மலேசியாவிற்கு வந்து சில வாரங்கள் அங்கிருந்து இப்போது மீண்டும் ஜெர்மனி திரும்பி விட்டேன். 2016ம் ஆண்டு தமிழகத்திற்கு களப்பணிக்காகச் செல்வதற்கு முன்னர் ஆறு நாட்கள் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் வந்து அங்கு சில நாட்கள் தங்கி தமிழ் மரபு அறக்கட்டளையின் மலேசியக் கிளைக்கான சில பணிகளைச் செய்து விட்டு பின்னர் தமிழகம் புறப்படுவதாக நான் திட்டமிருந்தபடியால், டிசம்பர் 1ம் தேதி ஸ்டுட்கார்ட்டிலிருந்து புறப்பட்டு டிசம்பர் 2ம் தேதி காலையில் கோலாலம்பூர் வந்தடைந்தேன். நண்பர்கள் சந்திப்புடன் மலேசிய உணவுகளைச் சுவைப்பதே அலாதியான மகிழ்ச்சிதானே. அந்த வகையில் முதல் சில நாட்கள் மிக இனிமையானதாக எனக்குக் கழிந்தன.
நான் கோலாலம்பூரில் இருந்த அந்தக் குறுகியகால இடைவெளியில் நான் துணைப்பொதுச்செயலாளராக அங்கம் வகிக்கும் உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தில் ஒரு சந்திப்பு நிகழ்வினைச் செய்வது நன்மை பயக்கும் என்ற எண்ணத்தில் ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தோம். கடந்த ஆண்டு புதிய நிர்வாகம் பதவி ஏற்றுக் கொண்ட பின்னர் செய்யப்படும் ஒரு சொற்பொழிவு நிகழ்வாக இதனை அமைக்கலாம் என இயக்கத்தின் தலைவர் திரு.ப.கு.சண்முகம் அவர்களும் அவரைச் சார்ந்த மலேசியக் கிளையின் குழுவினரும் ஈடுபாட்டுடன் செயல்பட்டனர். அதன் பலனாக, குறுகிய கால இடைவெளியில் டிசம்பர் ஆறாம் தேதி கிள்ளான் நகரில் ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சியை ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் எனது உரை மைய நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. நிகழ்ச்சியின் வரவேற்புரைக்குப் பின்னர் நிகழ்ச்சியைத் தலைமை ஏற்றுச் சிற்றுரை ஆற்றினார் செந்தமிழ்ச்செல்வர் திரு.ஓம்ஸ் தியாகராஜன் அவர்கள்.
2016ம் ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளையின் சாதனைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்தது டென்மார்க் நகரின் தலைநகரான கோப்பன்ஹாகனில் உள்ள அரச நூலகத்தில் இருக்கும் தமிழ் ஓலைச்சுவடிகளின் மின்னாக்கப்பணி. 2016 மே மாதத்தில் ஐந்து நாட்கள் பயணமாக நான் சென்றிருந்த வேளையில், இந்த அரச நூலகத்தில் உள்ள முப்பத்தெட்டு ஓலைச்சுவடி நூல்களை, அதாவது, ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு ஓலைகளை மின்னாக்கம் செய்திருந்தேன். இவை தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் ஓலைச்சுவடிகளில் அடங்குவன. காரணம், இந்த ஓலைச்சுவடிகள், 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழகத்தின் தரங்கம்பாடிக்கு லூத்தரன் கிறித்துவ மத போதகர்களாகச் சென்ற ஜெர்மானிய பாதிரிமார்கள் அங்கேயே தமிழ் மொழியைக் கற்று ஓலைச்சுவடியில் எழுதவும் கற்றுக் கொண்டு தங்கள் கைப்பட எழுதிய ஓலைச்சுவடி நூல்களும் குறிப்புக்களுமாகும்.
இந்த விபரங்களை விளக்கும் வகையில் இந்த ஓலைச்சுவடிகள் பற்றியும், அவை எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பது பற்றியும், பின்னர் இவை எவ்வாறு இந்த அரச நூலகத்தில் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன போன்ற செய்திகளையும் இந்த நிகழ்வில் வந்து கலந்து கொண்ட பார்வையாளர்களிடம் குறிப்பிட்டுப் பேசினேன். கோப்பான்ஹாகன் அரச நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகள் அனைத்தும் டென்மார்க் அரசிடம் ஜெர்மானிய மதபோதகர்களாக தமிழகத்தின் தரங்கம்பாடிக்குப் பணியாற்ற வந்த ஜெர்மானிய பாதிரிமார்கள், மற்றும் அவர்களது உதவியாளர்களாகப் பணியாற்றிய சிலர் கைப்பட எழுதியவையாகும். அவற்றுடன் தங்கள் பணிக்காலத்தில் இவர்கள் உள்ளூர் மக்களிடம் சேகரித்த சில சுவடி நூல்களும் இந்தச் சேகரிப்பில் அடங்கும். இந்தச் சுவடி நூல்கள் அனைத்துமே மிகக்கவனமாகத் தூய்மை செய்யப்பட்டு நூல் கட்டப்பட்டு வெள்ளைத்துணியினால் சுற்றப்பட்டு ஒரு காகிதப்பெட்டிக்குள் தனித்தனியாக வைக்கப்பட்டுச் சரியாக பெயர் ஒட்டப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் காணும் போது அவை அங்கே அந்த நூலகத்தில் பாதுகாக்கப்படும் முறைக்காக அவர்களைப் பாராட்டியது பற்றியும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களிடம் பகிந்து கொண்டேன்.
ஏறக்குறைய நூற்று இருபது பேர் இந்த நிகழ்வில் வந்து கலந்து சிறப்பித்தமை கிள்ளான் வாழ் மக்களில் பலருக்கு தமிழ் ஆய்வு தொடர்பான நிகழ்வுகளில் ஆர்வம் இருப்பதைக் காட்டுவதாக அமைந்தது. எனது உரைக்குப் பின்னர் பல கேள்விகள் எழுந்தன. அவற்றிற்குப் பதில் சொல்லும் வகையில் எனது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டேன். நல்ல பல செய்திகளை வந்திருந்தோரிடம் பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சியும் மன நிறைவும் எனக்கு ஏற்பட்டிருந்தது. இதனை என்னுடன் இணைந்து செயல்படுத்திய உலகத் தமிழ்ப்பண்பாட்டுக் கழகத்தின் மலேசியக் கிளையின் பொறுப்பாளர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து பாராட்டுவது அவசியமே!
உலகத் தமிழ்ப்பண்பாட்டுக் கழகம் ஏறக்குறைய நாற்பத்து இரண்டு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு இயக்கம். தமிழர் பண்பாட்டுக் கூறுகளை மையப்படுத்தும் வகையில் சீரிய நற்பணிகளைச் செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உலகு தழுவிய ஒரு மாபெரும் இயக்கம் இது. இடைப்பட்ட காலத்தில் நிர்வாகக் கோளாறுகள் சிலவற்றினால் நடவடிக்கைகள் ஏதும் செய்யப்படாமல் இருந்த சூழலில், கடந்த 2015ம் ஆண்டு புதிய செயலைவைக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டு, மலேசியாவைச் சேர்ந்த திரு.ப.கு சண்முகம் அவர்களைத் தலைவராகக் கொண்டும் டென்மார்க்கைச் சேர்ந்த திரு.தருமகுலசிங்கம் அவர்களைச் செயலாளராகக் கொண்டும் இந்த இயக்கம் இப்போது மீண்டும் புத்துணர்ச்சியுடன் செயல்படத் தொடங்கியுள்ளது.
உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கமானது உலகின் பல நாடுகளில் கிளைகளை அமைத்து தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சார விழுமியங்களை விரிவாக்கும் முயற்சிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு செயலாற்றி வருகின்றது. தமிழ் மக்கள் வாழ்கின்ற ஒவ்வொரு நாடுகளிலும் அம்மக்களின் நிலைக்கேற்ற வகையில் இம்முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மலேசிய சூழலில் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் தொடர்ச்சியாக குறிப்பிடத்தக்கச் சமுதாய நலனைக் குறிக்கோளாகக் கொண்ட பல நிகழ்ச்சிகளைக் கடந்த ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ளது. சர்வதேச கருத்தரங்கங்கள், பொங்கல் திருவிழா நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தமிழ் மொழியின் சிறப்பினை வலியுறுத்தும் சந்திப்புக்கள், மலேசிய மண்ணில் தமிழ்ப்பணியாற்றிய தமிழ்ச் சான்றோர்களுக்கு சிறப்புச் செய்தல் என்ற வகையில் பல நடவடிக்கைகள் இந்த இயக்கத்தால் கடந்த ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்டமை நினைவு கூர்தல் அவசியம்.
மலேசியா மலாய், சீன, இந்தியர்கள் என்ற மூன்று பெரிய இனங்கள் கூடி வாழும் ஒரு நாடு. இங்கு மலாய் மற்றும் சீன இனித்தவர்களோடு சகோதரத்துவத்துடன் பழகும் தமிழ் மக்கள் அதே வேளையில் தமது தமிழ் இனத்தின் பண்பாட்டு கலை கலாச்சார விழுமியங்களை மறக்காதும் ஒதுக்காதும் தக்க வைத்துப் போற்றி வளர்த்து வருகின்றனர். இந்த முயற்சியில் மலேசியத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் முயற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை, ஒதுக்கப்பட முடியாதவை.
தமிழ் மொழி கல்வியை, மலேசியாவில் பிறக்கின்ற எல்லாக் குழந்தைகளும் பெறுகின்ற வாய்ப்பு என்பது அமைந்திருக்கின்றதா என்றால் அது கேள்விக்குறிதான். ஓரளவு கல்வி கற்று நிலையான தொழிலுக்கு வந்து விட்ட பெரும்பாலோர் தமிழ்ப்பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்புவதில்லை. தமிழ்ப்பள்ளிக்குத் தங்கள் குழந்தைகள் கல்வி கற்கச் செல்வதைச் சமூக அந்தஸ்து பாதிக்கும் ஒரு விசயமாகக் கருதி தேசிய ஆரம்பப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கும் பெற்றோர்கள் பெருகிக் கொண்டு வருகின்றனர். இன்னொரு பக்கம், சமூகத்தில் தமிழ் இளைஞர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் நம் கண் முன்னே நிற்கின்றன. இளம் வயதிலேயே தகாத போதைப்பழக்கம், குண்டர் கும்பலில் தம்மை இணைத்துக் கொள்வது என்பது போன்ற தகாத நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளும் இளம் தலைமுறையினரின் நிலை பரிதாபகரமானது. இது ஒரு புறமிருக்க படிப்படியாக வளர்ந்து வரும் நாகரிக மோகத்தில் தமிழர் பண்பாட்டு இசை, நடனம், கூத்து ஆகியக் கலைகள் மைய நீரோட்டத்திலிருந்து சிறிது சிறிதாக வெளியேற்றப்பட்டு உயர் கலைகள் என வர்ணிக்கப்படும் கர்நாடக சங்கீதமும், பரதமும், காப்பிய நாடகங்கள் மட்டுமே தமிழர் பண்பாட்டு நிகழ்வுகளில் மைய இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. தமிழர் பாரம்பரிய நடனக்கலைகளான ஒயிலாட்டம், பறையிசை, கும்மி, கோலாட்டம், கரகாட்டம், கூத்து ஆகியன பெரும்பாலும் ஓரங்கட்டப்பட்டுவிட்ட நிலையைப் பெருவாரியாக மலேசியச் சூழலில் காண்கின்றோம்.
ஆக, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மலேசியக் கிளை, மலேசிய சூழலில் தமிழ் மொழி, தமிழர் கலை பண்பாட்டு அம்சங்கள் ஆகியவை புத்துணர்ச்சி பெற்றுப் பொலிவுடன் மீண்டும் மக்கள் மத்தியில் வலம் வரத் தீவிர முயற்சிகள் செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. இப்போது அமைந்திருக்கின்ற உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் புதிய செலவைக் குழுவினர் ஒவ்வொருவருமே நீண்ட கால அனுபவமும் தமிழ் மக்களுக்குத் தொண்டாற்ற தீவிர ஆர்வமும் முனைப்பும் கொண்டவர்கள் என்பதோடு இந்த அமைப்பை முன்னெடுத்துச் செல்லக் கூடிய தகுந்த தகுதி கொண்டவர்களாக இருப்பது கூடுதல் பலமாக அமைகின்றது. மலேசிய சூழலில் தமிழ் மற்றும் கலாச்சாரப்பணி என்பதோடு உலகளாவிய அளவில் ஏனைய நாடுகளில் அமைந்திருக்கும் அமைப்புக்கள் வளர்வதற்கு உதவிக்கரம் நீட்டி மேலும் உலகளாவிய அளவில் உலகத் தமிழ்ப்பண்பாடு இயக்கத்தினை வளர்த்திட மலேசியக் கிளையினால் நிச்சயம் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
தமிழால் ஒன்றிணைவோம்!
No comments:
Post a Comment