Wednesday, March 22, 2017

50. தென்பரங்குன்றம் தர்கா



பள்ளிவாசல்கள் மலேசியாவின் எல்லா பெரிய நகரங்களிலும், சிறு நகர்களிலும், கிராமங்களிலும் இருக்கின்றன. ஆனால் தர்கா என்ற வகையில் அமைந்த இஸ்லாமிய சமூகத்தினர் தொழுகைச் செய்யும் ஒரு வழிபாட்டு மையம் மலேசியாவில் நான் அறிந்து இது வரை கேள்விப்பட்டதில்லை. ஆனால் அவ்வப்போது தமிழகத்தைப் பற்றிய வழிபாட்டு விசயங்களை வாசிக்க நேரிடும் போது தர்கா எனும் சொல் இஸ்லாமியர்களின் வழிபாட்டு அம்சங்களோடு இணைந்த வகையில் வருவதைப் பற்றி நான் கேள்விப்படுவதுண்டு. இந்தத் தர்கா என்பது என்ன என நான் தேடத்தொடங்கிய போது சுவாரசியமான பல தகவல்கள் எனக்குக் கிடைத்தன.

தமிழகத்தின் பல ஊர்களில் தர்காக்கள் இருக்கின்றன. இம்முறை மதுரைக்குச் சென்றிருந்த போது அங்கு மதுரை மைய நகருக்கு அருகாமையில் உள்ள ஊர்களில் இரண்டு தர்காக்களுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதில் ஒன்றுதான் மதுரையில் திருப்பரங்குன்றம் பகுதியின் பின் புறத்தில் அமைந்திருக்கும் தென்பரங்குன்றம் தர்கா.

மதுரை மாவட்டத்தின் திருப்பரங்குன்றம் என்ற ஊரில் உள்ள குன்றின் மேல் இஸ்லாமிய மக்கள் வந்து வழிபட்டுச் செல்லும் ஒரு தர்கா ஒன்று இருக்கின்றது. அதாவது தென்பரங்குன்றம் உமையாண்டவர் கோயிலுக்கு ஏறக்குறைய 1 கி.மீ. தூரத்தில் மலையின் மேல் அமைந்திருக்கும் முருகன் கோயிலுக்குp பக்கத்தில் அந்தக் குன்றின் அருகாமையில், ஆனால் சற்றே உயரமான குன்றுப் பகுதியில் இந்தத் தர்கா அமைந்திருக்கின்றது.

தென்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குச் செல்வதற்கு அங்கு அமைக்கப்பட்டுள்ள படிகளில் ஏறிச் செல்லவேண்டும். ஏறக்குறைய முந்நூற்று ஐம்பது படிகளாவது இருக்கலாம். இப்படி படிகளில் ஏறிச் செல்லும் போது மேற்பக்கத்தில் மலைப்பகுதியில் வலது பக்கத்தில் மற்றுமொரு பாதை விரிவதைக் காணலாம். அந்த விரிந்து செல்லும் பாதையில் தொடர்ந்து சென்றால் அங்கே சமமான ஒரு தரைப்பகுதி இருப்பதையும், அதன் அருகிலேயே ஒரு சுனை ஒன்று நீருடன் காட்சி அளிப்பதையும் காணலாம். அங்கிருந்து வடக்கு நோக்கிப் பார்த்தால் இரண்டு சமாதிகள் எழுப்பப்பட்டிருப்பதைக் காணலாம்.

இந்தச் சமாதி இருக்கும் இடத்திலிருந்து மேலே செல்வதற்கென்று கற்படிகளோ அல்லது வாகனம் செல்லும் சாலையோ இல்லை. ஆனால் மரங்கள் நிறைந்த அப்பகுதியில் மேலே மனிதர்கள் செல்லும் ஒற்றையடிப்பாதை ஒன்று இருப்பதைக் காண முடியும். அந்த ஒற்றையடிப்பாதையில் ஏறி படிப்படியாக ஏறக்குறைய பதினைந்து நிமிடங்கள் நடந்தால் மேலே இருக்கின்ற தர்காவைக் காணமுடியும்.

நான் சென்றது மதிய நேரம். வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. வெயிலின் வெப்பத்திலிருந்து தப்பிக்க மரங்களுக்கிடையே நடப்பது இதமாக இருந்தது. மேலே நான் வந்து சேர்ந்த போது மணி ஏறக்குறைய முற்பகல் பன்னிரெண்டு இருக்கும். நான் உள்ளே நுழையும் போது குடும்பங்களாக ஆணும் பெண்ணுமாக இஸ்லாமிய மக்கள் வழிபாடு முடித்து வந்து கொண்டும் தர்காவிற்குள் சென்று கொண்டும் இருந்தனர். வாசலில் சில வயதான பெரியோர் அமர்ந்திருந்தனர். அதில் ஒருவர் தன் பக்கத்தில் மயிலிறகு கட்டு ஒன்றினையும் வைத்திருந்தார். தர்காவிற்கு வருபவர்களுக்கு மந்திரித்து அவர்களுக்குப் புனித நீரைக் கொடுப்பது மற்றும் மயிலிறகுக் கட்டினால் அவர்களின் தலையின் மேல் வைத்து எடுத்து  ஓதிப் பிரார்த்திப்பது என்பது போன்ற சடங்குகளைச் செய்பவர் இவர். நான் உள்ளே வந்து என்னை அறிமுகம் செய்து கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி சிறிது சொல்லி இந்தத் தர்காவைப்பற்றிய விபரங்களைக் கேட்டறிந்தேன். அங்கிருந்தோர் என்னைத் தர்காவின் எல்லாப் பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று ஒவ்வொரு முக்கிய இடத்திலும் அதன் சிறப்பினை விளக்கி எனக்குத் தகவல் அளித்தனர். இதனை வீடியோ பதிவாக்கியிருக்கின்றேன். விரைவில் அது தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுப் பதிவாக வெளிவரும்.

இந்தத் தர்காவைப்பற்றிய சில தகவல்கள் அங்கே எனக்குக் கிடைத்தன. சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் வலியுல்லாஹ் தர்கா என்பது இதன் பெயர். இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்புவதற்காக ஏறக்குறை எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் அரேபிய நாட்டிலிருந்து இப்பகுதிக்கு வந்து பின் இங்கே வாழ்ந்து மறைந்தவர் பெயரில் தான் இந்தத் தர்கா வழங்கப்படுகின்றது. அப்போது மதுரையைப் பாண்டிய மன்னர்கள் ஆண்டுகொண்டிருந்த காலம். மன்னருக்கும் ஏனையோருக்கும் நோய் ஏற்படும் போதும், உடல் உபாதைகள் ஏற்படும் போதும் மருத்துவ உதவிகளை குரான் ஓதுதல், மூலிகை மருத்துவம் என்ற வகையில் செய்து பிணி தீர்க்க இங்கு வாழ்ந்த இஸ்லாமிய குருமார்கள் உதவியிருக்கின்றனர். இதன் அடிப்படையில் இந்த குருமார்களுக்குப் பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் அருகாமையில் இருந்த கிராமங்களில் வாழ்வதற்கான இடங்கள் வழங்கப்பட்டன. சுல்தான், மற்றும் அவருடன் வந்த மந்திரிகள், மத குருமார்கள், மந்திரியாக இருந்து வைத்திய சாத்திரம் படித்த இஸ்லாமிய மருத்துவர் ஆகியோர் சமாதிகள் இந்தப் பகுதியில் இருக்கின்றன. இங்குள்ள ஐதீகத்தின் படி, இந்தச் சுல்தான் தன் வயோதிக வயதில் இந்தக் குன்று இருக்கும் பகுதியில் மறைந்தார் என நம்புகின்றனர்.

சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் வலியுல்லாஹ் அவர்களின் சமாதி இந்தத் தர்காவின் உட்புறத்தில் அமைந்துள்ளது. இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையில் பின்புறமாக இந்தச் சமாதி எழுப்பப்பட்டுள்ளது. குடைவரை கோயில் போன்ற அமைப்பு உள்ளே இருக்கின்றது. அந்தச் சமாதியின் மேல் பக்கம் பச்சை நிறத்திலான துணி போர்த்தப்பட்டுள்ளது. இந்தச் சமாதிக்கு முன் புறத்தில் மேலும் ஒரு சமாதி ஒன்றும் உள்ளது. இது சுல்தானுடன் வந்த மந்திரியின் சமாதி. இந்தச் சமாதிக்கு முன்னர் மிக வித்தியாசமான தோற்றத்தில் அமைந்த வெண்கல குத்து விளக்குகளை வரிசையாக வைத்திருக்கின்றனர். இந்தச் சமாதி பிரத்தியேகமாக ஒரு இரும்புக் கம்பி போட்டு பாதுகாக்கப் படுகின்றது. சுல்தான் மட்டுமல்லாது இந்த மந்திரியும் மருத்துவத்தில் திறமை பெற்றவராக இருந்திருக்கின்றார். அவர்கள் வந்து சேர்ந்த இப்பகுதியில், காடுகளில் கிடைத்த மூலிகைகளைக் கொண்டு நோய்வாய்ப்பட்டு வாடும் மக்களுக்கு உதவும் சேவையை இவர்கள் செய்திருக்கின்றனர். இந்த மந்திரியின் பெயர் லுக்மான் ஹகீம் என்பது. அரபு மொழியில் ஹகீம் என்பதன் பொருள் மருத்துவர் என்று எனக்கு இங்குத் தகவல் அளித்த பெரியவர் ஒருவர் விளக்கம் கூறினார்.

இவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தைத் தமிழகத்தில் பரப்புவதற்காக வந்தாலும் பின்னர் மருத்துவத்துறையிலேயே தங்கள் செயல்பாடுகளை விரிவாக்கிக் கொண்டு இந்தத் தென்பரங்குன்றம் மலைப்பகுதியிலேயே வாழ்ந்து மறைந்திருக்கின்றனர். பின்னர் இவர்களது மறைவுக்குப் பின்னர் இவர்களது அடியார்கள் சமாதிகள் அமைந்து சுல்தான் நினைவாக இந்தத் தர்காவை எழுப்பியிருக்கின்றனர். ஏறக்குறைய எண்ணூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இந்தத் தர்கா கருதப்படுகின்றது.

நான் இந்தத் தர்காவினுள் இருந்த சமயத்தில் எனக்கு மந்திரித்து, மயிலிறகால் என்னை ஆசீர்வதித்து புனித நீரை ஒரு பெரியவர் வணங்கினார். அவர் மந்திரிக்கும் போது அரபுமொழியில் மிக மெதுவாக சில வாசகங்களை ஓதுவதைக் கேட்க முடிந்தது. நான் உள்ளே இருக்கும் சமயத்தில் ஒரு பெண்மணியும் அங்கே சுல்தானின் சமாதிக்கு முன் அமர்ந்து அருள் வந்த பெண்மணி போல ஒலி எழுப்பிக் கொண்டிருந்தார். இதனைப் பற்றி நான் அங்கிருந்த இஸ்லாமியப் பெரியவரிடம் வினவிய போது இப்படி அடிக்கடி பலர் வருவது வழக்கம் என்றும் தமது உடல் பிரச்சனைகள் மற்றும் உளப்பிரச்சனைகளுக்குத் தீர்வாக இத்தகைய சடங்குகளை அவர்கள் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தத் தர்காவில் பதிவினை முடித்து விட்டு அங்கேயே சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டு வந்த வழியிலேயே திரும்பினேன்.

தென்பரங்குன்றம் பகுதி இன்றும் கூட வளமான ஒரு வனப்பகுதியாக இருக்கின்றது. பெரும்பாலும் திருப்பரங்குன்றம் மலையைப் பற்றியும் அங்குள்ள முருகன் கோயிலைப் பற்றியும் அறிந்திருக்கும் நம்மில் பலருக்குத் தென்பரங்குன்றம் மலையைப் பற்றி அறிமுகம் இருந்திருக்காது.

நான் கடந்த ஆண்டு (2016) டிசம்பர் குடைவரைக்கோயில்களைப் பற்றிய பதிவினைச் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு இங்குச் சென்றிருந்தேன். உமையாண்டவர் கோயில் பற்றி நான் முன்னரே அறிந்திருந்தமையால் அக்கோயிலைப் பற்றிய ஒரு பதிவினைச் செய்து விட்டு கீழே இறங்கி வரும் போது அங்கே காட்டின் உள்ளே மூலைக்கு மூலை நாகர் வழிபாடு, வராகி அம்மன், முனியாண்டி சாமி, கன்னிமார் கோயில், பஞ்ச லிங்க ஆலயம் மற்றும் பெயர் அறியா சில தெய்வ வடிவங்கள் அங்கே மரங்களுக்குக் கீழே வைக்கப்பட்டு அவை மக்கள் வழிபடும் குலதெய்வ வழிபாடுகளாக இருப்பதைக் கண்ணுற்றேன். இதனை அடுத்து, மலையின் மேல் உள்ள முருகன் கோயிலில் பதிவை முடித்து வரும் வழியில் ஏதேச்சையாக இந்தத் தர்காவை தூரத்திலிருந்து பார்த்த போது இங்கேயும் சென்று பார்த்துவருவோம் என அங்கு சென்று பார்த்ததனால் இப்படி ஒரு அருமையான வரலாறு ஒன்று இங்கே இருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

முருகனை வழிபடும் தமிழ் மக்கள் வந்து செல்லும் அதே படிகளில் மேலே ஏறி மற்றொரு பாதையை எடுத்துச் சென்ற போது அங்கே நுணுக்கமான இஸ்லாமிய விழுமியங்களைக் கொண்ட ஒரு தர்கா இருப்பதைக் கண்டு பதிவு செய்யவும் முடிந்தது.

இந்தத் தர்காவில் சமாதி அடைந்திருக்கும் சுல்தானின் வரலாற்றை அங்கு நான் சந்தித்த இஸ்லாமியப் பெரியவர் சொல்லி நான் கேட்டறிந்த போது அந்த அரேபிய சுல்தானின் நீண்ட தூர பயணமும், பின்னர் தமிழகத்தில் வந்து அவர் தன் குழுவினருடன் வாழ்ந்த விசயங்களும் எனக்கு வியப்பினை ஏற்படுத்தின. நிச்சயமாகத் தமிழ் மொழியைப் பேசக் கற்றுக் கொண்டு தான் உள்ளூர் மக்களுடன் சுல்தானும் அவரது குழுவினரும் பேசியிருப்பார்கள், இங்கே வாழ்ந்திருப்பார்கள். எண்ணூறு வருடத்திற்கு முந்தைய இந்தச் செய்திகளை எண்ணிப்பார்க்கும் போதே வியப்பு மேலிடுகின்றது.

இப்படி எத்தனை எத்தனையோ .. அறியப்படாத வரலாறுகள்.. மக்களால் அறியப்பட வேண்டிய நிலையில் இருப்பதை எனது ஒவ்வொரு தேடலிலும் உணர்கின்றேன். 

Wednesday, March 15, 2017

49. வைரமுத்துவின் கருவாச்சி காவியம்




கதைகளை எழுதுவது போல வரலாற்றினைச் சொல்ல முடியுமா?

வரலாறு சொல்ல  ஆய்ந்து எழுதுவது அவசியம். பொதுவாகவே கடந்த சில ஆண்டுகளில் தமிழர் தொண்மை, தமிழர் பண்பாடு பற்றிய தேடல், தமிழ் நிலத்தின் பண்டைய வழிபாட்டுக்கூறுகள், தமிழர் சடங்கு முறைகள் என்பன பற்றிய தேடல் கூர்மை அடைந்து வருவதைக் காண்கின்றேன். தன்னார்வலர்கள் பலர், அவர்கள் துறை வெவ்வேறாக இருப்பினும் கூட, அவர்கள்  தங்கள் வேர்களை அறியும் பொருட்டு தமிழக வரலாற்றை தேடுவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய நடவடிக்கைகளை வரவேற்பதும் பாராட்டுவதும் மேலும் உற்சாகத்தை அவர்களுக்கு நிச்சயம் வழங்கும். இந்த உற்சாகம் தரும் களிப்பில் மேலும் ஈடுபாட்டுடன் தன்னார்வலர்கள் சீரிய முயற்சிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வர்.

எனது கடந்த 17 வருட தமிழ் மரபு அறக்கட்டளை வரலாற்று களப்பணிகள் மற்றும் வெளியீடுகளின் போது என்னைப் பாராட்டி உற்சாகமளிக்கும் பலரையும் நான் மனதில் நினைவு வைத்திருப்பதுண்டு. சில சம்பவங்கள் மனதில் நீங்காத மகிழ்ச்சியை ஏற்படுத்தி அந்த நினைவுகள் மனதில் தங்கி விடுவதும் உண்டு. அப்படித்தான் ஒருமுறை இணையத்தில் உள்ள குழுமங்களில் தமிழர்கள் மத்தியில் கல்கியின் ”பொன்னியின் செல்வன்” நூலை பரவலாக பேசவைத்த பொன்னியின் செல்வன் குழுமத்தலைவர் திரு.சுந்தர் பரத்வாஜ் ஒரு இன்ப அதிர்ச்சியை எனக்கு அளித்தார். அவர் நண்பர்கள் முனைவர்.குடவாயில் பாலசுப்பிரமணியன் மற்றும் முனைவர் பேராசிரியர் ராசவேலு இருவரையும் நேரில் அறிமுகப்படுத்தி, என்னை மூவருமாக கௌரவித்து ஒரு நினைவுச்சின்னத்தை வழங்கினர். இது சென்னையில் எதிர்பாராமல் நிகழ்ந்தது.

இதே போலத்தான் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுடனான எனது சந்திப்பு நிகழ்ந்தது. அவரது இல்லத்தில் அவருடன் நானும் நண்பர் சுந்தரும் உரையாடச் சென்றிருந்தோம். நான் சொல்லச் சொல்ல தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளைப் பற்றி அறிந்து வியந்தார். இப்பணிகளுக்காக நான் சென்றிருந்த ஊர்களில் எனக்குக் கிடைத்த அனுபவங்களை நான் விவரிக்க அவற்றை ஆர்வத்துடன் கேட்டு தனது அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். தமிழ் மரபு அறக்கட்டளையின் பணியைப் பாராட்டியதோடு எங்களுக்கு ஒரு உணவு விடுதியில் விருந்தளித்தும்  சிறப்பித்தார். இதில் மேலும் என்னை குதூகலப்படுத்திய ஒரு விசயமும் நிகழ்ந்தது. அவரது எழுத்துப் படைப்புக்களில் பத்து நூற்களைக் கொண்டு வந்து எனக்கு அவற்றை பரிசாக அளித்தார். அது மிக இனிமையான ஒரு நிகழ்வாக என் மனதில் நிறைந்திருக்கின்றது.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எனக்களித்த அவரது நூல்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பானவையே.

  1. இதுவரை நான்
  2. சிகரங்களை நோக்கி
  3. பாற்கடல்
  4. வைகறை மேகங்கள்
  5. வடுகபட்டி முதல் வால்கா வரை
  6. மௌனத்தின் சப்தங்கள்
  7. இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
  8. கருவாச்சி காவியம்
  9. கள்ளிக்காட்டு இதிகாசம்
  10. வைரமுத்து கவிதைகள்

..இந்தப் பத்தும் என் வீட்டு புத்தக அலமாரியில் இடம் பிடித்திருக்கின்றன.

அவ்வருடம் சென்னையிலிருந்து ஜெர்மனிக்கு திரும்பும் போது லுஃப்தான்சா விமானத்தில் கருவாச்சி காவியம் நூலைத்தான் வாசித்துக் கொண்டே வந்தேன். அந்தப் பத்து மணி நேரங்களும் வானில் பறக்கின்றோம் என்பதை மறந்து  இந்த நூல்  தமிழகத்தின் தேனி பகுதிக்கு என்னை அழைத்துச் சென்று விட்டது.

இந்த நூலின் பாயிரத்தில் வைரமுத்து இப்படி எழுதுகின்றார்.
"டைக்ரிஸ் யூப்ரடிஸ் நதிக்கரைகளிலும், நைல்நதி தீரத்திலும், சிந்து சமவெளி ஆழத்திலும் வாழப்பட்ட மனித வாழ்க்கையைத் துழாவு துழாவென்று துளையிட்டுத் துருவுகின்ற ஆய்வாளர்கள் வையை ஆற்றங்கரையில் வாழப்பட்ட வாழ்க்கையை ஆவணப்படுத்தியதுண்டா? அப்படிப்பட்ட பண்பாட்டு ஆவணத்தின் கலை வடிவம்தான் கருவாச்சி காவியம் "

இப்படித்தான், எங்கெங்கோ உள்ள நாகரிகத்தையும் வரலாற்றுச் செழுமைகளையும், அங்கு உள்ள பண்பாட்டு மாண்புகளையும் பேசும் நம்மில் பலருக்கு நமது ஊரின் சிறப்பு அறியாதிருக்கின்றோம். நமது ஊரின் வரலாற்று சிறப்புக்களை அறிந்தோமா என்பது ஒரு புறமிருக்க, நம்மோடு வாழும் சக மக்களின் வாழ்வியல் கூறுகளை மதிக்கும் மனோ நிலையை வளர்த்திருக்கின்றோமா என்பதே ஒரு கேள்வி தானே!

வைரமுத்து அதே பகுதியில்  மேலும் சொல்கின்றார்.
"ஒரே பண்பாடு ஒரே நாகரிகம் மானுடப்பரப்பில் இதுவரை இல்லை. பூமிக்கெல்லாம் ஒரே பகலைச் சூரியன்கூடக் கொண்டுவர முடியவில்லை. கலாசாரக் கூறுகள் இனத்துக்கு இனம் மட்டுமல்ல இடத்துக்கு இடம்கூட வேறுபடுகின்றன."

உண்மைதான்.  உலக நாகரிகங்களைப் பார்க்கும் போது எத்தனை எத்தனை முயற்சிகளை மனிதர்கள் மேற்கொள்கின்றன. எவ்வகை வேறுபாடுகளுடன் அந்தந்த நாகரிகங்கள் உருவாகி நின்று நிலைத்து பின் சிலகாலங்களுக்குப் பின் மடிந்தன, மறைந்தன என்பதை அகழ்வாய்வுகளும் ஆவணங்களும் அறிக்கைகளும் நமக்குக் காட்டுகின்றன.

தொடர்ச்சியாக .." பண்பாட்டு அடையாளங்களும் ஆவணங்களும் மெல்ல  மெல்லத் திரிந்தோ அழிந்தோ வருகின்றன. விரைந்த நகர்மயமும் பூமியில் விழும் எரிகல் வேகத்தில் நிகழும் உலகமயமாதலும் பழைய பண்பாட்டு அடையாளங்களைச் சுவடே இல்லாமல் துடைத்தெறியப் போகின்றன. அந்த அழிமானங்களுக்கிடையில் அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பும் படைப்புக்களுண்டு" என்றும் வைரமுத்து வலியுறுத்துகின்றார்.

ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருந்த மன்னர்களோ தங்கள் செய்திகளையெல்லாம் கல்வெட்டுக்களாகக் கோயில் சுவர்களில் எழுதிவிட்டும், செப்புப் பட்டயங்களில் எழுதுவித்தும் அவர்கள் புகழை பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் நாம் நினைத்துப் பார்க்கும் வழியைச் செய்து வைத்துச்சென்றிருக்கின்ரனர். கல்வி கற்ற சான்றோரோ இலக்கியங்களையும் நீதிகளையும் பனை ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துச் சென்றனர். சாமானிய மக்களின் வாழ்க்கை நிலையைக் கூறும் வரலாற்றினை யார் எழுதினர்? சாமானிய மக்களின் வாழ்வும், தாழ்வும்,  வலியும், இன்பமும் முக்கியத்துவம் பெறாமலே எழுத்து வடிவம் பெறாமலேயே சென்றன என்பதை நினைத்துப் பார்க்கும் போது நாம் இழந்தவை தான் எத்தனை எத்தனையோ என மனம் பதைக்கின்றது.

இப்படி   சிற்றூர்களின் சின்னச் சின்ன கிராமங்களில் படிந்திருக்கும் பண்பாட்டு செழுமைகளையெல்லாம் ஆவணப்படுத்தி பாதுகாப்பதும் எழுத்தாளர்களின் கடமை என்பதை தனது கருவாச்சி காவியத்தின் பாயிரத்தில் சொல்லியிருப்பது பாராட்டுதலுக்குறிய ஒரு விசயமாக நான் காண்கின்றேன்.

அன்று விமானப்பயணத்தில் கருவாச்சி காவியத்தை முழுமையாக வாசித்து முடித்தேன். மதுரையின் ஒரு சிறு கிராமத்தில் நான் இந்த கருவாச்சி காவியத்தினூடாக வலம் வந்தேன். இயல்பாக மக்களின் பேச்சு. கிராமத்து வழக்குகள், பஞ்சாயத்து, கல்யாணம், சண்டைகள், பொறாமை, ஏமாற்றம், வஞ்சம், துன்பம், சின்ன சின்ன சந்தோஷங்கள், ஆடுகள், மாடுகள், கருவேலம் முட்கள், மனிதர்கள், கிழவர்கள், கிழவிகள், பிறப்பு, இறப்பு என முழுமையாக என் மனம் அந்த நூலுக்குள் ஒன்றிப்போயிருந்தது. படித்து முடித்தபோது கணத்த மனத்துடன் கருவாச்சியை நினைத்தவாறே சில நிமிடங்கள் என்னை மறந்திருந்தேன்.

இந்த நூலில் மக்கள் பேசும் நாட்டார் வழக்கிலேயே தன்  எழுத்தின் ஊடாக மனக்கண்ணில் முழு நிகழ்வுகளையும் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார் வைரமுத்து என்று சொன்னால் அது பொருந்தும். மக்கள் வாழ்க்கை தானே இலக்கியம் உருவாக ஆதாரமாகின்றது!
இராஜவம்சத்து கதைகள் மட்டும் தான் இலக்கியம் என்ற அதிகாரத்தைப் பெற வேண்டுமா?
கிராமத்து கருவாச்சிகளின் வாழ்க்கை நிகழ்வுகளுக்கு இலக்கியத்தன்மை இருக்கக்கூடாதா என்ன ? என்ற கேள்வியை நம் முன்னே எழுப்புகின்றது இந்தக் காவியம்.

வைரமுத்துவின் பல பாடல்களைக் கேட்டிருக்கின்றேன். அவரது கவிதைகளில் சில வாசிக்கும் போது மனதில் பளிச்சென்று ஒரு மின்னலை தோற்றுவிப்பதை அனுபவிப்பதுண்டு. அப்படி சில கவிதைகளை அவரது கவிதை தொகுப்பு நூலில் உள்ளன.

இலையுதிர் காலமும்
வசந்தமும் இங்கே
கிளைகளுக்குத்தான்
வேர்களுக்கல்லவே

நான்கே வரிகளில் சிந்தனைக்கு விருந்து இந்தக் கவிதை

பறவைக்கும் விலங்குக்கும்
மரம் தரும் உத்தரவாதம்
மனிதர் நாம் தருவோமா?

கொள்கை பிடிப்பற்ற மனிதர்களோடு ஒப்பிடும் போது மரங்கள் சிறப்பல்லவா?

தற்கொலையை நாடிச் செல்லும் ஒரு இளைஞனைப் பார்த்து இப்படிச் சொல்கின்றார்.

தம்பீ

சாவைச்
சாவு தீர்மாணிக்கும்
வாழ்க்கையை
நீ தீர்மானி

புரிந்து கொள்

சுடும்வரைக்கும்
நெருப்பு
சுற்றும் வரைக்கும்
பூமி

போராடும் வரைக்கும் மனிதன்

நீ மனிதன்.


வைர வரிகள் அல்லவா? கவிப்பேரரசு வைரமுத்துவுடன் நிகழ்ந்த அச்சந்திப்பும் உரையாடலும் எனது தமிழ் மரபு அறக்கட்டளை பயணங்களில் நட்சத்திரப்பூப்போல மிளிரும் இனிய அனுபவங்களாக அமைகின்றன!

Wednesday, March 8, 2017

48. வீரவிளையாட்டு - தமிழகத்திலும் ஸ்பெயினிலும் எப்படி மாறுபடுகின்றன



வாசித்தோ, தொலைக்காட்சியில் பார்த்தோ, ஏனைய பொது ஊடகங்களில் பார்த்தோ தெரிந்து கொள்வதை விட நேரடியாகப் பெறும் அனுபவங்கள் தரும் பாதிப்பு மிக ஆழமானதாக அமைந்து விடும். இவ்வகை அனுபங்கள் பல நாட்கள், வாரங்கள் மாதங்கள் வருடங்கள் என மனதை விட்டு அகலாமலும் அமைந்து விடும். எனக்கு மனதைக் கவரும் ஏதாவதொரு விஷயம் ஒன்றைப் பற்றி நான் கேள்விப் பட்டால் என் மனம் அதனைப் பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என தவியாய் தவித்துக் கொண்டிருக்கும். ஆவல் ஒரு புறமிருக்க அதனை நேரடியாகப் பார்த்து அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனதில் எண்ணம் தோன்றி ஞாபகப் படுத்திக் கொண்டேயிருக்கும். தக்க வேளை அமையும் போது இவ்விதம் அமைந்த தேடல்களை நான் சென்று பார்த்தோ, நேரடியாக உணர்ந்தோ இவ்வனுபங்களைப் பெற்று அவற்றைப் பற்றி சிந்திப்பதை வாய்ப்பமையும் போதெல்லாம் ஒரு வழக்கமாக வைத்திருக்கின்றேன்.

ஜல்லிக்கட்டு, காளை விரட்டு, மஞ்சி விரட்டு போன்ற தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களைப் பற்றி அறிந்திருக்கின்றோம். அண்மைய ஜல்லிக்கட்டுக்கான மக்கள் போராட்டம் காளை அடக்குதல் எனும் விளையாட்டு தமிழர் பாரம்பரியத்தில் உயரிய இடத்தைப் பெற்றிருப்பதை மேலும் உறுதி செய்வதாகவே அமைந்தது. என் இளம் பிராயத்து மலேசிய வாழ்வில் ஒரு முறை இவ்வகை காளை விரட்டு போட்டி ஒன்றைப் பார்த்த ஞாபகம் மனதில் நிழலாடுகின்றது. காளை மாட்டை நன்கு குளிப்பாட்டி கொம்பிற்கு வர்ணம் தீட்டி கழுத்தில் மணி கட்டி, கொம்புகளில் பூக்களைச் சுற்றி அழைத்து வந்து பின்னர் இளைஞர்கள் அந்தக் காளை மாட்டை விரட்டிப் பிடிப்பது போன்ற வீர விளையாட்டைத் தைப்பொங்கல் காலத்தில் நிகழும் சில பாரம்பரிய நிகழ்வுகளில் பார்த்திருக்கின்றேன்.

தமிழர் வாழ்வியலில் அதிலும் விவசாயிகளின் வாழ்வில் பசுவும் காளையும் குடும்ப உறுப்பினர்களாகத்தான் பார்க்கப்படுகின்றன. வீட்டு விலங்குகளான இவை குடும்பத்தாரோடு அன்னியோன்னியமாக ஒன்றித்து வாழ்வதை இன்றும் கூட கிராமங்களில் காண்கின்றோம். சிறு பெண்கள் கூடப் பெரிய காளை மாட்டினை இழுத்துக் கொண்டு செல்லும் இனிய காட்சிகள் தமிழக கிராமங்களில் இயல்பானதுதான். இதற்கு முற்றிலும் மாறுபட்ட கொடூரமான காளை விரட்டும் வீர விளையாட்டினை ஸ்பெயினில் இன்றும் காண்கின்றோம்.

ஐரோப்பிய சூழலில் பால், பாலைக்கொண்டு தயாரிக்கப்படும், சீஸ், பட்டர்மில்க், தயிர் வகைகள் பயன்பாடு என்பது மிக ஏராளம். தற்கால சூழலில் ஐரோப்பிய மக்களின் அன்றாட உணவுத் தேவையில் பால், பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் இல்லாத ஒரு நிலையை மக்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது. அந்த அளவிற்குப் பால் மக்கள் வாழ்வில் அத்தியாவசியப் பொருளாகி விட்டது. இதனால் மாடுகள் இங்கே மிகப் பிரபலமான விவசாயிகளின் வளர்ப்பு மிருகங்களில் மிக முக்கியமான ஒன்றாகின்றது.

இப்படி அடிப்படை உணவுத் தேவைக்கு ஆதாரமாக அமையும் மாடுகள் சம்பந்தப்பட்ட திருவிழாக்கள் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் நிகழ்கின்றன. சுவிஸர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, ரோமானியா, டென்மார்க், ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் சில நாடுகளிலும் ஏதாவது ஒரு வகையில் பசு மாடுகளையோ அல்லது காளை மாடுகளையோ முக்கியப்படுத்தும் ஏதாவது ஒரு திருவிழா வருஷத்தில் ஒரு முறையாவது இடம்பெறுவதுண்டு. இவ்வகைத் திருவிழாக்களின் போது பாரம்பரிய உடையணிந்து மக்கள் இத்திருவிழாக்களில் கலந்து கொள்வதும், கேளிக்கை விஷயங்கள் இடம்பெறுவதும் வாடிக்கை.

மற்ற நாடுகளிலிருந்து வித்தியாசமாக ஸ்பெயின் நாட்டில் காளை மாடுகள் சம்பந்தப்பட்ட வீர விளையாட்டினைப் பார்க்கலாம். Corrida de Torros (கொரிடா டி டோரோஸ்) என ஷ்பேனிஷ் மொழியில் அழைக்கப்படும் இவ்வீர விளையாட்டு மிக கொடூரமான ஒரு விளையாட்டு என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் இப்பாரம்பரிய விளையாட்டு ஸ்பெயின் நாட்டின் பல நகரங்களில் குறிப்பிட்ட சில நாட்களிலோ திருவிழாக்களின் போதோ நடைபெறுகின்றன.

இந்தப் பாரம்பரிய வீர விளையாட்டைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏதேச்சையாக நான் அறிந்திருந்த போதிலும் 2012ம் ஆண்டில் எனக்கு இந்த விளையாட்டினை நேரில் காணும் வாய்ப்பு அமைந்தது. பல மாதங்களாக ஸ்பெயின் நாட்டின் தலைநகரமான மட்ரிட் நகரில் எனக்குப் பணி நிமித்தம் ஒவ்வொரு வாரமும் இருக்கின்ற சூழல் அமைந்தது. 13 -19 மே மாதம் மட்ரிட்டின் (ஸ்பெயின் தலைநகர்) சிறப்பு திருவிழா காலம். இதற்காக ஏற்பாடாகி ஒவ்வொரு நாளும் கலைவிழாக்கள், நடனம், நாடகம், பாரம்பரிய விளையாட்டு, வான வேடிக்கை எனப் பல விஷயங்கள் நடந்தன. அதில் கொரிடா டி டோரெஸ் காளை அடக்கல் போட்டியும் நிகழ்ந்தது. இது பாரம்பரிய விளையாட்டுக்களில் தலையாய ஒன்றானதாகவும் மிக உயர்வான கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட ஒரு விளையாட்டாகவும் ஷ்பேனிஷ் மக்களால் கருதப்படும் விளையாட்டு.கொரிடா டி டோரெஸ் நடைபெற்ற ப்லாஸா டி டொரெஸ் மண்டபம் ஸ்டேடியம் போன்ற அமைப்பில் அமைந்தது. அலுவலகப் பணி முடிந்து நிகழ்ச்சிக்கு என் ஷ்பேனிஷ் நண்பர்களுடன் சென்றிருந்தேன். 14 யூரோவிலிருந்து 1,200 யூரோ வரை டிக்கெட்கள் விற்பனைக்கு இருந்தன. அன்று இருந்த மக்கள் கூட்டத்தைப் பார்க்கையிலே ஏறக்குறைய 20,000 பேர் இங்கு இவ்விளையாட்டைப் பார்க்க வந்திருந்தனர் என்பது தெரிந்தது.

இது விளையாட்டல்ல.. விபரீதம் என்பதை உள்ளே சென்று நண்பர்கள் விளக்க ஆரம்பித்ததும் தான் தெரிந்து கொண்டேன்.காளை மாட்டை அடக்கித் தள்ளுவது இந்த விளையாட்டின் நோக்கமல்ல. மாறாக அக்காளை மாட்டைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் போராடி கொல்வது தான் நோக்கம். ஒரு விளையாட்டின் போது 6 காளை மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக என வர ஒவ்வொன்றையும் அடக்கி அதைக் கொல்பவர்கள் வீரர்களாகக் கருதப்படுகின்றனர். நம் தமிழர் பாரம்பரியத்தில் உள்ள ஜல்லிக்கட்டிற்கும் இந்த விளையாட்டிற்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கின்றது, பாருங்கள்!

காளை மாடு முதலில் வரும் போது அது ஓடிவரும் வேகம், அதன் தலையைத் திருப்பிப் பார்க்கும் விதம் இதனை வைத்தே இது வீரம் மிகுந்த அல்லது வீரம் குறைந்த மாடு என்று மக்கள் புரிந்து கொள்கின்றனர். வீரம் குறைந்த மாடு என்றால் ஷ்பேனிஷ் மக்கள் விசில் அடித்தும் கூக்குரலிட்டும் கேலி செய்கின்றனர். ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் இதில் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.முதலில் வரும் காளை அதனை எதிர்த்து போராட நிற்கும் 5 பேரை பார்த்து மோதத்தொடங்குகின்றது. இந்த மோதுதலின் போதே இந்தக் காளை வீரம் நிறைந்ததா, அல்லது மிகச் சாதுரியமானதா, அதன் போரிடும் தன்மை என்ன என்பதை இந்த 5 விளையாட்டாளர்களும் பார்த்து அறிந்து கொள்கின்றனர். சிறிது நேரம் இந்த மோதல் நடைபெறுகின்றது. ஏறக்குறைய 5ம் நிமிடத்தில் 2 பிக்காடோரஸ் (Picadores இவர்கள் இரும்புக் கவசத்தால் சுற்றிலும் கவசம் அணியப்பட்ட குதிரையில் அமர்ந்து வருபவர்கள்) மைதானத்திற்கு உள்ளே நுழைந்து காளையை அடக்க வருவர். ஒருவர் தூரத்திலேயே நின்று கொள்ள ஒருவர் மாத்திரம் இந்தப் போராட்டத்திற்கு தயாராவார்.

இதுவே இந்தக் காளையைக் கொல்லும் போராட்டத்தின் முதல் பகுதி. இதனை ஷ்பேனிஷ் மொழியில் Tercio de Varas என்று அழைக்கின்றனர். Tercio என்பதன் பொருள் இறப்பு என்பது. ஆகக் காளைமாட்டின் மீதான தாக்குதலின் முதலாம் பகுதி இது எனலாம்.
பிக்காடோரெஸ் குதிரையின் மேலமர்ந்து இடது கையில் குதிரையைப் பிடித்துக் கொண்டு வலது கையில் உள்ள ஈட்டியால் தன்னை நோக்கித் தாக்க வரும் காளைமாட்டினை ஒரே தாக்குதலில் நடுமுதுகில் குத்தித் தாக்குவார். இந்தத் தாக்குதலைச் செய்ய மிகுந்த பலம் தேவை. இதனை எதிர்த்து காளைமாடு உடனே குதிரையை முட்டி பிக்காடோரெஸை தொடர்ந்து தாக்கும். இது மிகப் பயங்கரமான ஒரு நிலை. சுற்றிலும் இரும்புக் கவசம் போடப்பட்டும் கண்கள் மூடப்பட்டும் குதிரை இருப்பதால் அதற்குச் சுற்றிலும் நடக்கும் நிகழ்வைப் பற்றிய எந்த பிரக்ஞையும் இருக்காது. ஆனால் பிகோடோரெஸ் லாவகமாக இந்தத் தாக்குதலைச் சமாளித்து மாட்டை பலம் இழக்கச் செய்து விடுவார். இத்துடன் இவரது பணி முடிய இவர் வெளியே சென்று விடுவார். தனித்திருக்கும் காளை மாடு தன்னைக் கொஞ்சம் சுதாகரித்துக் கொள்ள முனைந்தாலும் கூட ஈட்டித் தாக்கியதால் இரத்தம் முதுகிலிருந்து வழிய அது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.

இரண்டாவது கட்டமாக மூன்று பண்டரிலாஸ் இக்காளையைத் தாக்க வேண்டும். இதற்கு Tercio de Banderillas என்று பெயர்.  கைகளில் மறைக்கும் துணி இல்லாமல் இரண்டு கூர்மையான ஈட்டியைத் தாங்கிக் கொண்டு ஓடிவந்து தக்க சமயத்தில் ஒருவர் பின் ஒருவராகக் காளையின் முதுகில் ஈட்டியைப் பாச்சி அதனை நோகச் செய்வர். இது காளையின் தோள் பகுதி கழுத்துப் பகுதிகளை வலிமை இழக்கச் செய்து விடும். இந்த நேரத்தில் காளை எதிர் தாக்குதல் நடத்தினால் நேருக்கு நேர் இருக்கும் பண்டரிலாஸ் நிச்சயமாகக் கொம்பில் முட்டி இறக்க நேரிடும். இது அவ்வளவு பயங்கரமான ஒரு தருணம்.

மூன்றாம் பகுதி Tercio de Muerte எனப்படுவது. இதன் பொருள் இறப்பின் மூன்றாவது பகுதி எனக் கொள்ளலாம்.இந்தப்பகுதியின் போது அக்காளையுடன் ஒரே ஒரு மெட்டடோர் (இவர் தான் தானே ஒரு காளையைக் கொல்வதாக உறுதி எடுத்துக் கொண்டு சபையை வணங்கி அவர்களின் கைதட்டல் ஆரவாரத்தை ஏற்றுக் கொண்டு போட்டியிட வருவார். காளையைக் கொல்லும் வரை இவரே ஒருவராகப் போராட வேண்டும். காளையை அடக்கச் சிவப்பு நிறத்துணியை அதன் கண்முன்னே காட்டி அழகிய நடையில் அதனை தாக்கச் செய்வார் இந்த மெட்டாடார். உண்மையில் காளைமாடு வர்ணங்களைக் கண்டு எதிர்ப்பதில்லை. மாறாக அசைவுகளே மாட்டின் எதிர்த்துத் தாக்கும் தன்மைக்குக் காரணமாகின்றன. ஆனால் இன்றும் பலர் சிவப்பு வர்ணங்களைக் கண்டால் காளை மாடு ஆத்திரம் கொண்டு தாக்கும் என்ற தவறான புரிதலைக் கொண்டிருக்கின்றனர். இந்தப் போராட்டத்தில் மெட்டாடார் காளைமாடு இருவருமே காயங்களுக்குள்ளாவர்.

இந்த மெட்டாடார் ஏறக்குறை 10 நிமிடங்கள் வெவ்வேறு வகையில் காளையை எதிர்த்துப் போராடி, தனக்கு அடங்கச் செய்து பின்னர் தக்க சமயம் வருகையிலே ஒரு கூர்மையான நீளமான வாளால் அக்காளை மாட்டை முதுகில் குத்துவார். ஒரு அனுபவம் நிறைந்த வீரர் என்றால் முதல் தாக்குதலிலேயே அந்த வாள் முதுகில் பாய்ந்து நேராக இருதயத்தைத் தாக்கி மாட்டினை விழச் செய்ய வேண்டும். இப்படிச் செய்பவர் மிகச் சிறந்த வீரராகக் கருதப்பட்டு பார்வையாளர்களால் கூக்குரலிடப்பட்டும் விசில் அடித்தும் பாராட்டப்படுவார்.
கீழே அயர்ந்து விழும் காளை உயிரை விட ஒரு 4 குதிரைகள் பூட்டிய வண்டி மைதானத்திற்குள் நுழையும். பார்வையாளர்கள். காளையை அடக்கிய மெட்டாடோர் மிகச் சிறப்பாக போராடியிருக்கின்றார் என நினைத்தால் வெள்ளை நிறக் கைத்துண்டால் விசிறிக் கூவ நிகழ்ச்சிக்குப் பிரத்தியேகமாக வந்திருக்கும் ஆளுநர் அதனை ஏற்று அந்த மெட்டாடோரின் புகழை மேலும் பெரிதாக்க இறந்த அந்த மாட்டின் ஒரு காதையும் அதன் வாலையும் அந்த மைதானத்திலேயே வெட்டித் தர அனுமதி அளிப்பார். இது மிகப் பெரிய ஒரு சம்பிரதாயமாகக் கருதப்படுகின்றது.

இத்தகைய பரிசு பெற்றவர்கள் மிகச் சிறந்த மெட்டாடோர்களாக மக்களால் அங்கீகரிக்கப்படுகின்றனர்.ஆக மொத்தம் 25 நிமிடத்திற்குள் ஒரு காளையை அடக்கிக் கொன்று விடுகின்றனர். இவ்வகையில் ஒரு விளையாட்டின் போது 6 காளை மாடுகள் அடக்கிக் கொல்லப்படுகின்றன. இந்த கொரிடா டி டோரோஸ் காளை மாடுகளைத் துன்புறுத்தும் ஒரு கொடூரமான விளையாட்டு என்ற அடிப்படையில் பல அமைப்புக்கள் இந்த விளையாட்டிற்குத் தீவிர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஸ்பெயினிலேயே பல பகுதிகளில் இவ்விளையாட்டு நடத்தப்படுவதில்லை. உதாரணமாக கட்டலானியா பகுதிகளில் இது 2011ம் ஆண்டிலிருந்து தடைசெய்யப்பட்ட விளையாட்டாகிவிட்டது.


தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாகிய ஜல்லிக்கட்டு இளைஞர்களின் வீரத்தையும் காளையின் வீரத்தையும் எடை போடுவதாகத்தான் அமைகின்றதே தவிர காளை மாட்டினை துன்புறுத்தும் ஒரு நிகழ்வல்ல. நமது வீர விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு தொடர்ந்து சிறப்பாக நடைபெறவேண்டும். தமிழர் மரபின் வீர விளையாட்டுக்களின் ஒரு அங்கம் தான் ஜல்லிக்கட்டு என்பதைப் புரிந்து ஆதரிப்போம்!. 

Wednesday, March 1, 2017

47. நடுகற்கள்




நடுகற்களா?
என்ன அவை?
என்ற கேள்வி மலேசிய சூழலில் பலருக்கும் எழலாம். தமிழக நிலப்பரப்பில் இன்றும் கிடைக்கின்ற புராதனச் சின்னங்களில் ஒன்று தான் நடுகற்கள் எனப்படுபவை.

பண்டைய தமிழர் வரலாற்றில் வீரச்செயல் புரிந்தோரை மக்கள் காலந்தொரும் நினைத்திருக்கும் வகையில் அவர்கள் செயலைப் பெருமைப்படுத்தும் நோக்கத்துடன் அவ்வீரனது சிற்பத்தைக் கல்லில் செதுக்கி வைப்பார்கள். இன்று தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இவை காணக்கிடைக்கின்றன. பரவலாக ஆங்காங்கே இவை நமக்குத் தென்பட்டாலும், இந்த நடுகற்கள் அனைத்தும் ஒரே தன்மையானவை அல்ல. பெரும்பாலானவை ஒரு வீரன் தன் ஒரு கையில் வாள் ஒன்றினை ஏந்தியவாறு நிற்பது போலவோ அல்லது ஒரு கையில் வாளினை ஏந்தி தன் மறு கையால் தன் தலையை உயரப் பிடித்து தன் கையாலேயே தன்னைப் பலிகொடுத்துக் கொள்ளும் காட்சியாகவோ அல்லது வீரனுடன் புலி ஒன்று இருப்பது போலவும் அதனை அவர் தாக்குவது போலவோ, அல்லது ஒரு குதிரையை வீரன் குத்துவது போலவோ அமைக்கப்பட்டிருக்கும். ஒரு சில நடுகற்களில் வீரனுடன் பெண் ஒருத்தியின் சிற்பமும் இணைக்கப்பட்டிருக்கும். சில நடுகற்களில் வீரனின் தலைப்பகுதியின் இரு பக்கங்களிலும் தேவதைகள் மலர் தூவுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கிக்கும்.

பெரும்பாலான நடுகற்களில் உருவங்கள் மட்டுமே காணப்படுகின்றன. ஆயினும் சில நடுகற்கள் எழுத்துக்களுடனும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அப்படிக் காணப்படுகின்ற எழுத்துக்கள் அவ்வீரனது பெயரைக் குறிப்பிடுவதாக அமைகின்றன.

இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலும் கொங்குமண்டலத்திலும் நாம் பரவலாக காணக்கூடிய வகையில் கிடைக்கின்ற நடுகற்களில் பல, ஒரு அரசனுக்காகப் போர் நிமித்தம் தன் உயிரைத் தானே பலிகொடுத்துக் கொண்ட வீரனுக்காக அமைக்கப்பட்ட நடுகற்களாகவே இருப்பதைக் காணலாம். தன்னைத் தன் அரசனின் வெற்றிக்காக மாய்த்துக் கொள்ளும் வீரன், கொற்றவை அல்லது காளி தெய்வத்தின் முன் தன் தலையைத் தானே தூக்கிப் பிடித்து தன் மற்றொரு கையில் ஒரு வாளை ஏந்தி தன் தலையை வெட்டி தன் தலைவன் போரில் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக் கொண்டு தன்னைப் பலி கொடுத்துக் கொள்வான். இத்தகைய நடுகற்கள் தலைபலி நடுகற்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. இவை நவகண்டம் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

இன்று நடுகல்லுக்கும் தெய்வச் சிற்பங்களுக்கும் வித்தியாசம் தெரியாது பலர் இருக்கின்றனர். நடுகற்களை ஏதாவது ஒரு வகையில் ஒரு வீரச்செயல் புரிந்த மனிதர்களுக்கான நினைவுச்சின்னம் என அறியாது, சிற்பத்தின் உருவத்தைக் கூட ஆராயாமல் இவற்றை வேடனாக வருகின்ற முருகன் சிலை என நினைத்துச் சிலரும், ஆஞ்சநேயர் என சிலரும், கருப்பண்ணசாமி என சிலரும் பெயர் வைத்து அழைத்து வழிபடுகின்றனர். நடுகற்கள் என்பவை யாது எனத் தெளிவு பிறந்தால் இத்தகைய சந்தேகங்கள் எழ வாய்ப்பிருக்காது.

இறந்தோருக்காக நடுகல் அமைக்கும் முறை பண்டைய தமிழர் மரபில் இடம் பெறும் ஒன்று. ஒரு நடுகல் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்ற இலக்கணத்தை தொல்காப்பியம் வரையறை செய்திருக்கின்றது.

வெவ்வேறு விதமான நடுகற்கள் பண்டைய தமிழகத்தில் வழிபாட்டில் இருந்தன. சில இன்னமும் வழிபாட்டில் தொடரப்படுகின்றன. அப்படிக் காணக்கிடைக்கின்ற வெவ்வேறு விதங்களில் அமைந்த நடுகற்களைப் பற்றி சில தகவல்கள் தெரிந்து கொள்வதும் நமக்குச் சுவாரசியமான அனுபவமாகத்தானே அமையும்.

எனது ஒவ்வொரு ஆண்டு தமிழகத்துக்கான வரலாற்றுப் பயணங்களிலும் நான் தேடிச்செல்லும் இடங்களில் ஆங்காங்கே மாறுபட்ட நடுகற்களைப் பார்த்ததுண்டு.

மிகச் சாதாரணமாக உருவங்கள் யாதுமன்றி நெடிய கல் ஒன்று மட்டும் வைக்கப்பட்டு அதுவே வழிபாடு பொருளாக இருக்கும். இதுவும் ஒருவகை நடுகல் தான்.

நடுகற்களில் புலியுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்தவருக்காக எழுப்பப்படுவதை "புலி குத்திக் கல்" என வகைப்படுத்தி அழைக்கின்றார்கள். அண்மையில் திருப்பூர் மாவட்டம் கொடுவாய் எனும் சிற்றூரின் அருகே ஏறக்குறைய 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என அறியப்படும் புலிக்குத்திக்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. கிராமத்தில் சேதங்களை ஏற்படுத்திய புலியுடன் சண்டையிட்டு மரணமடைந்து விட்ட வீரனுக்காக அவனது தாயார் எழுப்பிய கல்வெட்டு இது. இந்த நடுகல்லில் மேலும் சிறப்பாக மேற்பகுதியில் 3 வரிகளில் ஒரு செய்தி கல்வெட்டாகப் பதியப்பட்டிருக்கின்றது. “கொடுவாயில் முத்து (ப்) புவன வாணராயன் மகன் முத்தனுக்குத் தாய் வெட்டுவித்த கல்“ என்பது தான் அச்செய்தி. பெரும்பாலான நடுகற்கள் கல்வெட்டுக்கள் இல்லாமலேயே அமைந்து விடுகின்றன. அதனால் இது யாருக்கு யாரால் எழுப்பப்பட்டது எனக் கண்டறிவதில் சிரமம் ஏற்படுகின்றது. ஆனால் இந்தக் குறிப்பிட்ட நடுகல்லில் எழுத்துக்கள் மிகத் தெளிவாக அமைந்திருப்பதனால் இதனை உருவாக்கியவரின் பெயரையும் எதனால் இது எழுப்பப்பட்டது என்ற காரணத்தையும் 700 ஆண்டுகளுக்குப் பின்னரும் நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.

இதே போல கரூர் அருங்காட்சியகத்திலும் ஒரு புலிக்குத்திக் கல் ஒன்றினை நான் எனது அண்மைய பயணத்தில் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. பெண்ணையாற்றின் கரையில் ஆங்காங்கே கிடைக்கின்ற நடுகற்களில் புலிக்குத்தி நடுகல் ஒன்றும் இருக்கின்றது. இதனை எனது 2012ம் ஆண்டு பயணத்தில் பார்த்து புகைப்படம் எடுத்து வந்தேன்.

நடுகல்லில் மற்றொரு வகையும் உண்டு. கரூர் அருங்காட்சியகத்தில் இருக்கின்ற ஒரு நடுகல் வீரன் ஒருவன் தன் கையில் ஒரு வாளைப் பிடித்து குதிரையைத் தாக்குவது போல அமைந்திருக்கின்றது. இதனை "குதிரைக் குத்தப்பட்டான் கல்" என அழைக்கின்றனர். ஒரு போரில் அல்லது ஏதாவது ஒரு பிரச்சனையைத் தீர்க்க குதிரையை வாள் கொண்டு தாக்கிய வீரன் இறந்து போய்விடுகின்ற நிலையில் அவன் நினைவாக எழுப்பப்படுவது தான் இந்த வகை நடுகல்.

2012ம் ஆண்டு நான் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குச் சென்றிருந்த போது பெண்ணையாற்று நதிக்கரையோரம் அமைந்திருக்கும் பெண்ணேஸ்வரர் சிவாலயத்திற்குச் சென்றிருந்தேன். இக்கோயிலின் வாசலிலேயே சில நடுகற்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. வெளியே சாலையின் இரு புறமும் நடுகற்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்த்துக் கொண்டே வந்தோம். சாலையின் வலது புறத்தில் உள்ள அடர்ந்த புதர் பகுதிகளில் பராமரிப்பு அற்ற நிலையில் ஆங்காங்கே நடுகற்கள் புதர்ச்செடிகளால் மூடிய படி கிடந்தன. அப்படி புதர் மூடிய ஒரு நடுகல்லைச் சென்று பார்த்து புகைப்படம் எடுப்போம் என நாங்கள் அருகில் சென்று சிறு கொடிகளையும் செடிகளையும் இழுத்து அப்புறப்படுத்தி அந்த நடுகல்லைப் பார்வையிட்டோம். அது ஒரு வீரன் வாளுடன் நின்ற வடிவில் அமைக்கப்பட்ட ஒரு நடுகல். கிராம மக்களுக்காக வீரச்செயல் புரிந்து மரணம் எய்திய அந்த வீரன் தெய்வமாக வழிபடப்படுவதைக் காட்டும் ஒரு நடுகல் தான் அது. இந்த அழகிய நடுகல் புதர் மண்டி பாதுகாப்பற்ற நிலையில் காட்டுக்குள் கிடப்பது தான் கொடுமை. இத்தகைய புராதனச் சின்னங்களை மீட்டெடுத்துப் பாதுகாத்து வைக்க வேண்டியது அவசியமல்லவா?

அதே சாலையில் நாங்கள் மேலும் பயணித்தபோது சிறு ஓடை ஒன்றின் அருகே மக்கள் வழிபாட்டில் இன்றும் இருக்கும் ஒரு நடுகல்லைப் பார்வையிட்டோம். அதில் ஒரு வீரனோடு அவன் மனைவியும் இணைந்து செல்வது போலச் சிற்பம் செதுக்கப்பட்டிருந்தது. அப்பெண்ணின் கையில் ஒரு பானை இருப்பது போலவும் வீரனின் கையில் அவன் வாள் ஏந்தி நடப்பது போலவும் சிற்பம் அமைக்கப்பட்டிருந்தது. வழிபாட்டில் இடம்பெறுவதால் மஞ்சள் சந்தனம் குங்குமம் என அலங்கரிக்கப்பட்டு நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தது.

பெண்ணையற்றுக் கரை நடுகற்களுக்குப் பிரசித்தி பெற்ற பகுதியாக இருப்பது போல கொங்கு மண்டலத்தின் கரூர், சேலம் போன்ற பகுதியிலும் பல இடங்களில் நடுகற்கள் கிடைப்பதைக் காணலாம்.

கொங்குமண்டலத்தின் அந்தியூர் கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் மிகப்பிரசித்தி பெற்ற ஒரு கோயில். இங்கே கோயிலின் பின் பக்க கொல்லைப்புறத்தில் நவகண்டம் ஒன்றினை தற்செயலாக நான் காண நேர்ந்தது. கோயிலின் பழமையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது கோயில் குருக்கள் ஒரு நவகண்டம் ஒன்று கொல்லைப்புறத்தில் இருப்பதாகக் குறிப்பிட, உடனே அதை தேடிச் சென்றேன். கோயில் அலுவலகத்தில் விசாரித்த பின்னர் அவர்களும் அதனை எடுஹ்ட்து காண்பிக்க முன் வந்ததால் கொல்லைப்புரம் சென்று மண்ணிற்குள் கிடத்தி வைக்கப்பட்டிருந்த அண்டஹ் நவகல்லை திருப்பிப் பார்ஹ்ட்த போது வியந்தோம்.

மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு நவகண்டம் வகையிலான ஒரு நடுகல் அது. வீரனின் கையில் வாளுடன் தன்னை பலியிட்டுக் கொள்ளும் நிலையில் தன் மற்றொரு கையால் தலையைப் பிடித்தவாறு அமைக்கப்பட்ட சிற்பட்துடன் இந்த நடுகல் காட்சியளிக்கின்றது. இந்த நடுகல்லைப் பாதுகாக்கும் முயற்சியில் தற்சமயம் தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு பாதுகாவலர் குழு ஈடுபட்டுள்ளது.

இதே போல தமிழகத்தின் பல சிற்றூர்களில் பொதுமக்கள் கண்டுபிடிக்கும் நவகண்டங்கள் பற்றிய செய்திகள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின. வயல்களில் புதையுண்டு பாதிப்பகுதி மட்டுமே தெரியும் வகையில் உள்ள நவகண்டங்களைப் பார்த்தவர்கள்புகைப்படங்கள் எடுத்துப் பகிர்ந்து கொள்கின்றனர். சாலை ஓரத்தில் கவனிப்பாரற்று சிதிலமடைந்து போன நடுகற்களும் கிடைக்கின்றன. இவை தமிழர் புராதனச் சின்னங்கள். இத்தகை புராதனச் சின்னங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் சீறிய முறையில் மேற்கொள்ளப்படும் போது விடுபட்டுப் போன பல வரலாற்றுச் செய்திகளை நாம் மீட்டெடுக்க வாய்ப்பு கிடைக்கும்!