Wednesday, March 22, 2017

50. தென்பரங்குன்றம் தர்கா



பள்ளிவாசல்கள் மலேசியாவின் எல்லா பெரிய நகரங்களிலும், சிறு நகர்களிலும், கிராமங்களிலும் இருக்கின்றன. ஆனால் தர்கா என்ற வகையில் அமைந்த இஸ்லாமிய சமூகத்தினர் தொழுகைச் செய்யும் ஒரு வழிபாட்டு மையம் மலேசியாவில் நான் அறிந்து இது வரை கேள்விப்பட்டதில்லை. ஆனால் அவ்வப்போது தமிழகத்தைப் பற்றிய வழிபாட்டு விசயங்களை வாசிக்க நேரிடும் போது தர்கா எனும் சொல் இஸ்லாமியர்களின் வழிபாட்டு அம்சங்களோடு இணைந்த வகையில் வருவதைப் பற்றி நான் கேள்விப்படுவதுண்டு. இந்தத் தர்கா என்பது என்ன என நான் தேடத்தொடங்கிய போது சுவாரசியமான பல தகவல்கள் எனக்குக் கிடைத்தன.

தமிழகத்தின் பல ஊர்களில் தர்காக்கள் இருக்கின்றன. இம்முறை மதுரைக்குச் சென்றிருந்த போது அங்கு மதுரை மைய நகருக்கு அருகாமையில் உள்ள ஊர்களில் இரண்டு தர்காக்களுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதில் ஒன்றுதான் மதுரையில் திருப்பரங்குன்றம் பகுதியின் பின் புறத்தில் அமைந்திருக்கும் தென்பரங்குன்றம் தர்கா.

மதுரை மாவட்டத்தின் திருப்பரங்குன்றம் என்ற ஊரில் உள்ள குன்றின் மேல் இஸ்லாமிய மக்கள் வந்து வழிபட்டுச் செல்லும் ஒரு தர்கா ஒன்று இருக்கின்றது. அதாவது தென்பரங்குன்றம் உமையாண்டவர் கோயிலுக்கு ஏறக்குறைய 1 கி.மீ. தூரத்தில் மலையின் மேல் அமைந்திருக்கும் முருகன் கோயிலுக்குp பக்கத்தில் அந்தக் குன்றின் அருகாமையில், ஆனால் சற்றே உயரமான குன்றுப் பகுதியில் இந்தத் தர்கா அமைந்திருக்கின்றது.

தென்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குச் செல்வதற்கு அங்கு அமைக்கப்பட்டுள்ள படிகளில் ஏறிச் செல்லவேண்டும். ஏறக்குறைய முந்நூற்று ஐம்பது படிகளாவது இருக்கலாம். இப்படி படிகளில் ஏறிச் செல்லும் போது மேற்பக்கத்தில் மலைப்பகுதியில் வலது பக்கத்தில் மற்றுமொரு பாதை விரிவதைக் காணலாம். அந்த விரிந்து செல்லும் பாதையில் தொடர்ந்து சென்றால் அங்கே சமமான ஒரு தரைப்பகுதி இருப்பதையும், அதன் அருகிலேயே ஒரு சுனை ஒன்று நீருடன் காட்சி அளிப்பதையும் காணலாம். அங்கிருந்து வடக்கு நோக்கிப் பார்த்தால் இரண்டு சமாதிகள் எழுப்பப்பட்டிருப்பதைக் காணலாம்.

இந்தச் சமாதி இருக்கும் இடத்திலிருந்து மேலே செல்வதற்கென்று கற்படிகளோ அல்லது வாகனம் செல்லும் சாலையோ இல்லை. ஆனால் மரங்கள் நிறைந்த அப்பகுதியில் மேலே மனிதர்கள் செல்லும் ஒற்றையடிப்பாதை ஒன்று இருப்பதைக் காண முடியும். அந்த ஒற்றையடிப்பாதையில் ஏறி படிப்படியாக ஏறக்குறைய பதினைந்து நிமிடங்கள் நடந்தால் மேலே இருக்கின்ற தர்காவைக் காணமுடியும்.

நான் சென்றது மதிய நேரம். வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. வெயிலின் வெப்பத்திலிருந்து தப்பிக்க மரங்களுக்கிடையே நடப்பது இதமாக இருந்தது. மேலே நான் வந்து சேர்ந்த போது மணி ஏறக்குறைய முற்பகல் பன்னிரெண்டு இருக்கும். நான் உள்ளே நுழையும் போது குடும்பங்களாக ஆணும் பெண்ணுமாக இஸ்லாமிய மக்கள் வழிபாடு முடித்து வந்து கொண்டும் தர்காவிற்குள் சென்று கொண்டும் இருந்தனர். வாசலில் சில வயதான பெரியோர் அமர்ந்திருந்தனர். அதில் ஒருவர் தன் பக்கத்தில் மயிலிறகு கட்டு ஒன்றினையும் வைத்திருந்தார். தர்காவிற்கு வருபவர்களுக்கு மந்திரித்து அவர்களுக்குப் புனித நீரைக் கொடுப்பது மற்றும் மயிலிறகுக் கட்டினால் அவர்களின் தலையின் மேல் வைத்து எடுத்து  ஓதிப் பிரார்த்திப்பது என்பது போன்ற சடங்குகளைச் செய்பவர் இவர். நான் உள்ளே வந்து என்னை அறிமுகம் செய்து கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி சிறிது சொல்லி இந்தத் தர்காவைப்பற்றிய விபரங்களைக் கேட்டறிந்தேன். அங்கிருந்தோர் என்னைத் தர்காவின் எல்லாப் பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று ஒவ்வொரு முக்கிய இடத்திலும் அதன் சிறப்பினை விளக்கி எனக்குத் தகவல் அளித்தனர். இதனை வீடியோ பதிவாக்கியிருக்கின்றேன். விரைவில் அது தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுப் பதிவாக வெளிவரும்.

இந்தத் தர்காவைப்பற்றிய சில தகவல்கள் அங்கே எனக்குக் கிடைத்தன. சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் வலியுல்லாஹ் தர்கா என்பது இதன் பெயர். இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்புவதற்காக ஏறக்குறை எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் அரேபிய நாட்டிலிருந்து இப்பகுதிக்கு வந்து பின் இங்கே வாழ்ந்து மறைந்தவர் பெயரில் தான் இந்தத் தர்கா வழங்கப்படுகின்றது. அப்போது மதுரையைப் பாண்டிய மன்னர்கள் ஆண்டுகொண்டிருந்த காலம். மன்னருக்கும் ஏனையோருக்கும் நோய் ஏற்படும் போதும், உடல் உபாதைகள் ஏற்படும் போதும் மருத்துவ உதவிகளை குரான் ஓதுதல், மூலிகை மருத்துவம் என்ற வகையில் செய்து பிணி தீர்க்க இங்கு வாழ்ந்த இஸ்லாமிய குருமார்கள் உதவியிருக்கின்றனர். இதன் அடிப்படையில் இந்த குருமார்களுக்குப் பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் அருகாமையில் இருந்த கிராமங்களில் வாழ்வதற்கான இடங்கள் வழங்கப்பட்டன. சுல்தான், மற்றும் அவருடன் வந்த மந்திரிகள், மத குருமார்கள், மந்திரியாக இருந்து வைத்திய சாத்திரம் படித்த இஸ்லாமிய மருத்துவர் ஆகியோர் சமாதிகள் இந்தப் பகுதியில் இருக்கின்றன. இங்குள்ள ஐதீகத்தின் படி, இந்தச் சுல்தான் தன் வயோதிக வயதில் இந்தக் குன்று இருக்கும் பகுதியில் மறைந்தார் என நம்புகின்றனர்.

சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் வலியுல்லாஹ் அவர்களின் சமாதி இந்தத் தர்காவின் உட்புறத்தில் அமைந்துள்ளது. இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையில் பின்புறமாக இந்தச் சமாதி எழுப்பப்பட்டுள்ளது. குடைவரை கோயில் போன்ற அமைப்பு உள்ளே இருக்கின்றது. அந்தச் சமாதியின் மேல் பக்கம் பச்சை நிறத்திலான துணி போர்த்தப்பட்டுள்ளது. இந்தச் சமாதிக்கு முன் புறத்தில் மேலும் ஒரு சமாதி ஒன்றும் உள்ளது. இது சுல்தானுடன் வந்த மந்திரியின் சமாதி. இந்தச் சமாதிக்கு முன்னர் மிக வித்தியாசமான தோற்றத்தில் அமைந்த வெண்கல குத்து விளக்குகளை வரிசையாக வைத்திருக்கின்றனர். இந்தச் சமாதி பிரத்தியேகமாக ஒரு இரும்புக் கம்பி போட்டு பாதுகாக்கப் படுகின்றது. சுல்தான் மட்டுமல்லாது இந்த மந்திரியும் மருத்துவத்தில் திறமை பெற்றவராக இருந்திருக்கின்றார். அவர்கள் வந்து சேர்ந்த இப்பகுதியில், காடுகளில் கிடைத்த மூலிகைகளைக் கொண்டு நோய்வாய்ப்பட்டு வாடும் மக்களுக்கு உதவும் சேவையை இவர்கள் செய்திருக்கின்றனர். இந்த மந்திரியின் பெயர் லுக்மான் ஹகீம் என்பது. அரபு மொழியில் ஹகீம் என்பதன் பொருள் மருத்துவர் என்று எனக்கு இங்குத் தகவல் அளித்த பெரியவர் ஒருவர் விளக்கம் கூறினார்.

இவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தைத் தமிழகத்தில் பரப்புவதற்காக வந்தாலும் பின்னர் மருத்துவத்துறையிலேயே தங்கள் செயல்பாடுகளை விரிவாக்கிக் கொண்டு இந்தத் தென்பரங்குன்றம் மலைப்பகுதியிலேயே வாழ்ந்து மறைந்திருக்கின்றனர். பின்னர் இவர்களது மறைவுக்குப் பின்னர் இவர்களது அடியார்கள் சமாதிகள் அமைந்து சுல்தான் நினைவாக இந்தத் தர்காவை எழுப்பியிருக்கின்றனர். ஏறக்குறைய எண்ணூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இந்தத் தர்கா கருதப்படுகின்றது.

நான் இந்தத் தர்காவினுள் இருந்த சமயத்தில் எனக்கு மந்திரித்து, மயிலிறகால் என்னை ஆசீர்வதித்து புனித நீரை ஒரு பெரியவர் வணங்கினார். அவர் மந்திரிக்கும் போது அரபுமொழியில் மிக மெதுவாக சில வாசகங்களை ஓதுவதைக் கேட்க முடிந்தது. நான் உள்ளே இருக்கும் சமயத்தில் ஒரு பெண்மணியும் அங்கே சுல்தானின் சமாதிக்கு முன் அமர்ந்து அருள் வந்த பெண்மணி போல ஒலி எழுப்பிக் கொண்டிருந்தார். இதனைப் பற்றி நான் அங்கிருந்த இஸ்லாமியப் பெரியவரிடம் வினவிய போது இப்படி அடிக்கடி பலர் வருவது வழக்கம் என்றும் தமது உடல் பிரச்சனைகள் மற்றும் உளப்பிரச்சனைகளுக்குத் தீர்வாக இத்தகைய சடங்குகளை அவர்கள் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தத் தர்காவில் பதிவினை முடித்து விட்டு அங்கேயே சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டு வந்த வழியிலேயே திரும்பினேன்.

தென்பரங்குன்றம் பகுதி இன்றும் கூட வளமான ஒரு வனப்பகுதியாக இருக்கின்றது. பெரும்பாலும் திருப்பரங்குன்றம் மலையைப் பற்றியும் அங்குள்ள முருகன் கோயிலைப் பற்றியும் அறிந்திருக்கும் நம்மில் பலருக்குத் தென்பரங்குன்றம் மலையைப் பற்றி அறிமுகம் இருந்திருக்காது.

நான் கடந்த ஆண்டு (2016) டிசம்பர் குடைவரைக்கோயில்களைப் பற்றிய பதிவினைச் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு இங்குச் சென்றிருந்தேன். உமையாண்டவர் கோயில் பற்றி நான் முன்னரே அறிந்திருந்தமையால் அக்கோயிலைப் பற்றிய ஒரு பதிவினைச் செய்து விட்டு கீழே இறங்கி வரும் போது அங்கே காட்டின் உள்ளே மூலைக்கு மூலை நாகர் வழிபாடு, வராகி அம்மன், முனியாண்டி சாமி, கன்னிமார் கோயில், பஞ்ச லிங்க ஆலயம் மற்றும் பெயர் அறியா சில தெய்வ வடிவங்கள் அங்கே மரங்களுக்குக் கீழே வைக்கப்பட்டு அவை மக்கள் வழிபடும் குலதெய்வ வழிபாடுகளாக இருப்பதைக் கண்ணுற்றேன். இதனை அடுத்து, மலையின் மேல் உள்ள முருகன் கோயிலில் பதிவை முடித்து வரும் வழியில் ஏதேச்சையாக இந்தத் தர்காவை தூரத்திலிருந்து பார்த்த போது இங்கேயும் சென்று பார்த்துவருவோம் என அங்கு சென்று பார்த்ததனால் இப்படி ஒரு அருமையான வரலாறு ஒன்று இங்கே இருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

முருகனை வழிபடும் தமிழ் மக்கள் வந்து செல்லும் அதே படிகளில் மேலே ஏறி மற்றொரு பாதையை எடுத்துச் சென்ற போது அங்கே நுணுக்கமான இஸ்லாமிய விழுமியங்களைக் கொண்ட ஒரு தர்கா இருப்பதைக் கண்டு பதிவு செய்யவும் முடிந்தது.

இந்தத் தர்காவில் சமாதி அடைந்திருக்கும் சுல்தானின் வரலாற்றை அங்கு நான் சந்தித்த இஸ்லாமியப் பெரியவர் சொல்லி நான் கேட்டறிந்த போது அந்த அரேபிய சுல்தானின் நீண்ட தூர பயணமும், பின்னர் தமிழகத்தில் வந்து அவர் தன் குழுவினருடன் வாழ்ந்த விசயங்களும் எனக்கு வியப்பினை ஏற்படுத்தின. நிச்சயமாகத் தமிழ் மொழியைப் பேசக் கற்றுக் கொண்டு தான் உள்ளூர் மக்களுடன் சுல்தானும் அவரது குழுவினரும் பேசியிருப்பார்கள், இங்கே வாழ்ந்திருப்பார்கள். எண்ணூறு வருடத்திற்கு முந்தைய இந்தச் செய்திகளை எண்ணிப்பார்க்கும் போதே வியப்பு மேலிடுகின்றது.

இப்படி எத்தனை எத்தனையோ .. அறியப்படாத வரலாறுகள்.. மக்களால் அறியப்பட வேண்டிய நிலையில் இருப்பதை எனது ஒவ்வொரு தேடலிலும் உணர்கின்றேன். 

2 comments:

  1. 'தர்காக்கள் என்பது வழிபாட்டுத் தலங்கள் அல்ல. முஸ்லிம்கள் யாரையும் இறைவமோடு இணை வைக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை மக்களுக்காக வாழ்ந்து மறைந்த சங்கைக்குரிய இந்த மகான்களின் தர்காவை தர்சிப்பதை “ஸியாரத்” செய்வதாகச் சொல்வார்கள். அதற்கு அனுமதி உண்டு நான் சபரி மலைக்குச் சென்றிருக்கிறேன். அங்கும் வாவர் என்கிற ஒரு முஸ்லிம் மகானின் ‘தர்கா’ ஐயப்ப பக்தர்கள் ‘வாவர் சாமியை வணங்கிய பிறகே இதர கிரியைகளில் ஈடு படுகிறார்கள். சபரி மலை அடிவார கிராமமா எரிமேலியிலும் ஒரு ‘தர்கா
    இருக்கிறது. இங்கு பிரசாதமாக விபூதி வழங்கப்
    படுகிறது. தென்பரம் குன்றம் பத்திய இந்தக் கட்டுரை பல அருமையான தகவல்களை கொண்டுள்ளது. சமய நல்லிணக்கத்தின் அடையாளமான இந்த தர்காவை அகற்ற வேண்டும் என்று இந்து முன்னணியினர் அடம் பிடிப்பது தான் வேதனைக்குரியது. கஸ்டப்பட்டு கட்டுரை எழுதிய நண்பருக்கு வாழ்த்துகள் 1

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி.
      உண்மையில் சமய நல்லிணக்கத்திற்கான அடையாளமாகத்தான் இருக்கின்றது. அருமையான இடம் இது.

      Delete