வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவையும் நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்திய பேரவையின் 29வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு மேலும் சில நாட்கள் வட அமெரிக்காவில் சுற்றுப்பயணமும் மேற்கொண்டு கடந்த வாரம் திரும்பினேன். மூன்று நாட்கள் நடைபெற்ற நிகழ்வு. நாம் இருப்பது அமெரிக்கா தானே? அல்லது மலேசியா சிங்கையா? என நினைக்கும் அளவிற்கு என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டது இந்த நிகழ்வு.
FETNA என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவையின் நிகழ்வில் நான் கலந்து கொள்வது இது தான் முதல் முறை. 1988ம் ஆண்டு அமைக்கப்பட்ட இப்பேரவை ஒவ்வொரு ஆண்டும் தனது ஆண்டு விழாவை வட அமெரிக்காவின் ஒரு மாநிலத்தில் நடத்தி தமிழுக்குச் சிறப்பு சேர்த்து வருகின்றது.
தாயகத்தை விட்டு அயல் நாடுகளுக்கு ஏதாகினும் ஒரு காரணத்திற்காக எனச் சென்ற ஏராளமான தமிழ் மக்கள் உலகின் எல்லாக் கண்டங்களிலும் வாழ்கின்றனர். வட அமெரிக்காவில் தமிழர்களின் வருகை என்பது தொழில் அடிப்படையில் அமைந்தது எனலாம். இன்று வட அமெரிக்காவின் பல முக்கிய நகரங்களில் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழர் நடத்தும் உணவகங்கள் இருக்கின்றன. இந்தியாவிலிருந்து சினிமா பிரபலங்களை அழித்து வந்து கலை நிகழ்ச்சிகளைச் செய்து மகிழ்கின்றனர். தமிழ் மொழி தொடர்பான பல சீரிய முயற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. வார இறுதி தமிழ்ப்பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இசை வகுப்பு, நடனவகுப்பு, வாத்தியக் கருவிகள் இசைக்கும் பயிற்சிக்கான வகுப்புக்கள் நடக்கின்றன. தமிழர் கல்விக்காகவும் பொருளீட்டவும் அமெரிக்கா சென்று விட்ட காரணத்தால் தங்கள் மரபையும் தமிழின் பெருமையையும் மறந்து விடவில்லை. மாறாகப் பலர் மிக ஆர்வத்துடன் தமிழ் மொழி, கலை பண்பாடு, ஆய்வு என்ற ரீதியில் தமிழ்ப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ் மரபு அறக்கட்டளையும் இவ்வாண்டு நடைபெறுகின்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவையின் 29வது ஆண்டு விழாவில் பங்கேற்க வேண்டும் என அதன் தலைவர் திரு.நாஞ்சில் பீற்றர் அவர்கள் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த பொங்கல் விழாவில் நாங்கள் இருவருமே சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டபோது எனக்கு அழைப்பு விடுத்தார். தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளை அமெரிக்க வாழ் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்துவது நன்மையளிக்கும் என்பதை மனதில் கொண்டு நான் கலந்து கொள்ளத் தேவையான ஏற்பாடுகளில் ஈடுபட்டேன். ஜூலை மாதம் 1ம் நாள் மாலை தொடங்கி இந்த ஆண்டு விழா இவ்வருடம் நியூ ஜெர்சி மாநிலத்தின் தலைநகரமான ட்ரெண்டன் நகரில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் ஆய்வாளர்கள், சினிமா பிரபலங்கள், இசைக்கலைஞர்கள் என பலதரப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அதோடு இளம் சிறார்களும் பெரியோரும் கலந்து கொள்ளும் வகையிலான போட்டி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
முதல் நாள் மாலை விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழ் மரபு அறக்கட்டளை, கடந்த பதினாறு ஆண்டுகள் செய்து வரும் பணிகளையும் வரலாற்று பாதுகாப்பு என்பதன் அவசியத்தைப் பற்றியும் விவரித்துப் பேச எனக்கு நல்ல சந்தர்ப்பம் வாய்த்தது. அதனை அடுத்து சனிக்கிழமை நடந்த இணை அமர்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்று பாதுகாப்பு பணிகளைப் பற்றி இரண்டு மணி நேரம் விரிவாகப் பேசும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது. கல்விமான்களும், தமிழார்வலர்களும் ஆர்வத்துடன் வந்து இந்த அமர்வில் கலந்து கொண்டனர். அதே போல இறுதி நாள் பொது அமர்விலும் சில நிமிடங்கள் வரலாற்றுச் சான்றுகளின் பாதுகாப்பை பற்றி பேசுவதற்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை எனக்கு வய்ப்பளித்திருந்தனர்.
தமிழ் மரபு அறக்கட்டளை பணிகளைப் பற்றி அறிந்து கொண்ட இளைஞர்களும் பெரியோரும் பாராட்டி வாழ்த்தியதோடு அவர்களில் சிலர் இவ்வகைப் பணிகளில் தம்மையும் இணைத்துக் கொள்ளுமாறு ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டனர். இது பொதுமக்களுக்கு தமிழ்ப் பண்பாடு மற்றும் மரபு சார் விசயங்கள்தொடர்பான ஆய்வுகளில் பெருகி வரும் ஆர்வத்தை நன்கு வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
தமிழ் மரபு அறக்கட்டளை நிகழ்ச்சி தவிர தொடர்ந்து இரு தினங்களும் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறள் மனனப் போட்டி, தமிழ்த்தேனீ , இலக்கிய கேள்வி வினா விடைப்போட்டி, கவியரங்கம் என பலதரப்பட்ட போட்டி நிகழ்வுகள் நடந்தன. இளையோரும் பெரியோரும் கலந்து தங்கள் தமிழ் மொழித்திறனை வெளிப்படுத்தி பரிசு பெற்றனர். வாஷிங்டன் தமிழ்ச்சங்கத்தினர் பறை இசை நடனத்தை வழங்கி வந்திருந்தோர் கவனத்தை ஈர்த்தனர். பறை இசையையும் நடனத்தையும் தகுந்த மதிப்பளிக்காமல் ஒதுக்கி தரம் தாழ்த்திப் பேசும் தமிழ் மக்கள் சிலர் இன்றும் இருக்கின்றனர் என்ற சூழலில் இந்தக் கலையை வாஷிங்டனில் பல்கலைக்கழகத்தில் நுண்கலை மையத்தில் ஒரு பாடமாக அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளனர் இந்த அமைப்பைச் சார்ந்தோர். இது நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் ஒரு விசயமல்லவா?
கண்களுக்கு விருந்தாகும் நடனம், காதுகளுக்கு இனிமை சேர்த்த இசை, அறிவுக்கு விருந்தாகும் உரைகள், மனதிற்கு அன்பைச் சேர்க்கும் இனிய நட்புகள், வயிற்றிற்கு விருந்தான சுவையான உணவு என அனைத்துமே முழு திருப்தி அளிக்கும் வகையில் இந்த ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குப் பின்னர் சில நாட்கள் சான் பிரான்ஸிஸ்கோ நகரிலும் சில நாட்கள் சிக்ககோவிலும், ஒரு நாள் பிலடெல்ஃபியாவிலும் இருந்து விட்டு ஜூலை 13ம் தேதி நான் ஜெர்னி திரும்பினேன்.
இத்தகைய ஒரு நிகழ்வைச் செய்வதற்கு தேவைப்படும் உழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் மகத்தானது. இந்த ஆண்டு விழாவை வெற்றி விழாவாக ஆக்கிய வட அமெரிக்கத்தமிழ்ச் சங்கப் பேரவையின் அனைத்துத் தமிழ் அன்பர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் மனமார்ந்த பாராட்டுதல்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக!
வாழ்த்துகள் அம்மணி.ொடரட்டும் தங்கள் தமிழ் நற்பணி.
ReplyDeleteவாழ்த்துகள் அம்மணி.ொடரட்டும் தங்கள் தமிழ் நற்பணி.
ReplyDelete