Sunday, April 15, 2018

87. தமிழ் தொன்மங்களுக்கான தேடுதல்




எனது தொடர்ச்சியான தேடலில் நான் பல ஆய்வாளர்களைச் சந்திக்கின்றேன். ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவத்துடன் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருபவர்கள். பலர் எந்தத் தொய்வும் இல்லாமல் தொடர்ச்சியாக தம்மை ஒரு குறிப்பிட்ட ஆய்வில் ஈடுபடுத்திக் கொண்டு செயல்படுபவர்கள். அப்படி ஒருவர் தான் இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தில் அரசுப் பணியில் இருக்கும் திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். அவர்கள். 

தமிழகத்தின் மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர் இவர். ஆரம்பக்கல்வி முதல் தமிழ் வழி பள்ளியில் படித்தவர். தமிழிலேயே ஐ.ஏ.எஸ் தேர்வினை எழுதி மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று பின்னர் அரசு அதிகாரியாக இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தில் பணி நியமனம் செய்யப்பட்டவர். 

திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களுடன் கடந்த சில ஆண்டுகளாக இணையத்தின் பேஸ்புக் வழி எனக்கு நட்பு ஏற்பட்டது. வரலாற்று ஆய்வுகள், அதிலும் குறிப்பாக சிந்து சமவெளி ஆய்வுகள் குறித்து அவர் மேற்கொண்டு வரும் மிக ஆழமான ஆய்வுகளின் சிறு செய்தித் துளிகளை அவ்வப்போது என்னுடன் அவர்  பகிர்ந்து கொள்வதுண்டு. இது எனக்குள் தமிழ் மொழிக்கும் சிந்து சமவெளி நாகரிகத்துக்குமான ஆய்வினைப் பற்றி தமிழகத்தில் மிக விரிவாக திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள் விரிவுரைகள் ஆற்றி, இந்த ஆய்வினைத் தமிழக மக்களும் உலக அளவில் ஆய்வாளர்களும் அறிந்து கொள்ள எமது தமிழ் மரபு அறக்கட்டளை வழி நடவடிக்கைகள் மேற்கொள்ள நிகழ்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்பிக் கொண்டிருந்தது. 


மலேசியத் தமிழராய்ப் பிறந்து உள்நாட்டில் ஏனைய சக சீன, மலாய் மக்களால் கலிங்கா, கெலிங்கா என அடையாளப்படுத்தப்பட்ட அனுபவத்தைக் கொண்டிருக்கும் எனக்குக் கலிங்க நாடான ஒடிஷாவிற்குச் சென்று வர திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களது அறிமுகமும் நட்பும் கூடுதல் ஊக்கத்தை அளித்தது. அதன் விளைவாக அண்மையில் ஒரு குறுகிய கால பயணம் மேற்கொண்டு ஒடிஷாவின் புவனேஷ்வர் மற்றும் பூரி பகுதிகளில் களப்பணி ஆய்வுகளை மேற்கொண்டு வரலாற்றுத் தகவல்கள் பல சேகரித்து வந்தேன். இடையில் கிடைத்த நேரத்தில் திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களுடன் நேரில் சந்தித்து சீரிய தகவல் பரிமாற்றத்தையும் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. 


தெற்காசிய நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் ஏனைய இனத்தோரால் கலிங்கர்கள் என்றே அடையாளப்படுத்தப்படுவதை ஒரு பொருளாக எடுத்துக் கொண்டு அதனை ஆய்வு செய்து ஒரு கட்டுரையாகவே இவர் படைத்திருக்கின்றார் என்ற செய்தி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. The new lights on the Kalinga in Indonesia என்ற தலைப்பில் அமைந்த இந்த ஆய்வுக்கட்டுரை International Linguistics and Dravidian Linguistics Journal ஆய்வேட்டில் வெளிவந்தது. 

தமிழர்கள், தமிழகம், தமிழக அரசியல் என வரும் போது மூவேந்தர்களை முன்வைத்தே தமிழக எல்லையினை விவரிக்கும் போக்கு சங்ககாலம் தொட்டே இருந்து வந்துள்ளதை நாம் மறுக்கவியலாது. மூவேந்தர், முக்கொடி, மூன்று அரசியல் சின்னங்கள், மூன்று பேரரசுகள் என்ற விரிவாக்கப்பட்ட ஆளுமைகளை உள்ளடக்கியதாகவே தமிழகம் அடையாளப்படுத்தப்படுகிறது. சோழர்கள் எனும் போது தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், பூம்புகார், உறையூர், என்ற ஊர்களையும், பாண்டியர்களை அடையாளப்படுத்தும் போது மதுரையையும், சேரர்களை அடையாளப்படுத்தும் போது வஞ்சி, தொண்டி போன்ற ஊர்களையும் நாம் குறிப்பிடுகின்றோம். சங்க இலக்கியங்களிலோ சேர சோழ பாண்டிய மூவேந்தரது பங்களிப்புக்கள் நிறைந்திருக்கின்றன. மூவேந்தர்களை அடையாளப்படுத்தும் சங்கத் தமிழ்ப்பாடல்கள் அவர்கள் தமிழால் இணைந்திருந்தமையை உறுதிப் படுத்தும் சான்றுகளாக நம் முன்னே இருக்கின்றன. மூவேந்தர்கள் நில எல்லையின் அடிப்படையில் பிரிந்திருந்தாலும், அவர்கள் தத்தம்  நாடுகளைப் பிரித்து ஆண்டிருந்தாலும், தமிழால் இணைந்திருந்தனர் என்பதற்கு மாற்றுக் கருத்தில்லை. இதனைச் சான்று பகரும் கல்வெட்டுக்களும் இலக்கியங்களும் நமக்கு இன்று ஆதாரங்களாகக் கிடைக்கின்றன. 


இன்று கேரளம், ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் என மாநில வாரியாக எல்லைகள் அரசியல் ரீதியாக அமைக்கப்பட்டுள்ளது. நெடுங்காலமாக, நம் இலக்கியச்சான்றோர் பலர் தமிழகத்தின் எல்லையைத் குறிப்பிடும் போது “வட வேங்கடம் முதல் தென் குமரி வரை” என அடையாளப்படுத்தி வைத்துள்ளனர். ஆனால் தமிழகத்தின் எல்லை என்பது “வட வேங்கடம் முதல் தென் குமரி வரை தானா” என திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் நம் சிந்தனைக்குச் சவாலாக ஒரு முக்கியக் கேள்வியை எழுப்புகின்றார். தனது தொடர்ச்சியான பல்வேறு ஆய்வுகளின் வழி தமிழகத்தின் எல்லை மிகப் பெரிது என்பதையும், அது இன்று நாம் அடையாளப்படுத்தும் சிந்து சமவெளிப்பகுதி, இமயம் என மிக விரிந்ததொரு பகுதி என்றும் தன் கருத்தினை முன் வைக்கின்றார். 


ஒடிஷாவில் நான் இருந்த ஐந்து நாட்களில் ஒடிஷா மக்களுக்கும் வாழ்வியலுக்கும் அதிலும் குறிப்பாக ஒடிஷாவின் ஆதிக்குடிகளுக்கும் தமிழர்களுக்கும் பல ஒற்றுமைக் கூறுகள் இருப்பதை நான் என் களப்பணியின் போது மக்களை அவதானித்தும் உரையாடியும் அறிந்து கொண்டேன். ஒடிஷா மட்டுமல்ல.. இன்றைய இந்தியாவின் எல்லை, அதனையும் தாண்டி சிந்து சமவெளி வரை திராவிட பண்பாடும் நாகரிகமும் வாழ்வியலும் தான் நிறைந்திருந்தன எனத் தனது பல ஆய்வுகளின் வழி தொடர்ந்து கட்டுரைகளை எழுதிப் பதிப்பித்து வருகின்ற திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும். இவரது ஆய்வுகள் இன்றைய கல்வியாளர்களையும் ஆய்வாளர்களையும் எட்ட வேண்டும். 




1988 முதல் இந்தியாவின் பல பகுதிகளுக்குத் தனது பணியின் காரணமாகப் பயணம் மேற்கொண்டிருந்த வேளைகளில் பழங்குடி மக்களிடம் உரையாடும் வாய்ப்பு இவருக்கு அதிகமாகவே கிடைத்திருக்கின்றது. இந்தப் பயணங்களும் கள ஆய்வுகளும் இவரது திராவிட மொழி தொடர்பான ஆய்விற்கு தரவுகளைத் தருகின்ற அருமையான வாய்ப்பாகவும் அமைந்து விட்டது ஒரு அதிசயமான நிகழ்வுதான். 


தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, ஒரியா மொழி மட்டுமல்லாது கோயா போன்ற திராவிட மொழிகளையும் இன்னும் சில பழங்குடி மக்களின் மொழிகளையும் இவர் கற்றுள்ளார் என்பதனை இவரோடு உரையாடும் போது நான் அறிந்து வியந்தேன். 

தமிழகத்தில் கூட இன்று சங்க இலக்கியம் கூறும் வாய்வியலைக் காண முடிவதில்லை. வளர்ந்து வரும் அதி வேகமான நாகரிக மாற்றங்கள், சமூக அரசியல் பிரச்சனைகள் ஆகியன, இன்று சங்கம் காட்டும் வாழ்வியல் நிலையிலிருந்து தமிழ் மக்கள் நீண்ட தொலைவில் வந்து விட்டதைக் காட்டுகிறது. தமிழகத்தின் பழங்குடி மக்களின் வாழ்வியலும் கூட சுற்றுலாப் பயணிகளின் ஆர்வத்திற்கும் தேவைக்கும் தீனி போடும் வகையில் தான் மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்தியாவின் ஏனைய பல பகுதிகளில் பழங்குடி மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் தன் பணிக்காகப் பயணிக்கும் போது அங்கு தான் காண்கின்ற பழங்குடி மக்களின் அன்றாட வாழ்வியல் கூறுகள் தனக்குச் சங்க கால வாழ்க்கையை தன் முன்னே கொண்டு வந்து நிறுத்துவதாகக் கூறுகின்றார் இவர். ஒரு தமிழ் இலக்கிய மாணவரான தனக்கு, இப்பழங்குடியின மக்களைக் காணும் போது, தொல்காப்பிய பொருளதிகாரம் சுட்டும் அகத்திணையியல் சூத்திரம் தன் கண் முன்னே தென்படுவதும், திடீரென்று குறுந்தொகையில் நற்றிணையில் வருகின்ற செய்யுள் கூறும் காட்சி கண்முன்னே காட்டப்படுவதையும் தாம் உணர்ந்ததாகக் கூறுகின்றார். சங்ககாலத்தை விவரிக்கும் சங்கப்பாடல்களில் சொல்லப்படுகின்ற குறிஞ்சித் திணை வாழ்க்கை என்பதை இன்று தான் இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மாவட்டத்திலும், ஒடிஷாவின் கந்தமால், கோராப்பூட் பகுதிகளில் வாழும் டோங்ரியா, கோண்டு பழங்குடி மக்கள் வாழ்வில் உறைந்து கிடப்பதைக் கண்டு அவற்றைப் பதிவாக்கியிருக்கின்றார் இவர். தன் கண்களின் முன்னே சங்க கால வாழ்வியலை இன்று நிகழ்கால வாழ்வியலாகக் காண்கின்றோமே என வியந்ததன் விளைவே இவரது மிகத் தீவிரமான ஆய்விற்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன என்பதை அவரோடு உரையாடும் போதே அறிந்து கொள்ள முடிந்தது. 


இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று மத்திய பிரதேசம். அதில் 1990களின் இறுதிகளில் இம்மாநிலத்தின் சிந்துவாரா பகுதிகளில் இன்று நம் தமிழகத்தில் உள்ள மதுரையிலிருந்து கேரளாவின் இடுக்கி செல்லும் பகுதியில் உள்ள தேனீ, கம்பம், தேக்கடி, குமிளி, போன்ற ஊர்களில் இருக்கின்ற ஊர்ப்பெயர்கள் அப்படியே மாற்றங்களின்றி மத்திய பிரதேசத்தின் சிந்துவாரா பகுதியில் இருக்கின்றன என்பது வியப்பல்லவா? இப்பகுதிகளில் திராவிடப் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர் என்பது இந்த ஊர்ப்பெயர் ஒற்றுமைக்கும் தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் இருக்கும் தொடர்பினை காட்டுவதாக அமைகின்றது என்பதை மறுக்கவியலாது.


”தமிழ் தொன்மங்களுக்கான தேடுதல் தமிழக அரசியல் எல்லைகளுக்கு உட்பட்டதாக இருக்கக் கூடாது” என்ற உறுதியான கருத்துடன் செயல்படுகின்றார் திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள். இக்கருத்துடன் நானும் முழுமையாக உடன்படுகின்றேன்.

இந்தியாவின் பரந்த நிலப்பகுதிகளில் தமிழர் சான்றுகள் நிறைந்திருக்கின்றன. கல்வெட்டுக்களும் ஓலைச்சுவடி ஆய்வுகள் மட்டுமே தமிழர்களின் வாழ்வியலை நிர்ணயித்து விடக்கூடிய முழுமையான சான்றாதாரங்கள் அல்ல. பழங்குடி மக்களின் வாழ்வியல் கூறுகளை ஆராய்வதும், இந்தியா, பாக்கிஸ்தான், வங்கம், ஆப்கானிஸ்தான், போன்ற எல்லை நாடுகளிலும் உலகின் ஏனைய நாடுகளிலும் பரந்து விரிந்த ஆய்வினைத் தொடர்வதின் வழியே தான் தமிழ்க்குடியின் வரலாற்றுச் செய்திகளை நாம் நிலை நிறுத்த முடியும். தமிழர்கள் காலம் காலமாகத் திரைகடலோடி திரவியம் தேடியவர்கள். தமிழர்களின் வாழ்க்கை என்பது கூலிகளாகவும், அடிமைகளாகவும் வந்தவர்கள் என்று எழுதப்படக்கூடாது. தமிழர்கள் வீரர்களாக, வணிகர்களாக, புதிய நாடுகளைத் தேடி அங்கே தம் ஆளுமைகளைச் செலுத்தும் தைரியம் மிக்கவர்களாக, தமது தத்துவக் கோட்பாடுகளையும் சமய நம்பிக்கைகளையும் புதிய நிலங்களில் வேறூன்றியவர்களாக அறியப்பட வேண்டியவர்கள். இதனைக் கருத்தில் கொண்டு நம் ஆய்வுகள் மிக விரிவாக மேற்கொள்ளப்பட வேண்டும். 


திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., சிந்து வெளி கண்டுபிடிப்புக்கள் தொடர்பாகச் செய்து வரும் ஆய்வுகள் தமிழர் தொன்மங்களை நாம் அறியச் செய்யும் சீறியதொரு முயற்சி. வரலாற்று ஆய்வு மட்டுமே என்று தன் பார்வையை குறுக்கிக்கொள்ளாமல் தம்மை ஒரு இலக்கியவாதியாகவும் இவர் அமைத்துக் கொண்டுள்ளார் என்பது இவருக்கிருக்கும் கூடுதல் சிறப்பு. ஒடிஷாவின் மிக உயர்ந்த அரசுப் பதவி, சிந்துசமவெளி ஆய்வுகள், பழங்குடி மக்கள் ஆய்வுகள் மற்றும் ஊர்ப்பெயர் ஆய்வு, என்பதோடு சங்கத்தமிழை ரசித்தும் திருக்குறளை சிந்தித்தும் கவிதைகளை படைத்து வருகின்றார் இவர். பன்முகத்தன்மை கொண்ட இந்த ஆளுமையுடன் நான் செலவிட்ட சில மணி நேரங்கள் எனது ஆய்வுக்கு விருந்தாக அமைந்தன. இந்த ஆய்வுத் தகவல்களைத் தமிழ் மரபு அறக்கட்டளை தொடர்ந்து வெளியிடுவோம். அவற்றைப் பார்த்தும் கேட்டும், வாசித்தும் தமிழ் ஆய்வுலகம் பயன்பெற வேண்டும் என்பதே எமது அவா! 







3 comments:

  1. Nice article..its really great job... well done...

    ReplyDelete
  2. அரிய தகவல்களுடன், ஒரு நல்ல தமிழறிஞரின் அறிமுகமும்.., அய்யா அவர்களின் பணி வியத்தகு போற்றுதலுக்குரியது., வணங்குகிறோம்.

    ReplyDelete
  3. Congrats!!!

    Last year I read a novel 'thanthithira vaakkiyam' written by M.G. Suresh. that novel relates tamil and kalingas.
    i wrote to the writer is it history ? or Fiction?
    and he replied.

    வணக்கம் சார்,

    அண்மையில் எனது நண்பர் உங்கள் படைப்பான ‘தந்திர வாக்கியம்’ என்ற நாவ்லை வாசிக்கக் கொடுத்தார் வாசித்தேன், பிரமித்தேன். பாராட்டுக்கள்.ஏனென்றால் களப்பிரர் பற்றிய எந்தெ செய்தியும் இல்லை என்று என்னளவில் எண்ணியிருந்தேன். தமிழக வரலாற்றை எழுதிய வரலாற்று ஆசிரியர்களும் களப்பிரர்களின் ஆட்சியை ‘இருண்டகாலம்’ என வர்ணித்துள்ளார்கள். நான் வரலாற்றை மிகவும் விரும்பி வாசிப்பேன், மார்க்சிய அணுகுமுறையில் எழுதியவர்கள் உண்மையின் பக்கமாக இருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை. கல்கியின் படைப்புகளை வாசிக்கிற எவரும் சோழர்களை விரும்பாமல் இருக்கமாட்டார்கள். வரலாற்றின் மீதான எனது பார்வையை பிரபஞ்சன் எழுதிய ‘வானம் வசப்படும்’ நாவல்தான் மாற்றியது. அதில் அவர் தன் முன்னொடிகளாக ரொமிலா தாப்பர் போன்ற வரலாற்றியலாளர்களை குறிப்பிட்டிருப்பார்.

    சோழர்களின் வீரதீரத்தை தமிழர்கள் இன்னும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள், எந்த அரசும் ஒரு பக்கம் சார்பாகவே இருக்கிறது. அது முதலாளித்துவ சமூகம் என்றாலும் மன்னர் ஆட்சி என்றாலும் ஒரேமாதிரி தான். அந்த வகையில் சோழர்கள், இந்திய சாதிஅடுக்குகளின் மேல்நிலையிலிருந்த பிராமணர்களுக்கு அப்போதைய செல்வமான நிலங்களை தானமாக வழங்கியிருக்கிறார்கள் என்று பல்வேறு செப்பேடு ஆவணங்கள் தெர்விக்கின்றன. அதுவும் ஆற்றுப் பாசனம் பெறும் நிலங்களை வழங்கியிருக்கிறார்கள். களப்பிரர்கள் கி.பி3ம்நூற்றாண்டிலிருந்து 6ம் நூற்றாண்டுவரை ஆட்சிசெய்தார்கள் என்பதை வாசித்த நினைவு. அப்போது பிரம்மதேய நிலங்களை பிடுங்கி அதை விவசாயிகளுக்கு வழங்கினார்கள்.

    இந்த நாவலில் அந்த மன்ன்னின் பெயர் நிகந்தன், அவன் தமிழன் என்றும் குற்ப்பிட்டிருந்தீர்கள். ஹுவ குவா ஜாங் என்ற சீன பெள்த்த பயணியின் வருகையை குறிப்பிட்டிருந்தீர்கள். அவர் தந்த சான்றின் அடிப்படையில்தான் எழுதியிருக்கிறீர்கள். மால்கம் பிராட்பரியின் நூல்களை ஆதாரமாக கொடுத்திருக்கிறீர்கள். இதெல்லாம் உண்மைதானா? அல்லது புனைவா? அப்படி உண்மையென்றால் வரலாற்று ஆசிரியர்கள் ஏன் இன்னும் களப்பிரர் பற்றிய வரலாற்றை மாற்றவில்லை? அல்லது யாரேனும் எழுதிக்கொண்டிருக்கிறார்களா?

    அசோக மன்னன் கலிங்கத்தை வென்றபோது அப்போது பெளத்த ஆட்சி செலுத்தியவன் கரவேலன் என்ற தமிழன் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அப்போது அவனுடைய ஆட்சிமொழி தமிழாக இருந்ததா? எப்படி கலிங்கமான ஒரிஸ்ஸாவில் தமிழ் ஏன் இல்லாமல் போனது. வேறு ஒரு நாவலில் அசோகன் ஏன் பெளத்தத்தை தழுவினான் என்று வாசித்தேன், கலிங்கத்தை அவனால் வெல்லமுடியவில்லை அங்கே பூர்வகுடிகளின் கொரில்லா யுத்தமுறையை அசோகனால் வெல்லமுடியாது என கணித்த அசோகன் பெள்த்தம் மூலமாக கலிங்கத்தை கைப்பற்றினான் என்று வாசித்தேன். எது உண்மையென தெரிய்வில்லை.

    ஆனால் நிறைய தகவல்களை நாவல் மூலம் பெற்றேன், வரலாற்று நூலை வாசிக்கும்போது சோர்வு ஏற்படும். நாவலின் மூலமாக வரலாற்றை வாசிப்பது என் போன்ற வாசிப்பாளர்களுக்கு எளிதாக இருக்கிறது. நன்றி..இந்த நாவல் தமிழகத்தால் வாசிக்கப்படவேண்டும்.

    அன்புடன்
    Hariharan

    writer's reply.

    இனிய நண்பருக்கு,
    வணக்கம். நான் தற்போது சொந்த வேலையாக வெளிநாடு வந்திருக்கிறேன். அதனால் உங்களுக்கு உடனடியாக பதில் அனுப்ப முடியவில்லை. மன்னிக்கவும்.
    இந்தக் கதை முழுக்க முழுக்கக் கற்பனைக் கதை. இந்த நாவலில் வரும் ஜாங், நிகந்தன், மால்கம் பிராட்பரி எல்லாமே கற்பனைப் பாத்திரங்களே. மற்றபடி ’களப்பிரர்கள் தமிழர்களே. அவர்கள் புரட்சி செய்து மூவேந்தர்களையும் சிறையில் அடைத்து சமதர்ம ஆட்சியை நடத்தினார்கள்’ என்பது வரலாற்றில் இருக்கும் உண்மை. சில உண்மைகளை அடிப்படையாக வைத்து இடைவெளிகளில் ஊகத்தைத் துணை கொண்டுஇட்டு நிரப்பி எழுதப்பட்டதே தந்திரவாக்கியம். நீங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில்: கலிங்கம் திராவிட நாடுகளில் ஒன்று. அங்கு திராவிடமொழி பேசப்பட்டது. மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்று அது ஒரு திராவிட மொழி என்று கொள்ள வேண்டும்.அசோகனை பற்றி நீங்கள் சொல்லும் செய்தி அசோகன் எப்படி வெற்றி பெற்றான் என்பதைப் பற்றித் தெரிவிக்கிறது. இந்த நாவல் அதைப் பற்றிப் பேசவில்லை. வெற்றி பெற்ற பிறகு அசோகனின் மனநிலை மாற்றம் அடைந்தது பற்றிப் பேசுகிறது. அந்த மனமாற்றத்துக்குக் காரணமானவள் காருவகி என்பதே உண்மை.

    உங்கள் மின்னஞ்சலுக்கு உளமார்ந்த நன்றி.

    அன்புடன்,

    எம்.ஜி.சுரேஷ்

    ReplyDelete