மலேசிய பூர்வகுடி மக்களைப் போல தமிழகத்தின் மலைப்பிரதேசங்களில் இன்னமும் பூர்வகுடியினர் வாழ்கின்றனர். அவ்வகை பூர்வகுடியினரான காணி மக்களை சில வாரங்களுக்கு முன்னர் சந்தித்து அவர்களுடன் ஒரு சில மணி நேரங்களைச் செலவிட்டு, அவர்களுக்கே உரித்தான பண்பாடு, வாழ்வியல் அம்சங்கள், மொழி, தற்கால சூழல் ஆகியனபற்றி கலந்துரையாடும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.
எனது அண்மைய தமிழக பயணத்தில் ஒரு நாள் நெல்லை மாவட்டத்தில் இருக்கின்ற பாபநாசம் நகருக்குச் சென்றிருந்தேன். இந்த பாபநாசம் அமைந்திருப்பது அடர்ந்த மலைப்பகுதிக்கு மிக அருகாமையில் தான். நெல்லை மாவட்டம், காரையர் அகத்தியர் காணி பழங்குடியின மக்களின் குடியிருப்பு பற்றி நான் சில தகவல்களை நெல்லை மாவட்ட ஆட்சியர் முனைவர். கருணாகரன் வழி அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டிய போது இப்பகுதிக்கு நேரில் சென்று இவர்களைப் பற்றிய பதிவு ஒன்றினை தமிழ் மரபு அறக்கட்டளைக்கான வரலாற்றுப் பதிவாகச் செய்ய வேண்டும் என்ற சிந்தனை எழுந்தது. இதனை ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்த போது தாமும் இப்பதிவின் போது இணைந்து கொள்வதாகக் கூறி இப்பயணத்திற்கான ஏற்பாடுகளில் மிக உதவினார்.
காணி மக்கள் அடிப்படையில் கேரளாவின் மலைப்பகுதியிலிருந்து பெயர்ந்து இப்பகுதிக்கு வந்தவர்கள். இவர்களுக்கென்று பிரத்தியேகமான ஒரு மொழி இருக்கின்றது. அதன் பெயர் காணி மொழி, இந்தக் காணி மொழிக்கு எழுத்துரு இல்லை, பேச்சு வழக்கு மட்டும்தான். காணி மக்களில் வயதில் மூத்தோர் இந்த மொழியை அறிந்தோராக இருக்கின்றனர். இம்மொழியில் பாடல்களும் இறைவழிபாடுகளும் இன்றும் வழக்கில் இருந்தாலும் கூட இளைஞர்களோ சிறார்களோ இந்த மொழியை அறியாதவர்களாகவே உள்ளனர். ஆக வழக்கொழிந்து வரும் மொழிகளில் ஒன்றாக இந்த மொழி உள்ளது. இவர்களில் பலர் தமிழும் மலையாளமும் கலந்த வகையில் அமைந்த ஒரு மொழியையும் பேசுகின்றனர். ஆனால், பள்ளிகளில் சிறார்கள் தமிழ் மொழி கற்பதால் அவர்கள் தமிழ் பேசுவதை நடைமுறையில் கொண்டிருக்கின்றனர்.
காணி குடியிருப்பில் நான் உலாவிக்கொண்டிருந்த போது அங்கு 107 வயதுடைய பெண்மனி ஒருவர் இருப்பதாகவும் அவருக்குக் காணி மொழி பேசத்தெரியும் என்பதோடு பாடவும் தெரியும் என்றும் அம்மக்கள் எனக்கு தகவல் வழங்கினர். அந்த மூதாட்டியைச் சென்று சந்தித்தோம். அவரிடம் பேசச்சொல்லி கேட்டு பாடல்கள் பாடத்தெரியுமா என்று கேட்ட போது காணி மொழியில் திருமண நலுங்குப் பாடல்களும் தமிழ் மொழியில் கிருத்துவ மறை பாடல்களயும் பாடிக்காட்டினார். அவரிடம் நேரில் சென்று நாங்கள் சந்தித்ததில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. மறைந்த அவரது கணவர் அந்தக் கிராமத்தின் தலைவராக இருந்தவராம். அவர்கள் காலத்திலேயே கிறித்துவ மதத்திற்கு மாறிக்கொண்டதால் கிறித்துவ இறைப்பாடல்களையும் கற்றிருக்கின்றார் இம்மூதாட்டி. அவர் கணவர் பற்றி குறிப்பிடும் போது அவர் நிரம்பப்படித்தவர் என்றும் தானும் ஒரு சில ஆண்டுகள் பள்ளியில் படித்ததாகவும் அதனால் தமக்கு தமிழ் எழுதவும் வாசிக்கவும் தெரியும் என்றும் மகிழ்ச்சியுடன் புன்னகைத்தவாறே எங்களிடம் தெரிவித்தார்.
காணி மக்களின் இறை வழிபாட்டு அம்சங்களை அறிந்து கொள்வதும் மலைவாழ் மக்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளின் தன்மைகளைப் புரிந்து கொள்ள உதவும் என்பதால் அம்மக்களை அவர்களது வழிபாட்டு முறைகள், கடவுள் பெயர்கள், உருவம் என சில தகவல்களைக் கேட்டு பதிந்து கொண்டேன்.
காணி மக்கள் தாய் தெய்வ வழிபாட்டை கடைபிடிப்பவர்கள். இவர்கள் வழிபடும் தெய்வம் காணி அம்மன் என்றே அழைக்கப்படுகின்றார். காணி அம்மன் இருக்கும் கோயிலுக்குச் சென்று கோயிலையும் இவர்கள் வணங்கும் தெய்வத்தையும் பார்த்த போது சற்றே ஆச்சரியம் மேலோங்கியது. ஏனெனில் தமிழகத்தின் பல பழமையான வழிபாட்டு மையங்களில் இருப்பதைப் போல ஒரு கல்லை வைத்து அதனை மஞ்சள், குங்குமம் வைத்து அலங்கரித்து அதன் அருகில் ஒரு தட்டில் எலுமிச்சை பழங்களும் சூடம் போன்றபொருட்களையும் வைத்து வழிபடுகின்றனர். எனது தமிழகப்பயணத்தில் பற்பல இடங்களில் கற்களை பெண் தெய்வங்களாக, அம்மனாக வைத்து வழிபடும் வழக்கம் இருப்பதைப் பார்த்து புகைப்படம் எடுத்திருக்கின்றேன். சப்த கன்னிகள் வழிபாட்டில் பெண் தெய்வங்களின் உருவங்கள் அமைந்திருப்பதைச் சிலர் பார்த்திருக்கலாம். பல இடங்களில் இந்த சப்த கன்னியர்கள் வெவ்வேறு அளவிலான கற்களை வரிசையாக வைத்து அவற்றை ஏழு கன்னியர்களாக உருவகித்து வழிபடும் வழக்கம் இருக்கின்றது.
தாய் தெய்வ வழிபாடு என்பது மிகப் பழமையானது. மனித நாகரிகத்தின் தோற்றத்தை ஆராய முற்படுகையில் மக்களின் கடவுள் நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைகின்ற இடங்களில் எல்லாம் பண்டைய தெய்வங்களாக நமக்கு அகழ்வாய்வுகளில் கிடைப்பவையாக அமைப்பவை தாய் தெய்வங்கள் தாம். மனிதகுலம் இயற்கையை கடவுளாக நினைத்து தங்களைப் பாதுகாக்கும் கடவுளாக ஒரு உருவத்தை உருவாக்க முனைந்தபோது அவர்கள் சிந்தனையில், குழந்தையைப் பெறுகின்ற உருவத்துடன் அல்லது கற்பம் தரித்த வடிவில் அமைந்த பெண் உருவம் அல்லது கையில் குழந்தையை ஏந்திக்கொண்டிருக்கும் ஒரு தாயின் உருவம் என்பன முக்கியமானவையாக அமைந்தன. இதனை உலகின் பல நாடுகளில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வுகளின் கண்டுபிடிப்புகள் உறுதி செய்கின்றன. இதற்கு ஒரு உதாரணமாக தற்சமயம் ஆஸ்திரிய நாட்டின் தலைநகரமான வியன் நகரில் இருக்கும் 40,000 ஆண்டு பழமையானது எனக்குறிப்பிடப்படும் தாய்தெய்வத்தின் சிலையைக் குறிப்பிடலாம். இத்தகைய அடிப்படையில் தான் பாபநாசம் காரையார் குடியிருப்பில் வாழும் காணி மக்களின் வழிபாட்டுக் கடவுளாக ஒரு பெண் தெய்வமும் அமைந்திருக்கின்றது என்பது சிறப்புடன் குறிப்பிடத்தக்கதாக அமைகின்றது.
காணி குடியிருப்பு அமைந்திருக்கும் சூழல் காட்டின் மையப்பகுதி. நாங்கள் அங்கு சென்றிருந்த போது வனத்துறையின் பாதுகாப்பு அதிகாரிகளும் எங்களுடன் துணையாக வந்திருந்தனர். காட்டிற்குள் வெவ்வேறு இடங்களில் மக்கள் குடியிருப்பு என்பது அமைந்திருக்கின்றது. மக்கள் இன்னமும் ஓலையால் நெய்யப்பட்ட கூரைகளும் மண்ணைக் குழைத்து உருவாக்கிய சுவர்களைக் கொண்ட வீடுகளிலும் வாழ்கின்றனர். ஒரு சிலர் மோட்டார் சைக்கிள் வைத்திருக்கின்றனர். போக்கு வரத்துக்கு மோட்டார் சைக்கிள் அவர்களுக்கு மிக உதவுவதாக இருக்கின்றது. காட்டிற்குள்ளே கடைகள் ஏதும் இல்லை. மலையிலிருந்து கீழ் பகுதிக்கு வந்துதான் அவர்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டிய சூழல் இருக்கின்றது. மருத்துவ தேவைகள் எனும் போது பெரும்பாலும் அவர்கள் மூலிகை வைத்தியங்களை வழக்கில் கடைபிடிப்பவர்களாக இருக்கின்றனர். நான் அங்கிருந்த வேளையில் என்னை ஒரு மூலிகை மருத்துவரின் குடிலுக்கு அழைத்துச் சென்று அவர் மருந்து இடிக்க பயன்படுத்தும் உரலைக் காட்டில் சில மூலிகை இலைகளையும் மூலிகை மரங்களையும் அவற்றை எவ்வகையான வியாதிகளுக்கும் உடல் சுகவீனத்திற்கும் பயன்படுத்துகின்றனர் என விளக்கிக் கூறினர்.
இந்தக் காணி மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதி தூய்மையாக இருக்கின்றது. குப்பைகள் இல்லை. மரங்களுக்கிடையே குடில்கள் அடுத்தடுத்தார்போல அமைந்திருக்கின்றன. இவர்கள் இல்லங்களில் கழிப்பறைகள் இல்லை. இதனை கருத்தில் கொண்டு இவர்கள் வீடுகளுக்கு தனித்தனி கழிப்பறைகளை வழங்கும் நிகழ்வும் நான் சென்றிருந்த வேளையில் நிகழ்ந்தது. இதனை நெல்லை மாவட்ட ஆட்சியர் முனைவர்.கருணாகரன் அவர்களே செயல்படுத்தினார். அதுமட்டுமன்றி நாங்கள் சென்றிருந்த போது அங்கே வாழ்கின்ற எட்டு முதியோருக்கு ஓய்வூதியத்தொகையையும் மாவட்ட ஆட்சியர் செய்தார் என்பதோடு அங்குள்ள பள்ளி விரிவாக்கம் பற்றியும் அங்கு தேவைப்படும் நடமாடும் விரைவு மருத்துவ வண்டி பற்றியும் மக்களிடம் தகவல் கேட்டறிந்து உடன் இவை செயல்படுத்தத் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கையெழுத்திட்டு தொடக்கி வைத்தார்.
இங்கு இளையவர்கள் படிப்பதற்காக ஒரு சிறிய பள்ளிக்கூடம் இருக்கின்றது. உயர் நிலைக்கல்வி படிக்க இளையோர் மலையிலிருந்து கீழே வந்து பாபநாசம் நகருக்குத்தான் வரவேண்டிய சூழல் இருக்கின்றது. இங்கு ஒரு கிராமத்திலிருந்து அடுத்த கிராமம் செல்ல ஒரு மரத்தாலான தொங்கு பாலம் அமைத்திருக்கின்றார்கள். அதில் நடந்து ஆற்றைக்கடந்துதான் நாங்கள் அடுத்த கிராமத்தைச்சென்றடைந்தோம்.
காரையார் காணி குடியிருப்பு அமைந்திருக்கும் இடம் இயற்கை சூழல் நிறைந்த, இதமான சீதோஷ்ணம் நிறைந்த ஒரு பகுதி. பல காட்டு விலங்குகள் இங்கே உலவுகின்றன. எங்கள் பயணத்தில் கூட கூட்டமாக வந்த ஒரு காட்டெருமைக் கூட்டத்தை தூரத்திலிருந்து பார்த்து ரசித்தோம். இதனை நோக்கும் போது வன விலங்குகளின் வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் இயற்கை சேதமடையாத முறையிலும் இந்தக் குடியிருப்பு மக்களின் வாழ்வாதார தேவைகளும் கல்வித்தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டியது மிக முக்கியம். இந்த காரையார் காணி மக்களைப் போல இன்னமும் தமிழகத்தின் காட்டுப் பகுதிகளில் வாழ்கின்ற மலைவாழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்கள் ஆவணப்படுத்தப்பட்டு பதியப்படுவதோடு அவை பற்றிய தொடர் ஆழ்வுகளும் நிகழ்த்தப்பட வேண்டியது மிக மிக அவசியம்.
No comments:
Post a Comment