Thursday, December 28, 2017

79. திருநாதர்குன்றுக்குச் சென்ற கதை



பண்டைய தமிழ் எழுத்துக்களின்  சான்றுகள் பலவற்றை மலைப்பகுதிகளில் உள்ள குகைகளிலோ அல்லது பாறைகளிலோ தான் காண்கின்றோம். அப்படி சில கல்வெட்டுக்களைக் காணச் சென்ற போது பயணத்தில் ஏற்பட்ட ஒரு சுவாரசியமான நிகழ்வு ஒன்றினை இந்தப் பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டமே வரலாற்றுச் சின்னங்கள் பல நிறைந்த ஒரு மாவட்டம் எனத் தயங்காமல் கூறலாம். தமிழக பண்டைய வரலாறு எனப் பேச முற்படும் போது பலரும் பொதுவாக மதுரையையும் நெல்லையையும் பேசுவார்கள். ஆனால் விழுப்புரத்தைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். விழுப்புரத்தின் சிற்றூர்கள் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பல புராதனச் சின்னங்கள் உள்ளன. அதில் மிகக் கணிசமான அளவிற்குச் சமண சமயம் சார்ந்த சின்னங்கள் இருப்பதைக் குறிப்பிடலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டையின் வடக்கே திருநாதர்குன்று எனும் ஒரு சிறிய மலை உள்ளது. இம்மலையில் உள்ள பாறைச்சிற்பம் மட்டுமல்ல, கல்வெட்டும் கூட, தமிழ் எழுத்து, தமிழ் மொழி வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ள ஒன்றாக அமைகின்றது.

இந்த மலை மீது மூன்று கல்வெட்டுகள் உள்ளன. முதிர்ந்தநிலை தமிழி (பிராமி) எழுத்திலிருந்து வட்டெழுத்தாகத் தமிழ் வளர்ந்த நிலையில் உள்ள, மாறுதல் அடைகிற காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டு இது என்ற சிறப்பைப் பெறுவதாக இக்கல்வெட்டு திகழ்கின்றது. இந்த திருநாதர்குன்றில் உள்ள தமிழ் பிராமியிலிருந்து வட்டெழுத்துக்கு மாற்றம் பெறுவதாகக் கருதப்படும் கல்வெட்டில்தான் ‘ஐ’ எனும் தமிழ் எழுத்து முதன் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.   வரலாற்று ஆய்வாளர்களுக்கு இது முக்கியமானதொரு சான்று அல்லவா?

இங்குள்ள ஒரு கல்வெட்டு,சந்திரநந்தி ஆசிரியர் எனும் சமணத்துறவி 57 நாட்கள் உண்ணா நோன்பிருந்து வடக்கிருந்து உயிர்நீத்தார் என்ற செய்தியையும் சொல்கின்றது. இது கி.பி.2ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு எனக்கூறலாம்.

மற்றொரு கல்வெட்டு, இளையபட்டாரகர் எனும் சமணத்துறவி முப்பது நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார் என்ற செய்தியைச் சொல்கின்றது. அதே போல மேலும் பல்லவ காலத்துத் தமிழ் கல்வெட்டு ஒன்றும் இங்குள்ளது. இப்படி வரிசை வரிசையாகக் கல்வெட்டுக்கள் நிறைந்த ஒரு குன்றுப்பகுதிதான் இது. ஆனால் என்ன காரணமோ... இன்றளவும் தமிழக தொல்லியல் துறையினாலும் சரி, இந்தியத் தொல்லியல் துறையினாலும் சரி.. பாதுகாக்கப்படும் ஒரு புராதனச் சின்னமாக இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனை வேதனை என வருந்துவதா அல்லது குறைபட்டுக் கொள்வதா?

இம்மலையின் உச்சியில் ஒரு பெரிய கற்பாறை உள்ளது. அதில் சமண அறத்தைப் பரப்பிய இருபத்து நான்கு தீர்த்தங்கர்களின் திருமேனிகள் செதுக்கப் பட்டுள்ளன. அவை தீர்த்தங்கரர்கள் அனைவரும் அமர்ந்த நிலையில், இருவரிசைகளில் ஒரே அளவில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தீர்த்தங்கரரின் தலையின் மேற்பகுதியிலும் முக்குடை காணப்படுகிறது. தீர்த்தங்கரர்களுக்கே உரித்தான தனித்தனி சின்னங்கள் என்பன இல்லாமல் இவை காணப்படுகின்றன. மிக அழகியதொரு கலை வேலைப்பாடு இது. இப்படியும் ஒரு வடிவமா என முதன் முதலில் இதனைப் பார்த்தபோது நான் அதிசயித்துப் போனேன். இந்தக் கலைவடிவம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் இதனைப் பற்றி அறிந்தோர் கூட மிகக் குறைவு என்பதையும் எனது அப்பகுதிக்கான பயணத்தின் போது அறிந்து கொண்டேன்.

சிற்பத் தொகுதி இருக்கும் கற்பாறையின் மேற்குப்பகுதியில் ஒரு குகை காணப்படுகிறது.இந்தக் குகைப்பகுதியில் சமண முனிவர்கள் தங்கி இருந்து இங்கே சமண சமயத்தை வளர்த்தனர்.

மலையின் நடுப்பகுதியில் ஒரு பெரிய பாறையில் ஒரு தீர்த்தங்கரரின் சிலையும், சிலையின் மேற்பகுதியில் கல்வெட்டுச் சான்றும் இருந்துள்ளன. ஆனால் அது இரண்டாக உடைக்கப்பட்டு தற்போது வீழ்ந்து கிடக்கிறது. பாறைகளை உடைத்துச் சேதப்படுத்தும் முயற்சி நடந்தபோது இங்கு மக்கள் ஒன்று கூடி அந்த முயற்சிகளைத் தடுத்தமையால் இன்று இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பகுதி பொதுமக்களால் பாதுகாக்கப் பட்டிருக்கின்றது என்பதைக் குறிப்பிட வேண்டியுள்ளது.

செஞ்சி விழுப்புரம் பதிவுகளுக்காக சென்னையிலிருந்து நாங்கள் புறப்பட்டதிலிருந்து எங்கள் வாகனப்  பயணம் மிகச் சுவாரசியமாக இருந்தது. 2 நாட்கள் குறுகிய கால பயணமாக ஏற்பாடு செய்திருந்தேன். என்னுடன் தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்களும் இப்பயணத்தில் சேர்ந்து கொண்டனர். சென்னையில் இருந்த நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்து கொடுத்த வாகன ஓட்டுநர் காலையில் 4 மணிக்கு எங்களை அழைக்க வந்து விட்டார்.

காரில் ஏறி அமர்ந்ததும் பயணத்தில் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி பேச ஆரம்பித்தோம். ஆனால் வாகன ஓட்டுநர் எங்களிடம் எதுவும் பேசவில்லை. எங்கள் கலந்துரையாடலிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவருக்குச் செவிப்புலன் சற்று பாதிக்கப்பட்டிருப்பதுதான் எனத் தெரிந்து கொண்டோம்.

முதலில் எங்களிடம் அவர் ஏதும் பேசவுமில்லை. ஆனால் திண்டிவனம் வரும் வழியில் எங்களிடம் ஏதும் கூறாமல் சட்டென்று வாகனத்தை அவரே நிறுத்தினார். என்ன ஏதென்று பார்த்தால் அங்கிருந்த இரணியம்மன் ஆலயத்தில் தானே காசு கொடுத்து சூடம் கொஞ்சம் வாங்கி ஏற்றி காரின் முன் வைத்து சாமி கும்பிட்டார். நாங்களும் சாமி கும்பிட்டுக் கொண்டோம்.

வழியில் நாங்கள் பேசிக் கொண்டு வந்த விசயங்களை வாகனமோட்டி ஓரளவு கேட்டுக் கொண்டே வந்திருக்கின்றார்.  அவருக்குத் தயக்கம் நீங்கியிருக்க வேண்டும்.    தானும் எங்களுடன் கலந்துரையாடலில் பங்கெடுத்துக் கொள்ளும் வகையில் சில முயற்சிகளைச் செய்தார். திடீரென்று எங்களை நிறுத்தி அங்கு ஒரு கோயில் இருக்கின்றது.. போகனுமா என்பார்.. நாங்கள் ”நேரம் ஆகிவிட்டது.. மேல் சித்தாமூர் மடம் போகனும் .. ஆக நேராகச் செல்லுங்கள்” எனச் சொல்லியவுடன் புரிந்து கொண்டார். பின்னர் மேல்சித்தாமூரில் எங்கள் பதிவுகளை முடித்ததும் அவரே அங்கிருந்த திரௌபதி அம்மன் கோயிலில் வாகனத்தைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டு ”இந்தக் கோயிலையும் படம் பிடிங்கள்” என்றார். நாங்கள் அவரது ஆர்வத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தோம். அவருக்காக என்று மட்டுமில்லை. உண்மையில் வித்தியாசமானதொரு கோயிலாகவும் அது இருந்தது. நாங்கள் உள்ளே சென்று புகைப்படங்கள் பிடித்துக் கொண்டு வந்ததில் அவருக்கு மகிழ்ச்சி.  அவர் முகத்தில் தோன்றிய புன்னகை அதனை உணர்த்தியது.

அங்கிருந்து விழுப்புரம் செல்ல வேண்டும் என்று புறப்பட்டோம்.  வழியில் நிறுத்தி அங்கே ஒரு முனீஸ்வரன் இருக்கின்றார் பாருங்கள் எனச் சொன்னார். ”ஆகா.. இப்படியல்லவா நமக்கு உதவியாளர் தேவை” என அவரைப் பாராட்டிக் கொண்டே அங்கும் சென்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தோம். அன்று நாள் முழுதும் எங்களுடன் இணைந்து நான் செய்த பதிவுகளையெல்லாம் உற்று பார்த்து கவனித்துக் கொண்டே வந்தார்.

அன்று மாலை நாங்கள் எண்ணாயிரம் மலை பதிவை செய்து விட்டுப் இப்பதிவில் மேல் குறிப்பிட்ட திருநாதர்குன்று சென்று அங்குப் பதிவை முடித்து வீரானாமூர் இருளர் குடியிருப்பு பகுதிக்குச் செல்ல வேண்டும் எனச் சொல்லியிருந்தேன். மிகுந்த ஆர்வத்திலிருந்தார் எங்கள் திருவாளர் வாகனமோட்டியார். நாங்கள் திருநாதர்குன்று மலைப்பகுதிக்குச் செல்ல வயல் வெளியைக் கடக்க வேண்டியிருந்தது. ஆக, அவரிடம் நீங்கள் வாகனத்தை இங்கே விட்டு விடுங்கள். நாம் நடந்து செல்வோம் எனச் சொல்லி நடந்து சென்று விட்டோம். அவரும் எங்களுடன் மலைப்பகுதிக்கு நடந்தே வந்து சேர்ந்தார். பின்னர் பதிவினைச் செய்து முடித்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தோம். தூரத்தில் பார்த்தால் வயல் வரப்பில்  ஓட்டிக் கொண்டே வாகனத்தை மலை அடிவாரத்திற்குக் கொண்டு வந்து விட்டார் அந்த ஆர்வம் மிக்க வாகனமோட்டி.

வாகனம் அருகில் வந்து விட்டது என்பதால் அன்றைய பதிவிற்காக வந்திருந்த ஏனைய ஆய்வாளர்களிடம் நன்றி சொல்லி நாங்கள் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டோம்.

ஆனால் ...

எங்களை ஏற்றிக் கொண்ட பின்னர் அவருக்கு மகிழ்ச்சியும் பெருமிதமும் சேர்ந்திருக்க வேண்டும். வேகமாகச் செல்ல வேண்டும் என்ற ஆர்வக்கோளாரில் எங்கள் வாகனமோட்டியார் வாகனத்தைச் சற்று ஓரம் திருப்பியதில்  வாகனம் அப்படியே வயலுக்குள் இறங்கி விட்டது.

எங்களுக்கு விடையளித்துச் சென்ற ஆய்வாளர்களும் நண்பர்களும் எங்கள் நிலையைப் பார்த்து ஓடிவந்தனர். வாகனத்தை அப்படி இப்படி நகர்த்தினால் வாகனம் சற்றும் நகரவில்லை. பின்னர் அந்தக் கிராமத்தைச் சார்ந்தவர்களும், வயலில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த மேலும் இருவரும் எங்களுக்கு உதவ வந்து சேர்ந்தனர்.

எங்களுடன் இருந்த தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்களும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலரும் என எல்லோரும் பெரிய பாறைக்கல் ஒன்றை ஒரு சக்கரத்தின் கீழே வைத்து வாகனமோட்டியை ஓட்டச் செய்து ஒரு வழியாக வாகனத்தை வெளியே கொண்டு வந்தனர்.

எங்கள் வாகனமோட்டியோ வாகனத்தை மீட்டு விட்டோம் என்ற மிகுந்த  மகிழ்ச்சியுடன் தொடர்ந்து வாகமோட்டினார். மாலை பதிவெல்லாம் முடிந்து இரவு செஞ்சி சேர்ந்து பின்னர் மறு நாளும் எங்களுடன் இருந்து நாங்கள் கேட்டுக் கொண்ட இடங்களுக்கெல்லாம் பத்திரமாக எங்களை இந்தப் பயணத்தில் அழைத்துச் சென்றார்.

எங்களுடன் வாகனமோட்டியாக வந்திருந்த வாகன ஓட்டுநரும் இந்தப் பயனத்தில் ஒரு வரலாற்று ஆர்வலராக மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்தப் பயண அனுபவம் இப்போது நினைத்தாலும் மறக்க முடியாத குதூகலமான ஒரு அனுபவம். அந்தப் பயணத்தின் போது செய்யப்பட்ட வரலாற்றுப் பதிவு https://youtu.be/7Soskq3M3H8 என்ற பக்கத்தில் வீடியோ விழியக் காட்சியாக தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடாக மலர்ந்தது. இப்படிப் பல வரலாற்றுச் சின்னங்கள் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் காணக் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றி அறிந்து கொள்வதும், வாய்ப்பமைந்தால் நேரில் சென்று பார்த்து வருவதும் நமது தமிழர் வரலாற்றைப் பற்றிய சரியான புரிதலுக்கு நிச்சயம் வழிவகுக்கும்!







Friday, December 15, 2017

78. பொய்யாத வரலாறு



மலேசிய மாநிலங்களில் மலாக்கா மாநிலத்திற்கென்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. நெகிரி செம்பிலான் மாநிலத்தை வடக்கிலும், மேற்கிலும் தெற்கிலும் ஜொகூர் மாநிலத்தையும் எல்லையாகக் கொண்ட மாநிலம் இது. மலேசிய வரலாற்று மாநிலம் என்ற சிறப்புடன் ஐக்கிய நாடுகள் சபையினால் பாதுகாக்கப்பட வேண்டிய உலக வரலாற்றுப் பகுதி என அடையாளம் காணப்பட்டு 2008ம் ஆண்டு ஜூலை மாதம் 7ம் தேதி அதிகாரப்பூர்வமாகப் பிரகடணப்படுத்தப்பட்டது மலாக்கா.

பண்டைய மலேசியாவை எடுத்துக் கொண்டால், இன்று தீபகற்ப மலேசியா என நாம் குறிப்பிடும் பகுதியில் குறிப்பிடத்தக்க சில அரசுகள் நீண்ட காலம் ஆட்சி செய்துள்ளன. இந்த நிலப்பகுதியானது வணிகக் கடல் வழிப்பயணத்தில் அமைந்துள்ளது என்பது மிக முக்கியமானதொரு காரணமாக அமைகின்றது. இந்தியப் பெருங்கடல் பகுதிக்கும், பசிபிக் பெருங்கடல் பகுதிக்கும் இடையே மிக நூதனமான அமைப்பில் மலேசிய தீபகற்பமும் இந்தோனீசியத் தீவுகளும் அமைந்துள்ளதைப் புவியியல் கண்ணோட்டத்தில் சிறப்பித்துக் குறிப்பிடலாம். இந்தச் சிறப்பு இந்திய வணிகர்களும் சீனா, கொரியா ஜப்பான் போன்ற தூரக்கிழக்காசிய நாடுகளிலிருந்து வணிகர்கள் கடல் மார்க்கமாக வந்து செல்லும் போது ஓய்வெடுக்கும் ஒரு நிலப்பகுதியாக அமைந்திருந்ததைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

பண்டைய மலேசிய நிலப்பகுதியை ஆட்சி செய்த முக்கியப் பேரரசுகளாக வரலாற்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுபவை ஃபூனான், ஸ்ரீவிஜயா, மஜபாகிட், கங்கா நெகாரா ஆக்கியவை . 11ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திரச் சோழனின் படற்படை தாக்குதல் மலாயா தீபகற்பத்தின் வடக்குப் பகுதியில் அன்று முக்கியத் துறைமுகங்களுள் ஒன்றாக இருந்த கடாரத்தில், அதாவது இன்றைய கெடா மாநிலத்தில் நிகழ்ந்தது. ராஜேந்திர சோழன் ஸ்ரீவிஜயப் பேரரசைப் போரில் வென்றமைக்கு வெவ்வேறு காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன என்றாலும் இப்பகுதியில் நிலைப்பெற்றிருந்த வணிகத்தைக் கையகப்படுத்தும் முயற்சியாகவும், அன்றைய மலாயாவின் வளங்களைக் கருத்தில் கொண்டு இப்பகுதியைத் தமது ஆட்சிக்குட்பட்ட பகுதியாக சோழப்பேரரசு வைப்பதற்கும், தனது பேரரசை விரிவு செய்யும் முயற்சிகளில் ஒன்றாகவும் இம்முயற்சியைத்  தயக்கமின்றிக் காணமுடிகின்றது.

கடாரத்தைக் கைப்பற்றினாலும் கூட இங்கே சோழ அரசு நிலைப்பெற்றிருந்தது ஏறக்குறைய 99 ஆண்டுகள் மட்டும் தான். படிப்படியாகத் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், மலாயா தீபகற்பத்தில் சோழர் ஆதிக்கத்தைக் குறைத்து விட்டது. அதன் பின்னர் அரேபியர்களின் தாக்கத்தினால் இஸ்லாமிய மதம் கடாரப்பகுதியில் பரவ ஆரம்பித்ததன் விளைவாக அப்பகுதியை ஆண்டு வந்த மன்னர்கள் இஸ்லாமிய மதத்தைத் தழுவி இஸ்லாமிய பண்பாட்டுக் கூறுகளை வளர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். ஆயினும் 12ம் 13ம் 14ம் நூற்றாண்டுகளில் கெடா ஒரு பேரரசாகத் திகழவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

அடிப்படையில் ஒரு மீனவர் கிராமமாக இருந்த மலாக்கா கடாரத்திலிருந்து தெற்குப் பகுதியில் இருக்கும் ஒரு பகுதியாகும் . 1377ம் ஆண்டில் இன்றைய இந்தோனீசியாவின் ஒரு பகுதியில் சிற்றரசராக இருந்த பரமேசுவரா, மஜபாஹிட் அரசின் தாக்குதலால் அங்கிருந்து தப்பித்து வெளியேறுகின்றார். இன்றைய சிங்கப்பூருக்கு வந்து அங்கே 1389 முதல் 1398 வரை ஆட்சி செய்கின்றார். அங்கேயும் அவரை மஜபாஹிட் அரசு ஆட்சி செய்ய விடவில்லை. சிங்கப்பூர் பகுதியையும் கைப்பற்றும் நோக்கில் படையெடுத்த மஜபாஹிட் அரசிடமிருந்து தப்பியோடி மலாக்காவிற்குத் தனது பரிவாரங்களுடன் வந்து சேர்கின்றார் மன்னர் பரமேசுவரா. பெர்த்தாம் நதிக்கரையில் 1402ம் ஆண்டு வந்தடைகின்றார். மலாக்கா தான் தன் புதிய ராஜ்ஜியத்தை அமைக்க ஏதுவான நகரம் என்ற நம்பிக்கையுடன் அங்கே முடிசூட்டிக் கொண்டு ஒரு மன்னராக ஆட்சியைத் தொடங்குகின்றார் பரமேசுவரா. மலாக்கா துறைமுகத்தை விரிவாக்குகின்றார். இந்தியா சீனா மட்டுமன்றி ஐரோப்பாவிலிருந்தும் வணிகர்கள் வந்து தங்கியிருந்து வணிகம் செய்து செல்லும் பெறும் துறைமுகப்பட்டினமாக மலாக்கா வளர்ச்சி பெருகின்றது . அரேபிய இஸ்லாமிய இளவரசியை மணத்து இஸ்லாமிய மதத்தைத் தழுவுகின்றார் பரமேசுவரா. இதனால் தனது பெயரையும் சுல்தான் இஸ்கந்தர் ஷா என மாற்றிக் கொள்ள, மலாக்கா பேரரசு முழுமையான இஸ்லாமியப் பேரரசாக உருமாற்றம் பெற்றது.

1511 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் கோவாவிலிருந்து போர்த்துக்கீசியரான அல்ஃபான்சோ டி அல்புகர்க் மலாக்காவைப் பற்றி கேள்விப்பட்டு அங்கிருந்து கடல் பயணம் மேற்கொள்கின்றார். 18 கப்பல்களுடனும் 1200 போர் வீரர்களுடனும் வந்து மலாக்காவைத் தாக்கி கைப்பற்றுகின்றார். இவர் காலத்தில் மலாக்கா முற்றிலுமாக போர்த்துக்கீசியர் வசமாகியது. இந்தியாவிலும் பெரிதாக அறியப்பட்ட கத்தோலிக்க பாதிரியார் பிரான்சிஸ் சேவியர் அவர்கள் கி.பி. 1545, 1546, 1549 ஆகிய ஆண்டுகளில் மலாக்கா வந்து இங்கு கிருத்துவ சமயத்தைப் பரப்புவதற்காகப் பயணம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய மதமும் கிருத்துவ மதமும் இந்த அரசியல் மாற்றங்களினால் மலாக்காவிலும் மலாயாவிலும் முதன்மை பெற்ற நிகழ்வுகள் நடந்தன என்ற போதிலும் தமிழகத்திலிருந்து வருகை புரிந்த தமிழர்களும் சீனாவிலிருந்து வந்து சேர்ந்த சீன வணிகர்களும் தங்கள் இந்து சமய மற்றும் பௌத்த சமய வழிபாட்டுக்கூறுகளையும் மலாக்காவில் அறிமுகப்படுத்தத் தொடங்கியிருந்தனர். ஏற்கனவே மலாயாவில் இருந்த ஏராளமான இந்து மற்றும் பௌத்த ஆலயங்கள் போர்களினாலும் அரசியல் மாற்றங்களினாலும் பெருமளவு சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டிருந்தன. அந்தச் சூழலில் மீண்டும் ஒரு ஆலயம் அமைக்கும் முயற்சியாகத் தமிழகத்திலிருந்து மலாக்கா வந்து அங்கேயே தங்கி தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்கியிருந்த தமிழ் வணிகர்கள் குழு இங்கு ஒரு விநாயகர் ஆலயத்தை 1781ம் ஆண்டு அமைத்தது. இந்த ஆலயம் தான் இன்று நாம் மலாக்காவில் காணும் பொய்யாத விநாயகர் ஆலயம்.

அளவில் சிறியதுதான் என்றாலும் மலாக்கா நகரின் ஜோங்கர்  ஸ்ட்ரீட் பகுதியில் நகர மையத்தில் வணிகத்தலங்கள் இருக்கும் கட்டிடங்களின் வரிசையில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் சுவாமியின் பெயர் ஸ்ரீ பொய்யாத வினாயகர்மூர்த்தி. இன்று இக்கோயில் மலாக்கா நாட்டுக்கோட்டை செட்டியார்கள் நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகின்றது. மலாக்காவிற்கு வந்து செல்லும் சுற்றுப் பயணிகள் பார்த்து வழிபட்டுச் செல்லும் ஒரு இடமாகவும் இது சுற்றுலா கையேட்டில் இடம்பெறுகின்றது.

ஸ்ரீ பொய்யாத வினாயகர்மூர்த்தி கோவிலில் கருவறையில் சிறிய வடிவத்திலான பிள்ளையார் சிலை வழிபாட்டில் இடம்பெறுகின்றது. கோவிலில் முருகன், மீனாட்சி அம்மை, சண்டிகேஸ்வரர் ஆகிய சன்னிதிகளும் உள்ளன. கோவிலின் பின்புறத்தில் பழமையான ஒரு கிணறு உள்ளது. இது இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றது. மிகத் தூய்மையாக ஆலயம் பராமரிக்கப்படுகின்றது.

எனது அண்மைய பயணத்தில் மலாக்காவிற்குச் சென்றிருந்தபோது இக்கோவிலுக்கு நேரில் சென்று பார்த்து வந்தேன். தமிழகத்திற்கும் மலேசியாவிற்கும் இடையிலான தொடர்பு என்பது இன்றைக்கு நேற்று வந்த தொடர்பல்ல. இது பன்னெடுங்காலமாக் நீடித்து இருக்கும் தொடர்பு. இத்தொடர்புகளுக்குச் சாட்சியாய் அமைந்த சின்னங்கள் பல சீரழிக்கப்பட்ட நிலை இப்போது காணப்பட்டாலும் கூட இன்றைக்கு நம் கண்ணெதிரே இருக்கும் ஒரு வரலாற்றுச் சின்னமாக இந்த 300 ஆண்டு பழமையான விநாயகர் ஆலயத்தை நாம் குறிப்பிட வேண்டும். மலேசியாவின் மலாக்காவிற்குச் செல்பவர்கள் இந்த வரலாற்றுப் பின்னணியையும் அறிந்து கொண்டு இக்கோவிலுக்குச் சென்று வருவது நமது பண்டைய தமிழ் மக்களின் முயற்சிகளைப் பெருமைப்படுத்தும் ஒரு நிகழ்வாகவும் அமையும் என்றே கருதுகிறேன்!

Friday, December 1, 2017

77. ஓர் இனிய தமிழ்த் திருமணம்


மலேசியாவிலிருந்து நான் ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்து சென்று ஏறக்குறைய 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இடைப்பட்ட காலத்தில் தொடர்ச்சியாக நான் மலேசியாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் ஓரிருமுறை வந்து செல்வது வழக்கம். நண்பர்கள் இல்லத்தில் நடைபெறும் பல விசேஷங்களில் கலந்து கொள்ள முடியாத சூழல் தான் அனேகமாக எனக்கு அமைந்துவிடும். நான் மலேசியாவிற்கு வருகின்ற விடுமுறை நாட்களில் பல சமூக நிகழ்ச்சிகளுக்காகவும், அலுவல்களுக்காகவும் எனது நாட்கள் செல்வாகிவிடுவதாலும் கூட சில குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்ள இயலாத நிலை எனக்கு ஏற்பட்டு விடுவதுண்டு.

மலேசியாவிற்கு வந்தால்தான் தமிழ்த்திருமணங்களைக் காண முடியுமா என சிலருக்குக் கேள்வியும் எழலாம். ஜெர்மனியிலும் ஐரோப்பிய சூழலிலும் கூட எனது தமிழ் நட்புச் சூழலில் அவ்வப்போது நடைபெறுகின்ற திருமண நிகழ்வுகளின் அழைப்பிதழ்கள் எனக்கு வந்து சேரும். ஆயினும் அத்தகைய நிகழ்வுகளில் அங்கு கலந்து கொள்ள எனக்கு நேர அவகாசம் கிடைப்பதில்லை. அலுவலகப் பணிகளிலும் தமிழ் ஆய்வுப் பணிகளிலும் மூழ்கி விட்டால் ஏனைய நிகழ்வுகளில் கலந்து கொள்வது என்பது இயலாத ஒன்றாகிப் போயிவிடும் சூழல் தான் இயல்பாக எனக்கு அமைந்து விடுகின்றது.

இந்த நிலையில் இம்முறை  எனது மலேசியப் பயணம் மிக சுவாரசியமாகத்தான் அமைந்து விட்டது. 2 வார விடுமுறை எடுத்துக் கொண்டு மலேசியா வந்து சேர்ந்தேன். ஆனால் திடீரென்று தமிழகத்தில் சில நிகழ்வுகள் ஏற்பாடாகியமையினால் எனது திரும்பிச் செல்லும் விமான டிக்கட்டை ரத்து செய்து விட்டு இந்தியா செல்லும் சூழல் எனக்கு ஏற்பட்டது. இப்போதெல்லாம் சில விமான நிறுவனங்கள் டிக்கட்டை மாற்றம் செய்யச் சொல்லிக் கேட்டால் ரத்து செய்வது மட்டும் தான் முடியும் என கறாராகச் சொல்லி விடுகின்றனர். ஆக, வேறு வழியில்லாமல் விமானப் பயண டிக்கட்டை ரத்து செய்து விட்டு தமிழகம் சென்று அங்குள்ள பணிகளை முடித்து விட்டு திரும்பும் போது மலேசியாவில் மேலும் சில நாட்கள் இருக்க வேண்டிய தேவை ஏற்படவே இன்னும் சில நாட்கள் இருந்து தேங்கிக்கிடக்கும் சில பணிகளை முடித்து விட்டுச் செல்வது என்று நினைத்து விட்டேன். இந்த இடைப்பட்ட வேளையில் நண்பர் திரு.ஓம்ஸ் தியாகராஜன் அவர்களின் புதல்வர் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு கிடைத்தது. நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னர் நான் கலந்து கொண்ட ஒரு திருமண நிகழ்வு இது என்று தான் சொல்ல வேண்டும்.

பொதுவாக மலேசியாவில் நடைபெறுகின்ற திருமணங்கள் பெரிய ஆலயங்களிலோ அல்லது திருமண மண்டபங்களிலோ நடைபெறும். ஆனால் இந்தத் திருமணமோ பெரிதும் அறியப்படாத ஒரு செம்பனைத்  தோட்டத்தில், அங்கிருக்கும் ஒரு குல தெய்வக் கோயிலில் ஏற்பாடாகியிருந்தது. கோலாசிலாங்கூர் ஜெராம் தோட்டம் செம்பனைத் தோட்டங்கள் நிறைந்த ஒரு பகுதி.  அங்கு புக்கிட் மெர்பாவ் பகுதியில் யானை மலை என அழைக்கப்படும் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி குலதெய்வ ஆலயம் ஒன்று இருக்கின்றது. அந்தக் கோயிலில் தான் இந்தத் திருமணம் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தது என்பதை அறிந்து கொண்டபோது ஆச்சரியமும் இதனை நேரில் சென்று திருமண நிகழ்வுகளைக் கண்டு வர வேண்டும் என்ற ஆவலும் எழுந்தது.

காலை 9 மணிக்குத் திருமணம் என்பதால் கோலாலம்பூரிலிருந்து நண்பர்களுடன் ஒரு வாகனத்தில் காலை 7:30 மணி வாக்கிலேயே புறப்பட்டு விட்டோம்.  தமிழர்கள் வாழ்ந்த செம்பனைத் தோட்டம் தான் என்றாலும் கூட இன்று அதிகம் அறியப்படாத ஒரு பெயராக இப்பகுதி இருந்ததால் வாகனத்தில் GPS கருவியை பயன்படுத்தி முகவரியைக் கொடுத்து பயணிக்க ஆரம்பித்து விட்டோம். செல்லும் வழியெல்லாம் மலாய்க்காரர்கள் நிறைந்து வாழும் கிராமங்களும் ஆங்காங்கே மாரியம்மன், முருகன் கோயில்களும் கண்களில் தென்படவே செய்தன. இவ்வளவு தூரத்தில் இருக்கின்றதே. பொது மக்கள் இந்த இடத்திற்கு வந்து விடுவார்களா, என்ற ஐயத்தை மறைத்தது அங்கே வரிசை வரிசையாக வந்திருந்த ஏராளமான கார்களும் பேருந்தும்.

திருமணம் நடைபெற்ற கோயில் பகுதியில் இரண்டு பெரிய கோயில் வளாகங்கள் இருக்கின்றன. முதலில் நம்மை வரவேற்பது ஸ்ரீ வேங்கை முனி கருமாரியம்மன் ஆலயம். இது வடிவத்தில் ஒரு சீனர் கோயிலை ஒத்த அமைப்பில் கட்டப்பட்ட ஆலயம். இந்த ஆலயத்தின் உள்ளே பல சன்னிதிகள் இருக்கின்றன. பெயர் தெரியாத பல புதிய கடவுளர்களின் சிலைகளோடு மலேசியத் தோட்டப்புரக் கோயில்களில் நமக்கு நன்கு தெரிந்த முனியாண்டி சாமி, பேச்சாயி அம்மன், மதுரை வீரன், சுடலை மாடன், சூலம் ஆகிய சன்னிதிகளோடு வேங்கை முனி சாமியின் சன்னிதியும் உள்ளது. இதில் அதிசயமாக ஒரு சன்னிதிக்கு மேலே இஸ்லாமியர்கள் வழிபடும் பிறை நிலாவும் சந்திரனும் இருக்கும் வகையில் ஒரு சன்னிதியும் உள்ளது. இந்த சன்னிதிக்குள் தர்கா போன்ற அமைப்பில், ஆனால் சிறிய வகையில் ஒரு கல்  வைக்கப்பட்டு வழிபடுவதும் உள்ளது. மதுரைவீரன் சன்னிதிக்கு முன்னர் பெரிய அமைப்பிலான ஒரு குதிரையும் அதனைச் செலுத்தும் ஒரு குதிரை வீரனது சிலையும் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில் இருப்பது ஒரு மலையடிவாரப்பகுதி என்பதால் குரங்குகள் இங்கு ஏராளம் குவிந்திருக்கின்றன. உள்ளே சென்று சன்னிதிகளைப் பார்த்து வரும் போது இந்தக் குரங்குகள் வருவோரை எவ்வகை சேட்டைகளும் செய்து அச்சுறுத்தவில்லை. மாறாக ஆங்காங்கே தாவி ஓடி இந்தக் கோவில் சூழலை இனிதாக்குகின்றன.

இதற்கடுத்தாற்போல உள்ள மற்றொரு கோயில் தான் திருமணம் நடைபெற்ற மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி குலதெய்வ ஆலயம். இங்கு ஆலயத்தின் முகப்பிலேயே பெரிய விநாயர் சிலை இருக்கின்றது. கோயிலின் உள்ளே இடது புறம் காளியம்மன் சன்னிதி வைக்கப்பட்டுள்ளது.  கருவரையில் மிக அழகிய முறையில் அலங்கரிக்கப்பட்ட புதுமை படைப்பாக அங்காளபரமேஸ்வரி அம்மன் காட்சி தருகின்றார்.  நாம் பொதுவாகப் பார்த்துப் பழகிய வடிவிலிருந்து மாறுபட்ட வகையில் மேலும் ஒரு சன்னிதியில் 16 கரங்களுடன் அங்காள பரமேஸ்வரி இளம் வாலைக்குமரியாகவும் காட்சி தருகின்றார்.

நாங்கள் சென்றடையும் போது  திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. மாப்பிள்ளை டாக்டர்.தி.பழனீஸ்வரனும் மணமகள் டாக்டர்.த. நிஷாவும் மணமக்கள் கோலத்தில் சடங்குகள் செய்யப்படும் இடத்தில் அமர்ந்திருந்தனர். செவ்வாடை உடுத்திய பூசாரி ஒருவர்  தமிழில் சடங்கினை விவரித்துச் சொல்லி இரு வீட்டாருக்குமிடையிலான திருமணச் சடங்குகளை நடத்தி வைத்துக் கொண்டிருந்தார். வைதீக முறையில் வேதம் ஓதப்படவில்லை. மாறாக தமிழில் திருமண விளக்கம் வழங்கப்பட்டது. சடங்குகள் ஒவ்வொன்றையும் அதனைத் தனித்தனியே குறிப்பிட்டுச் சொல்லி, அதனை விளக்கி மணமக்களையும் அவர்கள் பெற்றோரையும் திருமணச் சடங்கில் ஈடுபடுத்தியிருந்தார் கோயில் பூசாரி ஐயா.  தமிழகத்தின் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்திலிருந்து செவ்வாடைத்தொண்டர்கள் சிலரும் இந்த நிகழ்வில் அருகிலிருந்து திருமண நிகழ்வினை வாழ்த்த வந்திருந்தனர்.  மஞ்சள் அரிசி உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கப்பட்டது. மங்கல நாண் மணமக்கள் பெற்றோர்கள் கைகளில் வழங்கப்பட்டது. வந்திருந்த அனைவரும்  மஞ்சள் அரிசி தூவ  மணமகன் மணமகளுக்கு மங்கள நாண் பூட்டினார். திருமணத்தின் முழு நிகழ்விலும் நாதஸ்வர இசைக்கச்சேரி வாசிக்கப்பட்டது. உள்ளூர் மலேசிய தமிழ்க்கலைஞர்களே இதில் நாதஸ்வர இசைக்கருவியை இசைத்தனர். நாதஸ்வர இசையை வாசித்த இருவரில் ஒருவர் பெண்மணி என்பதும் இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு மெருகூட்டுவதாக அமைந்தது.

குலதெய்வ வழிபாடு என்பது பண்டுதொட்டு தமிழர் பண்பாட்டில் நிலைபெற்றிருக்கின்றது. தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து மலேசியா வந்த தமிழ் மக்களில் சிலர் இன்றளவும் குலதெய்வ வழிபாட்டினைத் தொடர்கின்றனர். அதிலும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டால், திருமணத்தைக் குலதெய்வக் கோவிலில் அழகிய தமிழ் மொழியில் நிகழ்த்தியமை மிகச் சிறப்பு. மலேசியத் தமிழர்கள் தமிழ் மொழியும் பண்பாடும் கலையும் அழிந்து வருகின்றதே என வருத்தப்படுவதை விடுத்து இது போல தங்கள் இல்லத் திருமணங்களைத் தமிழ் மொழியில் நடத்துவதும் தமிழர் பண்பாட்டு விசயங்களை ஒதுக்கி விடாமல் அவற்றை தங்கள் குடும்பங்களில் கடைபிடிப்பதும் மிக அவசியமான ஒன்றே.

மலேசியச் சூழலில் மிகப் புதிய அனுபவமாக இந்தத் திருமணம் எனக்கு அமைந்தது. அது மட்டுமன்றி நெடுநாட்கள் பார்க்க வாய்ப்பு கிடைக்காத நண்பர்கள் சிலரைப் பார்க்கவும் சந்தர்ப்பமாக இது அமைந்தது என்பதோடு  பல புதிய நண்பர்கள் அறிமுகமும் இந்த நிகழ்வில் கிட்டியது. திருமண நிகழ்வே ஒருவருக்கொருவர் சந்தித்து அன்பை பகிர்ந்து கொள்ளும் ஒரு மகிழ்வான நிகழ்வு தானே. இத்தகைய திருமண நிகழ்வுகள் நமது தமிழர் மரபின் ஆணி வேர்கள். வேர்களைப் பாதுகாப்போம். தமிழர் பரைனைப் போற்றுவோம்!