தமிழகத்தில் எனக்குப் பிடித்த பல ஊர்கள் இருக்கின்றன. ஆனாலும் காரைக்குடி சென்றால் மட்டும் ஏதோ பல ஆண்டுகள் அங்கேயே இருந்தது போன்றதொரு மகிழ்ச்சி எனக்கு எப்போதும் ஏற்படும். அது ஏன் என்று தெரிவதில்லை!
2012ம் ஆண்டு ஜனவரி மாதம் நான் தமிழகம் சென்றிருந்த போது களப்பணிக்காக முதலில் கிருஷ்ணகிரிக்குச் சென்று பின்னர் அங்கிருந்து தருமபுரி சென்று, அது முடித்து, பின்னர் ஈரோடு சென்று, அங்கும் சில பதிவுகளை முடித்து அங்கிருந்து புறப்பட்டு காரைக்குடிக்குச் செல்லும் வகையில் திட்டமிட்டிருந்தேன். அந்த காரைக்குடி பயணத்தைப் பற்றி உங்களிடம் இந்தப் பதிவின் வழி பகிர்ந்து கொள்ளலாம் என்று விரும்புகின்றேன்.
டாக்டர் வள்ளி சொக்கலிங்கம் பற்றி நான் காரைக்குடிக்குச் செல்லும் வரை அதிகமாக அறிந்திருக்கவில்லை. தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்தி ஊடகமான மின்தமிழில் திரு.காளைராசன் வழங்கிய சில பதிவுகளில் மட்டுமே ஓரளவிற்கு அவரைப் பற்றி நான் அறிந்து கொண்டிருந்தேன். அதனால் அவரது ஆய்வுத்துறை, ஆர்வம், ஈடுபாடு போன்றவை பற்றிய அடிப்படை விஷயங்கள் ஏதும் அறியாமல் இருந்தேன். அவரைச் சென்று காணும் போது நிச்சயம் பல விஷயங்களைக் குறிப்பாக அவரது துறை, அவரது ஆய்வு அனுபவம், சில குறிப்பிடத்தக்க சாதனைகள் போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்னியிருந்தேன்.
காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தேன். முதல் நாள் காலையில் டாக்டர் வள்ளி அவர்கள் தன் வாகனத்தோடு வந்து சேர்ந்து விட்டார். அவரிடம் த.ம.அ பற்றி சொல்லிக் கொண்டே பேச ஆரம்பித்து, அவரது தமிழ்ப்புலமை, வரலாற்றுத்துறையில் அவருக்கு இருக்கும் புலமை ஆகியவற்றை நேரில் அறிந்து பிரமித்துப் போனேன். அவரை பேச வைத்து பல செய்திகளைப் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. ஆனால் நேரம் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருந்தது. ஏனெனில் நாங்கள் காரில் காரைக்குடியிலிருந்து புறப்பட்டு பிள்ளையார்பட்டி சென்று அங்கிருந்து குன்றக்குடிக்குச் சென்று, குன்றக்குடி மடத்தைப் பார்த்து அதன் ஆதீனகர்த்தரை ஒரு பேட்டி செய்ய வேண்டும் என்பது அன்றைய திட்டமாக எனது பட்டியலில் இருந்தது. ஆயினும், பயணத்தின் போதே, „காரிலேயே பதிவு செய்து கொள்ளவா“, என்று நான் கேட்டவுடன் என்னைப் போலவே மிகுந்த ஆர்வத்துடன் சம்மதித்து பேசிக் கொண்டே வந்தார் டாக்டர்.வள்ளி. அவர் பேசப்பேச, சில வேளைகளில் நாம் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமோ என்று எனக்குத் தோன்றும் பொழுது, கேட்டாலும் மறுத்து விட்டு ஆர்வத்துடன் தகவல்களை வழங்கிக் கொண்டே வந்தார். பேட்டியில் மாத்திரமல்ல. எங்கள் பயண திட்டத்தை வளப்படுத்தும் வகையில் முழுதுமாக ஈடுபாட்டுடன் எனது பதிவுக்கான திட்டத்தைச் செப்பனிட உதவியதோடு நான் அங்கிருந்த மூன்று நாட்களும் என்னுடன் முழுமையாக இருந்தார்கள். நாங்கள் செல்லும் இடங்கள் எல்லாவற்றிற்கும்.. அது காடாக இருந்தாலும்.. பாறையாக இருந்தாலும் சிறு குன்றாக இருந்தாலும் அலுக்காமல் நடந்து வந்து விளக்கம் சொல்லி என்னை மலைக்க வைத்தார் டாக்டர் வள்ளி. சாந்தமான அவரது முகமும் கணிவான பேச்சும், இனிய புன்னகையுடன் கூடிய விளக்கமும் மட்டுமன்றி என் மேல் அவர் காட்டிய அன்பும் என்னை அதிகம் கவர்ந்தன.
நாங்கள் பிள்ளையார்பட்டியில் சுவாமி தரிசனம் முடித்து அங்கிருந்து புறப்பட்டு குன்றக்குடி அடிகளாரைச் சந்திக்க குன்றக்குடி மடம் வந்து சேர்ந்தோம். மடத்தின் அருகாமையில் இருக்கும் மடத்திற்குச் சொந்தமான சில கட்டிடங்கள், அருகாமையில் உள்ள சில தனியார் வீடுகள் போன்றவற்றைக் காட்டி அவற்றிற்கான விளக்கங்களையும் தொடர்ந்து அளித்துக் கொண்டே வந்தார் டாக்டர். வள்ளி. இதனைப் பற்றிய பதிவை தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரலில் இங்கே வெளியிட்டுள்ளேன். http://voiceofthf.blogspot.de/2012/02/blog-post_05.html
வாகனத்திலேயே பேட்டி எடுத்துக் கொண்டு பதிவு செய்து வந்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை. குன்றக்குடி மடத்தில் மடத்தைச் சார்ந்தோர் எங்களை வரவேற்று அடிகளாரிடம் அழைத்து சென்றனர். முன்னரே திரு.காளைராசன் மடத்தில் எங்கள் வருகையைக் குறிப்பிட்டு அறிவித்திருந்தமையால், அடிகளாரைச் சந்தித்து உரையாடுவதில் எந்தச் சிரமமும் எங்களுக்கு ஏற்படவில்லை.
ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்திருப்போம். அடிகளார் மடத்தின் செயல்பாடுகள், சமூகப்பணிகள் போன்றவற்றை மிகுந்த நட்புடனும் அன்புடனும் எங்களுடன் பரிமாறிக்கொண்டார்கள். தமிழ் மரபு அறக்கட்டளை பணிகள் பற்றி நாங்கள் விவரித்தோம். நமது பணிகளைப் பாராட்டியதோடு மேலும் வளர்ச்சி பெற்று இப்பணிகளை நாங்கள் தொடர வேண்டும் என்றும் ஆசி கூறினார்கள்.
இதில் தமிழ் மரபு அறக்கட்டளைக்காகப் பிரத்தியேகப் பேட்டி ஒன்று வேண்டும் என்று கேட்ட போது தயங்காமல் பேட்டியளித்தார். அதனை இரண்டு பகுதிகளாகப் பிரித்து மண்ணின் குரல் பதிவில் வெளியிட்டிருக்கின்றேன்.
முதல் பகுதி: http://voiceofthf.blogspot.de/2012/01/blog-post.html
இரண்டாம் பகுதி: http://voiceofthf.blogspot.de/2012/03/blog-post_10.html
குன்றக்குடி சைவத்திருமடம் சமூகப் பணிகளில் தன்னை முற்றும் முழுதுமாக ஈடுபடுத்திக் கொண்டு மக்கள் நலனுக்காக இயங்கும் ஒரு இயக்கமாகத் திகழ்கின்றது. இதன் சேவைகள் பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ளும் போது மனம் மகிழ்ந்தேன். பொது மக்கள் கல்வி மேம்பாடு, கல்வி மையம், சிறு தொழில், விவசாயம், தொழில் முன்னேற்றம், மருத்துவம் என பல வகைகளில் மக்களின் வாழ்க்கை தேவையறிந்து செயல்படும் ஒரு நிறுவனமாகத்தான் இத்திருமடம் உள்ளது.
எனது இளம் வயதில் ஒரு இலக்கிய விழாவில் பினாங்கில் குன்றக்குடி அடிகளார் (இப்போதைய சுவாமிகளுக்கு முந்தியவர்) அவர்களைச் சந்தித்திருக்கின்றேன். அதன் பின்னர் மற்றொரு முறை எனது தாயார் திருமதி.ஜனகா அவர்கள் துணைத்தலைவராக இருந்த பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில், ஒரு நூல் வெளியீட்டு விழாவிலும் அடிகளாரைச் சந்தித்த நினைவிருக்கின்றது. அந்த நிகழ்வில் அவரது நீண்ட இனிய தமிழ் சொற்பொழிவைக் கேட்ட நிகழ்வு இன்னமும் மனதில் நிலைத்திருக்கின்றது. அவரைப் போலவே தற்போது மடத்தினை நிர்வகிக்கும் சுவாமிகளும் தமிழ் புலமை நிறைந்த சிறந்த தமிழறிஞராக இருந்து கல்விக்கும் மக்களின் சமூக நலனிற்கும் தொண்டாற்றி வருகின்றார்.
குன்றக்குடி திருமடத்தில் இருந்த சில மணி நேரங்களில் அத்திருமடம் செய்து வரும் பணிகள் குறித்து அறிந்து கொண்டதில் எனக்கு மனம் நிறைவாக இருந்தது.
குன்றக்குடி திருமடத்தின் வரலாற்று நூலை எனக்கு அளித்து இதனை த.ம.அ. வலைப்பக்கத்திலும் இணைத்துக் கொள்ள அனுமதி அளித்தார் அடிகளார். இதனை மின்னூலாக்கி நமது சேகரத்தில் இணைத்திருப்பதோடு இதனை முழுதுமாக தட்டச்சு செய்து நமது வலைப்பக்கத்திலும் இணைத்திருக்கின்றோம். இந்த முழு நூலையும் தட்டச்சு செய்து கொடுத்தவர் தமிழ் மரபு அறக்கட்டளையின் தன்னார்வலர்களில் ஒருவரான திருமதி.கீதா சாம்பசிவம். இப்படி தன்னார்வலர்களின் சேவையால் தமிழ் மரபு அறக்கட்டளையின் நடவடிக்கைகள் சிறிது சிறிதாக வளம் பெற்று பெருகி வருகின்றது என்றால் அது உண்மையே.
மடத்திற்கு சற்று தள்ளி ஒரு குடைவரைக் கோயில் இருப்பதாகவும் அங்கு சென்று பதிவுகளைச் செய்ய வேண்டும் என்றும் டாக்டர்.வள்ளி சொல்லி இருந்தார். அங்கிருந்து புறப்பட்டு அருகாமையில் அமைந்திருக்கும் குன்றக்குடி குடவரை கோயிலுக்குச் சென்று வர கிளம்பினோம். மதிய உணவுக்கு மீண்டும் திருமடத்திற்கு வந்து விட வேண்டுமென்று அன்புக் கட்டளை கிடைத்திருந்ததால் உணவுக்குக் கவலையின்றி நடந்து சென்று சுற்றிப் பார்த்து விட்டு வருவோம் எனப் புறப்பட்டோம்.
மடத்திலிருந்து குடவரை கோயில் செல்லும் பாதையில் ஒரு அழகிய தெப்பக்குளம் அமைந்திருக்கின்றது.
தெப்பக்குளம் நிறைய தண்ணீர் நிறைந்திருந்தது. பச்சை பசேலென பாசி படிந்த நீர்... ஆனாலும் அங்குள்ளோர் தேவைக்குப் பயன்படுகின்றது என்பதை அங்கே சில பெண்கள் குளித்துக் கொண்டிருப்பதையும் துணி துவைத்துக் கொண்டிருப்பதையும் பார்த்து புரிந்து கொள்ள முடிந்தது. குளத்தின் அழகை மிக ரசித்ததால் நாங்கள் அங்கு இருந்து படம் எடுத்துக் கொண்டோம்.
"எங்களையும் போட்டோ எடுங்களேன்" என்று ஒரு பெண்மணி சொல்ல அவரிடம் சென்றோம். "போட்டோ எடுத்தால் பரவாயில்லையா? இண்டெர்னெட்டில் போடுவேன் பரவாயில்லையா" என்று கேட்க.. "எடுங்க எங்களைப் போல வருமா..? சிவகங்கை பெண்கள் தான் இந்த நாட்டிலேயே உசத்தி" என்ரறு சொல்லி எங்களிடம் சிரித்துப் பேசினார்.
அந்த அம்மாளுடன் கொஞ்ச நேரம் பேசிவிட்டு நாங்கள் குடவரைக் கோயிலை நோக்கி புறப்பட்டோம்.
குன்றக்குடி ஆதீனத்திற்குச் சென்று அங்கு அடிகளாரைச் சந்தித்து பேட்டி செய்த நிகழ்வும், டாக்டர். வள்ளி சொக்கலிங்கம் அவர்களுடன் அறிமுகம் செய்து கொண்டதும் மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாக எனது காரைக்குடிக்கான முதல் பயணத்தை அமைத்து விட்டது.
சுபா,அருமையான பதிவு..வாழ்த்துகள்..!
ReplyDeleteGOOD. VALTHUKKAL.
ReplyDeleteDR.V.SANKARANARAYANAN
PRINCIPAL
KAILASH WOMENS COLLEGE
SALEM
0091 9443929560
வணக்கம். நாம் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரிக்கு தாங்கள் சென்ற ஆண்டு வருவதாக கடைசியில் மாற்றம் உண்டு இம்முறை பயணத்திலாவது எமது பாபநாசம் கல்லூரி மாணவர்களை சந்தித்திடவும்
ReplyDeleteபாலச்சந்திரன் திருவள்ளுவர் கல்லூரி பாபநாசம்
ReplyDelete