Wednesday, October 19, 2016

33. சுவிட்ஸர்லாந்தில் கணினித் தமிழ்ப்பட்டறை




தமிழ் மரபு அறக்கட்டளை இந்த ஆண்டு 16 ஆண்டுகளை நிறைவு செய்து 17ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது. கடந்து வந்த பாதையில் ஏராளமான களப்பணிகள் நமது சான்றுகளாக நமது வலைப்பக்கத்தில் நிறைந்திருக்கின்றன. நேரடி களப்பணிக்குச் சென்று வரலாற்றுச் சான்றுகளைப் பதிவாக்கி அவற்றை வெளியிடுவதும் அவை தொடர்பான கலந்துரையாடலை வளர்ப்பது, தக்கச் சான்றுகளை மையமாக வைத்து ஆய்வுகளை மேற்கொள்வது என்பது எமது தலையாய பணியாக இருந்தாலும் கூட ஒவ்வொரு ஆண்டும் கருத்தரங்கங்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சொற்பொழிவுகள் ஆற்றுதல், மின்னாக்கப் பட்டறைகளை ஏற்பாடு செய்து மாணவர்களும், ஆர்வலர்களும் பயிற்சி எடுத்துக் கொள்ளும் வகையில் வாய்ப்புக்களை அமைப்பது என்ற ரீதியில் பல நிகழ்வுகளை நாம் செய்து முடித்துள்ளோம். அத்தகைய ஒரு நிகழ்வினைப் பற்றியதுதான் இன்றைய இந்தப் பதிவு.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் பலர் வாழும் நாடுகளும் ஒன்று சுவிஸர்லாந்து. இந்த சுவிஸர்லாந்து நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்று சூரிச். சுற்றுலாத்தலம், வர்த்தகப் பெருநகரம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம், உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் வாழும் நகர் எனப் பல சிறப்புக்களைக் கொண்ட நகரம் சூரிச். இங்கே 2008ம் ஆண்டில் தமிழ்மொழியில் கணினிக்களம் என்னும் ஒரு அமைப்புடன் தமிழ் மரபு அறக்கட்டளை இணைந்து 'அறிவியல் அரங்கம்' எனும் நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தோம். சுவிஸர்லாந்தின் எல்லாப் பகுதிகளிலும் ஆர்வம் உள்ள தமிழ் மக்கள் வந்து கலந்து கொள்ளும் நோக்கத்துடன் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தோம். அறிவியல் அரங்கம் என்று அறிவித்த பின்னரும், கூத்து, பாட்டு போன்ற கலைநிகழ்ச்சிகள் இருக்காது என்று தெரிந்தும் 100 பேருக்கு மேல் தமிழ் ஆடவர், பெண்கள், சிறுவர்கள் என பெருவாரியாகப் பல இந்த நிகழ்விற்கு வந்திருந்தது கலந்து கொண்டனர்.

மாலை 3 மணிக்கு முதலில் தொடங்கிய சொற்பொழிவு நிகழ்வு மாலை 6 மணிக்கு முடிந்த பின்னர் ஓரு கணினித்தமிழ் தொடர்பான இணையப்பட்டறையையும் நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். இது இரவு 10 மணி வரை நடைபெற்றது. வந்திருந்தோர் ஆர்வம் குறையாது, மிகப் பொறுமையாய் இருந்து நாங்கள் வழங்கிய தகவல்களைப் பெற்றுக்கொண்டதோடு
கேள்விகள் கேட்டு பின் 'மீண்டும் இது போல் ஓர் நிகழ்வு' சுவிட்சர்லாந்தில் நிகழ வேண்டுமென்ற கோரிக்கையையும் முன் வைத்தமை எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக அமைந்தது.

1990ம் ஆண்டுகளின் ஆரம்பம் தொடங்கி இணைய உலகில் தமிழ்ப்பயன்பாடு என்பது மிகத் தீவிரமாக வளர ஆரம்பித்த காலம் மிகச் சுவாரசியமான நிகழ்வுகள் அடங்கிய காலம். ஒருங்குறி எழுத்துருக்கள் பயன்பாட்டில் இல்லாத அக்காலகட்டத்தில் சில தனி நபர்களின் முயற்சியில் கணினி பயன்பாட்டிற்கான தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கம் கண்டன.  அச்சமயம் எனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்து மலேசியாவில் ஒரு கல்லூரியில் கணினித்துறை விரிவுரையாளராக நான் பணியாற்றிக் கொண்டிருந்த காலம் அது. மலேசிய, சிங்கையில் திரு.முத்து நெடுமாறன், திரு கோவிந்தசாமி, தமிழ்னெட் நிறுவனர் பாலாபிள்ளை மற்றும் பலர் எழுத்துவாக்கம், இணையப் பதிப்பு என முயன்று கொண்டிருந்த வேளையில், ஐரோப்பாவில் மதுரைத்திட்டம் என்ற ஒரு கருத்தினை சில நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி அதனைச் செயல்படுத்திக் கொண்டிருந்த முனைவர்.கு.கல்யாணசுந்தரம், மற்றும் முனைவர்.நா.கண்ணன் ஆகியோருடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. நான் ஐரோப்பாவிற்கு மாற்றலாகி வந்த பின்னர் தமிழ்க்கணினி தொடர்பான எனது முயற்சிகள் இவர்களுடன் இணைந்ததாகவே அமைந்திருந்தது. தமிழ் நூல்கள் பாதுகாப்பு என்பது பற்றி அச்சமயத்தில் விரிவாக உரையாடியிருக்கின்றோம். அப்படித் தொடர்ந்து நிகழ்ந்த கலந்துரையாடல்களின் வழியாகத் தமிழ் நூல் மின்னாக்கம் தொடர்பான பல முயற்சிகள் பற்றிய கருத்துருவாக்கங்கள் 2000ம் ஆண்டின் தொடக்கம் தொடங்கி நிகழ்ந்தன. அதில் என்னுடன் முனைவர்.நா.கண்ணன், முனைவர்.கு.கல்யாணசுந்தரம் ஆகியோர் தமிழ் மரபு அறக்கட்டளையின் உருவாக்கத்தில் இணைந்தவர்கள். 2001ம் ஆண்டு கருத்தளவில் தொடங்கி பின்னர் பல்வேறு நடவடிக்கைகள் தமிழ் மரபு அறக்கட்டளையில் தொடங்கப்பட்டன. அது இன்று மேலும் செப்பனிடப்பட்ட வகையில் சீரிய பல முயற்சிகளை உள்ளடக்கியதாக வடிவெடுத்துத் தொடர்கின்றது.

அந்த வகையில் இந்த சூரிச் நிகழ்ச்சியில் தமிழ் மரபு அறக்கட்டளையைப் பிரதினிதித்து என்னுடன் முனைவர்.நா.கண்ணன், முனைவர்.கு.கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு சொற்பொழிவினையும் கணினிப்பட்டறையையும் நடத்தி முடித்தோம். அது ஒரு இனிமையான நிகழ்வாகவே அமைந்திருந்தது.

தமிழில் 'அறிவியல் அரங்கம்' என்ற பெயரைக் கேட்டதும் பொது மக்கள் வந்து கலந்து கொள்வார்களா என்ற சந்தேகம் முதலில் எங்களுக்கு எழாமலில்லை. இந்த நிகழ்ச்சியின் முழு ஏற்பாட்டுப் பொறுப்பினையும் கணினிக்களம் மாத சஞ்சிகையின் ஆசிரியர் திரு.நாகந்தனும், சூரிச் திரு.சரவணபவானந்த குருக்களும் ஏற்று திறம்பட இந்த நிகழ்வை நடத்திக்காட்டினர். புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் அயல்நாடுகளில் தமிழ் நிகழ்ச்சிகள் என்றால் நடனமும், பாடல்களும் சினிமா துறை சார்ந்த நிகழ்வுகளும் தான் இருக்கும் என்ற பொதுவான நம்பிககியை உடைக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.

இந்த நிகழ்வின் முக்கிய அம்பசமாக இரண்டு விஷயங்களை உட்புகுத்தியிருந்தோம். முதலாவது நோக்கம், கணினிக்களம் என்ற மாத சஞ்சிகையினை அறிமுகம் செய்தல். அடுத்தது, தமிழ் மரபு அறக்கட்டளை, மதுரைத் திட்டம் மற்றும் உத்தமம் ஆகியவற்றின்தமிழ்க்கணினி சார்ந்த முயற்சிகளைச் சூரிச் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்துதல் ஆகியன.

கணினிக்களம் மாத சஞ்சிகையைப் பற்றிய ஆய்வுரையாக எனது உரையும் முனைவர்.கு.கல்யாணசுந்தரத்தின் உரைகளும் அமைந்திருந்தன. அதனூடாக, தமிழ் மரபு அறக்கட்டளை, மதுரைத் திட்டம் மற்றும் உத்தமம் ஆகியற்றைப் பற்றிய தகவல்களையும் இணைத்து வழங்கினோம். மூன்றரை மணி நேரப் புத்தக வெளியீட்டுக்குப் பின்னர் சிறிய ஓய்வுக்குப் பின்னர் மாலை ஏழு மணிக்கு இரண்டாம் பகுதியாகியக் கணினி பயிற்சிப் பட்டறை தொடங்கியது. முனைவர்.நா.கண்ணனின் பொது விளக்கத்துக்குப் பின்னர், நான் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னாக்கப் பணிகள் பற்றிய ஒரு அறிமுகத்தை வழங்கினேன். எவ்வகையில் மின்னாக்கப் பணிகள் அச்சுப் பதிவு, ஓலைச் சுவடியை வருடிப் பாதுகாத்தல், மற்றும் ஒலிக் கோப்புக்களைச் சேகரிக்கும் முறைகள் எனத் தொழில்நுட்ப விஷயங்களை என் உரையின் போது பகிர்ந்து கொண்டேன். அடுத்ததாக முனைவர்.கு.கல்யாணசுந்தரம் மிக விரிவாகக் கணினியில் தமிழ் எழுத்துருக்களின் வளர்ச்சியைப் பற்றி, 1997 முதல் இன்று வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியைப் பற்றிய தகவல்களை வழங்கினார். ஏறக்குறை இரவு 9:45க்கு கேள்வி பதில் அங்கம் ஆரம்பித்து மேலும் அறை மணி நேரத்திற்குப் பின்னர் இந்தப்பட்டறையை நிறைவு செய்தோம்

சூரிச் நண்பர் திரு.மலைநாடன் நிகழ்ச்சி முழுவதையும் தொகுத்து வழங்கினார். அவரது தொடர்ந்த பணிகளுக்கிடையில் இந்த நிகழ்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து செயலாற்றியமை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. நிகழ்ச்சி நல்ல முறையில் ஏற்பாடாகி நடைபெற்றது என்பது ஒரு புறமிருக்க இணையத்தின் வழியும் தொலைப்பேசி வழியும் மட்டுமே தொடர்பில் அறிமுகமாகியிருந்த ஐரோப்பிய வாழ் நண்பர்கள் சிலரை இந்த நிகழ்வில் நேரில் சந்திக்கும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது. சூரிச் நகரில் இது ஒரு மிகப் புதிய நிகழ்வு. மேலும் இது போன்ற நிகழ்வுகள் நிச்சயம் நடை பெறும் போது ஐரோப்பியவாழ் இளம் தலைமுறையினருக்கு தமிழ்க்கணினி, வரலாறு தொடர்பான விஷயங்களில் நல்ல அறிமுகம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இலங்கை மற்றும் தமிழாக்த்திலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் நிகழ்வுகள் என்றால் பெரும்பாலும் நடனம் இசை, திரைப்பட துறைச்சார்ந்த நிகழ்வுகள் என்பனவே பெருவாரியாக ஆக்கிரமித்திருக்கும் நிலையை யாரும் மறுக்கமுடியாது. ஆயினும் கூடத் தொடர்ந்து தொய்வில்லாது, பல தன்னார்வலர்களும் இயக்கங்களும் தமிழ் மொழி தொடர்பான, நிகழ்வுகளைச் செய்து இளம் தலைமுறையினருக்குத் தமிழ்மொழி அன்னியப்பட்டுவிடாத வகையில் சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திருக்குறளை அறிமுகப்படுத்தும் வகையிலான நிகழ்வுகள், பேச்சுப்போட்டிகள், மாநாடுகள், கருத்தரங்கங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் என்பன ஐரோப்பாவின் பெருநகர்களான லண்டன், பாரிஸ், டூசல்டோர்ஃப், பெர்ன், ச்சூரிச், பெர்லின் போன்ற நகரங்களில் நிகழ்ந்த வண்ணமிருக்கின்றன . இவை பாராட்டுதலுக்குரிய முயற்சிகள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இவையே இங்கே ஐரோப்பாவில் புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்து வளரும் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினருக்கு தக்க வகையில் தமிழ் மொழி மற்றும் வரலாறு சார்ந்த பற்றுதலையும், ஆர்வத்தையும் கொண்டு செல்லக் கூடிய முயற்சிகளாக நான் காண்கின்றேன்.

அத்தகைய சீரிய முயற்சிகளில் ஈடுபட்டு உழைக்கும் அனைத்து ஐரோப்பிவாழ் தமிழ்ச்சங்கங்களுக்கும் தனி நபர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் வாழ்த்துக்கள் என்றென்றும் உரித்தாகுக! 

2 comments:

  1. தமிழை வளர்க்க பாடுபடும் அனைவருக்கும்
    நன்றியும் ,வாழ்த்துகளும்

    ReplyDelete
  2. தமிழுக்குத் தொண்டாற்றும் அத்துனை அறிஞர் பெருமக்களையும்.,தாள் பணிந்து வணங்கி வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete