பது தமிழர் சமூகத்தில் உள்ளது போன்று நிச்சயதார்த்தம் இல்லாமல் வேறு விதமாக நிர்ணயிக்கப்படுகின்றது. மாப்பிள்ளை வீட்டார் 5 கிலோ வெல்லம் கொண்டு செல்வர். அத்தோடு சாராயமும் வெற்றிலை பாக்கும் கொண்டு செல்வர். சாராயம், வெல்லம், வெற்றிலை பாக்கை பெண் வீட்டாரிடம் கொடுத்து விட்டால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது என்று முடிவாகின்றது. திருமணத்தில் மாப்பிளை பெண்ணுக்கு ஜாதகம் பார்க்கும் வழக்கமும் இவர்களுக்கு இல்லை. இந்த மூன்று பொருட்களையும் கொடுத்து 1 ரூபாய் (பரியா பணம்) கொடுத்து விட்டால் கல்யாணம் உறுதி செய்யப்பட்டு விட்டது என முடிவாகின்றது. பின்னர் பெண்ணுக்கும் மாப்பிளைக்கும் ஒத்து வராமல் போய் பிரிய வேண்டும் என அவர்கள் நினைத்தால் அந்த ஒரு ரூபாய் பணத்தைத் திருப்பித் தந்து விடுவார்களாம். இப்படித் தந்தால் விவாகரத்து நடந்ததற்குச் சமம். அதற்காகத் திருமணத்திற்காகக் கொடுத்த அதே ஒரு ரூபாயைக் கணவன் மனைவி இருவரும் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஏதாவது ஒரு 1 ரூபாயைக் கொடுத்தே மண வாழ்க்கையிலிருந்து விலகிக் கொள்ளலாம். இதனைக் கணவன் மாத்திரம் தான் செய்வது வழக்கம். மனைவி செய்யும் வழக்கமில்லை. பஞ்சாயத்தில் ஊர் பெரியவர்களின் முன் கணவன் மனைவி வந்து 1 ரூபாயைக் கணவன் கொடுத்து மணவிலக்கு வேண்டும் என்று கேட்டால் மனைவியிடமிருந்து விலகிச் செல்ல அவருக்கு அனுமதி அளிக்கப்படுகின்றது.

இவர்களின் திருமணச் சடங்கு மிக வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது. திருமண தினத்தின் முதல் நாள் இரவில் பெண் வீட்டில் உள்ள அனைவரும் அழ வேண்டுமாம். தங்கை எப்படி அழவேண்டும் அண்ணன் எப்படி அழ வேண்டும் என முறை வைத்திருக்கின்றனர். எப்படி ஒவ்வொருவரும் அழ வேண்டும் என்று அந்த நேரத்தில் தான் அனுபவசாலி பெரியவர்கள் கற்றுத் தருவார்களாம். அதனைக் கற்றுக் கொண்டு குடும்பத்தினர் ஒவ்வொருவராக அழ வேண்டும்.

திருமணத்திற்கு முதல் நாள் வீட்டின் மூலையில் ஒரு உலக்கையை வைத்து அதில் கங்கணம் கட்டு விடுவார்கள். பக்கத்தில் ஒரு பானையை வைத்து அதில் நீரை ஊற்றி நிறைத்து வைத்து விடுவார்கள். திருமண ஏற்பாட்டுச் சடங்குகள் அனைத்தும் முடிந்த பின்னர் புது மாப்பிள்ளை இந்தத் தண்ணீரில் குளிக்க வேண்டும். இது கட்டாயமாகச் செய்ய வேண்டிய ஒரு சடங்கு. பிறகு மறு நாள் காலையில் பெண்ணும் மாப்பிள்ளையும் தனித் தனியாகத் தயார் செய்து அலங்கரித்துக் கொண்டு வந்து திருமணச் சடங்கில் தாலி போட்டு திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் பெண் வீட்டில் தான் நடக்குமாம். தமிழ் சமூகத் திருமணங்கள் போலக் கோயில்களில் இவர்கள் திருமணங்கள் நடப்பதில்லை. இக்கால லம்பாடி இனத் திருமணங்கள் தமிழர்கள் வழக்கம் போல கழுத்தில் தாலி கட்டி நடைபெறுகின்றது. கையில் அணியும் தாலி இப்போது வழக்கில் இல்லை. கணவன் உள்ள வயதான மூதாட்டிகள் மட்டுமே இந்த வகைத் தாலியை அணிந்திருக்கின்றனர்.

திருமணச் சடங்குகள் முடிந்த பிறகு மதிய வேளையில் ஆடு வெட்டி விருந்து தயாரித்து மாப்பிள்ளை வீட்டார் அனைவருக்கும் திருப்திகரமாக விருந்தளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுவார்கள். பின்னர் மாப்பிள்ளை வீட்டார் பெண் விட்டாரை அழைத்துச் சென்று இதேபோல விருந்து கொடுத்து அனுப்பி வைப்பார்கள். இதே போல மூன்று முறை மாற்றி மாற்றி இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெறுமாம்.

கணவர் இறந்த பெண்கள் தங்கள் கையில் அணிந்துள்ள தாலியை எடுத்து விட வேண்டும். இந்தத் தாலி திருமணம் நடந்த நாள் முதல் கணவர் இறக்கும் வரையிலும் கையில் அணிந்திருக்க வேண்டும்.


இவர்களின் கடவுள் மூடுபுக்கியா என அழைக்கப்படுகின்றது. ஆண் பெண் என உருவமில்லாத ஒரு கல் வடிவில் அமைந்த ஒரு வடிவமே இவர்கள் கடவுள்.

முன்னர் திருமணம் என்று வரும் போது மானின் கொம்பை வெட்டி எடுத்து அதைப் பதம் செய்து அதனை யானைத் தந்தம் போன்ற வடிவில் ஒரு வளையல் செய்து அதனைப் பெண்ணுக்கு அணிவித்துத் தான் திருமண நிகழ்வு நடக்குமாம். இது இப்போது வழக்கில் இல்லை. அதேபோல பெண்கள் திருமணத்திற்கு அணியும் முழு ஆடையையும் அப்பெண்ணே முழுதாகத் தயாரிப்பதும் வழக்கமாக இருந்திருக்கின்றது. ஒரு ஆடையை முழுமையாக்க ஏறக்குறைய ஆறு மாத காலங்கள் எடுக்குமாம். திருமணத்தில் தாலியை அணிந்து திருமணச் சடங்கு முடிந்த பின்னர் மணப்பெண்ணைக் காளைமாட்டின் மேல் அமர வைத்து ஊர்வலமாக வீட்டிற்குக் கொண்டு வருவார்களாம்.

இன்னொரு சுவாரசியமான தகவலும் இவர்களுடன் உரையாடும் போது அறிந்து கொள்ள முடிந்தது. அதாவது குழந்தைகள் பிறக்கும் போது எந்த நாளில் ஒரு குழந்தை பிறக்கின்றதோ அந்த நாளைப் பிரதிநிதிக்கும் பெயரைத்தான் குழந்தைகளுக்குச் சூட்டுவார்களாம். திங்கள் கிழமை பிறந்த குழந்தைக்கு சோமார் என்றும், செவ்வாய் என்பது மங்களவார் என அழைக்கப்படுவதால் இந்த நாளில் பிறக்கும் பெண் குழந்தைக்கு மங்கினி என்றும் ஆண் குழந்தையாக இருந்தால் மணி என்றும் அந்தக் கிழமையின் ஆரம்பச் சொல்லை எதிரொலிக்கும் வகையில் பெயர்கள் அமையுமாம். புதன்கிழமை பிறந்த ஆண் குழந்தை பத்தியா என்றும் பெண்குழந்தை பத்தி என்றும் பெயரிடுவதும், வழக்கமாக இருக்கின்றது. முக்கியமாக அந்தக் கிழமையின் முதல் எழுத்து குழந்தையின் பெயரில் இருக்க வேண்டும் என்பது அக்காலத்தில் இவர்கள் கடைப்பிடித்து வந்த வழக்கங்களில் ஒன்று.

ஆண் குழந்தைகள் இச்சமூகத்தில் மிக முக்கியமாகக் கருதப்படுகின்றனர். ஒரு தாயாருக்கு 2 ஆண் குழந்தைகள் இருந்தால் அப்பெண்மணி தன் கழுத்தில் ஒரு சங்கிலியில் இரண்டு பொட்டு இருக்கும் வகையில் ஒரு அட்டிகை போட்டுக் கொள்ளும் வழக்கம் உள்ளது. 5 ஆண் குழந்தைகள் என்றால் ஐந்து பொட்டு, 6 ஆண் குழந்தைகள் என்றால் ஆறு பொட்டு என தனக்கு பிறந்துள்ள ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையை மற்றவர்களுக்கு வெளிக்காட்டிக் கொள்ள இவ்வகை அட்டிகையைக் கழுத்தில் அணியும் வழக்கமும் இவர்கள் சமூகத்தில் உண்டு. ஆனால் இளம் பெண்கள் இதனை அணிவதைத் தவிர்த்து விட்டனர் என்பதை நேரிலேயே காண முடிந்தது. இந்தத் தகவல்களெல்லாம் ஒலிப்பதிவுகளாகவும் விழியப் பதிவுகளாகவும் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. பழங்குடி மக்கள் வாழ்வியலில் ஆர்வம் உள்ளோர் இவற்றைப் பார்த்தும் கேட்டும் பயன்பெறலாம்.


Wednesday, May 17, 2017

56. குல தெய்வங்கள்



தாமிரபரணி ஆற்றினை  ரசிக்காதவர்கள் கிடையாது எனலாம். இந்த ஆறு என்னைக் கவர்வதற்கு ஒரு பிரத்தியேகமானக் காரணம் இருக்கின்றது. இந்த ஆற்றின் கரையோரங்களில் ஆங்காங்கே சின்னச்சின்னதாய் கோயில்கள் பல  இருக்கின்றன. பெண் தெய்வமாகவும் ஆண் தெய்வமாகவும் வெவ்வேறு பெயர்களுடன் இந்தத் தெய்வங்களின் சிறு கோயில்கள் அமைந்திருப்பதையும் இங்குச் சென்று வந்தவர்கள் நேரில் அறிந்திருக்கலாம்.

ஒரு முறை நான் இந்தப் பகுதியில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது ஆற்றங்கரையில் கிராம மக்கள் கூட்டமாக நின்று பூசைக்கு தயாராகிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். மஞ்சள் நிறத்தில் ஆடையணிந்த பெண்களும் ஆண்களும் தலையில் குடங்களை ஏந்தியவாறு இருக்க, அருகில் மத்தளம் நாதஸ்வரம் என இசைக்கருவிகளை ஒரு குழு வாசித்துக் கொண்டிருக்க, அவர்களின் குடும்பத்தைச் சார்ந்தோர் சிலர் பக்கத்தில் நின்று கொண்டு குதூகலம் பொங்க சில சடங்குகளைச் செய்து கொண்டிருந்தனர். அதற்குச் சற்று தூரத்தில் சிறிய கோயில் ஒன்று பூமாலையும் வன்ண வண்ண காகித மாலைகளின் அலங்காரமும் செய்யப்பட்டு திருவிழா கோலம் பூண்டிருந்ததையும் காண முடிந்தது.

அங்கிருந்து பயணித்து தொடர்ந்து வரும் போது ஆற்றங்கரையின் இரு பக்கமும் ஆங்காங்கே இன்னும் பல சிறு கோயில்கள் இருப்பதையும் கண்டேன். ஒரு கோயிலின் அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கிச் சென்று பார்த்தோம்.  அங்கே மண்ணால் செய்யப்பட்ட சிலாரூபங்கள் குவியலகாக் கிடத்தி வைக்கப்பட்டிருந்தன. அதே கோயிலில் செல்லி அம்மன், இசக்கி அம்மன் என்ற தெய்வங்களின் சிலைகளும் வழிபாட்டில் வைக்கப்படிருந்தன. குள்ளமாக அமைக்கப்பட்ட சிறிய சன்னிதிகளில் சாமி உருவங்கள் இருந்தன. வெளியே குவியலாக மண்ணால் செய்யப்பட்ட வண்ணப்பூச்சுக்களால் ஆன கண்களைக் கவரும் பொம்மைகளின் குவியல் பார்ப்பதற்கு ஆச்சரியம் தருவதாக இருந்தது.

தாமிரபரணி கரையோரம் மட்டும் இந்தக் காட்சி என்றில்லாமல் தமிழகத்தின் பல ஊர்களில் இத்தகைய கிராம தெய்வங்களை காணக்கூடியதாக உள்ளது. நாட்டார் தெய்வங்கள் எனும்போது நாம் நன்கறிந்த  காளியம்மன், மாரியம்மன், சுடலை மாடன், காத்தவராயன், மதுரை வீரன். வீரபத்திரன், முனியாண்டி சாமி, பேச்சாயி அம்மன் என்று மட்டும் இல்லாமல் ஊருக்கு ஊர் மாறுபாட்டுடன் வெவ்வேறு பெயர்களுடன் நாட்டார் தெய்வங்கள் அமைந்திருப்பதுதான் நாட்டார் வழிபாட்டின் சிறப்பு. இத்தகைய நாட்டார் தெய்வங்களே மக்களின் மனதோடு அணுக்கமாக அமைந்தவை. இவ்வகை வழிபாடுகளைச் சிறு தெய்வ வழிபாடு என தரம் அமைத்து நாட்டார் தெய்வ வழிபாட்டினை ஏளனப்படுத்தியும், குறைத்து மதிப்பிட்டும் பிரச்சாரம் செய்வது போன்ற செய்ல்கள் நடப்பதையும்  காண்கின்றோம். தெய்வத்துள் சிறு தெய்வம் பெருந்தெய்வம் எனத்தரம் பிரிப்பதே மனிதர்களின் அறியாமையைக் காட்டுவதுதான் என்பது ஒரு புறமிருக்க, இது மேன்மையைப் பிரதிபலிக்கும் மேட்டிமைத்தன்மையின் ஒரு வகை வெளிப்பாடே எனும் உளவியல் கூற்றினையும் ஒதுக்கி விட முடியாது.

நாட்டார் வழிபாடுகள் என்பன மனித குலம் தோன்றிய காலம் தொட்டு வழி வழியாக வருபவை. வரலாற்றை நன்கு ஆராய முற்படுவோர் தெய்வங்களின் தோற்றத்தையும் உருவாக்கத்தையும் அதன் கால அளவினையும் அறிந்து கொள்ள முடியும். காலத்துக்குக் காலம் புதிய தெய்வங்கள் உருவாக்கப்படுதலும் மக்கள் வழிபாட்டில் ஆழமான இடத்தைச் சில தெய்வ வழிபாடுகள் பெறுவதும் சில தெய்வங்கள் கால ஓட்டத்தில் அதன் சிறப்பு குறைந்து துணை நிலை தெய்வமாகக் கருதப்படும் நிகழ்வையும் ஆய்வுக்கண்கொண்டு பார்க்க முற்படுவோர் அறியலாம்.

சராசரி மனிதர்களைப் போல இயல்பான வாழ்க்கை அமையப்பெற்று பின்னர் ஒரு காலகட்டத்தில் வாழ்வில் நிகழும் ஒரு போராட்டத்தில் உயிரை இழக்கும் மாந்தர்கள் சாமிகளாக மக்களால் அங்கீகாரம் பெறும் நிகழ்வானது நாட்டார் வழிபாட்டியலில் ஒரு முக்கியக் கூறு.  இன்று சாமிகளாக அறியப்படுகின்ற பல தெய்வங்களின் இறப்புக்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கும். அதனைச் சுற்றிய நாட்டார் கதைகளும் இருக்கும். சில வேளைகளில் இக்கதைகள் திரிந்து விரிவாக்கம் பெற்று வேறொரு கோணத்தில் மாறி இருக்கும். சிறிய கோயிலாக கல்லை மட்டும் வழிபாட்டினில்  வைத்து ஆரம்பித்து பின்னர் மிகப் பெரிய கற்கோயிலாக மாற்றம் கண்ட கோயில்களும் உண்டு.

நாட்டார் தெய்வங்கள் எனப்படுபவை தமக்கென ஒரு எல்லையை அமைத்துக் கொண்டிருப்பதை இதன் முக்கியக் கூறாகக் காணலாம். நாட்டார் தெய்வங்கள் ஒரு குடும்பத்தினருக்குச் சொந்தமானதாகவோ அல்லது ஒரு இனக்குழு, அல்லது ஒரு சாதி சார்ந்த  அல்லது ஒரு கிராமத்துக்கென்றே உரிய கோயிலாக, என ஒரு எல்லைக்குள் அமைவதாக இருப்பதை இதன் பண்பாட்டுக்கூறுகளின் மைய அமைப்பாகக் காணலாம். ஒரு குலத்துக்கே உரித்தான  குலக்குறிகளை  மற்றொரு குலக்குறிகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் அடையாளச்சின்னங்களாக நாட்டார் தெய்வங்கள் அமைகின்றன. ஒரு ஊரைச் சொல்லி, சாமியின் பெயரைச் சொன்னால், எந்த சமூகம் எனக் கண்டறியும் அடையாளக் குறியீடாகவும் நாட்டார் தெய்வங்கள் அமைந்திருக்கின்றன. ஊரை விட்டு தூரம் சென்றவர்களும் கூட வருடத்திற்கு ஒரு முறை தன் கிராமத்திற்குத் திரும்பி வந்து குலதெய்வத்திற்குப் பொங்கலிட்டு படையல் வைத்து குலதெய்வ வழிபாடு செய்து செல்வது இன்றும் நடைமுறையில் இருக்கும் ஒரு விசயமாக இருக்கின்றது.

வீட்டில் நடைபெறும் சுபகாரியங்கள் அனைத்திற்கும் குலதெய்வ வழிபாடு செய்வது போலவே துக்க காரியங்களைத் தங்கள் குலதெய்வத்திடம் முறையிட்டு படையலிட்டு வழிபட்டுச் செல்வதும் நாட்டார் வழிபாட்டில் ஒரு அங்கமாக இருக்கின்றது.

எல்லா இடத்திலும் நிறைந்திருக்கும் இறைவன் தன் கைகளால் தானே சமைத்து தயாரித்த உணவைச் சாப்பிடுவார் என்ற நம்பிக்கையும், குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சாமிக்குப் படையலிட்டு மனமகிழ்வுடன் வழிபட்டுச் செல்வதுமே நாட்டார் தெய்வ வழிபாட்டின் சிறப்பு. சாமிக்கும் தனக்கும் இடையில் குருக்கள் என்ற இடப்பட்ட மனிதரின் தேவையை அத்தியாவசியமாக்கி,  கடவுளை மனிதருக்கு நெருக்கமாக உணர வைக்கும் பண்புடன் நாட்டார் தெய்வ வழிபாட்டியல் இயங்குகின்றது.

இறை உணர்வு என்பது நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குவது. மனிதர்களின் விருப்பங்களும் வேண்டுதல்களும் அவர்களிடம் இல்லாத ஒன்றினை   வெளிப்படுத்துவன என்பதோடு, அந்த இல்லாத ஒன்றினை வழங்கி வேண்டுதலை நிறைவடையச் செய்யும் என்ற நம்பிக்கையே மனிதர்களை வேண்டுதலை நோக்கி செயல்பட வைக்கின்றது.  எதிர்பார்த்த காரியம் சிறப்பாக முடிந்தால் அதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் வழிபடுவதும் இத்தகைய நாட்டார் வழிபாட்டில் இடம்பெருகின்றது.


ஊருக்கு ஊர், கிராமத்துக்குக் கிராமம், வட்டாரத்துக்கு வட்டாரம் மாறுபட்ட தன்மைகளுடன், தனித்துவத்துடன் நாட்டார் தெய்வங்கள் மக்கள் வாழ்வியலில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக அமைந்துள்ளார்கள். தமிழ் மரபு அறக்கட்டளை இத்தகைய நாட்டார் வழிபாட்டில் உள்ள சாமிகளைப் பற்றிய வரலாற்றையும் அதன் பின்னனியில் இயங்கும் கதைகளைப் பற்றியும் தகவல்களைச் சேகரித்து அவற்றைத் தொகுத்து ஒரு பிரத்தியேக வலைப்பக்கத்தில் வெளியிட்டு வருகின்றோம்.  இச்செய்திகளை http://www.tamilheritage.org என்ற வலைத்தளத்தின் ஊடாகக் காணலாம்.

தமிழர் வரலாறு, பண்பாட்டியல், சமூகவியல், மானுடவியல் ஆய்வுகளைச் செய்ய முனைவோர்,  நாட்டார் வழிபாட்டுக்கூறுகளுக்குத் தம் ஆய்வுகளில் தக்க இடமளித்து, அவற்றை சிறுதெய்வங்கள் எனக் கூறி ஒதுக்கி விடாமல்,   ஆய்வுகளில் இணைத்துச் செயல்படுத்துதல் தமிழர் வரலாற்றையும் பண்பாட்டுக் கூறுகளையும் அறிந்து கொள்வதில் பெரிதும் துணை புரியும்.


Thursday, May 11, 2017

55. பேருந்து பயணத்தில் சந்தித்த மனிதர்கள்




பயணங்களில் நாம் பார்க்கும் நிகழ்வுகளும் நாம் சந்திக்கும் மனிதர்களும் புதிய விசயங்களை நம் அனுபவங்களாக விட்டுச் செல்கின்றன.  எத்தனை எத்தனையோ சிறிய பயணங்கள் எனது நெடிய வாழ்க்கைப் பயணத்தில் வந்து செல்கின்றன.  அப்படி அமைகின்ற பயணங்கள் வாழ்க்கையின் பார்வையை விசாலமாக்குகின்றன. புதிய மனிதர்களை அறிமுகப்படுத்துகின்றன. புதிய நிகழ்வுகளை நம்மைக் காணச் செய்கின்றன. இப்படித்தான்  2012ம் ஆண்டு ஜனவரி மாதம் நான் தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணிக்காகத் தமிழகம் வந்திருந்த போது காரைக்குடிக்குச் சென்று அங்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் ஒரு கருத்தரங்கினை நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்தோம். அங்கு செல்வதற்கு முன்னர் களப்பணிக்காக கிருஷ்ணகிரிக்குச் சென்றிந்தேன். கிருஷ்ணகிரியில் சில பதிவுகளை முடித்து விட்டு தருமபுரி சென்று அங்கும் ஓரிரு பதிவுகளை முடித்து பின்னர் ஈரோடு சென்று அங்கிருந்து புறப்பட்டு காரைக்குடிக்குச் செல்வது என திட்டமாகியிருந்தது.

நான் காரைக்குடி செல்வதாக ஏற்பாடாகியிருந்த அந்த நாள் காலையில் திருச்செங்கோடுக்குச் சென்று அங்கு முருகன் ஆலயத்தை தரிசித்து அங்கு அக்கோயிலின் வரலாற்றுப் பதிவுகளும் செய்து விட்டு தோழி பவளா, மற்றும் நண்பர் ஆரூரன் ஆகியோருடன் காரில் புறப்பட்டு கொடுமுடி வந்து அங்கிருந்து நானும் டாக்டர்.நா.கண்ணனும் காரைக்குடிக்குச் செல்லலாம் என நினைத்திருந்தோம். கொடுமுடி வந்து சேர்ந்து அங்கே காவேரிக்கரையில் பதிவுகளை முடித்து  விட்டு புறப்படும் சமயம் சற்றே தாமதமாகிவிட்டதால் கரூர் சென்று அங்கிருந்து எங்களைத் திருச்சிக்குப் பேருந்தில் ஏற்றிவிடுவதாக ஆரூரன் சொல்லிக் கொண்டிருந்தார். காரைக்குடியில் ஏற்கனவே அங்கு நண்பர் முனைவர்.காளைராசன் திருச்சியில் இருக்கும் அவரது மாணவர் ஒருவருக்கு எங்கள் வருகையைப் பற்றி சொல்லியிருந்தமையால் அந்த மாணவர் திருச்சி பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து என்னையும் டாக்டர்.நா.கண்ணனையும் காரைக்குடிக்கு பேருந்தில் அழைத்துச் செல்ல வருவதாக இருந்தது. மறுநாள் காலை காரைக்குடியில் நிகழ்ச்சிகள் காலை 6 மணியிலிருந்து தொடங்குவோம் என நான் யோசித்திருந்தேன். அங்கு பதிவு செய்யவேண்டிய வரலாற்றுச் சின்னங்களைப் பற்றிய பட்டியல் ஒன்றினை ஏற்கனவே தயாரித்து வைத்திருந்தேன். ஆக,  மனதில் எப்படியும் பேருந்தைத் தவற விடாமல் சரியான நேரத்தில் எடுத்து விட வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் அதிகமாகிக் கொண்டேயிருந்தது.

நாங்கள் கரூரை அடைந்து பேருந்து நிலையம் சென்று காரைக்குடி செல்லும் பேருந்து எப்போது புறப்படும் என்று ஆரூரனும் கண்ணனும் தேடிக் கொண்டு சென்றனர். ஒரு பேருந்து அப்போதுதான் கிளம்பியிருப்பதாகவும் அந்தப் பேருந்தினைக் காரில் விரட்டிக் கொண்டு சென்றால் பத்து நிமிடத்தில் நிச்சயமாகப் பிடித்து விடலாம் என்று பேருந்து நிலையத்தில் யாரோ சொல்ல அதை நம்பிக் கொண்டு ஆரூரனும் கண்ணனும் காருக்கு ஓடி வந்தனர்.
கரூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆரூரனின் வாகனம் திருச்சி செல்லும் பேருந்தைத் தேடிக் கொண்டு வேகமாக பயணித்தது. நாங்களும் பேருந்து கண்ணில் தென்படுமா என முன்னால் செல்லும் ஏதாவது ஒரு பேருந்தை நோக்கி எங்கள் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தோம். சில இடங்களில் வேகமாக ஆக்ஸலேட்டரை அழுத்தியதில் ஆரூரனின் வாகனம் முன்னே செல்லும் வாகனங்களை எல்லாம் முந்திக் கொண்டு சென்று கொண்டேயிருந்தது. 15 நிமிடங்கள் பயணித்தும் அந்தத் திருச்சி சென்று கொண்டிருந்த பேருந்தை எங்களால்  கண்டுபிடிக்கமுடியவில்லை.
இப்படியே தேடிக்கொண்டே போனால் திருச்சிக்கே போய் சேர்ந்துவிடுவோம் என்பது வாகனத்தில் இருந்த எங்கள் நால்வருக்குமே தெரிந்தது. சரி. மீண்டும் கரூர் பேருந்து நிலையத்துக்கே திரும்பி அங்கிருந்து திருச்சி செல்லும் அடுத்த பேருந்தைப்  பிடித்துச் செல்வோம் என்று சொல்லிக் கொண்டு திரும்பினோம். வந்து சேர்ந்த நேரம் சரியாக ஒரு பேருந்து கிளம்பிக் கொண்டிருக்கவே அதில் அவசர அவசரமாக எங்கள் பொருட்களை ஏற்றி வைத்துக் கொண்டு நண்பர்கள் பவளாவிடமும் ஆரூரனிடமும் விடை பெற மனமில்லாமல் விடைபெற்றுக் கொண்டு பேருந்தில் நானும் கண்ணனும் ஏறினோம்.

நகராண்மைக் கழக பேருந்து அது.  பேருந்து நிறைய மக்கள் பலர் அமர்ந்திருந்தனர். கண்ணன் பேருந்தின் முன் வரிசையில் ஒரு இடம் இருக்க அங்கே சென்று விட்டார். அவரிடம் மிகச் சிறிய ஒரு பெட்டி மாத்திரம் இருந்தது. என்னிடம் எனது பெரிய பயண ட்ரோலியோடு கணினி, கேமரா மற்ற ஏனைய பொருட்கள் வைத்திருந்த தோள்பை ஒன்றும் கையில் இருந்தன. இவை இரண்டையும் வைத்துக் கொண்டு கடைசி இருக்கையிலேயே இருந்து விட்டேன். என் அருகில் ஒரு இளைஞர், மற்றும் ஒரு பெண்மணியும் ஒரு நபரும், மேலும் ஒரு பெண்மணி, அவர் கணவர் ஆகிய ஐவர் அமர்ந்திருந்தனர்.

பேருந்தின் பின் இருக்கையில் நான் குறிப்பிட்ட ஐவரோடு நானும் அமர்ந்திருந்தேன். எனது பெரிய பயணப் பெட்டியை எப்படியோ சமாளித்து பேருந்து சீட்டின் கீழ் தள்ளி வைத்து விட்டு எனது கணினி தோள்பையை மட்டும் கையில் வைத்துக் கொண்டிருந்தேன். என் பக்கத்தில் ஒருவர், ஐம்பது வயது மதிக்கத்தக்கவர். ஒல்லியான உடல்வாகு கொண்ட மனிதர். அவர் அருகில் ஒரு பெண்மணி அவருக்கும் அதே வயதுதான் இருக்கும். இருவரும் ஏதோ ஒரு  அலுவலகத்தில் ஒன்றாக வேலை செய்பவர்களாக இருக்குமென்பது அவர்கள்    உரையாடல்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

இருவரும் இடைவிடாது அலுவலகத்தில் உள்ள நபர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். பிறகு பேச்சு மாறி,  அந்தப் பெண்மணியின் பிள்ளைகள், குடும்ப விஷயம் என்று போய் கொண்டிருந்தது. பக்கத்தில் உள்ளவர்கள் கேட்பார்களே என்ற தயக்கம் இல்லாமல், கவலையில்லாமல் தொடர்ந்து இந்தப் பேச்சு சுவாரசியமாகப் போய்கொண்டிருந்தது. திடீரென்று யாரையோ கைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அந்த மனிதரின் கைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.  சில முறை முயற்சி செய்து பார்த்தார்.  நான் பேருந்து பயணத்தில் இருந்த போது எனக்கு வந்து கொண்டிருந்த  தொலைபேசி அழைப்புக்களை எடுத்து பேசிக்கொண்டிருந்தேன். இதனைக் கவனித்திருப்பார் போல அந்த மனிதர். உடனே என்னைப் பார்த்து, சற்று தொலைபேசி தரமுடியுமா. ஒரு நபருக்கு போன் பேச வேண்டும், என்று கேட்டார். என்னுடைய கைபேசியைக் கொடுத்தேன். அவர் பேச ஆரம்பித்தார். ஏதோ ஒரு விஷயமாக யாரையோ ஓரிடத்தில் மறு நாள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பது பற்றி அந்தப் பேச்சு இருந்தது.

ஏறக்குறைய பத்து நிமிடங்கள் பேசி முடித்த பின் என்னிடம் என் கைப்பேசியை அவர் திருப்பி தரவில்லை. தன் கையிலேயே வைத்திருந்தார். என்னிடமிருந்து வாங்கிய என் கைத்தொலைபேசியை எனக்குத் திருப்பி தரவேண்டும் என்ற பிரக்ஞை இல்லாமல் மீண்டும் அந்தப் பெண்மணியிடம் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். அவராகத் திருப்பித் தரமாட்டார் என்பது தெரிந்து விட்டது. ஆக நானே அவரைக் கூப்பிட்டு என் கைபேசியைத் தரும் படி கேட்டேன். அவர், மீண்டும் அவர் நண்பர் அவரை என் கைபேசியில் கூப்பிடுவார். அதனால் தான் தானே கையில் வைத்திருப்பதாக எனக்கு விளக்கம் அளித்தார். அப்படி போன் அழைப்பு வந்தால் நான் அவருக்குத் திரும்பத் தருவதாகச் சொல்லி என் கைபேசியை நான் வாங்கிக் கொண்டேன். அந்த பெண்மணியின் அருகில் அமர்ந்திருந்த நடுத்தர வயது இளைஞன் நாங்கள் என் கைத்தொலைபேசி பற்றி பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பார் போல. அவருக்கு முகத்தில் புன் சிரிப்பு.

இடைக்கிடையே எங்களின் நீளமான பின் இருக்கையின் இறுதியில்  அமர்ந்திருந்த ஒரு மனிதர் அவ்வப்போது உளறிக் கொண்டு இருந்தார். அவர் அதிகமாகக் குடித்திருந்தார். உடம்பில் போட்டிருந்த சட்டை ஒழுங்காகப் போடப்படவில்லை. மெதுவாக ஏதாவது உளறுவார். திடீரென்று சத்தமாகக் கத்துவார். தன் குடும்பத்துப் பெண்மணிகளைப் பற்றி மிக மோசமான விவரணைகள்; கெட்ட சொற்களில் பெண்களைத் திட்டிக் கொண்டு புலம்பிக் கொண்டேயிருந்தார். ஆனால் கண்களைத் திறந்து அந்த மனிதர் யாரையும் பார்த்ததாகத் தெரியவில்லை. அவர் அருகில் இருந்தவர் அவர் மனைவி என்று இருவர் நடவடிக்கைகளிலிருந்தும் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் கத்தும் போது அவரை திட்டி அடக்கி அமைதியாக வைத்திருக்க பெரிய முயற்சி செய்து கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி. அவர் முகத்தில் அதிகமாக கவலை, வருத்தம், அவமானம் எல்லாம் தெரிந்தது. இப்படி எத்தனை எத்தனை முறை தன் கணவனின் நடவடிக்கைகளினால் அவமானப்பட்டு தலையை கவிழ்த்துக் கொள்ளும் நிலை அவருக்கு ஏற்பட்டிருக்குமோ, தெரியாது.

நாங்கள் அந்தக் குடிகாரர் கூறும் மோசமான சொற்களைக் கேட்டு ஏனையோர்  கோபப்படுவோமோ என்ற பயம் அவர் முகத்தில் தெரிந்தது . எங்களைச் சமாதானப்படுத்தும் வகையில், தன் கணவர்  அதிகமாகக் குடித்து விட்டு உளறுவதாகச் சொல்லி, முகத்தில் இல்லாத  சிரிப்பை வரவழைத்துக் கொண்டு எங்களிடம் சமாளித்துச் சொல்லி வைத்தார். அவர் நிலை பரிதாபம்.

குடித்து விட்டு உளறும் ஆண்களில் சிலர்  ஏன்  குடித்து விட்டால் மிகக் கேவலமாகப் பேசுகின்றனர் ? அதிலும் தங்கள் குடும்பத்து பெண்களை ? மனதிலே அவ்வளவு வெறுப்பும் குரோதமும் ஏன் ஏற்படுகின்ரது? அந்தக்  குடிகாரனை அழைத்துக் கொண்டு செல்லும் அந்த மனைவியை அந்தக் குடிகாரக் கணவன், தெய்வமாக அல்லவா கருத வேண்டும்? அப்படிப்பட்ட அந்த குடிகார மனிதனையும் சகித்துக் கொண்டும் இருக்கின்றாரே, என நினைக்கும் போது அப்பெண்ணின் நிலையை நினைத்து மனம் கலங்கியது எனக்கு.

தொடர்ந்து அந்தக் குடிகார மனிதரின்  பேச்சும் உளறலும் குறையவில்லை. திடீரென்று எழுந்து நின்று பேருந்தில் முன் பக்கம் போகப் பார்த்தார் அந்த மனிதர். பேருந்து ஆடிய ஆட்டத்தில் தலையில் முட்டிக் கொண்டு விழுந்தார்.  கண்டக்டர் வந்து நன்றாகத் திட்டித் தீர்த்தார். பார்ப்பதற்கு எல்லாமே நாடகம் போல இருந்தது எனக்கு.
எத்தனை விஷயங்கள் ஒரு பேருந்திற்குள்ளேயே நடக்கின்றன. எத்தனை கதைகளுக்கான கரு பேருந்திலேயே கிடைக்கின்றன என்று நினைத்தபோது சுவாரசியமாகவும் இருந்தது.
ஏறக்குறைய அடுத்த ஒரு மணி நேரத்திற்கு இந்த நாடகம் தொடர்ந்து கொண்டிருந்தது. என் அருகில் இருந்த அந்த இருவரும் வழியில் இறங்கி விட்டனர். பேருந்தில் என் அருகில் இப்போது மூவர் மட்டுமே. அந்த இளைஞன். அவர் அருகில் குடிகாரரின் மனைவி, அந்தக் குடிகாரர். பேருந்திலும் ஆட்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.
அவ்வப்போது அந்தக் குடிகார மனிதர் சத்தமாகப் பேசுவதும், அதனை  கண்டெக்டர் வந்து கண்டிப்பதும் என்ற வகையில் போய் கொண்டிருந்தது.  நாங்கள் பின் இருக்கையில் மூன்று பேர் மட்டுமே. குடிகாரரின் மனைவி என்னிடம் பேச ஆரம்பித்தார். ஒரு உறவினர் வீட்டுச் சடங்கு நிகழ்ச்சிக்குச் சென்று விட்டு வருவதாகவும் அவரோடு  இவர்களது பெண் குழந்தைகள் இருவருமாக, ஆக நான்கு பேரும் இப்போது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். உறவினர் இல்லத்தில் நண்பர்களும் உறவினர்களும் கூடிவிட்டதால் மகிழ்ச்சியில் அளவுக்கு மீறி குடித்து விட்டாராம். அதனால் அவரை பேருந்திற்குள் கொண்டு வந்து ஏற்றி உட்கார வைத்ததே பெரிய பாடாகி விட்டது என்று விபரம் தெரிவித்தார். அவரது இரண்டு பெண் குழந்தைகளும் சில இருக்கைகளுக்கு முன்னால் அமர்ந்திருப்பதாகவும் இந்த மூன்று பெண்களும் சேர்ந்து தான் இந்த மனிதரை பேருந்தில் ஏற்றியதாகவும் சொன்னார். பேருந்திலிருந்து இந்த மனிதர் எழுந்து ஓடிவிடக்கூடாதே என்பதற்காக அவரை இருக்கையின் மூலைக்குத் தள்ளிவிட்டு இந்தப் பெண்மணி உட்கார்ந்து கொண்டார் என்பதை அவர் சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடிந்தது. இந்த மனிதரால் மனைவிக்கு மட்டுமல்ல மகள்களுக்கும் அவமானம்தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

இவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்த போது அந்த மனிதரை அவர் மனைவி எழுப்பிப் பார்த்தார். அவர் நகர்வதாகத் தெரியவில்லை. கண்டக்டர் வந்து விட்டார். கண்டக்டர் அவருக்கே உரிய சத்தமான தொணியில் அவரை விரட்ட, அந்தக் குடிகார மனிதர் ஒரு வகையாக தனக்குத்தான் இந்த  அழைப்பு என்பதைப் புரிந்து கொண்டு எழுந்தார். எழும்போது அவர் கட்டியிருந்த வேட்டி கழன்று விழப் போக, அவர் மனைவி உடனே அதனை சிரமப்பட்டு சரி செய்து வைத்தார். என் அருகில் இருந்த இளைஞர் உடனே எழுந்து அவரை திட்டிக்கொண்டே  உடையை சரி செய்து படிகளில் கைத்தாங்கலாக அக்குடிகாரரின் மனைவிக்கு உதவியாக அம்மனிதரை கீழே இறக்கி விட்டார். இரண்டு பெண்களும் முன் பகுதியிலிருந்தவர்கள் இவர்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது தான் பார்த்தேன். 14 அல்லது 15 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தைகள். தலையைக் குனிந்து கொண்டே அந்தப் பெண்கள் கீழே இறங்கி தங்கள் தந்தையின் கைகளைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு அழைத்துச் சென்றனர். அந்த அம்மாள் ஏதோ பேசிக் கொண்டே செல்வது பேருந்து புறப்படும் வரை கேட்டது.

இப்போது நானும் அந்த இளைஞனும் மட்டுமே அந்தக் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தோம். அந்த இளைஞன் அந்தக் குடிகார மனிதரைப் பற்றி சொல்லி என்னுடன் பேச ஆரம்பித்தார். அப்படியே எங்கள் பேச்சு குடிகாரரின் கதையிலிருந்து மாறி எங்களைப் பற்றியதாக அமைந்தது. நான் தமிழ் மரபு அறக்கட்டளை பற்றியும் மின்தமிழ் பற்றியும் எனது தமிழக வருகைப் பற்றியும் குறிப்பிட்டுச் சொன்னேன். அந்த இளைஞர் ஆர்வத்துடன் வலைப்பக்க முகவரிகளைக் குறித்துக் கொண்டார். தான் ஒரு அச்சகம் வைத்திருப்பதாகவும் அதன் தொடர்பாக திருச்சி சொல்வதாகவும் தெரிவித்து விட்டு, அச்சகத் தொழில் பற்றி சில விபரங்களையும் சொல்லிக் கொண்டே வந்தார். அவரும் திருச்சி வரை செல்ல வேண்டியிருந்தது. பேருந்தோ குலுங்கி குலுங்கி ஆடிக் கொண்டே போய்கொண்டிருந்தது. காற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது. பேருந்திலிருந்து கேட்பதற்கு பலத்த சத்தமாக அது இருந்தது. ஆனாலும் பயணம் அலுப்புத்தருவதாக இல்லை. திருச்சி வந்தடைந்தபோது குறிப்பிட்ட நேரத்தை விட சற்று நேரமாகிப்போயிருந்தது. என்னையும் டாக்டர்.நா.கண்ணனையும் அழைத்துச் செல்ல வந்திருந்த கல்லூரி மாணவர் எங்களுக்காக வந்து காத்திருக்க அவருடன் அடுத்த திருச்சி செல்லும் நகராண்மைக் கழக பேருந்தினைப் பிடித்து அதில் அந்த நள்ளிரவில் காரைக்குடிக்கானப் பயணத்தைத் தொடர்ந்தோம்.

இன்று தமிழகத்தின் சிற்றூர்களிலும் பெரு நகரங்களிலும் பெண்கள் மதுபானக்கடைகளுக்கு எதிரான தமது போராட்டத்தைத் தொடக்கியிருக்கின்ரனர். இது பாராட்டுதலுக்குறியது. இவர்கல் போராட்டம் வெற்றியடைய தமிழ் மரபு அறக்கட்டளை வாழ்த்துகின்றது!


Wednesday, May 3, 2017

54. சென்னை புறநகர்ப் பகுதியில்- ஒரு நாள் வரலாற்றுப் பயணம்



தமிழகத்தின் கோவையில் 2010ம் ஆண்டு செம்மொழி மாநாடு கோவையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றதைப் பலரும் இன்னமும் நினைவில் வைத்திருப்போம். அந்த நிகழ்வுக்காக நான் தமிழகம் சென்றிருந்த போது கோவை செல்வதற்கு முன்னர் சென்னையிலும் அதன் சுற்றுப்புறத்திலும் உள்ள அழிந்து வரும் அல்லது சிதலப்படுத்தப்பட்ட வரலாற்றுப் புராதன சின்னங்களைச் சென்று பார்த்து வரலாம் என ஏற்பாடு செய்திருந்தோம். இதில் முழு ஆர்வத்துடன் இந்த ஏற்பாட்டினை செய்திருந்தார் சென்னையில் வசிக்கும் ரீச் அறக்கட்டளையின் செயற்குழுவினர்களில் ஒருவரான திரு.சந்திரா. அந்த ஏற்பாட்டின் படி தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்களும் வரலாற்று ஆர்வலர்களும் என 21 பேர் கொண்ட குழுவாகச் சென்னைக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள சில வரலாற்றுப் புராதன சின்னங்களைக் கண்டு வந்தோம். எங்களுக்கு வரலாற்றுத் தகவல்களைத் தருவதற்காக முன்னாள் தமிழக தொல்லியல் துறை ஆய்வாளர் திரு.எஸ் ராமச்சந்திரன் அவர்களும் இணைந்து கொண்டனர். அத்துடன் தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்கள் ஒரிசா பாலு, திரு.இன்னம்பூரான், திரு.தேவ், செல்வமுரளி என மேலும் சில நண்பர்களும் இனைந்து கொண்டனர்.

எங்களின் பயணப் பட்டியலில் சில முக்கிய பகுதிகளின் பெயர்களைக் குறித்து வைத்திருந்தோம். காலை 9மணிக்குக் கூடி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் முதலில் சோமங்களம் எனும் ஊருக்குச் செல்வது. இது நவக்கிரக ஸ்தல குறிப்பின் படி சந்திரனுக்கு உரிய ஸ்தலம் என்ற சிறப்பைப் பெற்றது. பின்னர்அங்கிருந்து புறப்பட்டு நாவலூர் வந்து அங்கே ஜேஸ்டா தேவி சிலையைப்பார்த்து அந்தத் தெய்வ வடிவத்தின் உருவ அமைப்பின் தன்மைகளை அறிந்து கொள்வது என்பது எங்கள் பட்டியலில் இட்டிருந்தோம். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கருங்கற்கால காலம், வரலாற்றுக்கு முந்திய காலத்தின் சான்றுகள் உள்ள குண்டு பெரும்புதூர் பகுதிக்கு வருவது. அங்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை கொண்ட கல் ஃபாசில்களைக் காணுதல், கல்திட்டையைக் காணுதல் என்பதைக் குறித்திருந்தோம். அது முடித்து மாகாணி எனப்படும் பகுதிக்கு வந்து அங்கே பெருங்கற்கால ஈமக்கிரியை சடங்குகள் செய்யப்பட்டதற்கான சான்றுகளைப் பார்வையிடல். அதனை முடித்து இறுதியாக மாகண்யம் கிராமம் வந்து அங்குள்ள பல்லவ காலத்து கோயில் ஒன்றினை சென்று காண்பது, அதன் சிற்ப அமைப்பைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது பட்டியலில் இருந்தது.

காலையில் குறிப்பிட்ட படியே நாங்கள் பேருந்து ஆரம்பிக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டோம். நண்பர்களையெல்லாம் ஒரே இடத்தில் சந்திப்பது மிகுந்த குதூகலமாக இருந்தது. 21 பேர் இரண்டு சிறிய பேருந்துகளில் என எங்கள் பயணம் தொடங்கியது. பலவாறான செய்திகளை கலந்துரையாடிக் கொண்டு மகிழ்ச்சியாக இப்பயணம் தொடங்கியது.

பட்டியலில் உள்ள இடங்களுக்குச் சென்று அங்குள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு தொல்லியல் ஆய்வாளர் விளக்கிக் கூறிய குறிப்புக்களைப் பகிர்ந்து கொண்டோம். குறிப்பாக வழிப்போக்கர் மண்டபம் ஒன்றில், மண்டபத்தின் ஒவ்வொரு கல் தூணிலும் உள்ள சிற்பங்களையும் கல்வெட்டுக்களையும் பார்த்து அறிந்து கொண்டது சிறப்பாக இருந்தது.

நாவலூர் பகுதியில் இருக்கும் ஜேஷ்டா கோயில் எங்கள் பட்டியலில் இருந்தது. இது 8ம் அல்லது 9ம் நூற்றாண்டு சிற்பம் உள்ள கோயில். இக்கோயிலில் ஒரு இடம்புரி விநாயகர் சிற்பமும், சப்த கன்னிகள் சிற்பங்களும், ஜேஸ்டா தேவியின் சிற்பமும் வழிபாட்டில் உள்ளது. இது கல்லால் கட்டப்பட்ட ஒரு கோயில் அல்ல. ஓலையால் பின்னப்பட்ட ஒரு குடிசைக்குள் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறு கோயில். அங்கு ஜேஷ்டாதேவி சிலையைக் குழுவில் உள்ள அனைவரும் பார்க்க, தொல்லியல் அறிஞர் திரு.எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் எங்களுக்கு ஜேஷ்டாதேவியின் சிலையைப் பற்றியும் இந்தத் தெய்வ வடிவத்தோடு வருகின்ற பல்வேறு நம்பிக்கைகளையும் சடங்குகளையும் விளக்கிச் சொன்னார்.

ஜேஷ்டா வழிபாடு என்பது இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் முக்கியமான பெண் தெய்வ வழிபாடாக இருந்து காலத்தால் அதன் சிறப்பு படிப்படியாகக் குறைந்து இன்று வழிபாட்டில் இல்லாத தெய்வங்களில் ஒன்று என்ற நிலையை அடைந்துள்ளது.

இந்த விளக்கங்களைச் சொல்லிக் கொண்டு வரும்போது தனது அனுபவம் ஒன்றையும் திரு.எஸ்.ராமச்சந்திரன் பகிர்ந்து கொண்டார். பறவை எனக் குறிப்பிடப்படும் மதுரைக்கு அருகே உள்ள ஒரு ஊரில் ஒரு ஜேஷ்டாதேவி சிலையை தமது ஆய்வின் போது பார்க்க நேர்ந்ததாகவும்., அப்பொழுது அவ்வூர் மக்களிடம் இந்தத் தெய்வத்தை வழிபடுகின்றார்களா, என விசாரித்த போது, அவருக்கு வித்தியாசமான பதிலை ஊர் மக்கள் அளித்திருக்கின்றனர். அது என்னவென்றால், அந்த ஊரில் மழை வரவில்லையென்றால் அந்த ஜேஷ்டா தேவி சிலையைக் கவிழ்த்து போட்டு விடுவார்களாம். அப்படி கிடத்திப் போட்டால் ஊரில் மழை பெய்யும் என்பது அவ்வூர் மக்களின் நம்பிக்கை என அவர்கள் சொல்லியிருக்கின்றனர். அனைத்து வளங்களின் தாயாகவும் பழங்காலத்தில் வழிபாட்டில் இருந்த ஒரு தெய்வ வடிவம் இன்று அதன் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு மக்களால் சடங்குகளுடன் பின்னப்பட்ட ஒரு சூழலில் இருப்பதைக் காண முடிகின்றது. சங்கம் மருவிய காலத்திலேயே இந்தத் தெய்வம் மூதேவி என்று வழக்கில் மாறியது என்றும் அறிகின்றோம்.

காலத்துக்குக் காலம் தெய்வ வடிவங்களின் தன்மைகளும் அவர்கள் அளிக்கும் பலன்கள் பற்றிய நம்பிக்கைகளும் மக்களால் மாற்றப்படுகின்றன என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

​பண்டைய சமூகங்களின் வழிபாட்டில் மிக முக்கிய உயர்ந்த அங்கம் ​வகிப்பது தாய்தெய்வ வழிபாடே. பண்டைய தமிழகம் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாகரிகங்களிலும் இதனை அறியமுடிகின்றது. குழந்தையை ஈன்று பாலூட்டும் தாயின் வடிவமே உலக விருத்திக்குக் கடவுள் என்ற பார்வையில் தாய் தெய்வ வழிபாட்டுத் தத்துவம் அமைகின்றது. ஜேஸ்டா தேவியே சங்க இலக்கியத்தில் பழையோள் என குற்ப்பிடப்படும் தெவம் என்கின்றார் தொல்லியல் அறிஞர் எஸ்.ராமச்சந்திரன். இப்படி ஜேஸ்டா தேவியைப் பற்றிய பல வரலாற்றுச் செய்திகளைப் பார்த்து அத்தெய்வத்தின் உருவ அமைப்பின் காரணங்களை புரிந்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

மதிய உணவினை முடித்துக் கொண்டு மேலும் சிஅல் இடங்களுக்குச் சென்ற அதன் பின் மாகாணிக்குச் சென்றிருந்தோம். இது ஒரு வனப்பகுதி குன்றுகள் நிறைந்த ஒரு பகுதியும் ஆகும். பசுமையான சூழலில் சுற்றுப்பகுதியில் எங்குப் பார்த்தாலும் மனிதக் குடியிருப்பு இல்லாத ஒரு பகுதி என்பது தெரிந்தது.

மாகாணி மலைப்பகுதி என்பது இதன் பெயர். இதனை விவரித்துச் சொல்வதென்றால் மிகப்பெரிய நிலப்பகுதி எனச் சொல்லலாம். இந்தப் பகுதியில் ஒரு சில இடங்கள் மட்டுமன்றி முழுமையாக எல்லா இடங்களிலும் தோண்டிப் பார்த்தால் முதுமக்கள் தாழிகள் கிடைக்கும். ஏனெனில், இது பண்டைய தமிழ் மக்களின் இறந்தோரைக் கிரியைகள் செய்து புதைத்து வைக்கும் இடமாக இருந்து வந்துள்ளது. மனிதக் குல நாகரிகத்தின் பல்வேறு காலகட்டங்களில் இப்பகுதி மக்கள் குடியேற்றம் இருந்த பகுதியாகவும், குறிப்பாக இறந்தோரை ஈமக்கிரியைகள் செய்து முதுமக்கள் தாழிக்குள் அவர்கள் உடலை வைத்துப் புதைத்த இடங்கள் எனச் சொல்லலாம். செல்லும் பாதைகளில் முதுமக்கள் தாழிகள் வரிசை வரிசையாகப் பாதி உடைந்த நிலையில் இங்குக் காணப்படுகின்றன.

இப்பகுதியில் முறையான தொல்லியல் ஆய்வுகள் என்பன நடத்தப்படவில்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய செய்தியே. குறிப்பிடத்தக்க அகழ்வாய்வுகள் என்பன நிகழவில்லை என்றாலும் சில நடவடிக்கைகளின் போது இங்குக் குழிகள் தோண்டப்பட்டு இங்கு இந்தத்தாழிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து பெய்த மழையினாலும் இப்பானைகளின் மேல் ஒட்டியிருக்கும் செம்மணல் பகுதி கரைந்து விட, பானைகள் மேலே தெரியும் படி காட்சியளிக்கின்றன. பார்க்கும் இடங்கள் யாவும் இந்த ஈமக்கிரியைகள் செய்யப்பட்ட இடங்களில் வரலாற்றுச் சான்றுகள் நிறைந்திருக்கின்றன. நிலத்தடியில் இருக்கும் முதுமக்கள் தாழிகள் மட்டுமல்ல. நிலத்திற்கு மேலே உள்ள வட்டக்கல் அமைப்புக்களையும் இங்கே காண முடிகின்றது.

1894ம் ஆண்டு காலகட்டத்தில் இப்பகுதி ஆங்கிலேயர் ஆட்சியில் இது ஒரு முக்கிய வரலாற்றுத் தடயங்கள் நிறைந்த நிலப்பகுதி என்று அறியப்பட்டிருக்கின்றது. அந்தச் சமயத்தில் இப்பகுதியில் ஆங்கிலேயர்களின் ராணுவ முகாம் ஒன்று இருந்திருக்கின்றது. அதன்பொழுது புவியியல் அறிஞர்கள் இங்கு வந்து இப்பகுதியை ஆராய்ந்து, இது வரலாற்றுப் புராதன சான்றுகள் உள்ள நிலப்பகுதி என அடையாளம் கண்டு குறித்துச் சென்றனர் என்று எங்களுடன் வந்திருந்த திரு.ஒரிசா பாலுவும் திரு.அண்ணாமலையும் குறிப்பிட்டனர். இவ்வளவு முக்கியத்துவம் நிறைந்த பகுதியே என்றாலும் கூட, இங்கு அகழ்வாய்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை என்பது வியப்பளிக்கின்றது.

திரு.அன்ணாமலையும் ஏனைய சில ஆராய்ச்சி மாணவர்களும் தான் இந்த இடத்தை மீண்டும் அடையாளம் கண்டு தொல்லியல் துறைக்கு 2005ம் ஆண்டில் தகவல் தெரிவித்துள்ளனர். ஆயினும் இப்பகுதியைப் பாதுகாக்கும் நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை.
குறைந்தது ஈராயிரம் ஆண்டு பழமையானவை என இந்த முதுமக்கள் தாழிகளைக் குறிப்பிடலாம். ஆயினும் இப்பகுதி இதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்னரே மனிதக் குலம் வாழ்ந்ததற்கான அடையாளங்களைக் கொண்ட ஒரு நிலப்பகுதி என்பதில் ஐயமில்லை.

முதுமக்கள் தாழிகளை பார்த்து விட்டு மேலே சென்ற போது வட்ட வடிவில் வைக்கப்பட்டிருந்த கற்களின் தொகுதிகளைப் பார்வையிட்டோம். இவை வட்டக்கல் என அறியப்படுபவை. இறந்தோரைத் தாழிக்குள் வைத்துப் புதைத்து பின் அதன் மேல் மண்ணால் முடி அதன் மேல் குறியீடாக வட்ட வடிவில் கற்களை வைத்து விடுவார்கள். இதுவே வட்டக்கல் என அழைக்கப்படுவது. தமிழகத்தில் மட்டுமல்ல. உலகின் வேறு சில நாகரிகங்களிலும் இந்த வட்டக்கல், முதுமக்கள் தாழி, கல்திட்டைகள் போன்ற ஈமக்கிரியைச் சின்னங்களைக் காண முடிகின்றது.

மாகாணியில் ஏறக்குறைய மூன்று மணி நேரத்தைக் கழித்து விட்டு அங்கி ருந்து புறப்பட்டு ஒரு பல்லவர் கால ஆலயம் வந்து சேர்ந்தோம் .அ]ங்கு பல்லவர் கால கோயில் சிற்பங்களைப் பற்றி விளக்கம் பெற்ற பின்னர் அன்று எங்களது வரலாற்றும் பயணம் முடிவுற்றது.

ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டாலும் கூட இந்த வரலாற்றுப் பயணம் மனதில் இனிமையான ஒரு நினைவாக இருக்கின்றது. சென்னைக்கு சற்று புறநகர்ப் பகுதியிலேயே இத்தனை வரலாற்றுச் சான்றுகளா என நான் வியந்து போனேன். இங்கே தரையில் மிகச்சாதாரணமாக் கிடைக்கின்ற இலைகளின் படிமங்கள் கொண்ட ஃபாசில்கள் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை என அறிகின்றோம். செல்லுமிடமெல்லாம் முக்கிய வரலாற்றுச் செய்திகளா என என்னை வியக்க வைத்த பயணங்களில் இதுவும் ஒன்று.