Wednesday, March 30, 2016

7.எட்டயபுரம் ஜமீன் அரண்மனைக்குச் செல்வோமா?



வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரைச் சொன்னால் உடன் நம் மனதில் தோன்றும் இன்னொரு பெயர் எட்டப்பன். 

„எட்டப்பன் வேலை செய்து விட்டாயே“  என்று தந்திரமாக ஏமாற்றி பிறரைக் காட்டிக் கொடுப்பவர்களைப் பேசும் வழக்கம் நம்மில் சிலருக்கு உண்டு. தமிழர் நம் பேச்சு வழக்கிலும் சரி, எழுத்துக்களிலும் சரி „துரோகம்“ என்ற சொல்லைக் குறிக்க “எட்டப்பன் வேலை செய்து விட்டாயே“,  என்று எட்டப்பன் என்ற ஒருவரை சுட்டி குறிப்பிடுவது வழக்கமாகி விட்டது. எட்டப்பன் என்னும் ஜமீன்தார் வீரபாண்டிய கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்து ஒரு மாவீரன் தூக்கிலிட்டு கொலையுண்டு இறந்து போக  காரணமாக இருந்தார் என்றே பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றோம். இதற்கு முக்கிய காரணமாக அமைவது சிவாஜிகணேசன் நடித்து தமிழ்த்திரையுலகில் மாபெரும் வெற்றியைக் கண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் தான்.  

வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற பெயர் பொதுமக்கள் விரிவாக அறியாமல் இருந்த காலம்; 20ம் நூற்றாண்டின் ஆரம்பகாலம். “வீரப்பாண்டிய கட்டபொம்மன் நாட்டுப்புர பாடல்கள்“ வழி மட்டுமே இந்த பாளையத்துக் குழுத்தலைவனை எல்லோரும் அறிந்திருந்தார்கள். அப்பொழுது திரு.ம.பொ.சி என அழைக்கப்படும் திரு.ம.பொ.சிவஞானம் அவர்கள் கதை வசனம் எழுதி வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம்தான் இந்த பாளையத்துக்குழுத் தலைவனைத் தமிழர் இன வீரத்தலைவனாக மக்கள் மனதில் ஒரு தகவலைக் கொண்டு சென்று சேர்ப்பித்தது. இந்தக் கதை மக்களைச் சென்றடைய மிக முக்கியக் காரணமாக அமைந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் என்றால் மிகையில்லை. அவரது வசனமாகிய,

வரி, வட்டி, கிஸ்தி.... யாரை கேட்கிறாய் வரி... எதற்கு கேட்கிறாய் வரி...
வானம் பொழிகிறது.... பூமி விளைகிறது...
உனக்கேன் கட்டவேண்டும் வரி...

எங்களோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா? ஏற்றம் இறைத்தாயா?
அல்லது கொஞ்சி விளையாடும் எம்குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயா?
மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே?

என்பது பரவலாகி எல்லா தரப்பினரையும் ஈர்த்தது என்பதோடு வீரபாண்டிய கட்டபொம்மனை ஒரு மாவீரனாக மக்கள் மனதில் உருவாக்கி வைத்தது. கட்டபொம்மன் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்தவர்களில் ஒருவர் என்றாலும் அதில் குறிப்பிடப்படும் எட்டப்பனைப் பற்றி சொல்லப்படும் கதை திரிக்கப்பட்ட ஒரு கதை என்ற விசயத்தை வெளிப்படுத்தினார் தமிழகத்தில் எட்டயபுரத்தில் பிறந்து தமிழக அரசில் பல காலங்கள் சமூக நல உயர் அதிகாரியாக  பணியாற்றி ஓய்வு பெற்று தற்சமயம் அமெரிக்காவில் வாழும் அம்மையார் சீதாலட்சுமி அவர்கள். அவர் இந்த விசயம் தொடர்பாக எழுதிய தொடர்கட்டுரை தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின் தமிழில் தொடர்ந்து வெளிவந்தது. அக்கட்டுரையை வாசித்த போது இது பற்றி மேலும் எனக்கு மேலும் அறிந்து கொள்ள ஏற்பட்ட ஆவலை வெளிப்படுத்தியபோது ஒரு முறை நேராக எட்டயபுரம் சென்று ஜமீந்தார் மாளிகையைப் பார்த்து பேட்டி எடுத்து வருமாறு என்னைக் கேட்டுக் கொண்டார். நான்  இதன் அடிப்படையில் அவரது ஏற்பாட்டு உதவியோடு ஜமீந்தார் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு  எட்டயபுரம்  சென்று ஜமீந்தார் மாளிகையச் சுற்றிப்பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும் குறிப்புக்கள் எடுத்துக் கோண்டும் வந்து அவற்றை வெளியிட்டேன். அப்பதிவுகள் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2009-08-13-20-44-19 என்ற வலைப்பக்கத்தில் உள்ளன. 

எட்டயபுர ஜமீந்தார் பற்றியும் அவரோடு பேசப்படுகின்ற வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றியும் நான் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்குத் தமிழகத்தில் நமக்குக் கிடைக்கின்ற சில ஆதாரத்தரவுகளை ஆராயவேண்டியது மிக அவசியம். சினிமா படத்தை மட்டிலும் பார்த்து விட்டு இது தான் முழுமையான தமிழக வரலாறு என்று மாற்றிச் சொல்லிக் கொண்டிருந்தால் உண்மையான வரலாறு மறைந்து திரிக்கப்பட்ட கதைகள் உண்மையாகி விடும் நிலை ஏற்படும் என்பதோடு இது வரலாற்றுக்கு நாம் செய்யும் பிழையாகவும் அமையும் என்பதை மறக்கலாகாது.

கட்டபொம்முவின் வம்சத்தினர் இன்றைய ஆந்திர நிலப்பகுதியிலிருந்து தெற்கு நோக்கி பாஞ்சாலாங்குறிச்சிக்கு வந்தவர்கள். பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெறும் ஒரு வீரச்சம்பவம் இவர்கள் மனதை ஈர்க்க, அதுவே காரணமாகக் கொண்டு அங்கே தங்கி தங்கள் ஆட்சியை இவர்கள் விரிவாக்குகின்றனர். அந்தவகையில் தனது பாட்டனாருக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை எடுத்துக் கொள்கின்றார் வீரபாண்டிய கட்டபொம்மன். இது பற்றிய விரிவான தகவல்களை மேற்குறிப்பிட்ட வலைப்பக்கத்தில் வாசித்தறியலாம்.

எட்டயபுர ஜமீந்தார் வம்சத்தினரும் ஆந்திர நிலப்பகுதியிலிருந்து தெற்கு நோக்கி புலம் பெயர்ந்து வந்து எட்டயபுரத்தில் குடியேறியவர்கள் தாம். எட்டயபுர ஜமீந்தார் குடும்பத்தின் ஆரம்பகால வரலாற்றிலிருந்து கடந்த நூற்றாண்டு தகவல் வரை பதிவாக்கி வைத்திருக்கும் நூல் வம்சமணிதீபிகை என்பது. வம்சமணிதீபிகையின் மூலம் 1879ல் வெளிவந்துள்ளது.  இந்த நூல் கவிகேஸரி ஸ்ரீ ஸ்வாமி தீஷிதர் என்பவரால் முதலில் எழுதப்பட்டது. இந்த நூல் வாய்மொழிச் செய்திகளின் தொகுப்பாகவும், அரண்மனையில் பாதுகாப்பில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது என்பதும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூலை இக்கால தமிழ் நடையில் மாற்றி எழுதித்தர விருப்பம் கொண்டிருந்தார் எட்டயபுர வாசியான சுப்பிரமணிய பாரதியார். ஆனால் அது நடைபெறவில்லை. இச்செய்தியை இன்று நமக்குக் கிடைக்கின்ற புதிய பதிப்பில் பாரதி எட்டயபுர ஜமீந்தாருக்கு எழுதிய ஒரு கடிதமாகக் காண முடிகின்றது. 


அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னர், பாரதி எண்ணப்படி கடின தமிழ் நடையையும் பிழைகளையும் திருத்தி எளிய தமிழில் இதே நூலை  வெளியிட எண்ணம் கொண்டிருந்த திரு.இளசை மணியன் அவர்கள்  பலரிடம் இது பற்றி கலந்து பேசிய போது அதனை அப்படியே மாற்றமில்லாமல் பதிப்பிக்குமாறு நண்பர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதில் குறிப்பாக  தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் எவ்வித திருத்தமும் செய்யாமல் மூல நூலை அப்படியே வெளியிட வேண்டும் என வற்புறுத்திக் கூறியதன் அடிப்படையில் மாற்றங்கள் இன்றி இந்த நூலை பதிப்பித்துள்ளார் திரு.இளசை மணியம் அவர்கள். மறுபதிப்பு கண்டுள்ள வம்சமணி தீபிகை 2008ம் ஆண்டு திரு.இளசை மணியத்தினால் தொகுக்கப்பட்டு, தென்திசை பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்த நூலில் முதல் பிரகரணம் எட்டயபுரம் ராஜாக்களின் பரம்பரை விஷயங்களைப் பொதுவாகக் கூறுவதாக சிறு பகுதியாக மட்டுமே உள்ளது. இரண்டாம் பிரகரணத்திலிருந்து ராஜ வம்சத்தினரின் பெயர்கள் பட்டியலிடப்பட்ட தகவல் இருக்கின்றது. இந்த இரண்டாம் பிரகரணத்துக்கான இங்கிலீஷ் ஆண்டு 1304 என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆக 1304லிருந்து தொடங்கி இந்த ராஜ வம்சத்தினரைப் பற்றிய தகவல்கள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிலும் சிறப்பாக 13ம் பிரகரணத்திலிருந்து 37ம் பிரகரணம் வரை பாஞ்சாலங்குறிச்சி சண்டை தொடர்பான செய்திகள் இடம்பெறுகின்றன.  குறிப்பாக 1799ல் நிகழ்ந்த முதலாம் பாஞ்சாலங் குறிச்சிப் போர், 1801ல் நடந்த இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சி போர் பற்றிய செய்திகள் இப்பக்குதிகளில் உள்ளன. 

வம்சமணி திபிகை ஒரு நீண்ட வரலாற்றைக் கூறும் நூல். இதில் ஒவ்வொரு காலத்திய நிகழ்வுகளின் பதிவுகளும் இடம் பெறுகின்றன என்பதுதான் இந்த நூலின் தனிச் சிறப்பு. அந்த  வகையில் பாளையத்து குறுநில மன்னர்களில் ஒருவரான கட்டபொம்மன் காலத்து நிகழ்வுகளும் பதியப்பட்டிருக்கின்றன.  

இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ள சான்று கடிதங்கள் இவற்றிற்கு வலு சேர்ப்பனவாக உள்ளதுவும் தெளிவாகத் தெரிகின்றது.   அதன்படி பாஞ்சாலங்குறிச்சிப் போரின் போது அவரைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்ற பெறும் முயற்சியினை எட்டயபுர ஜமீந்தார் மேற்கொண்டிருந்தார் என்பதை மறுக்க முடியாது.  ஆனாலும் கட்டபொம்முவை பிடித்து கைது செய்து கொடுத்தது புதுக்கோட்டை மஹாராஜா விஜயரகுநாத தொண்டமான் பகதரவர்கள் என்பதும் இந்த நூலில் தெளிவாகக் காட்டப்படுகின்றது.  

ஆக, வரலாறு இப்படி இருக்கும் போது  வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படமோ கட்டபொம்முவை வீரனாக்கி எட்டப்ப ஜமீந்தாரை துரோகியாக்கி காட்டிவிட்டது என்பது ஒரு வரலாற்றுப் பிழை என்றே கூறவேண்டும்.

சரி, எட்டப்பன் என்பதற்கு என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளவும் பலருக்கும் ஆர்வம் இருக்கலாம்.

தமிழக நிலப்பரப்பில் எட்டயபுர அரச வம்சத்தின் காலம் கி.பி 803லிருந்து பதிவாகியிருகின்றது. இதனை Etaiyapuram - Past and Present நூலும் உறுதி செய்கின்றது. இந்த அரச வம்சத்தில் 11ம் பட்டமாகிய நல்லமநாயக்கர் காலத்திலிருந்து தான் இந்த அரசர்களுக்கு எட்டப்பன் என்ற அடைமொழி கிடைக்கின்றது.  ஆட்சி செய்த காலம்: 43 ஆண்டுகள். இவர் ஆட்சியை ஆங்கில வருடம் 1304ல் தொடங்குகின்றார். ஒரு கொடியன் ஒருவனை மல்யுத்ததில் வெற்றி கண்டு கொலை செய்துவிட அனாதைகளாகிப்போன அவனது எட்டு குழந்தைகளையும் இனி தானே வளர்த்து ஆளாக்குவேன் எனப் பொருப்பு எடுத்துக் கொண்டார் இந்த மன்னர் என்பதற்காக அவருக்கு சிறப்பு அடைமொழியாக எட்டு குழந்தைகளுக்கு அப்பன், எட்டப்பன் என்ற பெயர் வாய்த்தது.  

இந்த விசயங்களை இந்த நூலை வாசித்தும் எட்டயபுர ஜமீன் அரச மாளிகைக்கு நேரில் சென்றும் பார்த்தும் பேட்டிகள் எடுத்தும் அறிந்து கொண்டேன். நான் அறிந்து கொண்ட தகவல்களைப் புகைப்படமாகவும், கட்டுரைத் தொடராகவும் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் 2010ம் ஆண்டில் வெளியிட்டேன்.http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2009-08-13-20-44-19 என்ற பக்கத்தில் முழு தகவல்களும் அடங்கியுள்ளன.

எட்டப்பன் என்ற சொல்லைப் போல எத்தனை விசயங்கள் சரியான தகவல்களைத் தேடாமல் போவதாலும் மேம்போக்காக, நன்கு ஆராயமல் பேசுவதாலும், தமிழக வரலாறும் தமிழர் வரலாறும்  தவறாக பலரால்  பேசப்படுவது காலத்தின் கொடூரம் தான்!

Thursday, March 24, 2016

6. திருக்குறளுக்கு ஒரு நூலகம்



6. திருக்குறளுக்கு ஒரு நூலகம்.

திருக்குறள் அதிகமான உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு இந்திய நூல் என்ற பெருமையைக் கொண்டது. பள்ளி மாணவர்களிலிருந்து, கல்லூரி ஆசிரியர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என்று மட்டுமல்லாது சாதாரன மக்களும் அறிந்து போற்றும் ஒரு நூலாக திருக்குறள் விளங்குகின்றது.

உலகத்தனிச்சிறப்பு மிக்க நூல்களின் வரிசையில் இடம் பெறுகின்ற ஒன்றாகக் கருதப்படும் திருக்குறளுக்கென்றே தனியாக ஒரு நூலகம் ஒன்று தமிழகத்தின் சென்னையில் இருக்கின்றது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? 2006ம் ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளையின் களப்பணிக்காகத் தமிழகம் சென்றிருந்த போது இந்த நூலகத்திற்கு நேரில் சென்று பார்த்து வரும் வாய்ப்பினை உருவாக்கிக் கொண்டேன். அப்போது தமிழ் மரபு அறக்கட்டளையின்  செயலாளராக இருந்த,  மறைந்த திரு.ஆண்டோ பீட்டரும் என் உடன் வர, ஒரு நாள் காலை பொழுது  முழுவதும் இந்தத் திருக்குறள் நூலகத்தில் செலவிட்டு தமிழ் மரபு அறக்கட்டளைக்கான பதிவினை இங்கே மேற்கொண்டேன்.  அந்தப் பதிவுகள் புகைப்படங்களாக, ஒலிப்பதிவு கோப்புகளாக, வீடியோ பதிவாக விளக்கக் குறிப்புக்களாக தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில்http://www.tamilheritage.org/baskaran/baskaran.html என்ற பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றேன்.

திருக்குறளுக்கு மட்டுமென்றே ஒரு நூலகமா? என அய்யம் எழலாம். ஆம். இந்த நூலகம் மிகப்பிரத்தியேகமாக திருக்குறள், திருக்குறள் சார்ந்த நூல்கள், திருக்குறள் மொழிபெயர்ப்புக்கள், திருக்குறள் தொடர்பில் வெளிவந்த ஆய்வு நூல்கள், என்ற வகையில் அமைந்த நூல்களாகச் சேகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, பொதுமக்கள் வாசிப்பிற்கும் ஆய்விற்கும் பயன்படும் வகையில் அமைந்திருக்கின்றது என்பது இதன் தனிச் சிறப்பு.

இந்த நூலகத்தை உருவாக்கி அதனை பொதுமக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுத்தி வருபவர் யார் என்பதையும் இந்த நூலகத்தின் பின்னனி பற்றியும் தெரிந்து கொள்ள பலருக்கும் ஆர்வம் இருக்கலாம். பேராசிரியர். திருக்குறள் பாஸ்கரன் தான் இந்த அரும்பணியை செயலாற்றிக் கொண்டிருப்பவர்.  

மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து படிப்படியாக கல்வியில் சிறப்படைந்து தன் வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டவர் பேராசிரியர். திருக்குறள் பாஸ்கரன். 
 தென்காசியில் உள்ள திருக்குறள் கழகம் தான் இவரது திருக்குறள் மீதான பற்றையும் புலமையையும் அறிந்து போற்றி இவருக்குத் „திருக்குறள் பாஸ்கரன்“ என்ற பட்டப்பெயரை வழங்கி சிறப்பித்தது. தன் இளம் வயதில் குடும்ப சூழல் காரணமாகப் பல சிக்கல்களை அனுபவித்தாலும் கூட கல்வியில் கவனம் செலுத்தி மேண்மையடைந்து, அதன் வழியாகத் தன்னை உயர்த்திக் கொண்டு,  கல்லூரியில் ஒரு பேராசிரியராகப் பணியாற்றி பின்னர் கல்லூரியின் முதல்வராகவும் பணியில் உயர்ந்து, தமிழக கல்லூரி கல்வி மண்டல இயக்குனராகவும் பணியாற்றி பின்னர் ஓய்வு பெற்றார். 

தமது ஏழாம் வயதில் இயற்கை எய்திய தமது தாயாரின் நினைவு மலர் நூலை வாசிக்க நேர்ந்த போது,  தன்  தாயார் திருக்குறளைக் கற்று,  குறள் கூறும் நெறிப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு அமைய,  அந்த உந்துதலில் திருக்குறள் மீது தீராத ஒரு பற்று இவருக்கு ஏற்பட்டது. அதன் அடிப்படியில் தானே திருக்குறளைச் சிறப்பிக்கும் வண்ணம் நூலகம் ஒன்றினை அமைக்க வேண்டும் என்ற ஆவல் இவருக்கு எழ இந்த முயற்சியைத் தொடங்கியிருக்கின்றார். இவரது சேகரிப்பில் இருந்த நூல்களைக் கொண்டே முதலில் சிறிய அளவில் இந்த நூலக உருவாக்கம் நிகழ்ந்தது.

பொறியியல் பட்டம் பெற்று சென்னையில் பணியாற்றி வந்த  தன் ஒரே மகனான   கருணாகரனை துரதிஷ்ட வசமாக ஒரு சாலை விபத்தில் இவர் இழக்க நேரிட்டது. ஈடு செய்ய இயலாத இழப்பு அது. அந்த சோகத்தை வேறொரு வகையில் திருப்பி, தன் மகனின் நினைவாக இந்த நூலகத்தை மேலும் விரிவு படுத்தினார் திருக்குறள் பாஸ்கரன். முழுமையானதொரு  நூலகமாக இது  1992ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் முன்னூறு நூற்களுடன் மட்டுமே தொடங்கிய இந்த நூலகம் தற்சமயம் 3000க்கும் மேற்பட்ட  நூல்களின் சேகரிப்புடன் இருக்கின்றது. இரண்டு மாடி வீடான இந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தையும் முதல் மாடியையும் முழுமையாக நூலகமாக உருவாக்கியிருக்கின்றார் இவர். இரண்டாம் மாடியை தன் மகனின் நினைவு இல்லமாக உருவாக்கி அதில் மறைந்த தன் மகன் கருணாகரன் பயன்படுத்திய பொருட்களை காட்சிக்கு வைத்திருக்கின்றார். „குறளகம்“ என்ற இந்த நூலகத்தைக் கருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்“ என்று பெயரிட்டு பொதுமக்கள் பயனுறும் வண்ணம் செயல்படுத்தி வருகின்றார். 

இந்த நூலகத்தில் திருக்குறள் சார்ந்த,  குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உதாரணமாக
  • நாள்தோறும் திருக்குறளை மக்களுக்கு அறிவித்தல் எனும் நடவடிக்கை “நாள்தோறும் இன்று ஒரு குறள்“ என்ற தலைப்பில் சென்னையிலுள்ள அறிஞர் அண்ணா  கோபுரப்பூங்காவில் செயல்படுத்தப்படுகின்றது.
  • ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை  தோறும் காலை பத்து மணிக்கு குழந்தைகளுக்கான திருக்குறள் அறிமுக வகுப்பு நடைபெறுகின்றது.
  • தமிழ் மொழி ஆராய்ச்சி மாணவர்கள் இந்த நூலகத்தை தம் ஆய்வுகளுக்காக பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இளங்கலை, முதுகலை, முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் இங்குள்ள நூல்களை தங்கள் ஆய்வுக்கு பயன்படுத்டிக் கொள்ள இங்கே வந்து இருந்து வாசித்து குறிப்பெடுத்துச் செல்கின்றனர்.
  • நூலகத்தின் உறுப்பினர்களுக்கு நூலகத்தின் இரவல் பிரிவிலிருந்து நூல்கள் இரவலாக வழங்கப்படுகின்றது.
  • திருக்குறள் தொடர்பான நூல்கள் விற்பனையும் இங்கே உள்ளது.
  • புரவலர் சேர்க்கை என்ற திட்டத்தின் படி இந்திய ரூபாய் 1330  வழங்கி இந்த நூலகத்துக்குப் புரவலராக இருக்க விரும்புபவர்கள் தம்மையும் இந்த நூலகத்தோடு இணைத்துக் கொள்ள வாய்ப்பும் உள்ளது. இந்த வகையில் மறைந்த குன்றக்குடி ஆதீனத்தின் தலைவர் பொன்னம்பல அடிகளார் இதன் முதல் புரவலராக இணைந்தார். நான் அங்கிருந்த வேளையில் இந்த நூலகத்தின் செயல்பாடுகளின் மேல் ஆர்வம் கொண்டு 1330 ரூபாயைச் செலுத்தி புரவலாராக என்னையும் இணைத்துக் கொண்டேன்.    

இந்த நூலகம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் காலை 09:00 மணியிலிருந்து மாலை 06:00 மணி வரையில் தனது சேவையை வழங்கி வருகின்றது.

நூலக முகவரி: குறளகம் X33, மூன்றாம் முதன்மை சாலை, அறிஞர் அண்ணாநகர், சென்னை என்பதாகும்.

திருக்குறள் பாஸ்கரன் அவர்களுடன் இந்தப் பதிவின் போது உரையாடிக் கொண்டிருந்த போது தமிழ் மொழியைப் பிழையின்றி எழுதுவது, பேசுவது ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றியும் ஈடுபாட்டுடன் விவரித்தார். தமிழகத்திலேயே கூட அறிவிப்புப் பலகைகளில் காணப்படக்கூடிய பிழையான சொல் பயன்பாடுகள் சில வேளைகளில் கேலிக்குறியனவாக இருக்கின்றன. சுவரொட்டிக்ள், துண்டறிக்கைகள், அறிவிப்புச் செய்திகள் என தயாரிப்பவர்கள் தமிழை பிழையின்றி எழுதுவதில் கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியம். தமிழ் மொழி சொல்வளம் நிறைந்த ஒரு மொழி. ஒரு சொல்லிற்கு பல பொருட்களைக்காணக்கூடிய அதே வேளை, எழுத்தில் சிறு மாற்றம் வரும் போது, ஒரு சொல் முற்றிலும் மாறுபட்டதொரு  பொருளைத் தரக்கூடிய வடிவம் பெருவதை நாம் அறிந்திருக்கின்றோம். சில வேளைகளில் நாம் சாதாரண பிழைதானே என நினைக்ககூடிய எழுத்துப் பிழைகள் மிகத் தவறான பொருளைக் குறிக்கும் வாக்கியத்தை உருவாக்கும் அபாயமும் இருக்கின்றது. ஆக, தமிழை சரியாகப் பயன்படுத்துவதும் தூய தமிழை பயன்படுத்துவதும் தமிழ் மொழி வளர உதவும் என்பது இவரது சிந்தனையாகவும் இருக்கின்றது.

எனது தமிழகக் களப்பணிகளில் பலவகைப்பட்ட மனிதர்களைச் சந்தித்திருக்கின்றேன். சிலர் வாழ்க்கையில் தாம் எதிர்கொள்ளும் சோக நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு நிதானமிழந்து  தன் வாழ்க்கையைச் சீர்குலைத்துக் கொள்ளும் நிலை சிலருக்கு ஏற்படுகின்றது. சிலர் தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சோகத்தை மறைக்க பிறரது வாழ்க்கையில் துன்பத்தை உருவாக்கும் சூழலையும் பார்க்கின்றோம். ஆனால், தன் வாழ்வில் நடந்த துன்ப நிகழ்வை மறக்க ஆக்கப்பூர்வமானதொரு செயல்பாட்டினைச் செய்து பொதுமக்களுக்கும், தமிழுக்கும் சேவையாற்றிக் கொண்டிருப்பவராக பேரசிரியர் திருக்குறள் பாஸ்கரன் அவர்கள் செயல்படுகின்றார். இவரைப் போல தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இயங்கும் தன்னார்வலர்கள் பலர் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் பொதுவாகவே தகவல் ஊடகங்களின் பார்வையில் இத்தகையோரது செயற்பாடுகளும் ஆக்கங்களும் தென்படுவதில்லை என்பது ஒரு குறை தான்.!


Wednesday, March 16, 2016

​​5. கல்வெட்டில்​ ஓர் ​​இசைப்பாடம்




சில நேரங்களில் ஆர்வக் கோளாறு என்று சொல்வோமே.. அது எனக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு. ஏதாவது ஒரு நூலில் தமிழர் வரலாறு தொடர்பான ஒரு தகவலை வாசித்து விட்டால் உடன் அங்கே சென்று அதனை நேரில் பார்த்து அதனை வீடீயோ பதிவாக்கியும் புகைப்படப் பதிவாக்கியும், ஏனைய நூல்களை வாசித்து அது பற்றிய தகவல்களைத் திரட்டி அதனைப் பற்றிய விரிவான செய்தியை
​த்​
 தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்
​ற 
​உணர்வும்
 தோன்றும். இது அவ்வப்போது நிகழ்ந்தால் பரவாயில்லை. அடிக்கடி நிகழ்வதால் தானே தொல்லையே.. ஏனென்றால் நான் நேரில் சென்று களப்பணி செய்து  அது பற்றி தகவல் தேடி பதிய வேண்டும் என நினைக்கும் வரலாற்று இடங்களின் பட்டியல் நீண்டு கொண்
​டே
 செல்கின்றதே தவிர குறையவில்லை. சரி. இந்தவாரமும் தமிழ் மரபு அறக்கட்டளை நேரடி களப்பணியாற்றி பதிவு செய்து தகவல் தேடி பதிப்பித்து வெளியிட்டிருக்கும் ஒரு செய்தியைப் பற்றித்தான் வரலாற்றுப் பிரியர்களுடன் நான் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன். 

தமிழகத்தில் இதுவரை கண்டுபிடித்துப் பதிவு செய்யப்பட்டிருக்கும் கல்வெட்டுக்களில்
​,​
 இசையை
​குறிக்கும் 
மிகப் பழமையானதொரு கல்வெட்டு ஒன்றினைப் பற்றி
​ய தகவலை ​
 தொல்லியல் ஆய்வறிஞர் திரு.நடனகாசிநாதனின் கல்வெட்டுக்கலை நூ
​ல்
 2011ம் ஆண்
​டு வாங்கியபோது அதனை 
 வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பட்டியலிடப்பட்டிருக்கும் ஏராளமான கல்வெட்டுக்களில் இசைக்கல்வெட்டு ப
​ற்
றிய ஒரு குறிப்பினைப் பார்த்தபோது அதன் மேல் ஆர்வம் எழ, அந்தக் கல்வெட்டு இருக்கும் பகுதிக்குச் சென்று பார்க்க ஆவல் எழுந்தது. இந்த இசைக் கல்வெட்டு இருப்பது அறச்சலூர் என்னும் ஒரு சிற்றூரில். இந்தச் சிற்றூர் ஈரோட்டிலிருந்து காங்கேயம் செல்லும் சாலையில் இருக்கின்றது. எனது தமிழகத்துக்கான
​ப்​
  பயணங்களில் ஈரோடு செல்லும் போது அறச்சலூர் செல்ல வேண்டும் . இக்கல்வெட்டுப் பதிவைச்  செய்ய வேண்டும்  என்று முயன்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் நான் மேற்கொண்ட பயணங்களில் இது சாத்தியப்படவில்லை. ஆனால் இந்த முறை கண்டிப்பாக இந்த அறச்சலூர் கல்வெட்டுப் பதிவை செய்து விடவேண்டும் என முடிவெடுத்து எனது ஈரோட்டுக்கான பயணத்திற்கான திட்டப்பட்டியலில் அதனை பதிந்து வைத்திருந்தேன்.

தமிழக தொல்லியல் துறையில் பணியாற்றியவரும் பல ஆண்டுகளாக வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு
​ ​
வருபவருமான திரு.எஸ் ராமச்சந்திரன் அவர்களைத் தொடர்பு கொண்டு இந்தக் கல்வெட்டு இருக்கும் பகுதி, அங்குச் செல்லும் வழி ஆகியனபற்றி நான் விசாரித்த போது அங்கே ஈரோட்டுக்கு சற்றருகே உள்ள ஒரு ஊரில் இருக்கும் தோழர் சிவப்பிரகாசம் என்பவரைப் பற்றி எனக்குச் சொல்லி
​'​
அவருக்கு இங்கு செல்லும் இடம் நன்கு தெரியும். அவருடன் செல்வது சிறப்பு
​' ​
 எனச் சொல்லி அவரது தொடர்பினையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.  தோழர் சிவப்பிரகாசத்தை நான் சென்னையிலிருந்தே தொடர்பு கொண்டு பேசி நான் வரும் தேதி நேரம் ஆகியன பற்றி சொல்லி அவரது பணிகளுக்கிடையில் இங்கே வந்து எனக்கு உதவ வாய்ப்பிருக்குமா என்றும் கேட்டு அறிந்து கொண்டேன். 

இந்த ஆண்டு ஜனவரி 2ம் நாள் நான் ஈரோடு சென்ற முதல் நாளில் குலதெய்வ வழிபாடுகள், சித்தர்கள் தொடர்பான கோயில்கள் பற்றிய பதிவுகள் என செய்து மறு நாள் 3ம் தேதி காலையில் அறச்சலூர் செல்வதாக என் திட்டம் இருந்தது. காலையில் 6 மணி அளவில் நான் தங்கியி
​ருந்த
 குமாரபாளையத்திலிருந்து புறப்பட்
டு
 ஈரோடு வந்த போது மணி
​காலை ​
ஏழாகியிருந்தது. அங்கே தோழர் சிவப்பிரகாசத்தைச் சந்தித்து அவருடன் அறிமுகமாகிக்கொண்டபின் நான் வந்த  வாகனத்திலேயே அறச்சலூர் நோக்கி பயணித்தோம். தோழர் சிவப்பிரகாசம் கொங்கு மண்டல வரலாற்றை மிக விரிவாக விளக்கிக் கொண்டே
​ ​
வந்தார். தொடர்ச்சியாக  அவர் தனது ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார் என்பதுவும் கொங்குச் சோழர்கள் பற்றி பல தகவல்களைத் திரட்டி வைத்திருக்கின்றார் என்பதையும் அவருடன் பேசிக் கொண்டு வந்தபோது அறிந்து கொண்டேன்.

எறக்குறைய முப்பத்தைந்து நிமிடங்களில் அறச்சலூர் கிராமம் வந்து சேர்ந்தோம். இங்கு
​வரலாற்றுச்
 சிறப்பு
​ கொண்ட 
சின்னம் ஒன்று இருக்கின்றது என்பதற்கு அடையாளமாக எந்த ஒரு அறிவிப்புப் பலகையையும் அங்கு காணவில்லை. தோழர் சிவப்பிரகாசத்திற்கு வழி தெரியுமாகையால் நாங்கள் கிராமத்திற்குள் தொடர்ந்து பயணித்து மலைக்குன்று இருக்கும் ஒரு பகுதிக்கு வந்து இனிமேல் வாகனம் செல்ல முடியாது எனத்தெரிந்ததும் வாகனத்தை
​நி
றுத்தி விட்டு குன்று
​இருக்கும் ​
பகுதிக்கு நடக்க ஆரம்பித்தோம். சற்று தூரத்தில் தென்பட்ட பாறைப்பகுதியில் இருக்கும் குகையில் தான் அறச்சலூர் இசைக்கல்வெட்டு இருகின்றது எனத் தோழர் சொல்லிக் கொண்டே
​வர ​
குன்
​றை​
 நோக்கி நடந்தோம். இந்த அறச்சலூர் இசைக் கல்வெட்டு என்பது
​ ​
கிமு.2ம் நூ
​ற்
றாண்டு வாக்கில்,
​ ​
அதாவது இன்றைக்கு ஏறக்குறையை 2300 ஆண்டுகள் எனச் சொல்லக்கூடிய பழமை வாய்
​ந்த 
ஒரு கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு இன்று நாம் அறிந்திருக்கும் தமிழ் எழுத்துருக்கு
​மி​
க மிக முந்தையதான தமிழி எழுத்துருவில் அமைந்த ஒரு கல்வெட்டு. இந்தத் தமிழி எழுத்துருக்கள் படிப்படியாக வட்டெழுத்துக்களாகவும் தமிழ் எழுத்துக்களாகவும் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் பரிணாமமுற்றன.  இந்த
​அறச்சலூர் ​
இசைக்கல்வெட்டு என்பது பண்டைய தமிழி எழுத்துரு சற்றே மாற்றம் கொண்டு வட்டெழுத்தாக பரிணாம மாற்றம் பெறுவதைக் காட்டும் வகையில் இருக்கும் ஒரு சிறந்த கல்வெட்டுச் சான்று என்று கல்வெட்டு ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுவது.

ஆக, இத்துணைச் சிறப்பு பெற்ற இந்தக் கல்வெட்டை பார்க்கப் போகின்றோம் என்
​ற
 ஆவல் மனதில் நி
​றை
ந்திருந்தது. வயல் வெளிப்பகுதியை
​த்​
 தாண்டி கருவேல மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதிக்குச் செல்ல ஆரம்பித்தோம். அங்கே பாதையைத் தேடியும் பாதை தென்படவில்லை. தோழர் சிவப்பிரகாசம் இங்கே ஏற்கனவே சில முறை வந்திருந்து இக்கல்வெட்டுக்களைப் பார்வையிட்டவர் என்பதால் அவருக்கு இக்கல்வெட்டு இருக்கும் பாதைக்குச் செல்லும் வழி தெரியும். ஆயினும் கூட எளிதில் பாதையைக் கண்டு பிடிக்க முடியவில்லை. பரந்து விரிந்த உறுதியான பாறைகளின் மேல் ஏறி
​மேலே
 சென்று கொண்டேயிருக்கின்றோம். எங்கும் அந்தக் குறிப்பிட்ட பாறையைக் காணவில்லை. நடந்து நடந்து வந்ததில்
​ சற்று​
 தூரம் காட்டிற்குள் வந்து விட்டோம் என்பதை அறிந்த போது மனதில் ஒரு வி
​த 
திடீர் திகில் உணர்வு எழ ஆரம்பித்தது. எ
​ங்க
ள் இருவருடன் வாகனமோட்டியும் வந்திருந்தார் .ஆக மூவருமாகத் தேடித்தேடிப் பார்த்தும் அக்குறிப்பிட்ட பாறைக்குச் செல்லும் பாதை தென்படவில்லை. மனம் அலுத்துப் போகும் வேளையில் மீண்டும் திரும்பி வந்து வேறொரு பகுதியில் சென்று பார்த்து தேட முயற்சிக்கையில் அந்தப்பாறைக்குச் செல்லும் வழி தென்பட்டது.  மூவரும் அப்பகுதிக்கு விரைந்தோம். 

அப்பகுதியில் முன்னே சி
​தைந்த

​ஓரிரண்டு 
 சமணர் படுக்கைகளும் இருக்கின்றன. இசைக்கல்வெட்டு இருக்கும் குகைப்பகுதிக்கு வந்
​து 
சேர்ந்தோம். அங்கே
​, ​
 ஐந்து வரிகளில்
​, ​
 ஐந்து அடுக்குகளாக இந்த இசைக்கல்வெட்டு
​ ​
வெட்டப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. அதில் உள்ள வாசகங்கள் (இக்காலத் தமிழ் எழுத்துருவடிவில்) 

த  தை  தா  தை   த
தை  தா  தே  தா  தை
தா  தே  தை  தே  தா
தை  தா  தே  தா  தை
த  தை  தா  தை   த

இந்தக் கல்வெட்டின் அருகிலேயே இந்தக் கல்வெட்டினை அமைத்தவர் பெயரும் அழகிய தமிழி எழுத்துருவிலேயே வழங்கப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது. அதில், 
எழுத்தும் புணருத்தான் மணிய்
வண்ணக்கன் தேவன் சாத்தன்

அதாவது, மணிவண்ணக்கனாகிய, அதாவது காசு பரிசோதகராகிய தேவன் சாத்தன்  என்பவர் இக்கல்வெட்டினை
​ச்​
 செதுக்கியவர் என்ற குறிப்பாக இது அமைந்துள்ளது.

இன்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த இசைக்கல்வெட்டும் அதன் எழுத்து ஒழுங்கு நயமும் பார்க்கும் போது அதிசயிக்கத்தக்க வகையில் அமைந்திரு
​க்கின்றது
.  இந்தக் கல்வெட்டு
​ இருக்கும் பகுதியையௌம் அது பற்றிய விரிவான ஆய்வுச் செய்தியையும்

​தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இங்கே
இணையம் வழியாகப் பார்த்து
​ப்​
 பயனுறலாம்
​. ​

தமிழர் வரலாற்றில் முக்கியத்துவம்  வாய்ந்த செய்திகளைச் சொல்லும் கல்வெட்டுக்களின் வரிசையில் இந்த இசைக்கல்வெட்டும் இடம் பெறுகின்றது. தமிழ் இசை என்பது தமிழ் நிலப்பகுதியில் தமிழரால் வளர்க்கப்பட்டது என்பதை உறுதி செய்ய இவ்வகைக் கல்வெட்டுக்கள் வலுவான சான்றுகளாக அமைகின்றன.  ஆனால் இத்தகைய கல்வெட்டு
​க்கள்​
 இருப்பதைப் பற்றியும் இதன் சிறப்புக்களைப் பற்றியும் எத்தனை
​ ​
பேர் அறிந்தவர்களாக இருக்கின்றோம்
​ என்பது முக்கியக் கேள்வி அல்லவா​
? சரி
​,​
 பொதுமக்களுக்குத் தகவல் தெரியவில்லையென்றாலும் கூட கல்விக்கூடங்களி
​ல்​
 பணிபுரிபவர்களில் எத்த்னை பேர் இத்தகைய விடயங்களில் ஆர்வம் காட்டுவோராக இருக்கின்
​றார்கள்
 என்பதை என்ணிப்பார்க்கும் போது ஆதங்கமே மேலிடுகின்றது.

தமிழகத்தில் காணும் போது இந்தக் கல்வெட்டு இருக்கும் பகுதி தூய்மையாக பாதுகாக்கப்படாமல் இருப்பதுவும் இங்கே செல்வதற்கான வழி கூட சரியாக அமைக்கப்படாது இருப்பது என்பது வருத்தத்திற்குறியதாகவே இருக்கின்றது. அதே வேளை தமிழகம் கடந்த தமிழர் வாழும் நாடுகளில் இவ்வகைக் கல்வெட்டுக்கள், அவற்றின் சிறப்புக்கள் என்பன பற்றி பேசுவோர் யாரும் இல்லாததும் ஒரு குறையாகவே காண்கின்றேன். தமிழர் பெருமை பற்றி பேசுவோர் மிக முக்கியமாக இவ்வகைச் ஆதாரச் சான்றுகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்
​டி
யது மிக அவசியமான ஒன்றாக
​க் கருதுகின்றேன்
. அறிந்து கொள்வது மட்டுமன்றி இவ்வகைக் கல்வெட்டுக்கள் சேதப்படாமல் பாதுகாக்க முயற்சி எடுப்பதும் காலத்தின் அவசியம். வெறுமனே கல்தோன்றி முன் தோன்றா
​காலத்து ​
மூத்த குடி எ
​மது தமிழ்க்
குடி எனச் சொல்லிப் பெறுமை பேசுவ
​தௌ மட்டும்
 விடுத்து ஆக்கப்பூர்வமான ஆய்வுப்பணிகளிலும் வாசிப்புமுயற்சிகளிலும் உண்மையான தமிழ் ஆர்வலர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதையே தமிழ் மரபு அறக்கட்டளை விரும்புகின்றது. அதுவே உண்மையான தமிழ்ப்பணியாக
​வும்​
 அமையும்!

Wednesday, March 9, 2016

4.பானையின் மேல் ஓவியமா?

Published 09.3.2016 - Tamil Malar (Malaysia)



மண்பாண்டங்களில் சமைத்தல் என்பது தமிழர்களாகிய நமக்குப் புதிதல்ல. இன்று  அயல்நாடுகளுக்குக் குடியேறிவிட்ட தமிழ் மக்களுக்கு சூழ்நிலை, வசதிகள் காரணமாக  மண்பாண்டங்களை வைத்து சமைத்து சாப்பிடுவதற்கும், ஏனைய வகையில் மண்பாண்டங்களை உபயோகப்படுத்துவதற்கும்  வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம். ஆயினும் ஆசிய நாடுகளில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மண்டங்களின் உபயோகம் என்பது கிராமப்புறங்களில் மிக அதிகமாகவே இருக்கின்றது. மண்பாண்டங்கள் உற்பத்தி செய்பவர்களையும் அவர்களது தொழில் முறையையும் ஒரு முறை நேரில் கண்டு பதிவு செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால் மதுரைக்கு அருகே இருக்கும் மானாமதுரைக்குச் சென்றிருந்தேன். குடிசைத் தொழிலாக நேரில் மக்கள் எவ்வாறு மண்பாண்டங்களையும்  மண்ணினால் ஆன  வேறு சில பொருட்களையும் செய்கின்றார்கள் என்பதை அம்மக்களை நேரில் பார்த்து பேட்டி கண்டு   தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளேன். அது பற்றி பிரிதொரு முறை சொல்கின்றேன். இன்றைய பதிவில் 2002ம் ஆண்டு, அதாவது தமிழ் மரபு அறக்கட்டளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்ட ஓராண்டுக்குப்பின் தமிழகத்திற்கு நான் சென்றிருந்த போது அங்கே மண்பாண்டங்கள் தொடர்பாக மேற்கொண்ட ஒரு ஆய்வைப் பற்றி சில செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றேன். 

மண்பாண்டங்கள் என்பன முன்பு, அதாவது சிந்து வெளி நாகரிக காலத்திலேயே புழக்கத்தில் இருந்தது என்பதையும், தமிழகம் முழுவதும் இன்றைக்கு 3000 ஆண்டுகள் எனும் கால அளவிலும் புழக்கத்தில் இருந்தன என்பது,  தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தப்பட  அகழ்வாய்வுகளில் கிடைத்த மண்பாண்டங்களின் வழி அறிந்து கொள்ள முடிகின்றது. 

கோயம்பத்தூருக்கு அருகே உள்ள பேரூர் பகுதியில் ஒரு கட்டுமானப்பணி நடந்து கொண்டிருந்த போது அதன் நிமித்தம் மேற்கொள்ளப்பட்ட அகழ்ந்தெடுக்கும் பணியின் போது பல மண்பாண்டங்கள் கிடைக்கப்பெற்றன. அவை பேரூரில் இருக்கும் சைவ மடத்தில் அப்போது வைக்கப்பட்டிருந்ததோடு, கல்வெட்டு வாசிப்பிலும், தொல்லியல் ஆய்வுகளிலும் நிபுணத்துவம் பெறற சில அறிஞர்களின் உதவியோடு வாசிக்கப்பட்டு அவை ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டன.  அந்த மண்பாண்டங்களின் மேல் கீறப்பட்டிருந்த எழுத்துக்களும் அதன் மேல் கீறப்பட்டிருந்த ஓவியங்களையும் ஆராயும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு நாள் பட்டறை ஒன்றினை நடத்தினோம். இது நிகழ்ந்தது 2002ம் ஆண்டில்!

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில் முக்கியப் பொறுப்பில் இருந்தவரும் தொல்லியல் துறை சம்பந்தமான ஆய்வுகளில் மிகுந்த நாட்டம் கொண்டவரும், குமரிக்கண்டம் என்ர ஒரு நூலை எழுதியவருமான மறைந்த திரு.கொடுமுடி சண்முகம் அவர்கள் அச்சமயம் நமது தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலவைக் குழுவிலும் அங்கம் வகித்தார்.  அவரின் உதவியோடும்,   தமிழ் மரபு அறக்கட்டளையின்  தலைவர் டாக்டர்.நா. கண்ணனின் உதவியோடும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு அங்கே ஒரு நாள் பட்டறை ஒன்றை இந்த ஆய்விற்காகவே ஏற்பாடு செய்திருந்தோம். டாக்டர்.நா. கண்ணன் பேரூர் சைவ மடத்திற்குச் சென்றிருந்த போது அங்கே பதிந்து வந்திருந்த பாணை ஓடுகளின் புகைப்படங்களை இந்த பட்டறையில்  மேற்கொண்ட ஆய்வில் பயன்படுத்தினோம்.

இவ்வாய்வில் இந்த  முயற்சிக்கு உதவுவதற்கு அப்போது தமிழக தொல்லியல் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த டாக்டர்.பத்மாவதி அவர்களும் மேலும் சில ஆய்வாளர்களும் இப்பட்டறையில் கலந்து கொண்டனர். இந்தப் பட்டறையில் வாசிக்கப்பட்டு அறிந்து கொள்ளப்பட்ட தகவல்கள் அனைத்தும் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு பிரத்தியேக  வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அத்தகவல்களை அறிந்து கொள்ள விரும்புவோர்,  http://www.tamilheritage.org/old/monument/oodu/sangkam.html என்ற பக்கம் சென்று இவ்விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்டங்கள் எனச் சொல்லும் போது அவை பொதுவாக சமையலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுபவை என குறிப்பிட முடியாது. ஏனெனில் பண்டைய நாகரிகத்தில் ஈமச்சடங்கின் முக்கிய அம்சமாக விளங்கியவையாக மண்பாண்டங்களே திகழ்கின்றன. இது தமிழகத்தில் மட்டும் இருந்த ஒன்றல்ல. மாறாக உலகில் தோன்றிய பண்டைய நாகரிகங்கள் பலவற்றில் மண்பாண்டங்களுக்குள் மனித உடலை வைத்து ஈமக்கிரியை செய்வது என்பது மிக விரிவாக கையாளப்பட்ட ஒரு சடங்கு முறையாகவே இருந்திருக்கின்றது. நல்ல உதாரணமாக அமைவது எகிப்திய ஈமச்சடங்கு முறை. ஈமச்சடங்கில் மண்பாண்டங்கள் உபயோகித்தல் என்பது ஆப்பிரிக்க கண்டத்தில் வாழ்கின்ற பல்வேறு இனக்குழு மக்களின் வாழ்க்கையில் இன்றும் கடைபிடிக்கப்படுகின்ற ஒரு நிகழ்வாகத்தான் இருக்கின்றது. தமிழகத்தில் எடுத்துக் கொண்டாலோ, மண்பாண்டங்களின் உள் இறந்தவர் உடல்களை வைத்து புதைப்பது என்பது மிக விரிவாக வழக்கில் இருந்த ஒரு செயல்பாடாகவே கருதலாம். இதற்குச் சான்றாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில்  கிடைத்த மண்பாண்டங்களே அமைகின்றன. அண்மையில் செய்திகளில் பரவலாகப் பேசப்பட்ட மதுரைக்கு அருகாமைல் உள்ள கீழடி அகழ்வாய்விலும் இத்தகைய பொருட்கள் கிடைத்திருக்கின்றன என்பதை குறிப்பிட்டுச் சொல்லலாம். 

எனது தமிழகப் பயணம் ஒன்றில் சென்னையில்  ஒரு வரலாற்றுப் பயணம் மேற்கொண்டபோது,  சென்னையின் புறநகர் பகுதியில் ஒரு பெரிய வெட்ட வெளியில் வரிசையாக பாதி உடைந்த நிலையிலான மண்பாண்டங்கள் தென்படுவதை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. இவை முதுமக்கள் தாழி எனப்படுவன. முதுமக்கள் தாழி என்பது மிகப்பெரிய வடிவிலான ஒரு மண்பானை. அதன் உள்ளே இறந்தவரை வைத்து அவர் பயன்படுத்திய அணிகலன்களையும் உள்ளே வைத்து மண்ணிற்குள் புதைக்கும்  முறையே  பண்டைய காலத்தில் ஈமச்சடங்கு முறையாக இருந்தது. ஆச்சரியம் என்னவென்றால், இவ்வகையான இறந்தோரை மண்பாண்டங்களில் வைத்து புதைப்பதுவோ அல்லது அவர்களது எரியூட்டப்பட்ட உடலிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புகளையும் சாம்பலையும் பானைக்குள் வைத்து புதைப்பது என்பதுவோ தமிழகத்தில் என்று மட்டுமல்லாது பண்டைய நாகரிகங்கள் பலவற்றில் வழக்கில் இருந்திருக்கின்றன என்பதுதான். அசிரிய நாகரிகம், எகிப்து. மெசொபொட்டாமிய நாகரிகம் என்பனவற்றை இவ்வகையில் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தமிழகத்தில் நெடுங்காலமாக   மக்கள் வாழ்விடமாக குறிப்பிடப்படும் பகுதிகளில் பரவலாக அகழ்வாய்வுகள் நடத்தினால் மிக அதிக அளவிலான முதுமக்கள் தாழிகளைக் கண்டெடுக்கலாம். இதன்வழி மானுடவியல், சமூகவியல், தொல்லியல், குறியீடுகள் தொடர்பான ஆய்வுகள் எனப்பரவலான வகையிலான ஆய்வுகள் செய்வதற்கான நிலை ஏற்படும். 

தமிழக அகழ்வாய்வுகளில் கிடைத்திருக்கின்ற மண்பாண்டங்களின் உடைந்த பகுதிகளில் இருக்கும் கீறல்களை ஆராயும் போது பொதுவாக இரண்டு வகைகளில் இக்குறியீடுகள் உருவாக்கப்பட்டமை பற்றி அறிய முடிகின்றது. முதலாவது, இந்த மண்பாண்டங்களை உருவாக்கி அதனை சுட்டு இறுக்கமாக ஆக்குவதற்கு முன்னரே பானையின் மேல் சில கீறல்கள் அமைப்பது. இரண்டாவது வகை, பானையை முழுமையாகத் தயாரித்த பின்னர் அதன் மேல் ஏதாகினும் பொருளைக் கொண்டு தீட்டப்படும் குறியீடுகள் என்ற வகையில் அமைவது. இதில் முதல் வகையில் அமைந்த குறியீடுகளோடு கண்டெடுக்கப்பட்ட மண்பாண்டங்களின் மேல் இருக்கும் கீரறல்களை நன்கு காண முடிகின்றது என்பது முக்கியக் கூறு.

தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட  அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்டங்களின் மேல் உள்ள குறியீடுகளில் எழுத்துக்களும் அடங்கியிருப்பது கண்டுபிடிக்கபப்ட்டுள்ளது. எழுத்துக்களும் ஓவியங்களும்,  அல்லது எழுத்துக்கள் மட்டும்,  அல்லது ஒவியக் கீறல்கள் மட்டும் என்ற வகையில் இவை அமைந்திருக்கின்றன. ஓவியங்களாக இருக்கின்றனவற்றைக் காணும் போது  பெரும்பாலும் கோடுகள், அல்லது உருவ வடிவங்கள் ஆகியவை அமைந்திருக்கின்றன. உருவ வடிவங்கள் எனப்படும்போது மரங்கள், விலங்குகள், சூரியன் போன்ற உருவங்களும் காணக்கிடைக்கின்றன.

இந்தப் பழைய மண்பாண்டங்களில் உள்ள எழுத்துக்களையும் கீறல்களையும் பார்த்தும் வாசித்தும் என்ன பயன் எனப் பலரும் நினைக்கலாம். தமிழர்தம் வரலாற்றை அறிந்து கொள்ள இவ்வகை ஆய்வுகள் மிக அவசியம். தமிழ் மொழியின் வளர்ச்சி, அக்கால நடைமுறைகள், அக்கால தமிழர் வாழ்வியல், அக்கால வணிகமும் பொருளாதார நிலையும் என்ற பல்வேறு தளங்களிலான விசயங்களை ஆதாரப்பூர்வமாக அறிந்து கொள்ள இவ்வகை கண்டுபிடிப்புக்களும் அது தொடர்பான ஆய்வுகளும் மிக மிக அவசியம். அந்த வகையில்  மலேசிய சூழலிலும் தமிழர் தம் வரலாற்றை முறையாக அறிந்து கொள்ள முறையான அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான தேவையும் அவசியமும் நிச்சயமாக இருக்கின்றது என்பதில் தமிழ் மரபு அறக்கட்டளைக்கு மாற்றுக் கருத்து ஏதும் இல்லை!

Wednesday, March 2, 2016

3. எழுத்துக்களா இவை?



தமிழகத்துக்குச் செல்லும் மலேசிய தமிழ்  மக்கள் பெரும்பாலும் கோயில்களுக்குச் சென்று காணிக்கை செலுத்துவது என்பது தான் அடிக்கடி நாம் அறிந்த ஒன்று. அப்படிச் செல்வோர்   எல்லோருக்கும் பொதுவாகத் தெரிந்த கோயில்களான மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் போன்ற பெருங்கோயில்களுக்குச் செல்வதைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இது மட்டுமன்றி பலரது பயணத்திட்டத்தில் திருப்பதிக்கு சென்று பெருமாள் தரிசனம் செய்து விட்டு ஏதும் வேண்டுதல் இருந்தால் மொட்டை போட்டுக் கொண்டு அங்கு கொடுக்கப்படும் லட்டுவை ருசித்து விட்டு பக்திப்பரவசத்தோடு வருவது என்பது பொதுவாகவே நாம் அறிந்த விஷயம்தான். தமிழகம் என்றால் இந்தக் கோவில்கள் மட்டும் தானா? என்போருக்கு மேலும் பல தகவல்களைத் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தின் வரலாற்றுப் பகுதி தருகின்றது. அதில் ஐகொந்தம் பகுதி பாறை ஓவியத்தைப் பற்றி சில தகவல்களை இந்தப் பதிவில் தருகின்றேன்.

2012ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ் மரபு அறக்கட்டளைக்கான களப்பணிகளுக்காகத் தமிழகம் சென்றிருந்தேன். அதில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கானப் பயணத்தில் நிகழ்ந்த சில விஷயங்களைப் பற்றிய தகவல்கள்தான் இன்றைய பதிவின் முக்கிய அம்சமாக அமைகின்றது. 

கிருஷ்ணகிரி எங்கே இருக்கின்றது? என கேட்பவர்களுக்கு... இந்தியாவின் கர்நாடக மானிலத்திற்குச் சற்று அருகேயும் ஆந்திர மாநிலத்துக்கு அருகேயும் இருக்கும் ஒரு வட பகுதி மாவட்டம் தான் இது. முன்னர் தர்மபுரி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்து பின்னர் 2004ம் ஆண்டில் தனி மாவட்டமாகப் பிரிந்த பகுதி இது.

கிருஷ்ணகிரியில் இருக்கும் பெண்ணையாற்றுப் பகுதி நடுகற்களைத் தேடிப்பார்த்து அவற்றைப் பதிவு செய்யவேண்டும் என்று பெரிய ஆவல் எனக்கு இருந்தது. அந்த விருப்பத்தை நண்பர்களுடன் பகிர்ந்த போது ஒரு சிறு மூன்று நாள் பயணத்தை எற்பாடு செய்வது என முடிவாகியது. கிருஷ்ணகிரியில் கணினி அலுவலகம் வைத்திருக்கும் செல்வமுரளியும் திருவண்ணாமலையில் பணிபுரியும் பிரகாஷூம் இந்தப் பயண ஏற்பாட்டில், செல்ல வேண்டிய பகுதிகளைப் பற்றிய தகவல்களை எனக்கு முன்னதாகவே மின்னஞ்சல் வழி அனுப்ப, அவற்றை ஆராய்ந்து, மூன்று நாட்களில் செல்லக்கூடிய இடங்களை நான் பட்டியலிட்டு, கூகள் மேப் வரைபடத்திலும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வேண்டிய தூரத்தையும் அதற்கான நேரத்தையும் கணக்கிட்டு தயாரிப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டேன். அப்பயணத்தில் என்னுடன் தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் பேரா.டாக்டர்.நா.கண்ணன் அவர்களும் இணைந்து கொண்டார்கள். எங்களோடு மேலும் அப்பகுதியில் வசிக்கும் தொல்லியல் ஆய்வாளர் திரு.சுகவனம் முருகன் அவர்களும் இணைந்து கொள்ள இந்த முதல் நாள் பயணம் மிக வித்தியாசமான ஒன்றாக எங்களுக்கு அமைந்தது.

இந்தப் பயணத்தின் முதல் நாள் காலையில் பெண்ணையாற்று நடுகற்களின் பதிவை முடித்து விட்டு மதிய வாக்கில் ஐகொந்தம் செல்வதாக நாங்கள் திட்டமிட்டிருந்தோம்.  அங்கிருக்கும் பாறை ஓவியங்களைப் பார்த்து அவற்றைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பது முக்கிய நோக்கமாக எனது பட்டியலில் இருந்தது. 

சரி, பாறை ஓவியங்கள் என்றால் என்ன என்ற கேள்வி எழலாம்.  இந்த பாறை ஓவியங்கள் எனப்படுபவை கற்கால மக்களின் எண்ணங்களை, பழக்க வழக்கங்களை, அவர்களது நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் குறியீடுகள்.  இவை பார்ப்பதற்கு கோடுகளாகவும் சிறிய சிறிய ஓவியங்கள் போன்றும் தோற்றமளித்தாலும் இவை இன்று நாம் புழங்கும் எழுத்துக்கள் தோன்றுவதற்கு முன்பான ஆரம்பகால வடிவத்தின் ஒரு தோற்றம் என்று சொல்லலாம்.  இத்தகைய மிகப்பழமையான பாறை ஓவியங்கள் தமிழகத்தில் பாறைகள்  சூழ்ந்திருக்கும் குன்றுகள் நிறைந்த பகுதிகளில் காணப்படுகின்றன.  தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள பாறை ஓவியங்களை ஆராயும் போது அவை சடங்குகள் , நம்பிக்கைகள் தொடர்பானவையாக இருப்பதைக் காண்கின்றோம்.

தமிழக பாறை ஓவியங்களைப் பற்றி விரிவாக ஆராய்ந்த முனைவர். இராசு.பவுன்துரை அவர்கள் தனது "பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும்" என்னும் நூலில், எங்கெல்லாம் நடுகற்கள் அதிகமாக இருக்கின்றனவோ அங்கெல்லாம் இவ்வகை பாறை ஓவியங்களும் காணக்கிடைக்கின்றன என்று குறிப்பிடுகின்றார். இதனை ஊர்ஜிதப்படுத்துவது போலவே  இங்கே கிருஷ்ணகிரி ஐகொந்தம் பகுதியிலும் பெண்ணையாற்றுப் பகுதியில் மிக அதிகமாக நடுகற்களை நாங்கள் நேரில் சென்றிருந்த போது பார்த்து பதிவுகள் செய்தோம். காலையிலிருந்து மதியம் வரை பெண்ணையாற்று கோயில் பதிவு, பெண்ணையாற்று நடுகல் பதிவு என்றே எங்கள் நேரம்  கழிந்திருந்தது. 

செவிக்கு உணவில்லாத போது தானே வயிற்றுக்கு உணவு என்று சொல்லிக் கொண்டு நாங்கள் நடுகல் நடுகல்களாக தேடித்தேடி சென்று பதிவு செய்து கொண்டிருந்தோம். காலையில் ஆரம்பித்த பணி.. மதியமாகி விட்டது. ஆனாலும் மதிய உணவுக்குச் செல்ல வேண்டும் என்று நாங்கள் யாருமே யோசிக்கவில்லை. அதிலும் கூடவே திரு. சுகவன முருகன் அவர்கள் தொடர்ந்து பல விஷயங்களைக் காட்டிக் கொண்டும் பேசிக் கொண்டும் வந்ததால் அந்த சுவாரசியத்தில் மதிய உணவு என்ற ஒரு விஷயத்தை நாங்கள் மறந்தே போயிருந்தோம்.

ஐகொந்தம் கோயில் அருகாமையில் ஒரு குகையில் இருக்கும் குகைப் பாறை ஓவியங்களைப் பார்க்கச் செல்வது எங்கள் பட்டியலில் இருந்ததால் அங்கே புறப்பட்டோம்.    சரி வைகுந்தம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஐகொந்தம்.. கேள்விப்பட்டதில்லையே? அதோடு ஐகொந்தம் என்ற பெயரே முதலில் எனக்கு மனதில் நிலைக்கவில்லை. ஒருவகையாக இந்தப் பெயரை ஓரிரு முறைச் சொல்லிப் பழகிக் கொண்டு மனதில் நிலைப்படுத்திக் கொண்டே வாகனத்தில் வந்த போது ஐகொந்தம் கோயில் வந்து சேர்ந்து விட்டோம்.

கோயிலில் அன்று சிறப்பு வழிபாடு நடந்து கொண்டிருந்தது. வைகுந்த ஏகாதசி தினத்திற்கு மறு நாள் அது. பெருமாள் கோயில் வேறு .. சொல்ல வேண்டுமா? கொஞ்சம் மக்கள் நடமாட்டமும் அப்போது இருந்தது. மிகப் புதிதான கோயில். அழகான படிக்கட்டுகள்.. பளிங்குக் கற்கள் கொண்டு செய்யப்பட்ட தரை.. அழகான இயற்கைச் சூழல். ரம்மியமான சுற்றுப் புறக் காட்சி.

ஐகொந்தம் குகைப்பாறைச் சித்திரங்களைப் பார்ப்பதற்கு முன்னர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து விட்டு செல்வோமே என்று நினைத்துக் கொண்டு கோயிலுக்குள் சென்றோம். வழிபாடு முடித்து வெளியில் வந்தோம். வரிசையாக நான்கு பெண்கள் ஒவ்வொருவரும் தயிர்சாதம், புளியஞ்சாதம், பொங்கல், தேங்காய்சாதம் வைத்துக் கொண்டு பக்தர்களை அழைத்து உபசரித்து பிரசாதத்தை வழங்கினர். ஒவ்வொருவருக்கும் கிடைத்த பிரசாதம் ஒரு மதிய உணவு அளவுக்கு இருந்தது. நான்கு வகை சாதம். கேட்க வேண்டுமா? சலிக்காமல் வரிசையில் நின்று நான்கு வகை சாதத்தையும் தயங்காமல் பெற்றுக் கொண்டு கோயில் படியில் ஒரு இடத்தில் உட்கார்ந்துச் சுற்றுச் சூழலை ரசித்துக் கொண்டே சுவைத்து சாப்பிட்டோம்.

பெருமாள் அணுக்கிரகத்தில் அன்றைய மதிய உணவுக்காக நாங்கள் அல்லாடாமல் ஒரு விருந்தே அமைந்து போனது!

ஐகொந்தம் குகைப்பாறை  இக்கோயிலுக்கு அருகாமையிலேயே இருந்ததால் சாப்பிட்டு உடன் பதிவைத்தொடங்கி விட்டோம்.

பாறையின் குகைப்பகுதிக்கு உள்ளே சென்று பார்த்த போது அதிசயிக்காமல் இருக்க முடியவில்லை. தரைப்பகுதியில் அமர்ந்து கொண்டு மேல் நோக்கி வரையப்பட்ட நிலையில் இந்த ஓவியங்கள்  தீட்டப்பட்டுள்ளன. ஒற்றைக் கோடு, ஒன்றுக்கும் மேற்பட்ட கோடுகள், மனித உருவங்கள், முக்கோணக்குறியீடு, விலங்குகள் என பலவகை கீறல்கள் பாறையின் மேல் புறத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் ஒரு பொருளைக் குறிப்பவை. 

அதோடு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது இவற்றின் வர்ணம். பொதுவாக இதுவரை அடையாளம் காணப்பட்ட பாறை ஓவியங்கள்  வெள்ளை, சிவப்பு, காவி, கருப்பு ஆகிய வர்ணங்களில் அமைந்திருப்பதைக் காண்கின்றோம். இதில் இந்த ஐகொந்தம் பாறை ஓவியங்கள் வெள்ளை நிறத்திலானவை. பொதுவாக வெள்ளை நிறத்தில் அமைகின்ற குறியீடுகள் வேட்டைக் காலத்து நிகழ்ச்சிகளைக் குறிப்பவை என்று முனைவர்.இராசு.பவுன்துரை தனது நூலில் குறிப்பிடுகின்றார்.  இவ்வகை ஓவியங்கள் வேட்டையாடும் மனிதன், அவன் வேட்டையாடும் விலங்குகள், நடனத்தைக் குறிக்கும் குறியீடுகள் என்ற வகையில் அமைந்திருக்கின்றன.  இந்த வெள்ளை நிறத்தை,  வெள்ளைக் களிமண், சுண்ணாம்புக் கல் போன்றவற்றிலிருந்து பெருங்கற்கால மனிதன் தயாரித்திருப்பான் என்று கொள்ளலாம்.

இந்தப் பாறை ஓவியங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய மிக முக்கியமான வரலாற்றுச் சின்னங்கள் என்பதில் அய்யமில்லை. இந்த பாறை ஓவியங்களிலுள்ள ஒவ்வொரு உருவத்தைப் பற்றியும் ஆராய்ந்து பெருங்கற்கால மனிதர்கள் என்ன தகவலை இக்குறியீடுகளாக விட்டுச் சென்றிருக்கின்றனர் என்பதை அறிய வேண்டிய பணி ஆய்வாளர்களுக்கு உள்ளது. குறிப்பிடத்தக்க ஆய்வுகள் இந்த பறை ஓவியங்கள் தொடர்பாக வந்துள்ளன என்ற போதிலும் இது மேலும் தொடரவேண்டும். தமிழகத்தில்  கற்பாறைகள் சூழ்ந்துள்ள பகுதிகளில் இன்னமும் பல அடையாளம் காணப்படாத குறியீடுகள் மறைந்திருக்ககூடிய சாத்தியங்கள் உள்ளன. அவை வெளிக்கொணரப்பட வேண்டும். 

ஆயினும், இந்த ஆய்வுகளுக்குப் பெரும் சவாலாக இருப்பது, தமிழகத்தில் சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறும் குவாரி  உடைப்பு சம்பவங்கள் தாம். இந்த கிருஷ்ணகிரிப்பகுதி பாறைகளும் இவ்வகை சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை நான் நேரில் இப்பகுதிக்குச் சென்றபோது பார்க்க நேரிட்டது. உடைந்த பாறைகளைப் பார்த்த போது "இவற்றில் இருந்து சிதைந்த வரலாற்று சான்றுகள் எத்தனையோ?"  என்ற சிந்தனை எழாமல் இல்லை.  தமிழகத்தின் வரலாற்றுப் புராதன சான்றுகளை அழிக்க அன்னிய நாடுகளின் படையெடுப்புக்கள் என்ற ஒரு நிகழ்வே தேவையில்லை. உள்ளூரில் இருக்கும்சுயநலம் கொண்ட ஒரு சிலரே போதும் என்பது தான் வருத்ததிற்குறிய,  நம் கண்முன்னே காணக்கூடியதாக இருக்க்கின்ற உண்மை!