உலக நாடுகள் பலவற்றில் தமிழர் குடியேற்றம் என்பது பன்னெடுங்காலமாக நடந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தமிழர்கள் குடியேற்றம் என்பது இன்றைக்கு ஏறக்குறைய 250 ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்டது. அப்போதைய தென்னாப்பிரிக்க ஆங்கிலேய காலணித்துவ அரசின் ஆட்சியில் கரும்புத் தோட்டங்களில் பணி புரிய தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்களில் பெரும்பாலோர் தமிழக நிலப்பரப்பைச் சார்ந்தோர். ஒப்பந்த தொழிலாளர்களாக வந்த இவர்களில் ஒரு சிலர் சில ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா திரும்பினாலும் பலர் தென்னாப்பிரிக்காவிலேயே தங்கிவிட்டனர். இவர்களின் சந்ததியினரே இன்று தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள்.
தென்னாப்பிரிக்காவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் உள்ளூர் சூலு இன மக்கள். இவர்கள் தென்னிந்தியாவிலிருந்து உழைக்க வந்த இந்தியர்களை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனை உள்ளூரில் ஆரம்பக் காலம் முதல் நிகழ்ந்த பல சம்பவங்கள் சாட்சிகளாக நமக்குக் காட்டுகின்றன. தற்போதும் கூட டர்பன் நகரத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலும் இந்தியர்கள் வாழும் பகுதி என்று பீனிக்ஸ் பகுதியும் அதற்கு எதிர்புறமாக உள்ள பகுதி சூலு மக்கள் வாழும் பகுதி என்றும் அமைந்திருப்பதைக் காணமாம். ஆயினும் பெரிய அளவிலான பிரச்சனைகளோ, இனக்கலவரமோ என்பது இங்கு இல்லை என்பது ஒரு மிக நல்ல விசயம்.
தென்னாப்பிரிக்காவில் வாழும் தமிழ் மக்கள் தமிழ் மேல் அதிகப் பற்று கொண்டவர்கள். தமிழ் உணர்வாளர்கள். பலருக்குத் தமிழ் மொழி பேசத்தெரியாது ந்ராலும் கடந்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளினால் ஓரளவு தமிழ் பேசவும், பிறர் பேசுவதை நன்கு புரிந்து கொள்ளவும் முடியும் வகையில் தங்கள் தமிழ் அறிவை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் தமிழர் விழாக்களை நடத்துவதைப் பெருமையாக நினைக்கின்றனர். இங்கு சில இந்து சமயக் கோயில்களும் இருக்கின்றன. தமிழர் பண்பாட்டு உடைகளை அணிவதையும், கலைகளைக் கற்பதையும் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதையும் மகிழ்வுடன் செய்கின்றனர்.
2015ம் ஆண்டு உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் நிகழ்வு ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தேன். அன்று பட்டமளிப்பு விழாவின் விருந்து நிகழ்ச்சியின் போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒரு பெரியவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவர்தான் திரு.செல்வன். டர்பன் நகரில் இயங்கும் மியர்பேங்க் தமிழ்ப்பாடசாலையின் தலைவராகச் செயலாற்றுபவர். அவரோடு உரையாடியதில் மியர்பேங்க் தமிழ்ப்பாடசாலை பற்றி சில தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது. நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த எம்டிடிஎஸ் மண்டபத்தின் வலது புறத்தில் இந்தப் பாடசாலையைக் கட்டி அமைத்திருக்கின்றார்கள் . கட்டிடத்தின் இரண்டு மாடிகளில் தமிழ்ப்பாடசாலையின் வகுப்புக்கள் நடக்கின்றன.
பாடசாலையைச் சென்று பார்க்கலாமா, என நான் வினவிய உடன் சற்றும் தயங்காது என்னை அழைத்துக் கொண்டு சென்றார் திரு.செல்வன். இந்தப் பள்ளி வகுப்பறையைத் திரு.நடேசன் என்பவர் திறந்து வைத்தார் என்ற தகவலை முன்வாசல்பகுதியில் உள்ள அறிவிப்பில் காண முடிந்தது. மாடியில் ஏறிச்சென்று பள்ளியின் அறைகளைப் பார்வையிட்டோம். அடுத்தடுத்ததாக சில அறைகள் அந்த முதல் தளத்தில் இருந்தன. பிறகு மேல்மாடியில் இருக்கும் அலுவலக அறைக்கும் என்னை அழைத்துச் சென்று அங்குள்ள புகைப்படங்களைக் காட்டி இந்த மியர்பேங் பள்ளிக்கூடத்தின் ஆரம்பக் கால முயற்சிகள், பின்னர் படிப்படியான வளர்ச்சி, இன்றைய நிலையில் தமிழ் கற்க வருகின்ற தமிழ் மக்களின் ஆர்வம் ஆகியவற்றைப் பற்றி விளக்கினார்.
1936ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த மியர்பேங்க் தமிழ்ப்பாடசாலையும் அதற்கு அடிப்படையாக இருக்கும் தமிழ்ச்சங்கமும். தொடர்ந்து பல தமிழார்வளர்களின் முயற்சியால் தமக்கென்று ஒரு கட்டிடம், மண்டபம் என மிகச் சிறப்பாக இன்று வளர்ந்திருக்கின்றது இந்த மியர்பேங்க் தமிழ்ச்சங்கமும் தமிழ்ப்பாடசாலையும். இது இப்பாடசாலைக்கு மட்டுமன்றி உலகத்தமிழர்களும் பெருமை சேர்க்கும் ஒரு விசயமல்லவா?
அன்றைய விருந்து நிகழ்வில் தமிழிசைப் பக்திப்பாடல்கள் முடிந்து தமிழ் திரைப்பட பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர் இசைக் கலைஞர்கள். பாடகர்கள் அனைவருமே தமிழ் பேசத்தெரியாத நிலையிலும் ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு பாடுகின்றார்கள். ஆனாலும் உச்சரிப்பில் தவறுகளை அதிகமாகக் காணமுடியவில்லை. தென்னாப்பிரிக்காவில் டர்பன் நகரில் இத்தகைய இசைக்கலை ஆர்வம் நிறைந்த இளைஞர்களைக் காண்பதில் மனதிற்கு உவப்பாகவே இருந்தது. தமிழைப் பிழையின்றி பேச முடியாவிட்டாலும் கூட தமிழ்ப்பாடல்களும் தமிழிசையும் இந்த இளைஞர்களை ஈர்த்திருப்பதைக் காணமுடிகின்றது.
பட்டமளிப்பு விழாவும் ஏனைய அதிகாரப்பூர்வ நிகழ்வுகளும் முடிந்த பின்னர் டர்பன் நகரைச் சுற்றிப் பார்க்கவேண்டும் எனத் திட்டமிட்டோம்.. என்னோடு மலேசிய நண்பர்கள் திரு.ப.கு.சண்முகம் தலைமையிலான குழுவினர், இந்து, சாம் விஜய், கனடா நண்பர் திரு,ராஜரட்ணம் ஆகியோரும் இருந்தமையால் அனைவரும் இணைந்தே பயணம் செய்தோம்.
தென்னாப்பிரிக்கத் தோழி கோகியும் அவர் கணவர் திரு.சின்னப்பனும் திங்கள் கிழமை, அதாவது புனித வெள்ளி முடிந்த வாரத்தின் முதல் திங்கள்கிழமை, அருகாமையில் இருக்கும் புற்று மாரியம்மன் ஆலயத்தில் விசேசம் இருப்பதாகவும் அங்கு வந்து பார்க்க விருப்பம் இருக்கின்றதா என்றும் கேட்டனர். வேறு இடங்களுக்குச் செல்வதற்கு முன்னர் ஆலயம் சென்று பார்த்து விட்டு வரலாமே என்று எனக்கும் அது சரியான யோசனையாகவே தோன்றியது. மாரியம்மன் ஆலயத்தைப் பார்த்து விட்டு அருகாமையில் இருக்கும் முருகன் கோயிலும் சென்று வரலாம் என்று அவர்கள் தெரிவித்தனர். திரு.சின்னப்பன் அவர்களின் மகள் சிவானியும் ஒரு கார் வைத்திருக்கின்றார்.ஆக எங்களை இவர்கள் இருவரும் ஹோட்டலிலிருந்து கோயிலுக்குத் தங்கள் காரிலேயே அழைத்துச் சென்று விட்டனர். நாட்டியப்பள்ளி வைத்து நடத்தி வரும் சிவானி ஒரு வக்கீலாகவும் படித்து பட்டம் பெறும் நிலையில் இருக்கின்றார்.
கோயிலை நெருங்கும் போதே தூரத்திலிருந்தே கோயில் கோபுரம் கண்களுக்குப் புலப்பட்டது. ஆலயத்தின் வாசல் முழுக்க வாகனங்கள் நிறைந்து இருந்தமையால் வாகனத்தை நிறுத்துவதில் சற்றே சிரமம் ஏற்பட்டது. தென்னாப்பிரிக்க தமிழர்கள் ஆலயத்தில் நிறைந்திருந்தார்கள். கண்கொள்ளாக் காட்சியாக அது அமைந்திருந்தது.
மாரியம்மன் ஆலயம் என்பது மனதில் ஒலித்துக் கொண்டிருந்ததால் அம்மன் சிலை எவ்வகையில் இருக்கும் என்ற ஒரு கற்பனை மனதில் ஓட ஆரம்பித்திருந்தது. காமாட்சியம்மன் அல்லது துர்கை வடிவில் அம்மன் சிலை இருக்குமோ? அல்லது மலேசியாவில் இருக்கும் மாரியம்மன் வடிவில் இங்கு மூலஸ்தான தெய்வ வடிவம் இருக்குமோ என மனதில் கேள்விகள் ஓட உள்ளே சென்று பார்க்க மனதில் ஆவல் அதிகரித்துக் கொண்டிருந்தது. எல்லோரும் ஆலயத்திற்கு வெளிப்பகுதி வழியாகச் சுற்றிக் கொண்டு வந்து ஆலயத்தின் நேர் வாசல் பகுதியை அடைந்தோம்.
நடுப்பகுதியில் இருப்பது பிரதான ஆலயம். அதற்கு இடப்புறமும் வலப்புறமும் மேலும் ஒரு மாரியம்மன் ஆலயமும் ஒரு விநாயகர் ஆலயமும் இருக்கின்றன. மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஆலயத்தின் முன் வாசல் பகுதிக்கு வந்தேன். அங்கு நான் கண்ட காட்சி என்னை அதிசயத்தில் மலைக்க வைத்தது.கற்பகிரகம் மூலஸ்தானம் என இல்லாமல் ஆலயத்தின் நடுப்பகுதியில் பிரமாண்டமான மணல் புற்று நேராக நிமிர்ந்து நிற்க அதன் மேல் மாலைகள் குவிந்து கிடக்க மையப்பகுதியில் வெள்ளியால் ஆன அம்மன் வடிவத்து முகம் மட்டும் வைத்தார்போன்ற ஒரு அமைப்பு அங்கே கண்முன்னே காட்சியளித்தது. நான் எதிர்பாராத ஒரு காட்சி அது. ஆச்சரியத்திலும் அக்காட்சியின் அழகிலும் மெய்மறந்து போனேன் என்று தான் சொல்ல வேண்டும்.
இக்கோயிலில் வழிபாடு செய்து வைக்க என்று தனியாக குருக்கள் இல்லை. பொதுமக்களே கோயில் வழிபாட்டினை முழுமையாகச் செய்கின்றனர். ஆண் பெண் என்ற பேதமின்றி தூபம் காட்டுதல், மங்கல நீர்வழங்குதல் என்பது போன்ற பணிகளைப் பொதுமக்கள், கோயில் நிர்வாகத்தினர் ஆகியோர் செய்கின்றனர்.
டர்பன் புற்றுமாரியம்மன் ஆலயம் மூன்று பகுதிகளாக அமைக்கப்பட்டிருக்கின்றது. நடுப்பகுதியில் மிகப்பிரமாண்டமாக உயர்ந்து நிற்கும் புற்றையே அம்மனாக வைத்து மக்கள் வழிபடும் இடம் இருக்கின்றது. இப்புற்றில் அம்மன் வடிவமாக அமைக்கப்பட்ட வடிவம் இந்த மண்டபத்தின் நடுப்பகுதியில் இருக்குமாறு செய்திருக்கின்றார்கள். நடுப்பகுதியில் அமைந்திருப்பதால் பக்தர்கள் அம்மன் வடிவத்தின் முன் நின்று தாமே தீபாராதனைக் காட்டி தாமே பிரார்த்தனை செய்து கொண்டு செல்ல இலகுவாக அமைந்துள்ளது. இக்கோயிலில் அர்ச்சனை செய்து வைக்க என்று தனியாக அர்ச்சகர்களோ குருக்கள்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் கூட்டம் நிறைந்திருந்த அன்றும் கூட பொது மக்கள் வரிசையாக நின்று ஒவ்வொருவரும் யாரையும் இடித்து தள்ளிக் கொள்ளாமல் தங்கள் வழிபாட்டினைச் செய்து விட்டுச் சென்று கொண்டிருந்தனர்.
புற்று வடிவத்தின் முன் பக்தர்கள் தாங்களே தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த வழிபாட்டுப் பொருட்களை வைத்து சூடம் ஏற்றி குடும்பத்தோடு நின்று வழிபட்டு பின்னர் தங்கள் பொருட்களைக் கையோடு எடுத்துக் கொண்டு ஆலயத்தைச் சுற்றி செல்கின்றனர். அப்படிச் செல்லும் போது முதலில் ஒரு பெண்மணியிடம் மங்கலப் பொருட்களைப் பெற்றுக் கொள்கின்றனர். பின்னர் அங்கு நிற்கும் இரண்டு பெண்களிடம் வேப்பிலை போன்ற வடிவம் கொண்ட ஒரு இலையால் உடல் முழுவதும் படுவது போலச் செய்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து அடுத்த இடம் செல்கின்றனர். இங்கே இருக்கும் ஒரு பெண்மணி அவர்களுக்குப் புனித நீரை ஒரு பெரிய கரண்டியில் எடுத்துக் கொடுக்க அதனைப் பக்தர்கள் பருகிச் செல்கின்றனர்.
இந்த மையப்பகுதியை அடுத்தார் போல வலது புறத்தில் ஒரு சிறிய விநாயகர் சன்னிதி இருக்கின்றது. இங்கேயும் மக்கள் வரிசையாக வருகின்றனர். முன்னால் நிற்கும் ஊழியர்கள் பக்தர்கள் கொண்டு வரும் தட்டில் சூடம் ஏற்றித் தர குடும்பத்தோடு மக்கள் விநாயகரை வழிபட்டுச் செல்கின்றனர். வெளியேறும் போது அங்கு நிற்கும் ஒருவர் விபூதியை அவரே தாமாக நமது நெற்றியில் இட்டு விடுகின்றார். ஆலயத்தின் எல்லா இடங்களிலும் அவசரம், தள்ளிப்பிடித்தல் என்ற வகையில் இல்லாமல் மிக ஒழுங்காகக் காரியங்கள் நடைபெறுகின்றன.
இங்குள்ள விநாயகர் சிலையின் வடிவம் நம் கண்கள் பார்த்துப் பழகிய விநாயகர் சிலையிலிருந்து மாறுபட்ட வடிவில் அமைந்திருக்கின்றது. ஒல்லியான உடம்புடன் தொந்தியில்லாத விநாயகர் நமக்கு வித்தியாசமாகவே படுகின்றார். ஆயினும் அலங்காரங்களுடனும் பக்தர் கூட்டத்துடனும் பார்க்கும் போது நம் மனதைக் கவரத் தவறவில்லை. நான் என் வழிபாட்டை முடித்துக் கொண்டு கோயில் இடப்புறம் கச்சேரி நடந்து கொண்டிருந்த பகுதிக்குச் சென்றேன். அங்கே திரு.கார்த்திகேயன் இசைக்குழுவினர் தமிழிசை கச்சேரி செய்து கொண்டிருந்தனர்.
இடையில் எங்களை அழைத்துச் சென்ற திரு.சின்னப்பன் தம்பதியர் எங்கள் வருகையைப் பற்றிச் சொல்ல, உடனே எங்களில் யாரேனும் பாட விருப்பம் உள்ளதா என வினவினர். என்னுடன் வந்திருந்த திரு.நயினை விஜயன் அவர்கள் அற்புதமாக ஒரு தமிழைப்பாடலைப் பாடினார். அதனை அடுத்து நானும் பாடுகின்றேன் எனச் சொல்ல என்னையும் பாட அழைத்தனர். நான் ஒரு தேவாரப் பாடலை பாடினேன். அதற்குப் பக்க வாத்தியம் மிக அருமையாக அமைந்திருந்தது. மத்தளம், ஆர்மோனியம் வயலின் இசை கலந்ததும் எனக்கு முன்னர் கச்சேரி செய்த நினைவுகள் மனதில் தோன்றின. ஆகையால் பாடலை சற்றே விரிவாக்கிப் பாடி முடித்து எழுந்த போது மீண்டும் ஒரு பாடலை பாடுமாறு கேட்டுக் கொண்டனர் இசைக்குழுவினர். எனக்கு இது மேலும் ஆர்வத்தையும் மகிழ்ச்சியும் அளித்ததால் மேலும் ஒரு தமிழிசைப்பாடலை பாடினேன். பாடி முடித்து கீழே வரும்போது நண்பர்களின் புன்னகை கலந்த பாராட்டுதல்கள் எனக்கு நிறைந்த மன மகிழ்ச்சியை அளித்தன.
தென்னாப்பிரிக்கா மட்டுமன்றி முழுமையான ஆப்பிரிக்க கண்டத்திற்கும் இந்திய நாட்டிற்கும் அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கும் நீண்ட நெடிய தொடர்பு இருக்கின்றது. ஆயினும் இன்று உலக மக்களால் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் என்று குறிப்பிடப்படுவோர் ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியின் போது கரும்புத்தோட்டங்களில் பணிபுரிய வந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாரிசுகளே. 1860 முதல் ஆரம்பித்த இந்த நிகழ்வு படிப்படியாக தென்னிந்திய மக்கள், அதிலும் குறிப்பாக தமிழர்கள் ஆப்பிரிக்கா புலம்பெயர காரணமாகியது. அதிலும் குறிப்பிடத்தக்க முக்கிய வரலாற்று விஷயமாக நாம் கருத வேண்டிய ஒன்றாக அமைவது, ஒப்பந்தத் தொழிலாளர்களாக முதலில் டர்பன் வந்தடைந்தவர்கள் அப்போதைய மதராஸிலிருந்து வந்த 342 ஒப்பந்தத் தொழிலாளர்கள் தாம்.
இன்றைய நிலையில் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நிலையான ஓரிடத்தைப் பெற்றவர்களாக இருக்கின்றனர். அரசுப் பணிகளிலும் நாடாளுமன்றத்திலும் இடம் வகிக்கும் நிலையையும் சிலர் பெற்றவர்களாக இருக்கின்றனர். இது தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் தாம் புலம்பெயர்ந்த மண்ணில் காலூன்றி விட்டமையைக் காட்டும் அடையாளங்களாக இருக்கின்றன. ஆங்காங்கே இருக்கும் இந்து சமய ஆலயங்கள் இத்தமிழ் மக்கள் தங்கள் சமய வழிபாட்டுச் சடங்குகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் மறவாமல் வழி வழியாக தமது இளம் தலைமுறையினருக்கும் வழங்குவதில் காட்டும் ஆர்வத்தைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது. ஆயினும் மனதை உறுத்தும் ஒரு விசயம் இல்லாமலில்லை.
தென்னாப்பிரிக்கத் தமிழர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே தமிழ் மொழியை ஓரளவேனும் சரளமாகப் பேசக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஏனையோர் ஒரு சில வார்த்தை பேசுபவர்களாகவும் பெரும்பாலோர் தமிழ் மொழியின் தொடர்பு அற்ற வகையிலும் இருக்கின்றனர் என்பதுதான் உண்மை நிலவரமாக இருக்கின்றது. தமிழ் மொழியில் பயிற்சி பெற வேண்டும், பாண்டித்தியம் பெற வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் இவர்கள் மனதில் ஆழ வேரூன்றி இருக்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆயினும் எவ்வகையான முயற்சிகள் இவர்களுக்குப் பலனளிக்கும் என்பது தான் மிக முக்கிய விடயமாக இருக்கின்றது. அர்த்தம் புரியாமலேயே தமிழ்ப்பாடல்களைப் பிழையின்றி பாடக்கூடியவர்கள் இருக்கின்றனர். தமிழ் சினிமா பாடல்கள் தமிழை இவர்கள் மத்தியில் வழக்கில் தக்க வைக்க உதவுகின்றன என்பதனை மறுப்பதற்கில்லை.
எளிமையான முறையில் தமிழ் மொழி சொல்லித்தரக்கூடிய வழிமுறைகளைக் கையாளவேண்டியது அவசியமாகின்றது. இன்னிலையில், பேச்சுத்திறனை வளர்க்கும் வகையிலான தமிழ் மொழி பாடத்தினை திட்டமிட்டுச் செயல்படுத்துவதில் உதவ வேண்டியது தான் தென்னாப்பிரிக்கத் தமிழர்களுக்கு நாம் செயலாற்ற வேண்டிய அதி முக்கிய, அதி அவசர தேவை என நான் கருதுகின்றேன்.
அரிய பதிவு.., புதிய தகவல்கள்.., அரும்பணி...!!., சகோதரி தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
ReplyDelete