Wednesday, November 16, 2016

37. மதராசபட்டினம் - ஒரு நகரின் வரலாறு



நமது இருப்பிடத்தின் முகவரியைத் தரவேண்டுமென்றால் எந்த நாட்டில் எந்த நகரத்தில் வசிக்கின்றோம் என்பதைக் கட்டாயம் நாம் தெரிவித்துத்தான் ஆகவேண்டும். ஒரு நாட்டில் எத்தனையோ நகரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நகருக்கும் அவை தோன்றிய காலம், அதன் வரலாறு பற்றி பொதுவாக நாம் யோசிப்பதில்லை. நகரங்களின் வரலாற்றை அறிந்து கொள்ள ஏறக்குறைய அனைவருமே முக்கியத்துவம் காட்டுவதில்லை, ஒரு சில வரலாற்றுப் பிரியர்களைத்தவிர. இன்றைக்கு நாம் வசிக்கும் நகரங்கள் பன்னெடுங்காலமாக அதே பெயரில் அதே அமைப்பில் அதே அளவில் இருந்ததில்லை. நகரங்களின் பெயர்களும் காலத்துக்குக் காலம் மாற்றம் கண்டு வந்துள்ளன, அளவில் கூடியும் குறைந்தும் மாற்றம் கண்டிருக்கின்றன. ஒரு சில நகரங்கள் பலபல பெயர்களில் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் ஆராய்வதும் அறிந்து கொள்வது என்பதுவும் வரலாற்றுத்துறையில் அடங்குவதுதான்.

நமக்கு இன்று கிடைக்கின்ற ஆவணங்களின் அடிப்படையில் உலகின் மிகப்பழமையானதும் மக்கள் வாழ்ந்த நகரங்களாகவும் அறியப்படும் நகரங்களின் வரிசையில் பாலஸ்தீன நாட்டின் ஜெரிக்கோ, லெபனான் நாட்டின் பிப்லோஸ் மற்றும் பெய்ருட், சிரியாவின் அலெப்பொ மற்றும் டமாஸ்கஸ், ஆப்கானிஸ்தானின் பால்க், ஈராக்கின் கிர்க்குக் மற்றும் அர்பில், துருக்கியின் காஸியாந்தெப் மற்றும் கோப்பெக்லி தீப், பல்கேரியாவின் ப்ளோவ்டிவ், எகிப்தின் ஃபையூன், ஈரானின் சூசா, கிரேக்கத்தின் ஏதன்ஸ் மற்றும் தீப்ஸ், ஸ்பெயினின் காடிஸ், இந்தியாவின் வாரனாசி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

தமிழகத்தில் நாம் பொதுவாக அறிந்திருக்கும் நகரங்கள் சிலவற்றுள் திருச்சி, மதுரை, சென்னை, திருநெல்வேலி , காரைக்குடி, தஞ்சாவூர், கும்பகோணம், நாமக்கல், திண்டிவணம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என சில நகர்களின் பெயர்களைக் குறிப்பிடலாம். இதில் சென்னை என நாம் அறிந்த ஊரின் அன்றைய பெயர் மதராசபட்டினம். இந்த நகரின் வரலாற்றினை எழுதியவர் கடலோடி என அழைக்கப்படும் திரு.நரசய்யா அவர்கள். இவரது ஆய்வில் இந்த நூலைப்போன்றே ஆலவாய் என்ற மற்றொரு நூலும், ஏனைய பல புனைகதைகளும், கட்டுரை நூல்களும் கடித இலக்கிய நூல் ஒன்றும் வெளிவந்துள்ளன. திரு.நரசய்யா அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினராக இருந்து நமது வரலாற்று ஆய்வுப்பணிகளில் தம்மை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இணைத்துக் கொண்டவர்.

"மதராசப்பட்டினம் - ஒரு நகரத்தின் கதை 1600-1947" என்ற தலைப்பில் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாரால் இந்த நூல் 2006ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த நூலில் சாந்தோம் அல்லது கோரமண்டலம் எனப்படும் பகுதியைப்பற்றிய அறிமுகமும் வரலாறும், மதராசப்பட்டினத்தில் ஆங்கிலேயரின் வருகை, செயிண்ட் ஜார்ஜ் கோட்டை நிர்மாணிப்பு சீரமைப்பு அவை பற்றிய ஆவணங்கள், அக்கால வழக்கில் இருந்த நீதிமுறைகள் மற்றும் நீதிபதிகளும் அன்று முக்கியப் பிரச்சனையாக தலைதூக்கிய வலங்கை இடங்கை பிரச்சனைகள் மற்றும் கிறிஸ்துவ மத சம்பந்தமான பிரச்சனைகள் பற்றியும் மதராசில் துபாஷிகள், தொலைப்பேசி பயன்பாடு, பொது போக்குவரத்துப் பயன்பாடு போன்ற தகவல்களும் மதராசப்பட்டினத்தில் நிகழ்ந்த அடிமை வியாபாரமும், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியினர் நடத்திய வர்த்தகச் செய்திகளும், மதராசப்பட்டிணத்திற்குப் பெருமை சேர்த்த பெரியோர் மற்றும் பெண் ஆளுமைகள், ஆங்கிலேயர் காலத்து கல்வி முறை அமைப்பு, மதராசப்பட்டினத்தின் மாநகராட்சி முறை, மதராச பட்டினத்துக் கோயில்கள் மற்றும் ஏனைய சமயங்களின் வழிபாட்டுத் தலங்கள், மதராசப்பட்டினத்து சரித்திரப் புகழ்வாய்ந்த இடங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் என பதின்மூன்று அத்தியாயங்களில் தகவல்களை வழங்கும் களஞ்சியமாக இந்த நூலைத் திரு.நரசய்யா படைத்திருக்கின்றார்.

இந்த நூலை தாம் எழுத நேர்ந்தமையைப் பற்றியும் இதன் சிறப்புக்களை அவர் விவரிக்கும் பிரத்தியேக ஒலிப்பதிவு பேட்டி தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தின் வரலாற்றுப்பக்கத்தில் உள்ள மதராசப்பட்டினம் என்ற தலைப்பிலான பக்கத்தில் உள்ளது. இந்தப் பேட்டியை தொலைப்பேசி வழியாக  2008ம் ஆண்டில் நன பதிவு செய்து வலைப்பக்கத்தில் வெளியிட்டேன். இந்தப் பேட்டிகளைக் கேட்பதன் வழி திரு.நரசய்யா தம் குரலிலேயே மதராச பட்டினம் தொடர்பான கருத்துக்களை வரலாற்று ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொள்வதைக் கேட்கலாம்.

மயிலாப்பூர் இன்று கபாலீசுவரர் கோயில் மற்றும் திருவல்லிக்கேணி கோயிலுக்காகப் புகழ் பெற்ற இடமாகத் திகழ்கின்றது. இதன் அருகில் இருக்கும் சாந்தோம் பகுதி இன்று சாந்தோம் தேவாலயத்தின் புகழைச்சொல்வதாக அமைந்திருக்கின்றது. 16 ம் நூற்றாண்டில் வாஸ்கோடகாமா தலைமையிலான குழு கேப்ரியல் என்ற கப்பலில் பயணித்து இந்தியா வந்தமையைப் பற்றி நாம் அறிந்திருப்போம். அந்த முதல் பயணத்தின் பின் மீண்டும் தொடர்ந்த கடற்பயணங்களில் படிப்படியாக வர்த்தக நோக்கத்துடனும் பின்னர் மதம் பரப்பும் நோக்கத்துடனும் போர்த்துக்கீசியர்கள் வருகை என்பது தமிழக நிலப்பரப்பில் நிகழ்ந்தது. சாந்தோம் பகுதியில் 1522க்கு முன்னர் போர்த்துக்கீசியர்கள் தமது ஆட்சியை நிறுவவில்லை என்ற போதிலும் சாந்தோமிற்கு அருகில் இருக்கும் லஸ் சர்ச் எனப்படும் தேவாலயம் 1516ம் ஆண்டிலேயே போர்த்துகீசியர்களால் அமைக்கப்பட்டிருக்கின்றது என்பதை இங்கே உள்ள சாசனக் கல்லில் உள்ள தகவலின் படி அறிந்து கொள்ள முடிகின்றது.

சாந்தோமைப்பற்றி குறிப்பிடும் போது செயிண்ட் தோமஸ் பாதிரியாரைப்பற்றியும் குறிப்பிடவேண்டியது அவசியமாகின்றது. ஏசு கிறிஸ்துவின் மறைவுக்குப் பின்னர் அவரது சீடர்கள் பலவாறாகப் பிரிந்து பல தேசங்கள் சென்றதாகவும் அவர்களின் வழி வந்த ஒருவர் இந்தியா வந்து அதிலும் சாந்தோம் என அழைக்கப்படும் இப்பகுதியில் வாழ்ந்து மறைந்ததாகவும், செயிண்ட் தோமஸ் எனும் அவரது பெயரே சாந்தோம் என மாற்றம் கண்டதாகவும் தகவல்கள் உள்ளன. ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டிய தகவல்கள் தாம் என்றாலும் இவை குறிப்பிடப்படவேண்டியனவே என்பதை மறுப்பதற்கில்லை. வரலாற்று ஆவணங்களில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அப்போதைய போர்ச்சுக்கல் மன்னனான இரண்டாம் பிலிப்பின் வேண்டுகோளின்படி, போப் அவர்களால் 1606ம் ஆண்டில் நிறுவப்பட்டதுதான் டயோசிஸ் ஆஃப் சாந்தோம். பின்னர் இப்பகுதிக்குள் மயிலாப்பூரும் இணைந்தது. இந்த டயோசிஸ் ஆரம்பிக்கப்பட்டவுடன் அப்பகுதியில் இருந்த பழைய சர்ச்சுக்களும் இந்து சமயக் கோவில்களும் சமண சமயக் கோயில்களும் இடிக்கப்பட்டன. இங்கு புதையுண்ட பகுதிகளைத் தோண்டியபோது சமணர்களின் நேமிநாதர் ஆலயத்தின் எச்சங்கள் இங்கே கிடைத்தன என்றும் இவை அருங்காட்சியகத்தில் தற்சமயம் பாதுகாக்கப்படுகின்றன என்றும் அறிகின்றோம். இன்று சாந்தோமில் இருக்கும் கதீட்ரல் 1896ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும்.

போர்த்துக்கீசியரின் ஆளுகைக்கு ஏறக்குறைய வந்திருந்த சாந்தோம் பகுதி, பின்னர் ஆங்கிலேயர் வசம் கைமாறியது. வணிகர்களாக மதராசபட்டினம் வந்த ஆங்கிலேயர்கள் முன்னர் இங்கே வணிகம் செய்து கொண்டிருந்த போர்ச்சுக்கீசியர்களை விரட்டி விட்டு தமது ஆளுமையை நிலைநாட்ட முயற்சி மேற்கொண்டனர். எந்தப் போருமின்றி வணிக முயற்சிகளினால் சிறிது சிறிதாக முன்னேறி மதராசபட்டினத்தைப் படிப்படியாக தமது ஆளுமைக்குள் கொண்டு வந்தனர் ஆங்கிலேயர்கள்.

1600ம் ஆண்டின் இறுதி நாளில் தான் இங்கிலாந்தில் கிழக்கிந்திய கும்பினி உருவாக்கப்பட்டது. 1608ம் ஆண்டில் முதன் முறையாக இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் சூரத்தில் கால் பதித்து மன்னர் ஜஹாங்கீரின் ஆசீர்வாதத்தைப் பெற்று தங்கள் வணிகத்தை படிப்படியாக விரிவாக்கினர். பின்னர் தமது திகாரத்தை நிலை நாட்டத்தொடங்கினர். வணிகத்திற்காக தனியே வந்தவர்கள் பின்னாளில் குடும்பத்துடன் வந்து குடியேறவும் தொடங்கினர். அப்படி வந்த ஆங்கிலேயர்களுக்கு முதலில் அவர்களை ஈர்த்தது மதராசபட்டினம் தான்.

கிழக்கிந்திய கம்பெனிகள் அடிமைகளை வாங்குவது விற்பது என்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தன. அடிமைகள் வேறு நாடுகளுக்குத் தோட்டக்கூலிகளாக வணிகப்பொருட்களாக அனுப்பப்பட்டனர். இந்த நூலில்  உல்ள குறிப்புக்களின் படி மதராசப்பட்டினத்தில் இந்த அடிமை வணிகத்திற்கு நல்ல சலுகைகள் இருந்தமையும் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு அடிமைக்கும் சுங்க வரி மதராசபட்டினத்தில் மற்ற கரையோர துறைமுகங்களைக் காட்டிலும் குறைவு என்றும் , இதனைக் கண்காணிப்பவர் ஒரு இந்தியர் என்றும், 1711ம் ஆண்டு வாக்கில் ஒவ்வொரு அடிமை பதிவுக்கும் வரி 6 ஷில்லிங் 9 பென்ஸ் என வசூலிக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது. இந்த வணிகத்தை நடத்தியவர்கள் முக்கியமாக டச்சுக்காரர்கள் என்றும் அவர்கள் மதராச பட்டிணத்தில் உள்ளூர் புரோக்கர்களை நியமித்து அடிமைகளைப் பிடித்து மதராஸ் துறைமுகப்பட்டினம் வழியாக அனுப்பினர் என்னு தகவல்களையும் இந்த நூலில் அறிய முடிகின்றது.

மதராசபட்டினத்தில் பஞ்ச காலத்தில் அடிமை வியாபாரம் என்பது மிக மோசமான நிலையில் இருந்தது. 1646ல் ஏற்பட்ட ஒரு பஞ்சத்தின் போது அடிமைகளாக தம்மை விற்றுக் கொண்டோரை ஏற்றிக் கொண்டு ஒரு கப்பல் இந்தோனிசியா சென்றிருக்கின்றது. கிடைத்த ஆவணங்களில் அவை கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது கவனத்திற்கொள்ளப்பட வேண்டியத் தகவல் தான்.

"இந்தச் சிறிய கப்பலில் 400க்கும் மேலான அடிமைகள் வந்தனர். பசியால் வாடிக்கொண்டிருந்த அவர்கள் நிற்கக்கூட இயலாதவர்களாக இருந்தனர். கப்பலிலிருந்த அந்த பலகீனர்கள் தவழ்ந்தே இறங்கினர். பாதி விலைக்குத்தான் அவர்கள் விற்கப்பட்டார்கள். சாப்பாட்டுக்கு வழி இல்லாததால் அவர்கள் தமது நாட்டில் சாவதை விட வெளிநாட்டிலிருந்து கொண்டு அடிமைகளாக வாழ்வதே போதும் எனக் கப்பலில் வந்துள்ளார்கள்".

இப்படி மதராச பட்டினம் பற்றிய பலபல வரலாற்று நிகழ்வுகளைப் பதிந்திருக்கும் ஒரு ஆய்வுக்களஞ்சியமாக இந்த நூலை வழங்கி இருப்பதோடு விரிவான ஒலிப்பதிவு பேட்டிகளாகவும் பல தகவல்களை திரு.நரசய்யா வரலாற்றுப்பிரியர்களுக்காக வழங்கியுள்ளார். இந்த நூல் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பாட நூலாக சேர்த்துக் கொள்ளப்படவேண்டிய ஒரு நூல் என்பதே எனது கருத்து. வரலாற்று மாணார்களுக்கு மதராசப்பட்டினத்தை பற்றிய விரிவான புரிதலை இந்த நூல் வழங்கும் என்பதோடு இதே போல ஏனைய நகரங்களின் வரலாற்றை அறிந்து கொள்ள இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டுதலாகவும் அமையும். இத்தகைய அரிய வரலாற்று முயற்சிகளைப்பற்றி விரிவாக வாசகர்களுக்குப் பகிர்ந்து கொள்வதும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளில் ஒன்றாக அமைகின்றது . 

3 comments:

  1. நன்றி சுபா
    இம்மாதிரியான இடுகைகள் உங்களால் தான் முடியும்! கோர்வையாக எழுதியுள்ளது படிப்பவர்களுக்குக் ஆவலைத் தூண்டுவதாக உள்ளது. ஜெர்மனியில் அதுவும் மைக்ரோஸஃப்ட் நிறுவனத்தில் ஒரு முக்கிய பதவி வகித்துக் கொண்டிருக்கையில் இவற்றை உங்களால் செய்ய முடிகின்றது ஆச்சர்யத்த அஐக்கிறது.
    விரிவாக் பின்னர் அஞ்சல் அனுப்புகிறேன்.நரசய்யா

    ReplyDelete
  2. Sorry read Microsoft as HP. Mea culpa mea maxima Culpa!

    ReplyDelete
    Replies
    1. No Problem Mr.Narasiah :-) Thanks for the kind words.

      Delete