Thursday, October 27, 2016

34. பிரான்ச், எவிரியில் தமிழ் முயற்சிகள்



தாயகத்திலிருந்துப் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தற்சமயம் உலகமெங்கும் வாழ்கின்றனர். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழி நமக்குக் காலம் காலமாக நன்கு பரிச்சயமான ஒன்று தான். இன்று நாம் கடல் மார்க்க பயணங்களைப் பற்றிப் பேசுகின்றோம். இன்றைக்கு சில நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்களான கொலம்பஸ் மேற்கொண்ட கடற்பயணத்தையும், வாஸ்கோடகாமா மேற்கொண்ட பயணத்தையும் ஜேம்ஸ் குக் மேற்கொண்ட கடற்பயணங்களையும் பற்றி நாம் நிறைய வாசித்திருப்போம். இத்தகைய விரிவான கடற்பயணங்களை இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் பண்டைய தமிழ்மக்கள் மேற்கொண்டனர் என்பதற்குச் சான்றாக பல தொல்லியல் அகழ்வாழ்வுகள் நமக்குச்சான்றுகளைத் தருகின்றன. இப்படிப் பயணித்த ஐரோப்பியர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சிகளையும் தக்க முறையில் குறிப்பெடுத்து ஆவணப்படுத்தி, பாதுகாத்து வந்தமையால் அவர்களது பயணங்களும் அவை நிகழ்த்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளும் உலக அளவில் எல்லோரும் வாசித்து அறிந்து கொள்ளும் வகையில் பாடங்களாக அமைந்துள்ளன,

ஐரோப்பியர்கள் போல தமிழர்கள் கடற்பயணம் மேற்கொள்ளவில்லையா? எனக் கேள்வி எழுப்புவோர் நம்மில் பலர் இருப்போம். அப்படி எழும் கேள்விகளுக்கு விடைக்கான முற்படும் போது சிதறல்களாக பலபல தகவல்கள் நமக்கு ஆய்வுகளில் கிட்டுகின்றன. தொல்லியல் அகழ்வாய்வுகளே இத்தகைய முயற்சிகளுக்கு பெரும் வகையில் உதவுவனவாக அமைந்திருக்கின்றன. அதோடு ஏனைய நாட்டிலிருந்து வந்து சென்ற வணிகர்களின் குறிப்புக்களிலிருந்து அக்காலச் சூழலை அறியக்கூடியதாக் இருக்கின்றது.

பொதுவாகவே தமிழகம், தமிழர் நாகரிகம் என ஆராய முற்படுபவர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பது ஆவணச் சான்றுகளே. தகவல்களை முறையாகக் குறிப்பெடுத்து எழுதி வைக்கும் பழக்கமும், ஆவணப்படுத்தும் எண்ணமும் பதிந்து வைத்துப் பாதுகாக்கும் பழக்கமும் தமிழர் மரபில் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றது. அதிலும் பல நூல்கள், அவற்றை எழுதியவர் யார் என்றே தெரியாத ஒரு நிலையும் இருப்பதை ஏடுகளை வாசித்தறிவோர் பலர் அனுபவித்திருக்கலாம். இத்தகைய போக்குகள் வரலாற்றாய்வாளர்களுக்குப் பெரும் சோதனைகளாக அமைந்து விடுகின்றன. ஔவையார்களில் பல ஔவைகள், அதியமான்களில் பல அதியமான்கள், கபிலர்களில் பல கபிலர்கள் என ஒன்றிற்கு மேல் என ஒரே பெயரில் சிலர் குறிப்பிடப்படுவதும், அவை உருவாக்கப்பட்ட காலநிலையை சரிவரக்கணிப்பதில் அவை ஏற்படுத்தும் சிக்கல்களையும் பற்றி நாம் சிந்திக்கவேண்டியுள்ளது. இதே நிலை தான் கடல்சார் பயணங்களிலும் எனலாம். நமக்குத் தமிழ் நாட்டிலேயே கிடைக்கக்கூடிய சான்றுகள் என்பன அகழ்வாய்வுகளில் கிடைக்கக்கூடிய சான்றுகள் தான் என்று அமைகின்றன. உதாரணமாக, ஆதிச்சநல்லூர், கொடுமணல், அண்மைய கால கீழடி அகழ்வாய்வுகள் ஐரோப்பியர்கள் இங்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் வணிகத்தில் ஈடுபட்டமையை எப்படி சான்று பகர்கின்றனவோ,  அதே போல, கிரேக்கம், துருக்கி, போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் பண்டைய தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்களின் ஓடுகளும் கிடைத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் அக்காலத் துறைமுகப்பகுதிகளிலிருந்து விரிவாகப் பயணித்து கிழக்காசிய நாடுகளில் வணிகத்தையும் பௌத்த, இந்து சமயத்தைப்பரப்பியதன் விளைவை அந்த நாடுகளில் இன்றளவும் காண்கின்றோம். ஐரோப்பாவை எடுத்துக்கொண்டாலோ காலம் காலமாக கடற்பயணங்களின் காரணத்தால் தமிழ் மக்கள் ஐரோப்பிய பெரு நகரங்களுக்கு வந்து சென்றிருக்கின்றனர்; ஒரு சிலரோ இங்கே தங்கி உள்ளூர் மக்களுடன் மக்களாகக் கலந்து தங்கிவிட்டனர்;

பிரான்சை எடுத்துக் கொண்டால் கடந்த முந்நூறு ஆண்டுகளில் இந்தியாவின் பாண்டிச்சேரியிலிருந்தும் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழர்கள் பெருவாரியாக வந்து இங்கே வாழ்கின்றனர். இன்றளவும் இப்படிப்புலம்பெயர்ந்து வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருக்கின்றது. அப்படிப் புலம்பெயர்ந்து பிரான்சு வந்தவர்கள் பெருவாரியாக இருப்பது பிரான்சின் தலைநகரமான பாரீசில். ஆயினும் பாரிசுக்கு வெளியே ஏனைய பெரு நகரங்களிலும் பாரிசுக்கு வெளியே கிராமங்களிலும் தமிழர்கள் குடியிருப்பு என்பது பெருகி உள்ளது. தமிழ்மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு காண வேண்டும் என்ற சிந்தனையை மனதில் கொண்டு புலம் பெயர்ந்தாலும் புதிதாகத்தாம் பெயர்ந்த நிலப்பகுதியில் தங்கள் பண்பாட்டு மரபு, மொழி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது பாராட்டுதலுக்குரிய ஒரு விசயமே.

அப்படியொரு நிகழ்வில் கலந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு எனக்குக் கடந்த வாரம் கிட்டியது. பாரீசிற்கு வெளியே தெற்கே புறநகர்ப்பகுதியில் இருக்கும் எவ்ரி கிராமத்தின் கலை கலாச்சார மன்றம் தனது 10ம் ஆண்டு நிறைவு விழாவைக் கடந்த 23ம் தேதி அக்டோபரில் நிகழ்த்தியது. இதில் சிறப்பு சொற்பொழிவை வழங்க இந்த அமைப்பு என்னை அழைத்திருந்தனர். அந்த நிகழ்வில் அவர்கள் தேர்ந்தெடுத்த தமிழ்த்தொண்டு செய்யும் பத்து புலம்பெயர்ந்த தமிழர்களைக் கவுரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. அதில் என்னையும் தமிழ் மரபு அறக்கட்டளைப் பணிக்காகக் கவுரவித்துச் சிறப்பித்தார்கள். புலம்பெயர்ந்த சூழலில் தமிழ் மொழி, கலை, மரபுகளை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள சிக்கல்களை  எடுத்துக் கூறி எனது சொற்பொழிவு ஒன்றினையும் இந்த நிகழ்வில் நிகழ்த்தினேன்.


ஒரு இனத்தின் அடையாளமாக இருப்பவை அந்த இனத்தின் பண்பாட்டுக்கூறுகளாக அமைந்திருக்கும் உடை, உணவு, சடங்குகள், மனித உறவுகளுக்கு இடையிலே நிலவும் தொடர்பு, குடும்ப அமைப்பு , தொழில்கள், தத்துவம், இறைவழிபாடு என்பன. தாயகத்தில் பல நூறு ஆண்டுகளாக படிப்படியாக வளர்ச்சியுற்று, நம் அன்றாட வாழ்வில் பிரிக்கமுடியாத வகையில் அங்கம் வகிப்பது இப்பண்பாட்டுக் கூறுகளே. இயல்பாக நம் தாயகத்தில் நமக்கு அமைந்திருக்கும் இக்கூறுகள் தாய் நிலம் விட்டுப் பெயர்ந்து புலம் பெயர்ந்து புதிய நாடுகளுக்கு வரும் போது கலாச்சார அதிர்ச்சியை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியாது. அதுவே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இரண்டாம் தலைமுறைத் தமிழர்கள் எனும் போது இது வேறு விதமாகவே அமைந்திருப்பதைக் காண்கின்றோம்.

புலம்பெயர்ந்த நாடுகளில் இரண்டாம் தலைமுறையினர் தம்மைத் தமிழர் என அடையாளப்படுத்திக்கொள்ளும் கூறுகளாக இருப்பவை அவர்கள் திருவிழாக்களில் அல்லது தமிழர்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளில் அணியும் உடைகள், தமிழ்ச்சினிமா பாடல்கள், ஆடல்கள் என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே அமைந்துவிடுகின்றன. புலம்பெயர்ந்த நாடுகளில் நிகழ்கின்ற ஏறக்குறைய 95% தமிழ் நிகழ்வுகள் சினிமா பாடல்களையும், ஆடல்களையும் நடிக நடிகையர்களையும் முன்னிலைப்படுத்தும் நிகழ்வுகளாகவே அமைந்திருக்கின்றன. தமிழ்ச் சினிமா ஊடகம் என்பது மட்டுமே தமிழர் அடையாளத்தை உலகளாவிய வகையில் எடுத்துச் சென்றிருக்கின்றது. இதனைச் செய்வதில் தான் பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சாதனைப்புரிந்திருக்கின்றார்கள் எனக் கருத வைக்கின்றது நாம் காணும் நிகழ்வுகள். இது ஆரோக்கியமான ஒரு விசயமல்ல. திரைப்பட பாடல்களும், அதில் கூறப்படும் விசயங்களும் ஆடல்களும் மட்டும் தமிழ்க்கலாச்சாரத்தின் பிரதிநிதிகளல்ல. அயல்நாடுகளில் வாழும் போது பிள்ளைகளுக்குச் சரியாக தமிழ் மொழியையும் வரலாற்றுச் செய்திகளையும் கொண்டு சேர்க்க முடியவில்லையே என வருந்தும் அனைவரும் தாம் ஒவ்வொருவரும் தமிழ் மொழி தொடர்பான விசயங்களில் தம்மை எவ்வாறு தயார் படுத்திக் கொண்டிருக்கின்றோம்? எத்தனை நூல்களை வாசிக்கின்றோம்? எத்தகைய நூற்களை வாசிக்கின்றோம்? எத்தகைய தன்மை கொண்ட தமிழ் மொழி தொடர்பான விசயங்களைக் கலந்துரையாடுகின்றோம் என தம்மைத்தாமே கேள்வி எழுப்பிக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. தமிழ் வளர்க்க முனையும் நாம் ஒவ்வொருவரும் நம்மை, நம் தமிழ் மொழி அறிவை விசாலப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும் என்பதை உணர்வதும் அவசியமே..

பிரான்சைப் பொறுத்தவரை இங்கே தமிழ் மக்கள் என்றால் அது இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த பாண்டிச்சேரி தமிழ் மக்களாக இருப்பர் ; அல்லது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ் மக்களாக இருப்பர். இந்த இரண்டு பிரிவினருக்குமிடையே நட்பு பாராட்டுதல் என்பது நல்ல முறையில் இருந்தாலும், தமிழ் இயக்கங்கள், தமிழ்ப்பள்ளிகள், தமிழ்மன்றங்கள் என்பன தனித்தனியாகத் தான் இயங்குகின்றன. இலங்கைத்தமிழர் நடத்தும் தமிழ் மன்றம் அல்லது பாண்டிச்சேரி தமிழர் நடத்தும் தமிழ் மன்றம் என இரு பிரிவாகத்தான் தமிழ் மக்கள் இங்கே பொதுத்தளத்தில் செயல்படுகின்றனர், ஒரு சில  விதிவிலக்குகளைத்  தவிர்த்து. இது இக்காலத் தலைமுறையினருக்கு அதிலும் குறிப்பாக அன்னிய நாட்டில் தமிழ் மக்கள் என்ற ஒரே குடையின் கீழ் இணைய விரும்பும் இளையோருக்குக் குழப்பத்தை நிச்சயம் மேற்படுத்தும் ஒரு செயல்பாடாகத்தான் அமையும். இதனைக் கருத்தில் கொண்டு இப்பிரிவினைப்   படிப்படியாக ஏற்படுத்தக்கூடிய பின் விளைவுகளையும் கருத்தில் எடுத்துக் கொண்டு சங்கங்கள் இயங்க வேண்டும். இது, இத்தகைய சங்கங்களை நடத்துவோர் முன் நிற்கும் பெரும் உளவியல் சவாலாகவே நான் காண்கின்றேன்.

இத்தகைய விசயங்களை அவதானித்து, தமிழர் என்ற ஒரு இன அடையாளத்தைச் சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்று கூட வேண்டும். ஒற்றுமையே பலம். இதனை வாய்ச்சொல்லில் சொல்லி மகிழ்வதை விடச் செயலில் நடத்திக் காட்டி தமிழராகச் சாதனைகளை அயலகத்திலும் நாம் புரிந்து மேன்மை அடைய வேண்டும்!

2 comments:

  1. ------------------------------------------

    எங்கிருந்தாலும்
    னலமுடன் வசிக!
    சுட்ரமும், னட்பும்
    னலமுடன் வசிக!
    அமய்தியும், மகில்வும்,
    செலிப்பும் பெட்ரு வசிக!
    குலந்தய்யின் கல்வியும்,
    தொலிலும் சிரக்க வசிக!

    ------------------------------------------

    ReplyDelete
  2. உங்களை யார் அழைத்தார்கள் என்பது முக்கிய மில்லை .பாண்டிச்சேரி தமிழர் வேறாக இலங்கை தமிழர் வேறாக சங்கம் நடத்துவதாக குறிப்பிட்டிர்கள் .இங்கே இவ்விரு இல் இலங்கை தமிழர்களுக்கு இடையில் இரண்டு சங்கம் இயங்குகின்றது அது தெரியாமல் தமிழ் வழக்கின்றிர்கள் .இதுக்காக பொன்னாடைக்கும் கேடயத்துக்கும் பல செலவு வேறு என்ன கொடுத்தார்கள் .வீட்டில் புருசனுக்கு சமைத்து கொடுக்கும் வேலையை மட்டும் பார்க்கலாம் அவராவது சந்தோஷப்படுவார். இதைவிட இந்த மஞ்சள் சாரிகள் எல்லாம் யார் ? பொன்னாடையை தட்டில் வைத்து கொண்டுவரும் பெண் யார் எத்தனை காலமா ? சங்கத்தில் இருக்கின்றார் என்ன பதவியில் இருக்கின்றார் ?நீங்கள் எல்லாம் காலத்துக்கு காலம் மாறும் பச்சோந்திகள் .இந்த விழா நடத்தி என்ன ? பலன் கண்டீர்கள் சொல்லுங்கள் .தமிழ் விழாவில் சிங்கள டான்ஸ் நல்லாவா இருக்கு ?பேசுவது தமிழ் நல்ல பண்பாடு ஆண்கள் பார்த்து கொண்டு இருக்கின்றன அதை மட்டும் புரிந்து நடத்தல் அவசியம் .எங்காவது போகும்போது சங்கங்களின் தராதரம் அறிந்து செல்வது அவசியம் .தங்கச்சி

    ReplyDelete