Thursday, October 19, 2017

73. சேலைகள்



தீபாவளி என்றாலே குடும்பத்தினருக்குச் சேலை துணிமணிகள் எடுக்க வேண்டும் எனத் துணிக்கடைகளை நோக்கிச் செல்வது நமக்குப் பழகிப்போன விஷயம்தான். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் எப்படி இனிப்பு பதார்த்தங்கள் நமக்கு முக்கியமோ, அதே போலத்தான் நாம் பண்டிகையைக் கொண்டாட அணிந்து மகிழக் காத்திருக்கும் புத்தாடைகளும்.   தீபாவளி பண்டிகையில் சேலை இல்லாமல் இருக்குமா?  நாம் அணியும் சேலை உருவாக்கப்படும் நெசவுத் தொழில் பற்றிய சில செய்திகளைப் பார்ப்போமே.

சேலைகளில் பல ரகங்கள் உண்டு. தமிழகத்தின் சில ஊர்களின் பெயர்களைச் சொன்னாலே எவ்வகைச் சேலைகள் அங்குப் பிரபலம் என்பது பலருக்கு உடன் தெரிந்து விடும். மதுரைக்கு சுங்குடி சேலை, திருப்பூருக்குக் கைத்தறி சேலை, காஞ்சிபுரம் பட்டுச் சேலை, காரைக்குடிக்கு நூல் சேலை எனக் கேள்விப்பட்டிருப்போம். அதுபோல ஒவ்வொரு ஊரின் புகழ்பாட தனிச்சிறப்புடன் கூடிய சேலை வகைகள் விதம் விதமாக இருக்கின்றன. எத்தனையோ வகை ஆடைகள் நம் அன்றாட வாழ்வில் இடம்பிடித்திருந்தாலும் கூட சேலைகளுக்குத் தமிழர்களாகிய நம் வாழ்வில் நாம் கொடுக்கும் மதிப்பு என்பது எப்போதுமே உயர்ந்ததுதான். திருமண நிகழ்வுகள், பிறந்த நாள் வைபவங்கள், தமிழர்கள் ஒன்றுகூடும் நிகழ்ச்சிகள் என எல்லா நிகழ்வுகளிலும் சேலை அணிவதையே மலேசியத் தமிழ்ப் பெண்கள் பெருமை கொள்கின்றோம். 

நாம் அணிகின்ற சேலைகளில் பட்டு, நைலக்ஸ், கைத்தறி, எனப் பல வகைகள் இருந்தாலும் தமிழகத்திற்கும் தமிழ்ப்பெண்கள் அணிவதற்கும் சிறப்பு சேர்ப்பது கைத்தறி சேலைகள் தான். தமிழகத்தில் பல சிற்றூர்களிலும் பெறும் நகரமாகிய கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், போன்ற இடங்களிலும் கைத்தறி சேலைகளை நெசவு செய்து தயாரிக்கும் நெசவுத்தொழில் பெருமளவில் நடைபெற்று வருகின்றது. அப்படி ஒரு ஊருக்குச் சென்று நெசவுத் தொழிலின் தற்கால நிலையை அறிந்து அதனை ஒரு பதிவாக்கி கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுப் பதிவாக வெளியீடு செய்திருந்தோம். அதனை http://tamilheritagefoundation.blogspot.de/2017/10/2017.html என்ற பக்கத்தில் முழுமையாகக் காணலாம். 

சாயர்புரம் - இந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். சாயர்புரத்தில் நெசவுத்தொழில் பற்றிய ஒரு பதிவு செய்வதற்குத் தூத்துக்குடி சென்றிருந்த போது புதிய அனுபவங்கள் எனக்குக் கிட்டின. கிராமத்திற்குள் நுழையும் முன் எங்குப் பார்த்தாலும் பளிச்சென்ற செம்மண் திடல்கள். செம்மண் தரையிலே கட்டப்பட்ட வீடுகள். கிராமத்திற்குள் நுழையும் முன்னரே நெடுந்தூரத்திற்குப் பசுமையான மரங்கள் நிறைந்த காடு. கிராமத்திற்குள் நுழைந்ததும் சின்ன சின்ன வீடுகள். தூய்மையான தெருக்கள். ஆங்காங்கே சின்னச் சின்ன தேவாலயங்கள். வித்தியாசமான காட்சியாக இது எனக்குத் தோன்றியது. 

நான் சாயர்புரத்திற்கு வருவதற்கு முன்னர் தூத்துக்குடி  நகரத்தில் ஒரு நெசவுத்தொழிற்சாலைக்குச் சென்று அங்குப் பதிவினை முடித்து விட்டு இந்தக் கிராமத்திற்கு வந்தேன். கிராமத்திற்குள் ஒரு நெசவுத் தொழிற்சாலை இருக்கின்றது. மிகப் பாழடைந்த ஒரு கட்டமாக அது தோற்றமளிக்கின்றது. உள்ளே நெசவு இயந்திரம் இயங்கிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. உள்ளே நானும் என்னை அழைத்துச் சென்ற நண்பரும் சென்று பார்த்தோம். இரண்டு தறி இயந்திரங்கள் தானே இயங்கிக்கொண்டு சேலையை உருவாக்கிக் கொண்டிருந்தன. அதனை அடுத்தார்போல மனிதர்கள் இயக்கும் கைத்தறி இயந்திரத்தில் ஒரு பெரியவர் அமர்ந்து சேலைக்குத் தறி போட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் சென்று நெசவு பற்றிய சில அடிப்படைத் தகவல்களைக் கேட்டு அறிந்து பதிவு செய்து கொண்டோம். ஆண்களும் பெண்களுமாகப் பாகுபாடின்றி இத்தொழிலைச் செய்கின்றனர். கையால் போடும் தறி மட்டுமன்றி இன்று இயந்திரத்துடன் இயங்கும் நெசவு இயந்திரங்களும் வந்து விட்டன. இவை ஒரு கைத்தறி சேலையோ, கைலியோ, துண்டோ தயாரிக்கப்படும் நேரத்தை விரைவாக்குகின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 


தொழிற்சாலையில் பதிவினை முடித்து விட்டு கிராமத்திற்குள் நடக்கத்தொடங்கினோம். அவை சற்றே பெரிதான குடிசை வீடுகள் இருபக்கமும் நிறைந்த வகையில் அமைந்திருக்கும் தெரு. தெருவில் இருந்த ஒரு வீட்டிற்குள் என்னை அழைத்து வந்த நண்பர் அங்கிருந்தோரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அந்த வீட்டில் முன் பக்கத்தில் வீட்டுடன் சேர்த்தே அமைக்கப்பட்ட ஒரு தறி இயந்திரம் ஒன்று இருந்தது. 

இங்குள்ள வீடுகள் அனைத்துமே சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஒரு தறி இயந்திரம் முன்பக்கத்தில் பொருத்தப்பட்ட நிலையிலேயே அமைக்கப்பட்டிருந்தன என்றும் தற்சமயம் இது குறைந்து விட்டது என்றாலும் இன்னும் கூட தெருவில் உள்ள பல வீடுகளில் தறி இயந்திரங்களில் உள்ளன என்ற செய்தியை அறிந்து கொண்டேன். 

அவர்கள் எனக்குத் தறி இயந்திரத்தை இயக்கிக் காட்டினர். ஒரு பெரிய நூல் கண்டினைப் பொருத்தி விடுகின்றனர். இரு கைகளாலும் இயந்திரத்தை மேலும் கீழும் இழுக்கும் அதே நேரம் கால்களால் தையல் இயந்திரத்தை ஓட்டுவது போல அசைக்க வேண்டும். அப்படிச் செய்யும் போது இயந்திரத்தில் நூல் இழைகள் ஒன்றோடு ஒன்று பின்னி இறுகி துணியாக வடிவம் பெறுகின்றது என்பதை நேரில் பார்த்தேன். ஒரு பெரிய கண்டினைக் கொண்டு 21 சேலைகளை நெய்து விடுகின்றனர். அதில் 20 சேலைகள் அவர்கள் விற்பனை செய்யும் அமைப்பிற்குக் கொடுத்து கூலி பெற்றுக் கொள்கின்றனர். ஒரு சேலையை அவர்களுக்கு எடுத்துக் கொள்கின்றனர். இந்த வகையில் இக்கிராமத்தில் கைத்தறி சேலை உருவாக்கம் நடைபெறுகின்றது. 

தமிழக அரசாங்கம் ஏழை மக்களுக்கு இலவச சேலை வேட்டி துண்டு கொடுப்பதனால் அதற்கான ஆர்டர்கள் இவர்களுக்கு வருவதாகவும் அதற்குத் தேவைப்படும் சேலைகளை இவர்கள் தயாரிப்பதாகவும் அறிந்து கொள்ள முடிந்தது. பதிவினை முழுதாக முடித்த பின்னர் அதே கிராமத்திலேயே அன்று இரவு தங்கிவிட்டு மறுநாள் மாலை திருநெல்வேலி செல்லலாம் என்பது எனது திட்டமாக இருந்தது. 

அன்று இரவு அதே கிராமத்தில் நான் தங்குவதற்காக அந்தக் கிராமத்தில் முக்கியமானவர் பெரியவர் திரு.ஆ.ந வாய்மை அவர்களின் இல்லத்தை ஏற்பாடு செய்திருந்தனர். பதிவுகள் முடித்து அங்குச் சென்று சேர்ந்தவுடன் அப்பெரியவருடனும் அவரது மனைவியுடனும் அறிமுகம் செய்து கொண்டேன். அப்பெரியவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர்கள் வீட்டின் மாடிப்பகுதியை முழுமையாக நூலகமாக மாற்றியுள்ளனர். கணினிகளை வைத்து கிராமத்துக் குழந்தைகள் வந்து பார்த்து படித்துச் செல்ல இலவசமாக அனுமதிக்கின்றனர். அக்கிராமத்து  மக்களின் பால்  மிகுந்த அன்பும் அக்கறையும், சமூக சேவையில் ஈடுபாடும் நிறைந்த தம்பதியர் அவர்கள். 

மறு நாள் காலையில் பெரியவர் திரு.ஆ.ந வாய்மை அவர்களது தமிழ் ஆய்வுகள் பற்றியும் அக்கிராமத்துப் பிரச்சனைகள் பற்றியும் பல விசயங்கள் பேசினோம். மேலும் சில நண்பர்களும் நான் தங்கியிருந்த அந்த வீட்டிற்கு வந்து கூடினர். நெசவுத்தொழிலை வளர்ப்பதற்காகவும் கைத்தறி பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் முயற்சிகள் தேவைப்படுகின்றன என இவர்கள் என்னிடம் தகவல் பகிர்ந்து கொண்டனர். 

பெரியவர் திரு.ஆ.ந வாய்மை அவர்கள் நெசவுத்தொழிலை அறிமுகம் செய்யும் ஒரு கூடம் போன்ற ஒரு கட்டடம் ஒன்றை தன் சொந்தச் செலவில் அதே ஊரில் கட்டியுள்ளார். அதில் பயிற்சி வகுப்புக்கள், தொழில் முனைவர்களுக்கான ஆலோசனைகள் போன்றவற்றை நடத்தத் திட்டம் வைத்துள்ளார். 

நெசவுத்தொழிலுக்குப் பிரசித்தி பெற்ற இந்த சாயர்புரத்தில் சாலைகளில் நான் சந்தித்த பெண்கள் என்னிடம் அன்புடன் பேசினர். கைத்தறி இவர்களது குலத்தொழில் என்றும், இவர்கள் வாதிரியார் என்ற சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்றும் அறிந்து கொண்டேன். 

இந்தப் பகுதியில் பாதிரியார் ஜி.யூ போப் அவர்கள் உருவாக்கிய பள்ளிக்கூடம் ஒன்றும் உள்ளது. அதில் கல்வி கற்று வாழ்வில் சிறந்த முன்னேற்றம் கண்டவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எனத் தயங்காமல் கூறலாம். இன்றும் கூட சாயர்புரத்தில் இப்பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தவர்கள் தமிழகம் தவிர்த்து ஏனைய மாநிலங்களிலும் நல்ல வருமானம் தரக்கூடிய உயர் பதவிகளிலும் பணிபுரிவதாக அங்கு நான் சந்தித்த நண்பர்கள் வழி அறிந்து கொண்டேன். இன்றைய இளைய தலைமுறையினர் நெசவுத் தொழிலை நாடி வருவதில்லை என்றும் இத்தொழில் படிப்படியாக குறைந்து வருகின்றது என்பதையும் அங்கு முடங்கிக் கிடந்த கைத்தறி இயந்திரங்களே சாட்சி கூறின. 

சாயர்புரத்தின் நெசவுத்தொழில் மட்டுமல்ல - தமிழத்தின் பல இடங்களில் நடைபெறுகின்ற நெசவுத்தொழில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருப்பதையும் இத்தொழிலை விட்டு மக்கள் மாற்றுத் தொழிலுக்குச் செல்வதையும் காண்கின்றோம். இது காலம் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் தான். ஆனால் தமிழர் பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற இக்கலை நலிவுற்று அழிந்து விடாமல் ஏதாவது ஒரு வகையில் இக்கலை தொடர்வதைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் நமக்கிருக்கின்றது. 

தூத்துக்குடியிலும் சாயர்புரத்திலும் தயாரிக்கப்படும் கைத்தறி சேலைகளை நேரில் பார்த்த போது அவை ஒவ்வொன்றுமே மிக அழகாக இருப்பதைக் கண்டேன். ஆனால் இப்போதெல்லாம் இக்காலத்துப் பெண்கள் கைத்தறியை விரும்புவதில்லை என்பதை மக்கள் சொல்லி கேட்கும் போது வருத்தமே மேலிடுகின்றது. தமிழர் பாரம்பரியக் கலைகளில் ஒன்றாகிய இந்த நெசவுத்தொழிலை அது மறையாமல் வளர்க்க வேண்டுமென்றால் நாம் கைத்தறி ஆடைகளை வாங்குவதை நடைமுறைப்படுத்த வேண்டும்.  கைத்தறி வளர்ச்சிக்கு நாமும் நம் பங்கினை ஆற்றுவோம்!















1 comment:

  1. அருமை சகோதரி..!!, நல்ல பதிவும், படங்களும். இனிய வாழ்த்துக்கள்.!!

    ReplyDelete