Thursday, March 22, 2018

84. உலக ஐயை ஒன்றுகூடல்



பெண்களுக்கென ஒரு மாநாடு..
அது பெண்களைச் சிறப்பித்த ஒரு மாநாடு..
ஆளுமை நிறைந்த பெண்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்த ஒரு மாநாடு..
ஆய்வுலகில் ஈடுபட்டிருக்கும் பெண்களை மேலும் ஊக்குவித்த ஒரு மாநாடு..
ஆம். முதலாம் உலக ஐயை மாநாடு கடந்த 17.03.2018 அன்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது.

தமிழகம், இலங்கை, மலேசியா, ஜெர்மனி, சுவிஸர்லாந்து, துபாய், வட அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து பெண் ஆளுமைகள் இந்த ஆய்வுக்கருத்தரங்கில் வந்து கலந்து கொண்டனர். இணையத்தின் வழியே நல்ல செயல்பாடுகளை முன்னெடுக்கலாம்; திறமையாக நிகழ்வுகளை ஏற்பாடு செய்து அதனை வெற்றிகரமானதாகச் செயல்படுத்திக் காட்டலாம் என்பதற்கு உதாரணமாக இந்த மாநாடு நடைபெற்றது.

ஈராண்டுகளுக்கு முன்னர் கடல் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களால் துவக்கப்பட்டு, இணையவழி ஒருங்கிணைக்கப்பட்டுச் செயல்படும் குழு “ஐயை வாட்சப் குழுமம்”. ஆய்வுத் தளத்தில் இயங்கும் பெண்களை ஒருங்கிணைத்து பெண்களின் அளப்பறியச் சக்தி, ஆக்ககரமான செயல்பாடுகளையும் தரமான ஆய்வுகளையும் முன்னெடுக்க ஒரு அமைப்பு தேவை என சிந்தித்து இக்குழுமத்தைத் தொடக்கியதால் இன்று உலகின் 145 நாடுகளிலிருந்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுமமாக இக்குழு செயல்பட்டு வருகின்றது. இக்குழுமத்தின் முதல் ஆய்வு மாநாட்டில் பெண் ஆய்வாளர்களே முற்றும் முழுதுமாக வழங்கிய 23 கட்டுரைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு நூல் “தீ இனிது” என்ற பெயருடன் ஆய்வுக்கருத்தரங்கம் நடைபெற்ற நாளில் வெளியிடப்பட்டது.

இந்த ஆய்வுக்கருத்தரங்கத்தை இந்தியத் தூதரகத்தின் கலை கலாச்சாரப் பிரிவுத் தலைவர் திரு.அய்யனார் அவர்கள் தொடக்கி வைத்தார். தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் க.சுபாஷினி வழிநடத்த, பேராசிரியர்.நா.கண்ணன் திறனாய்வு செய்ய, பேராசிரியர் அரங்க மல்லிகா முறைப்படுத்த, திரு.ஒரிசா பாலு நெறிப்படுத்த இந்த ஆய்வுக் கருத்தரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பெண்கள் தொடர்பான, பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், பெண் ஆளுமைகள் பற்றின, பெண் சாதனைகளை விளக்கும், வரலாற்று, சமூகவியல், மானுடவியல், ஊடகவியல் எனப் பன்முகத்தன்மையில் அமைந்த கட்டுரைகளை ஆய்வாளர்கள் முன் வைத்தனர். அவற்றில் சில கட்டுரைகளைப் பற்றிய சிறிய குறிப்புக்களோடு அவை சொல்லும் செய்திகளைக் காண்போமே!

முனைவர் அரங்க மல்லிகா ”ஔவையும் பௌத்த மீளாய்வும்” என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையை இந்த ஆய்வு மாநாட்டிற்காக வழங்கியிருந்தார். தமிழகத்தின் எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராகவும், அக்கல்லூரி மகளிர் மையத்தின் இயக்குநராகவும் பொறுப்பில் இருப்பவர் இவர்.

தனது கட்டுரையில் இவர், மக்கள் இயற்கையோடும் சமூகத்தோடும் இணைந்து வாழ்வதற்குரிய அறநெறிகளை வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த உலகச் சிந்தனையாளர்களான சாக்ரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், காண்ட், ஹெகல் முதலிய அறச்சிந்தனையாளர்களோடு வள்ளுவர் சிந்திக்கத்தக்கவர் என்று குறிப்பிட்டு அவர்களூடே பெண்பாற் புலவரான அவ்வையாரும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டியவர் எனக் குறிப்பிடுகின்றார்.

நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க
நல்லார்சொற் கேட்பதும் நன்றே நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே, அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்றே (மூதுரை-8)

பௌத்தத்தின் ஐவகை சீலங்களைக் கடைப்பிடித்து வாழும் நெறியை அவ்வையின் இந்த மேற்குறிப்பிட்ட செய்யுள் நன்கு வெளிப்படுத்துகின்றது. தமிழ்ச்சூழலில் புத்தர் கற்பித்த பௌத்த அறக்கருத்துக்கள் அவ்வையின் எழுத்துக்களிலும் பின்பற்றப்பட்டிருப்பதையும் இந்த ஆய்வுக் கட்டுரை முன் வைக்கின்றது. எவ்வுயிர்க்கும் துன்பம் தராத நினைவுகளும் சொற்களும், செயல்களும் பஞ்ச சீலங்களாகிய பொய்யாமை, களவாமை, கள்ளுண்ணாமை, காமம் கொள்ளாமை, கொலை செய்யாமை என்ற ஐந்தையும் மனதில் கொண்டு அறத்துடன் வாழ வழி வகுத்த பௌத்தக் கருத்துக்களை அவ்வையார் தன் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை எனப் பிரித்து விளக்குவதை இவ்வாய்வுக் கட்டுரை தெளிவு படுத்துகின்றது. அவ்வை தமிழ் இலக்கிய சங்கப்பாடல்களில் 59 பாடல்களைப் புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நூல்களில் வழங்கியுள்ளார்.அவற்றில் 33 புறப்பாடல்களும் 26 அகப்பாடல்கலும் அடங்கும்.

எது அறம்? எது அறமல்ல? எது நல்லது? எது கெட்டது? என்ற வாதமும் நவீனத்திறனாய்வுக்கு அடிப்படை தத்துவங்களாகக் காணப்படுகின்றன. இக்கட்டுரையில் ஆசிரியர், அயோத்திதாசர் அவ்வையை அம்பிகாதேவி எனக் குறிப்பிடுவதை விளக்கி அதற்கான சான்றுகளை முன் வைக்கின்றார். அவ்வையின் இலக்கியக் கருத்தியலை அறம் சார்ந்த சிந்தனைகளோடு விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்கான விடுதலை வரலாற்றின் மறு உருவாக்கக் கருத்தியலை அயோத்திதாசர் சிந்தனை வழியாக இந்திய வரலாற்றை மாற்ற, இந்தியத் தொன்மைகளில் ஒன்றான பௌத்தத்தை அவ்வையார் தமிழகமெங்கும் எடுத்துச் சென்று அறப்புரட்சியை விதைத்திருக்கின்றார். என தன் கருத்தை இவ்வாய்வுக் கட்டுரையின் வழி பதிந்திருக்கின்றார் முனைவர் அரங்க மல்லிகா.

கோயம்பத்தூரைச் சேர்ந்த ஸ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கணிப்பொறி அறிவியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் சிந்தியா லிங்கசாமி, “பழந்தமிழ்ப் பெண்களின் அரசியல் மற்றும் நிர்வாகத்திறன்” என்ற தலைப்பில் தமிழ் மண்ணிற்கும் கொரியாவிற்கும் உள்ள தொடர்பினையும் அத்தொடர்பு உருவாகக் காரணமாயிருந்த ஒரு பெண்மணியைப் பற்றியும் தனது ஆய்வுக் கட்டுரையில் எழுதியிருக்கின்றார். கடல் பயணம் மேற்கொண்டு ஒரு அரசியாக, நாட்டின் தலைவியாக நிர்வாகம் செய்த ஆய்வேளிர் நாட்டு தமிழ்ப்பெண் செம்பவளத்தின் நிர்வாகத் திறனை ஆராயும் வகையில் இக்கட்டுரை அமைந்திருக்கின்றது.

பழந்தமிழ்ப் பெண்களின் வீரத்தை மீட்டெடுத்து, அவர்களின் ஆளுமைத் திறன், விவேகம், துணிச்சல், வீரம், போன்ற குணங்களை இக்கால பெண்கள் கற்றுக் கொண்டு துணிச்சலுடன் செயலாற்ற வேண்டியதை இக்கட்டுரையின் வழி கட்டுரையாசிரியர் முன் வைக்கின்றார்.

தஞ்சையில் உள்ள தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் ஓலைச்சுவடித்துறையின் முனைவர்பட்ட ஆய்வாளர் வே.ரேகா, தொட்டி நாயக்கர் வாழ்க்கை முறை என்ற கட்டுரையை வழங்கினார். தனது கட்டுரையில் இவர் தொட்டி நாயக்கர்கள் எனப்படும் சேலம் அருகே சிற்றூரில் வாழும் ஒரு சமூகத்தில், பெண்களின் நிலையைப் பற்றி விவரித்து இவ்வாய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார்.

இச்சமூக மகளிர் இன்றும் ரவிக்கை அணிவதில்லை. பெண்கள் ரவிக்கை அணிவது ஒரு தெய்வக்குற்றம் என்ற மூட நம்பிக்கையைப் பின்பற்றுபவர்களாக இவர்கள் இன்றும் இருப்பதை நேரடி களப்பணி வழியாக இவர் பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள ஏனைய சமூகத்தைவர்களிடையே உள்ளது போலவே பெண்களுக்கான சில உரிமைகள் தடை செய்யப்பட்டிருப்பதை இவரது ஆய்வுக் கட்டுரை வெளிச்சப்படுத்துவதாக உள்ளது. அவற்றுள் சில.
பெண்கள் சைக்கிளில் செல்லும் வழக்கம் இல்லை.
பெண் பூப்பெய்தியதும் அவளுக்கென்று தனி வீடு வைத்து அங்கு அவள் தனிமைப்படுத்தப்படுகின்றாள். மாதவிடாய் முடிந்த பின்னரே வீட்டிற்குள் வர அப்பெண் அனுமதிக்கப்படுகின்றாள்.
பூப்பெய்திய பெண் ரவிக்கை அணியத்தடை உள்ளது. இது தெய்வக் குற்றமாகின்றது.
பெண் தலையைப் பின்னி சடை போட்டுக் கொள்ளக்கூடாது. கொண்டை தான் போட்டுக் கொள்ள வேண்டும்.
பிற ஆடவர்கள் வீட்டிற்கு வந்தால் பெண்கள் அப்போது வீட்டினுள் நுழையக் கூடாது. அவர்கள் சென்ற பின்னரே வீட்டிற்குள் வர வேண்டும்.
பெண்கள் ரவிக்கை போடாமல் இருப்பதால் பல பொது இடங்களுக்குச் செல்லத் தயங்குகின்றனர். சேலையை சுற்றிக் கொண்டு கூனிக் குறுகி அமர்ந்திருக்கின்றனர்.

இச்சமூகத்தில் உள்ள இவ்வகை மூட நம்பிக்கைகளினால் பெண்கள் கல்வி அறிவு இன்றியும் வெளி உலக அனுபவம் இன்றியும் முன்னேற்றம் காண முடியாது தவிப்பதை கட்டுரையாசிரியர் தனது ஆய்வுக் கட்டுரையில் விளக்கியிருக்கின்றார்.

தமிழகத்தின் பாத்திமா கல்லூரி முனைவர் பட்ட ஆய்வாளரான சே.சலோமி இராஜரீகம் “ஜானகி ஆதிநாகப்பனின் ஆளுமைத்திறன்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வழங்கியிருந்தார். பத்மஸ்ரீ ஜானகி அவர்கள் 1925ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ஆம் தேதி கோலாலம்பூரில் பிறந்தவர். இந்திய சுதந்திர விடுதலைக்கான போராட்டம் தலைதூக்கியிருந்த போது நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் படையில் தன்னை இணைத்துக் கொண்டு அப்படையின் துணைத்தளபதியாகப் பொறுப்பேற்றுக் களமிறங்கி போராடிய பெண்மணியாவார். பர்மா இந்தியா எல்லையில் நிகழ்ந்த போரில் இவர் களத்தில் இருந்து செயலாற்றினார்.

இந்தியாவிற்கு வெளியே பத்மபூஷன் விருதுபெற்ற முதல் பெண்மணி இவர் என்ற சிறப்பும் இவருக்குண்டு. 1946ம் ஆண்டு மலேசிய இந்தியர் காங்கிரசை அதன் முதல் தலைவர் ஜான் திவி அவர்கள் தொடங்கிய போது அவருடன் இணைந்து செயலாற்றினார். மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராகி மலேசிய இந்தியர் காங்கிரசின் மகளிர் பகுதி சார்பில் மேலவை உறுப்பினராகவும் இவர் சேவையாற்றினார் என்பதை ஆய்வாளர் தமது கட்டுரையில் குறிப்பிடுகின்றார். தமது கணவர் டான்ஸ்ரீ ஆதிநாகப்பனுடன் இணைந்து தமது இறுதி மூச்சு உள்ளவரை இவர் பொதுத்தொண்டாற்றினார்.

தன் இளம் வயதில் தேசிய இராணுவத்தில் சேர்ந்து ஜான்சிராணி படையில் துணைத் தளபதியாக பதவி உயர்வு பெற்றவர்; மன உறுதியும் மன வலிமையும் நாட்டுப்பற்றும் கொண்ட பெண்மணியாக உதாரண மகளிராகத் திகழ்ந்தார் என்பதைக் கட்டுரை ஆசிரியர் தமது கட்டுரையில் சிறப்பாக வழங்கியுள்ளார்.

இப்படி வெவ்வேறு கோணங்களில் பெண்கள் பற்றின ஆய்வுத் தகவல்களை முன் வைக்கும் வகையில் உலக ஐயை மாநாட்டில் கட்டுரைகள் படைக்கப்பட்டன. பெண் என்பவளது உலகம் ஆண் வரையறுக்கும் அல்லது சமூகம் கட்டமைக்கும் எல்லைகளுக்குள் முடங்கி விடுவதல்ல; மாறாக பெண் தன் ஆற்றலை வெளிப்படுத்தி திறமையுடன் செயல்பட்டால் உலகை ஆளலாம் என்ற ஊக்க மந்திரத்தை வழங்கிய நிகழ்வாக இந்த உலக ஐயை மாநாடு நடைபெற்று முடிந்தது. இந்த அமைப்பின் அடுத்த மாநாடு ஐரோப்பாவில் நடைபெறும் என்ற நற்செய்தியும் இந்த மாநாட்டில் வழங்கப்பட்டது. இந்த அமைப்பில் இணைந்து மேலும் தம் திறனை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் மகளிர், ஐயை மலர்விழி பாஸ்கரன் அவர்களை +60166236471 என்ற வாட்சப் எண் வழி தொடர்பு கொண்டு தம்மை இணைத்துக் கொள்ளலாம். 

1 comment:

  1. அரிய தகவல்கள்., ஆக்கம் தரும் செய்திகள்.., படைப்பாளிகளுக்கு இனிய வாழ்த்துக்கள்., தங்களுக்கு எங்கள் நன்றிமலர்கள்..!!

    ReplyDelete