Wednesday, December 21, 2016

41. சென்னையில் வர்தா



தமிழகத்தில் கடந்த வாரம் எனக்கு அமைந்த அனுபவம் மறக்க முடியாதது.

நான் தமிழகம் வந்த நாளில், சென்னை மற்றும் சென்னைக்கு அருகாமையில் உள்ள கடலோரப்பகுதிகளில் வார்தா புயல் கடந்து செல்லும் அபாயம் இருப்பதாக அறிவிப்புக்கள் வந்த வண்ணமிருந்தன.  ஞாயிற்றுக் கிழமை அதாவது 12ம் தேதி மாலை நான் பனுவல் புத்தக நிலையத்தின் ஏற்பாட்டில் சென்னையில் நிகழ்ந்த கல்வெட்டுப் பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன். அந்த நிகழ்வுக்குப் பின்னர் நண்பர்கள் அன்று மாலையே கன மழை பெய்யவிருப்பதாகவும், புயல் அனேகமாக அன்று மாலையே கூட ஆரம்பிக்கலாம் என்றும் கூறி எச்சரிக்கையளித்தனர். நானும் என் உடன் வந்த நண்பர்களும் மாலை ஐந்தரை வாக்கில் அங்கிருந்து புறப்படும் போது வானிலை மேகமூட்டமாக ஆகிக்கொண்டிருந்தது. ”வேகமான புயல் தாக்குவதற்குச் சாத்தியம் இல்லை; மழை மட்டும் சில இடங்களில் சேதத்தை உண்டாக்கிவிட்டு செல்லலாம்” என என் உடன் வந்த நண்பர்கள் கூறிக் கொண்டிருந்தனர். அன்று மாலையே மழை பெய்யத்தொடங்கி விட்டது.

திங்கள்கிழமை அதிகாலை நான் பாண்டிச்சேரி செல்வதற்குத் திட்டமிட்டிருந்தேன். அங்குத் தமிழ் ஆர்வலர்கள் சிலரையும் வரலாற்று ஆர்வலர்கள் சிலரையும் சந்தித்துக் கலந்துரையாடுவது, மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில கல்வெட்டுக்களைப் பார்வையிட்டு எனது ஆய்வுகளுக்காகத் தகவல் சேகரிப்பது என்பன என் பட்டியலில் இருந்தன.
சென்னை துறைமுகத்தில்,  வரப்போகும் அபாயத்தை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் எச்சரிக்கைக்குறியீட்டை 10க்கு உயர்த்திவிட்டனர்.  பாண்டிச்சேரியில் என் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்த நண்பர், புயலின் அளவு அபாயகரமானதாக மாறிக் கொண்டிருப்பதனால்பாண்டிச்சேரிக்குச் செல்வது ஆபத்தானதாக முடியும் எனச் சொல்ல, அங்கே செல்லும் திட்டத்தை மாற்றிக் கொள்வதே சரியாக இருக்கும் என முடிவு செய்து மறுநாள் நிகழ்வுகளை மாற்றம் செய்து கொண்டேன்.

திங்கட்கிழமை காலை நான் தங்கியிருந்த திருவான்மியூர் பகுதியில் காலை ஒன்பது மணி தொடங்கி மழைப்பொழிவின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது. புயல் சென்னையின் கடற்கரையோரப்பகுதியை நெருங்கத் தொடங்கியதும் படிப்படியாகக் காற்று அதிகரிக்கத் தொடங்கி விட்டது. அன்று மாலை வரை இதே நிலை தான். இடையில் சென்னையின் பல பகுதிகளில் மின்சாரத்தைப் பாதுகாப்புக் கருதி தடைசெய்து விட்டனர்.

புயலின் முதல் கட்டமானது சென்னையைக் கடந்ததாகச் செய்தி வந்து கொண்டிருந்தது. மாலை மழை பொழிவு சற்று குறைய ஆரம்பித்தவுடன் நான் வெளியில் சென்று நிலமையைப் பார்த்து அறிந்து கொள்ள விரும்பிச் சென்றேன். வெளியே காணும் இடமெல்லாம் மரக்கிளைகள் உடைந்து கிடந்தன. நான் தங்கியிருந்த பகுதி பல அடுக்குமாடி வீடுகள் நிறைந்த பகுதியாக இருந்தமையால் இடைக்கிடையே இருந்த மரங்களின் கிளைகள் எல்லா பக்கங்களிலும் உடைந்து விழுந்து கிடந்தன. வாகனங்களின் மேல் விழுந்து கிடந்த கிளைகளை மக்கள் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர். சிலர் சாலைகளில் உடைந்து விழுந்து கிடந்த மரங்களை வெட்டி சாலை ஓரங்களில் தள்ளி வைத்து வாகனங்கள் செல்வதற்கு வழி செய்து கொண்டிருந்தனர். இப்படி மக்கள் வெளியே வந்து, ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு,  தங்களால் முடிந்த வகையில் சாலைகளை பயன்படுத்தும் வகையில் காரியங்களில் ஈடுபட்டிருந்தனர்.

அன்று மாலை மீண்டும் புயல் காற்று தொடங்கியது. அன்று இரவு முழுவதும் மின்சாரம் இல்லாததால் என்னால் எந்த நடவடிக்கைகளையும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை நினைத்து சென்னையில் இருப்பதை விட மதுரைக்குச் சென்றால் அங்கே தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணிகளைத் திட்டமிட்ட தேதிக்கு முன்னரே தொடங்கி விடலாம் என முடிவு செய்து கொண்டு பயணத்திற்கான ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தேன்.

மதுரையில் நான் தொடர்பு கொண்ட நண்பர்கள் எனக்கு மறுநாள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் வைகை துரித ரயில் வண்டியில் எனக்கு மதியம் ஒன்றரைக்கானப் பயண டிக்கட்டை பதிவு செய்து தகவல் தெரிவித்தனர். பயணத்திற்கான ஆயத்தங்களைச் செய்து விட்டதில் எனக்கு மன ஆறுதல் கிடைத்தது.

மறுநாள் காலை ஏழு மணிக்குப் பின்னர் தொலைபேசி இணைப்புக்கள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு விட்டமையால் என்னால் யாரையும் தொலைபேசி வழி தொடர்பு கொள்ள இயலவில்லை. எனக்கு பழைய 1000, 500 ரூபாய் நோட்டுக்களைப் புதிய பணமாக மாற்றித் தருவதாகச்சொல்லியிருந்த நண்பரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை.  இன்று நிச்சயம் நாம் சீக்கிரம் புறப்பட்டால் தான் ரயில் நிலையம் செல்ல முடியும் என யோசித்து காலை 11 மணி வாக்கில் நான் புறப்பட்டு விட்டேன். தொலைபேசியிலோ அல்லது வெளியில் சென்று டாக்சியை அழைக்கவோ இயலாத சூழல் என்பதால் ஒரு ஆட்டோவை நிறுத்தி அவரிடம் பேசி 400 ரூபாய்க்கு சம்மதிக்க வைத்து அதில் புறப்பட்டு விட்டேன்.

திருவான்மியூரிலிருந்து சென்னை எழும்பூர் செல்லும் சாலைகளின் இரு புறங்களிலும் சாலையெங்கும் மரங்கள் விழுந்து வேறோடு பிடுங்கப்பட்டு விழுந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். பல கடைகள்,  விழுந்த மரங்களால் சேதமடைந்து போயிருப்பதையும் வழியெங்கும் பார்த்துக் கொண்டே சென்றேன்.

இந்தப் புயலால் தமிழகத்தின் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது என்பதை நேரில் நான் காண முடிந்தது. சென்னையில் மட்டுமே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் புயல் ஏற்படுத்திய பலத்த காற்றினால் வேறொடு பிடுங்கி வீழ்ந்து விட்டன. மற்ற மாவட்டங்களில் ஏறக்குறைய மூன்று லட்சம் மரங்கள் நாசமாகின. மரங்கள் மட்டுமன்றி இந்தப் புயலின் போது 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் புயல் ஏற்படுத்திய தாக்கம் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களுக்கு சென்னையில் மின்சாரத்தடை ஏற்பட்டதோடு தொலைப்பேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டு ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள இயலாத இக்கட்டான சூழல் உருவானது என்பதும் இந்தப் புயல் விட்டுச் சென்ற பெரும் பாதிப்பு எனலாம்.

நான் எழும்பூர் நிலையம் வந்தடைந்த போது எனக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. ஒன்றரை மணிக்குப் புறப்படுவதாக இருந்த ரயில் வண்டிப்பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வர, தகவல் மையத்திற்குச் சென்று கேட்க, அனேகமாக அடுத்த இரு நாட்களுக்கு ரயில் பயணம் சந்தேகம் தான் என்ற தகவலே கிடைத்தது. இந்தச் சூழலில் பேருந்திலே மதுரைக்குச் செல்வதுதான் உதவும் என முடிவெடுத்து பேருந்து நிலையம் சென்று டிக்கட்டைப் பெற்று பின் பேருந்து புறப்பட ஆரம்பித்த பின்னர் தான் எனக்கு ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டது. அதுவரை என மனதில் மதுரைக்குச் செல்வது சாத்தியப்படுமா என்ற ஐயமே அதிகமாக இருந்தது.

இந்தச் சூழலை மேலும் சிரமமாக்குவதாகத் தமிழகத்தில் பணப்பிரச்சனை அமைந்தது. ஏற்கனவே நான் வந்திறங்கிய முதல் நாள்  அன்றே வங்கிகளில் பணம் எடுக்க முடியாமல் நான் சிரமப்பட நேர்ந்தது. அது மட்டுமல்லாது புயலுக்கு முன்னரே கூட வங்கி அட்டைகள் ஒரு சில இடங்களில் பயன்படுத்தக்கூடியதாகவும் ஒரு சில இடங்கலில் கணினி கோளாறினால் பயன்படுத்த முடியாத சூழலும் அமைந்தது.  சென்னையிலும் புயலினால் பாதிக்கபப்ட்ட இடங்களிலும் இந்தப் பணம் தொடர்பான பிரச்சனையானது, மேலும் நிலமையை மோசமாக்குவதாகவே அமைந்தது.

வீடுகள் சேதப்பட்டோர் முதல் பொதுவாகவே மக்கள் அனைவரும்  அவசர தேவைக்கு பணத்தினை வங்கிகளிலிருந்து எடுக்க முடியாது திண்டாடிப்போயினர்.  ஏறக்குறைய ஒரு வாரமாகிவிட்ட சூழலில் சென்னையில் புயலினால் பாதிக்கப்பட்ட இடங்கள் இன்னமும் முற்றிலுமாக சகஜ நிலைக்குத் திரும்பவில்லை.  இந்த இயற்கை பேரிடரின் போது உடைந்து விழுந்த மரங்களை அப்புரப்படுத்தி சாலையைத் தூய்மைப்படுத்திய நகராண்மைக்கழகத் தொழிலாளர்களின் சேவையைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

இந்தப் பதிவினை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் மதுரையில் தமிழ் மரபு அறக்கட்டளைக்கான களப்பணிகளை முடித்து பாரதியார் பல்கலைக்கழக நிகழ்வில் உரையாற்ற கோயமுத்தூர் வந்திருக்கின்றேன். எனது முதற்கட்டப்பணிகளை முடித்து இன்னும் ஒன்றரை வாரத்தில் சென்னை திரும்பும் போது நிலைமை ஓரளவு சீர்பட்டிருக்கும் என நம்புகின்றேன்.

No comments:

Post a Comment