இத்தகைய பெரும் புகழ்பெற்ற தமிழ் அறிஞரை தமிழுலகம் எளிதாக மறந்து வருவதைக் காண்கின்றோம். தனிநாயகம் என்றாலே உலகளாவிய தமிழ் மாநாடுகள் தாம் நம் மனதில் நிழலாடுகின்றன.
ஐரோப்பிய, அமெரிக்க நூலகங்களில் ஆய்ந்தறிந்து தமிழில் முதன் முதலாக வெளிவந்த கார்திலா, தம்பிரான் வணக்கம், கிரிசித்தியானி வணக்கம், அடியார் வரலாறு போன்ற அரியத் தமிழ் நூற்களைத் தமிழுலகத்துத் தந்தவர் அவர்.
இத்தகைய சிறப்பு மிக்க தனிநாயக அடிகளாரின் அனைத்துப் படைப்புக்களையும் தொகுத்து மூன்று தொகுதிகளாக 2000 பக்கங்களில் வெளிக்கொணர்ந்த வரலாற்றுப் பெருமை அருட்தந்தை அமுதன் அடிகளுக்கு உண்டு.
அமுதன் அடிகளை முதன் முதலில் 2015ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 9வது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் தான் நான் சந்தித்தேன். பிரான்சில் வசிக்கும் நண்பர் திரு.சாம் விஜய் எனக்கு அமுதன் அடிகளை அறிமுகப்படுத்தி வைத்து, தனிநாயகம் அடிகளாரைப் பற்றிய விரிவான ஆய்வினைச் செய்து வருபவர் இவர் என்றும் அவர் பெயராலேயே ஒரு கல்லூரியை அமைத்து வருபவர் என்றும் விவரித்தார். அன்று அந்த நிகழ்வில் என்னால் அமுதன் அடிகளாருடன் விரிவாக நேரம் ஒதுக்கி உரையாடி தனிநாயகம் அடிகள் பற்றி பேச வாய்ப்பு அமையவில்லை. ஆயினும் தமிழகம் செல்லும் போது அவரை நேரில் சந்தித்து தன்னிகரில்லா தமிழ்த்தொண்டு ஆற்றிய தனிநாயகம் அடிகள் பற்றிய வரலாற்றுப் பதிவு ஒன்றினைச் செய்ய வேண்டும் என்ற ஆவல் எனக்கு மிகுந்தது.
2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தின் திருச்சி பகுதியில் இரண்டு நாட்களை ஒதுக்கி அங்குள்ள வரலாற்றுச் சான்றுகளைப் பதிவாக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தேன். திருச்சி தூயவளனார் கல்லூரி தமிழ்ப்பேராசிரியர் திரு.சூசை அவர்கள் எனக்கு இந்தப்பணியில் மிகவும் உறுதுணையாக இருந்தார்கள் என்பதை மறக்க இயலாது. இந்த வரலாற்றுப் பதிவு முயற்சியில் அமுதன் அடிகளாரை நேரில் சந்தித்து உரையாடி தனிநாயகம் அடிகளாரின் சிறப்புக்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். திரு.சூசை மற்றும் முனைவர்.வீரமணி நான் மூவருமாக மதிய வேளையில் அமுதன் அடிகளார் நடத்தி வரும் தனி நாயகம் அடிகளார் கல்லூரிக்குச் சென்று அங்கு அவர் அளித்த விரிவான பேட்டியைப் பதிவு செய்தோம். அது கடந்த ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவாக வெளியீடு கண்டது.
தனிநாயகம் அடிகளார் யாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சேர்ந்தவர். இவர் 2.8.1913ம் ஆண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் சேவியர் நிக்கொலஸ் என்பதாகும். சேவியர் இறைப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று பெற்றோரின் விருப்பம் இருந்தது. ஆனால் சேவியருக்கு அத்துறையில் நாட்டம் ஏற்படவில்லை. தனது பள்ளி இறுதி ஆண்டில் லியோ டால்ஸ்டாய் எழுதிய புத்துயிர்ப்பு என்னும் நூலை தன் பதினைந்தாம் வயதில் படித்ததால் அவருக்குச் சமைய சேவையிலும் கல்விச்சேவையிலும் நாட்டம் ஏற்பட்டது என அவரே குறிப்பிடுகின்றார்.
இளமையில் உயர்நிலைப்பள்ளியில் அவர் தமிழ் மொழியில் பயின்றாலும் அவருக்கு நாட்டம் ஆங்கில மொழியின் பால் அதிகமாக இருந்தது. அதற்காக அவர் அதிக முயற்சிகள் மேற்கொண்டு ஆங்கிலம் எழுதவும் பேசவும் கற்றுக் கொண்டார். கொழும்பு புனித பெர்நார்து கல்லூரியில் மெய்யியற் கல்வியைப் படித்தார். 1934ம் ஆண்டு இவர் ஐரோப்பாவில் உள்ள ரோம் நகரின் உர்பன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்து அங்குக் கல்வி கற்கச் சென்றார். அங்கு சமயக் கல்வி கற்ற அவர் ஸ்பானிஷ், போர்த்துகீசியம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம் ஆகிய மொழிகளையும் பயின்றார்.
தமிழகம் வந்த சேவியர் நெல்லை மாவட்டத்தின் வடக்கன்குளம் எனும் ஊரில் உள்ள புனித தெரசாள் உயர்நிலைப்பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியராக 1941ம் ஆண்டில் பதவி ஏற்றுக் கொண்டார். அங்கு ஒரு பண்டிதரிடம் தமிழை நன்கு கற்றுக் கொண்டார். இந்தக் காலகட்டத்தில் தனது பெயரை தனிநாயகம் அடிகள் என மாற்றிக் கொண்டார். பின்னர் 1945ம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆய்வினைத்தொடங்கினார். 1948ம் ஆண்டில் தூத்துக்குடியில் இவர் தமிழ் இலக்கியக் கழகம் என்ற அமைப்பினை ஏற்படுத்தினார். தமது நூல்களான தேம்பாவணி ஆராய்ச்சி, திருக்காவலூர்க் கோவில், இயேசுநாதர், பத்துப்பாட்டு ஆங்கில மொழி பெயர்ப்பு, திராவிடர் வரலாறு ஆகிய தனது நூல்களை இந்த அமைப்பின் வழி வெளியிட்டார்.
1949 முதல் இவரது உலகளாவிய பயணங்கள் தொடங்கின. அன்றைய மலேயா, சீனா, ஜப்பான், அமெரிக்கா, பனாமா, எக்குவாடோர், பெரு, சிலி, அர்ஜெண்டீனா, உருகுவே, பிரேசில், மெக்சிக்கோ, ட்ரினிடாட், ஜமைக்கா, மார்த்தினீக், ஆப்பிரிக்க நாடுகள், இத்தாலி, பாலஸ்தீனம், எகிப்து என தொடர்ச்சியாகப் பல நாடுகளுக்கு இவர் பயணம் செய்தார். அங்கெல்லாம் தான் கலந்து கொண்ட நிகழ்வுகளில் தமிழ்மொழி பற்றியும், தமிழர் கலை, பண்பாடு, வரலாறு பற்றியும் உரையாற்றினார். அமெரிக்காவில் மட்டும் இருநூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொண்டார் என்பதை அறியும் போது அவரது ஆக்கமும் ஊக்கமும் வியப்பினை நமக்களிக்கின்றது.
தாய்லாந்துக்குச் சென்றிருந்த அடிகளார் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றார். அங்கு முடிசூட்டு விழாவில் இடம்பெற்ற ஒரு பாடல் தமிழில் அமைந்த திருவெம்பாவை தான் என்பதை அறிந்து அதனை அரச குருவிடம் குறிப்பிட்டார் அடிகளார். தமிழ் இன்றளவும் அரச சம்பிரதாயங்களில் இடம்பெறுவதை நோக்கும் போது தமிழகத்திற்கும் தாய்லாந்திற்கும் உள்ள நீண்ட நெடிய உறவினை ஆராய வேண்டும் என்ற எண்ணம் நமக்குத் தோன்றுவது போலவே அடிகளாருக்கும் தோன்றியது. பல்லவர்கால, சோழர்கால சிற்பங்களும் கட்டட அமைப்புக்களும் தாய்லாந்தில் பரவி இருப்பதைத் தமது தேடலில் உணர்ந்தார். இதே போல கம்போடியா சென்று அங்கு அங்கோர்வாட் கோயிலை ஆராய்ச்சி செய்து தனது கருத்துக்களை எழுதினார் அடிகளார்.
தனிநாயகம் அடிகளாரின் பயணங்கள் தொடர்ந்தன. அவரது தேடலும் தொடர்ந்தது.
உலகின் பல நாடுகளில் பணியாற்றும் பல தமிழறிஞர்களை ஒன்றிணைக்க வேண்டும், ஆராய்ச்சிகளை ஒருமுகப்படுத்த வேண்டும் என அவர் எண்ணினார். 1952ம் ஆண்டில் Tamil culture என்ற ஒரு இதழை அவர் தொடங்கினார்.
1964ம் ஆண்டு இந்தியாவில் டில்லி நகரில் நடைபெற்ற கீழைத்தேச அறிஞர்களின் மாநாட்டின் போது உலகத் தமிழ்ராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மலேசியாவில் முதல் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டை ஒன்று கூட்டும் முயற்சியில் தனிநாயகம் அடிகளார் தீவிரமாக ஈடுபட்டார். இதற்கு அமைப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. மாண்புமிகு துன் வி.தி.சம்பந்தன் அவர்கள் மாநாட்டுத் தலைவராக நியமிக்கப்பட்டார். அடிகளார் துணை தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ள, திரு. வி.செல்வநாயகம் பொதுச் செயலாளராக நியமனம் பெற்றார்.
அடிகளார், டான்ஸ்ரீ.மாணிக்கவாசகம், திரு.வி.செல்வநாயகம் ஆகியோர் பெருமுயற்சியால் மாநாட்டுக்கான செலவுத்தொகை திரட்டப்பட்டது. பலரது ஒத்துழைப்புடன் இதுவரை வரலாறு காணாத மாநாடு மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் 1966ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 முதல் 23ம் தேதி வரை சிறப்புடன் நடைபெற்றது. 132 பிரதிநிதிகளும் 40 பார்வையாளர்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உலகின் 21 நாடுகளிலிருந்து அறிஞர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டினைத் திறந்து வைத்து உரையாற்றிய அப்போதைய மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் தனிநாயகம் அடிகளாரின் பன்மொழிப்புலமையையும், அவரது தலைமைப்பண்பையும் பாராட்டிப் பேசியதோடு மலேசியாவில் தமிழ் சிறப்புற வளர்ந்து வருவதைச் சுட்டிக் காட்டியும், தமிழ் மொழியின் தொன்மை பற்றியும் தமது உரையில் அன்று குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.
இந்த மாநாடு முடிந்த பின்னர் அதன் தொடர்ச்சியாக மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடும் பணியில் ஈடுபட்டு அதனையும் சிறப்புடன் செய்து முடித்தனர் மாநாட்டுச் செயலவை குழுவினர் . இன்று வரை தமிழுக்காக அகில உலக அளவில் நடைபெற்ற மிகச் சிறந்த மாநாடு என்ற பெருமையைக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வாக இது கருதப்படுகின்றது என்பது தனிநாயகம் அடிகளாரின் முயற்சிக்கு ஒரு மணிமகுடம் அல்லவா?
தனிநாயகம் அடிகளாரின் தொண்டு எனச் சிறப்பித்துச் சொல்வதற்கு ஏராளமான செய்திகள் உள்ளன. அதில் மிகச் சிறப்பானதாக நான் கருதுவது ஐரோப்பிய நாடுகளுக்கானத் தனது பயணங்களில் அங்குள்ள தமிழ் நூல்களையெல்லாம் தேடிச்சென்று பார்த்து அவற்றைப் பற்றிய குறிப்புக்களை எழுதி தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அவர் அளித்தமையே எனலாம்.
பாரிஸ் தேசிய நூலகத்தில் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேலான தமிழ் நூற்களைத் தாம் பார்த்ததாகவும், அவற்றுள் சில இந்தியாவில் கூட கிடைக்காதவை என்றும் அடிகளார் தமது குறிப்புக்களில் தந்துள்ளார். வாட்டிக்கன் நூலகத்தில் Flos Sanctorum என்ற பெயர் கொண்ட திருத்தொண்டர் திருமலர் என்ற நூலை இவர் கண்டெடுத்தார். அதுபோலவே கி.பி.17ம் நூற்றாண்டில் அந்தாம் தொப்ரோயென்சா அடிகளார் தொகுத்த தமிழ் போர்த்துக்கீசிய அகராதியையும் அடிகளார் இதே நூலகத்தில் கண்டெடுத்தார். கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் இந்த நூலை அடிகளார் மீண்டும் பதிப்பித்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
போர்த்துகலுக்கான தனது பயணத்தின் போது லிஸ்பன் நகர நூலகத்தில் அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. 15ம் நூற்றாண்டில் தமிழகம் வந்த ஹென்றிக்ஸ் ஹென்றிக்ஸ் அடிகளாரால் எழுதப்பட்ட பல கையெழுத்துப் பிரதிகளையும், 1554ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கார்திலா என்ற நூலையும் அவர் கண்டார். தனி நாயகம் அடிகளாரின் முயற்சிகள் இல்லாவிட்டால் இந்த செய்திகளைத் தமிழ் உலகம் அறிந்திருக்குமா என்பது மிகப் பெரிய கேள்வியே!
இப்படிப் பல வகையில் தமிழுக்குத் தொண்டாற்றிய தனி நாயகம் அடிகளாரைப் பற்றி நம்மில் பலர் அறிந்திருக்கின்றோமா என்பது ஐயமே.
இவரை தமிழுலகம் போற்றிப்புகழ வேண்டாமா?
தமிழ்ப்பாட நூல்களில் இவரைப்பற்றிய குறிப்புக்களை இணைக்க வேண்டாமா?
அறிஞர் பெருமக்கள் இவரது தமிழ்த்தொண்டு பற்றி இக்கால இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வது வேண்டாமா?
அவர் விட்டுச் சென்ற பணிகளைத்தான் தொடர வேண்டாமா?
இப்படிப் பல கேள்விகள் நம் முன்னே நிற்கின்றன. இதற்கு ஒரு ஆரம்பமாக அமுதன் அடிகள் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கியிருக்கும் பல வரலாற்று விபரங்கள் அடங்கிய ஒரு மணி நேர விழியப் பதிவை தமிழ் அன்பர்கள் பார்த்து கேட்டுப் பயனுற வேண்டும் என்பதே எமது அவா. இந்தப் பதிவு https://www.youtube.com/watch?v=h2LIJmysyNo&feature=youtu.be என்ற வலைப்பக்கத்தில் உள்ளது. கேட்டுப் பார்த்து பயன் பெறுவதோடு தனி நாயகம் அடிகளாரின் தமிழ்த்தொண்டினை நாமும் தொடர்வோமே!
பயனுள்ள பதிவு. நன்றி.
ReplyDelete