தமிழர் வரலாற்றில் புகழ் மிக்க காலகட்டமாகத் திகழ்வது சோழர்காலமாகும். முற்காலச் சோழர்கள் என்று எடுத்துக் கொண்டால், சோழ மன்னன் கரிகால்வளவன் காலம் தமிழக வரலாற்றின் பொற்காலமாகத் திகழ்ந்தது எனலாம். அதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விஜயாலய சோழனின் எழுச்சி கி.பி.850 தொடங்கியது முதல், சோழ சாம்ராஜ்ஜியத்தின் புதியதொரு வீச்சுடன் கூடிய ஆட்சி தொடங்கியது. அவனை அடுத்து ஆண்ட பராந்தகசோழன் முதல் படிப்படியாக சோழர் ஆட்சி என்பது விரிவடைந்து கொண்டே வந்தது.
பிற்காலச் சோழர்களில் புகழ்மிக்கவர்களாகத் திகழ்பவர்கள் முதலாம் ராஜராஜன், அவரது மகனான ராஜேந்திர சோழன், அதன் பின்னர் முதலாம் குலோத்துங்கன் ஆகியோரது காலத்தைக் குறிப்பிடலாம். இக்காலகட்டங்களில் தமிழக ஆட்சி முறை உயர்ந்த ஆட்சித்தன்மையுடன் திகழ்ந்தது என்பதை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். சோழர்கால ஆய்வுக்கு மிக முக்கிய நூற்களாக இன்றும் விளங்குகின்ற நூல்களை வழங்கிய தி.வை.சதாசிவ பண்டாரத்தார், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். இவர்களது நூல்கள் இன்றும் தமிழக வரலாற்று ஆய்வாளர்களால் பயன்படுத்தப்படும் நூல்களாகத் திகழ்கின்றன. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைப் படித்து விட்டு ராஜராஜனின் மேல் மையல் கொண்டு வியந்தவர்கள், இந்தச் சோழர்கால ஆய்வு நூற்களையும் படிக்கும் போது சோழர் வரலாற்றினையும் அதன் படிமங்களாக இன்றும் நமக்குக் கிடைக்கும் கட்டிடங்களையும் கல்வெட்டுக்குக்களையும் அறிந்து கொள்ள இந்த வாசிப்பு உதவும்.
சோழர்கள் காலத்தில் நாட்டின் ஆட்சிமுறையில் சீர்மை ஏற்பட்டது. கோயில் கட்டிடக் கலை வளம் பெற்றது. உள்ளூர் ஆட்சி முறை சீர்படுத்தப்பட்டது. மக்கள் பயன்படுத்தும் சாலைகள் சீராக உருவாக்கப்பட்டன. கலை, இலக்கியம், சமயம் எனப் பல துறை வளர்ச்சியை இக்காலகட்டத்தில் தமிழகம் அனுபவித்தது எனலாம்.
சோழர்கள் மட்டுமன்றி, பாண்டியர்கள் பற்றிய வரலாற்றினையும் பல்லவர்கள பற்றிய வரலாற்றையும் அதன் பின்னர் ஆட்சி செய்த நாயக்கர்கள் பற்றியும் நாம் கோயிற்கல்வெட்டுக்களிலிருந்துதான் கண்டறிகின்றோம். பெருமளவில் இந்திய தொல்லியல் துறையினால் கடந்த நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட கல்வெட்டு படியெடுப்பு, அவற்றின் பதிப்பு ஆகியவை, கோயில் கற்சுவற்றில் உள்ள கல்வெட்டுக்களை ஆராய்ச்சியாளர்கள் பார்த்து வாசித்து அதனை வெளிப்படுத்த உதவியது. அப்படி ஆய்வாளர்களால் படியெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட கல்வெட்டு படிமங்கள் இன்று நமக்கு ஆய்வுக்கு கிடைக்கின்ற அரிய சான்றுகளாக இருக்கின்றன. நூற்களில் நாம் காண்கின்ற கல்வெட்டுக்கள் கூட கடந்த சில ஆண்டுகளில் ஆலயப்புணரமைப்பு, சாலை புணரமைப்பு என்ற பெயர்களில் நாசம் செய்யப்பட்டு இல்லாமல் போய்விட்டன என்பது வேதனையே.
சோழ மன்னன் ராஜராஜன் அரியணை ஏறியது முதல் சோழர்களின் பொற்காலம் என்று தான் சொல்லலாம். அக்காலகட்டத்தில் பல கற்றளிகள் உருவாக்கப்பட்டன. செங்கற்களால் இதற்கு முன்னர் கட்டப்பட்ட கோயில்கள் பலவற்றைக் கற்றளியாக மாற்றும் பணியை ராஜராஜனின் சிற்றன்னையார் செம்பியன் மாதேவியார் மிகச் சிறப்புடன் செய்து முடித்தார். இவரது கோயில் திருப்பணிகள் எண்ணற்றவை. இவர் சோழ மன்னராக சில காலம் பதவி வகித்த கண்டராதித்த சோழனின் மனைவியாவார். மிகுந்த சிவபக்தியுடன் திகழ்ந்தவர் செம்பியன் மாதேவியார். கி.பி.1001 வரை வாழ்ந்த இவர் பல சிவன் கோயில்களைப் புணரமைத்ததோடு மேலும் சில கோயில்களையும் கட்டினார் என்பதை கல்வெட்டுக்கள் வழி அறிகின்றோம்.
இந்தச் செம்பியன் மாதேவியாரின் பள்ளிப் படை கோயில் கும்பகோணத்தில் இருப்பதை அறிந்து அங்குச் சென்று அதனைப் பற்றிய நேரடித் தகவல்களைப் பதியவேண்டும் என்ற ஆவல் எனக்கிருந்தது. பள்ளிப்படை கோயில் என்றால் என்ன என்ற எண்ணம் சிலருக்கு எழலாம். அரச குலத்தவர் இறந்த பின்னர் அவரது உடலை கிரியைகள் சில செய்து உட்கார்ந்த நிலையில் அவரது உடலை மண்ணில் வைத்துப் புதைத்து பின் அந்தச் சமாதி மேல் ஒரு சிவலிங்கத்தை வைத்து வழிபடும் வகையில் செய்திருப்பர். இதுவே பள்ளிப்படை கோயில் என அழைக்கப்படுவது.
ஆக, இந்தப்பள்ளிப்படைக் கோயிலின் பதிவையும் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் கும்பகோணத்தில் நான் மேற்கொண்ட சோழர்கால கோயில்கள் ஆய்வின் போது செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டிருந்தேன். என்னுடன் தொல்லியல் துறை அறிஞர் டாக்டர்.பத்மாவதியும், இந்திய தொல்லியல் துறை ஆய்வாளரும் முனைவர் பட்ட ஆய்வு மாணவருமான பரந்தாமனும் கலந்து கொள்ள, நாங்கள் செம்பியன் மாதேவி பள்ளிப் படை கோயிலைத் தேடிக்கொண்டு கும்பகோணத்தின் சாலைகளில் சென்றோம்.
காடுகளுக்குள்ளும், சிற்றூர்களிலும் தேடிக் கொண்டு எங்களை அழைத்து வந்த வாகனம் பயணித்துக் கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் இப்பள்ளிப் படைக் கோயிலைக் காண முடியாத நிலையில் ஒரு சாலையின் மூலையில் இரண்டு மோட்டார் வண்டிகளை நிறுத்தி விட்டு 4 பேர் நின்றிருக்க, அவர்களை விசாரித்தோம். அவர்களும் வாருங்கள் அழைத்துப் போகிறோம், என்று சொல்லி ஏறக்குறைய 500 மீட்டர் தூரம் மரங்களுக்கு இடையே நடந்து ஒரு பகுதிக்கு எங்களை அழைத்துச் சென்று ஒரு கோயிலைக் காட்டினர்.
அது செம்பியன் மாதேவியின் பள்ளிப் படை கோயில் அல்ல. மாறாக கற்றளியாக மாற்றப்படாத ஒரு செங்கற்றளி கோயில்.
10ம் நூற்றாண்டிலே கட்டப்பட்ட கோயில் அது என்பதும் அங்கிருந்த ராஜராஜனின் கல்வெட்டுப் பகுதி பாறையும் இக்கோயிலின் வரலாற்றை ஓரளவு அறிந்து கொள்ள உடன் எங்களுக்கு உதவியது. கோயிலைச் சுற்றி அருமையான 10ம், 11ம் நூற்றாண்டு நாகக்கண்ணி, லிங்கோத்பவர், தஷிணாமூர்த்தி, துர்க்கை, பிரம்மா ஆகிய தெய்வ வடிவங்களின் சிற்பங்கள் அதன் பழமை கெடாமல் காட்சியளித்துக் கொண்டிருந்தன.
உள்ளே பெரிய அகன்ற வடிவ பிரம்மநந்தீஸ்வரர், அதாவது சிவலிங்க வடிவம் மனதைக் கொள்ளை கொள்ளும் அழகுடன் காட்சியளித்துக் கொண்டிருந்தது.
இக்கோயில் சுதையில் செய்யப்பட்ட செங்கற்றளி கோயில். நாங்கள் சென்ற சமயத்தில் புணரமைப்பு பணிகள் ஏதும் நடைபெற வில்லை. ஆனால் கோயிலைப் பார்த்துக் கொண்டு இரண்டு வயதான மனிதர்கள் அருகில் சில பராமரிப்புப் பணிகளைச் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் வீட்டுச்சிறுமி நான் வீடியோ கருவி கொண்டு பதிவாக்கம் செய்து கொண்டிருப்பதை என் கூடவே வந்து நின்று பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். இந்தக் கோயிலைப்பற்றிய பதிவினை அதே ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளையில் வெளியீடு செய்தோம். அப்பதிவினை இங்கே காணலாம். http://video-thf.blogspot.de/2013/12/2014_7.html
இப்படி ஆங்காங்கே தமிழகத்தின் பல பகுதிகளில் கவனிப்பற்று கிடக்கும் கலைப்பொக்கிஷங்கள் பல.
அழகான கிராமப்புற சூழலில் காய்கறி தோட்டங்களுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது. விரைவாக பராமரிப்பும் பாதுகாப்பும் புணரமைப்பும் தேவைப்படும் ஒரு கோயில் இது. தமிழக தொல்லியல் துறை அல்லது தமிழக பல்கலைக்கழகங்களின் ஆய்வகங்களின் பாதுகாப்பு உடன் தேவைப்படும் ஒரு ஆலயம் இது. பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்களில் ஒன்று என்றாலும் மிகையில்லை.
விஜயாலயனுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் ஆதித்தசோழர் அல்லவா!அவருக்குப் பிறகு வந்தவர் பராந்தகர்!
ReplyDeleteபராந்தகரின் இரண்டாவது மகனான கண்டராதித்யரின் மனைவி செம்பியன் மாதேவி. கண்டராதித்யரின் இளைய சகோதரர் அரிஞ்சய சோழர்.
அவரது மகனான சுந்தரசோழரின் மகனல்லவா இராஜராஜன்??
அதனால் செம்பியன் மாதேவி இராஜராஜனுக்குப் பாட்டியல்லவா??
Ulagam muzhukka than padaibalathaal aatchi seitha rajendiran than sitrannaikku pallipadai ezhupiullaan endru seithi arinthen irupinum ulagaiye katti aanda chozhan rajarajanukku yen pallipadai amaikkavillai, athuthaan rajendiren thanthaiyaar virupamaa, alla avarin Mel ulla kovamaa
ReplyDeleteநல் வாழ்த்துக்கள் சகோதரி., நன்றி மலர்களுடன்.
ReplyDelete