Thursday, June 2, 2016

16. டென்மார்க்கில் தமிழ் ஒலைச்சுவடிகள்

நல்லதோர் வீணை செய்தே - அதை
     நலங்கெடப் புழுதியிலெறிவருதுண்டோ? 
சொல்லடி, சிவசக்தி ! எனைச்
     சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
     மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

தமிழ் ஓலைச்சுவடிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு விட்டனவா? அனைத்தும் நூற்களாக அச்சிடப்பட்டு வெளிவந்து விட்டனவா? என்றால் அதற்கு பதில், ”இல்லை” என்பது தான்!






தமிழ் நிலம் பல நூறு ஆண்டுகளாய் கிளைத்தெழுந்த அறிவுப் பொக்கிஷங்கள் நிறைந்த ஒரு தாய் நிலம். இங்கே அறிவுக் களஞ்சியங்கள் காலம்தோறும் ஏதோ ஒரு வகையில் தொடர்ச்சியாகப் பாதுகாக்கப்பட்டும் பரவலாக்கப்பட்டும் வந்துள்ளது. 

அச்சு பதிப்பு முறை தமிழகத்தில் அறிமுகமாகும் வரை தமிழர் தம் வாழ்வியலில், தமிழ் மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களும் ஆவணங்களும் பல்வேறு வகைப்பட்ட குறிப்புக்களும் பணை ஓலைச் சுவடிகளிலும், கோயில்களில் கல்வெட்டுக்களாகவும் தான் எழுதப்பட்டும் பொறிக்கப்பட்டும் இருந்தன. அச்சு இயந்திரங்கள் தமிழக நிலப்பரப்பில் அறிமுகமாகும் வரை இலக்கியங்கள் என்பது மட்டுமன்றி வணிகம், கலைகள், இலக்கியம், பக்தி பனுவல்கள், பல்வேறு வகைப்பட்ட சாத்திரங்கள், ஓவியங்கள், சிற்பக் கலை நுணுக்கங்கள், மனிதர்களுக்கான மருத்துவக் குறிப்புக்கள், விலங்குகளுக்கான மருத்துவக் குறிப்புக்கள், வான சாஸ்திரம், கலைகள் என பலதரப்பட்ட தகவல்கள் அனைத்துமே பனை ஓலை நூல்களில் வழிவழியாக படியெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தன. அதே வேளை, பண்டைய அரசுகளின் அதிகாரப்பூர்வ  செய்திகளும், போர் செய்திகளும், நன்கொடைகளும் கோயில்களில் கல்வெட்டுக்களாகப் பொறிக்கப்பட்டு இன்றும் வாசிக்கும் தன்மையுடன் காணப்படுகின்றன.  

அச்சு இயந்திரங்களின் அறிமுகம், அதன் தொடர்ச்சியாக தாட்களின் அறிமுகம் என தமிழ் சமூகம் கல்விப் புரட்சியை நோக்கி முன்னேற்றம் கண்ட வேளையில் குறிப்பிடத்தக்க ஆவணப்பாதுகாப்பு முயற்சிகள் நடந்தன. முதம் முயற்சிகள் 16ம் நூற்றாண்டிலே தொடங்கினாலும் விரிவான முயற்சிகள் 17ம் நூற்றாண்டு தொடங்கி நடைபெற ஆரம்பித்தது எனலாம்.  

இவ்வகை முயற்சிகளே நமது பண்டைய இலக்கிய வளங்களில் சில இன்று நமக்கு அச்சு வடிவிலும் இணையத்திலும் கிடைக்க அடிப்படை காரணங்களாக அமைகின்றன. இலக்கியங்கள், வரலாற்றுத் தகவல்கள், தமிழக நிலப்பரப்பில் வாழும் பழங்குடி மக்கள், இனக்குழுக்கள், சடங்கு முறைகள் என்பன போன்ற பல தகவல்கள் இப்படி கடந்த நான்கு நூற்றாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பலனாக நமக்குக் கிடைத்திருக்கின்றன.
தாள் அச்சு இயந்திரங்கள் தமிழகத்தில் அறிமுகமாவதற்கு முன்னர் பண்டைய தமிழர்களின் ஞானக் கருவூலங்கள் கல்வெட்டுக்களிலும் சுவடி நூல்களிலும் மட்டுமே எழுதப்படுவது வழக்கமாக இருந்தது. சில சிறு குறிப்புக்கள் பாறைகளிலும் மண்பாண்டங்களிலும் கீறி வைக்கப்பட்டமையயும் தொல்லியல் ஆய்வுகளும், அகழ்வாய்வுகளும் வெளிப்படுத்துவதை நாம் அறிய வருகின்றோம். 

லூத்தரன் பாதிரிமார்களின் தமிழகத்துக்கான வருகை என்பது டேனீஷ் வருகையோடு தொடர்புடையது. லூத்தரன் பாதிரிமார்கள் என்போர் அடிப்படையில் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள். 16ம் நூற்றாண்டில் ஒரு மாபெரும் சிந்தனைப் புரட்சியை ஐரோப்பிய சூழலில் உருவாக்கினார் மார்ட்டின் லூதர். இவர் ஜெர்மனியைச் சார்ந்தவர். அன்றைய வாட்டிக்கன் சமய  ஆளுமையைக்கு எதிர்குரலாக அமைந்தது மார்ட்டின் லூதரின் கருத்துக்கள். இவையே லூத்தரன் சமய நெறியாக உருவாக்கம் கண்டன. இன்று ப்ராட்டஸ்டன் மதம் என்ற பெயரால் இது அழைக்கப்படுகின்றது. மார்ட்டின் லூதரின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு சமய சீர்திருத்தத்தை வரவேற்ற பொதுமக்கள் இந்த புதிய சமயத்தை ஜெர்மனியில் விரிவாக வரவேற்றனர். டென்மார்க் அரசு இந்த சமயத்திற்கு பெறும் ஆதரவும் அளித்து அதனை பரப்பும் முயற்சியில் பெரும் பங்கு வகித்தது என்பது மிக முக்கியமானது.

1612ம் ஆண்டில் டென்மார்க் அரசின் டேனிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி, தமிழகத்தின் தஞ்சாவூரின் தரங்கம்பாடி பகுதியில் ஒரு சிறு பகுதியைப் பெறும் உரிமையை ஆண்டுக் கட்டணமாக இந்திய ரூ.3111 செலுத்தி  அச்சமயம் தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த ரகுநாத நாயக்க மன்னரின் அனுமதியோடு பெற்ரனர். இதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த அரச ஆணையின் படி 19.11.1620ம் நாள் தரங்கம்பாடியில் டென்மார்க்கின் டேனிஷ் கொடி ஏற்றப்பட்டு தரங்கம்பாடியில் டேனிஷ் தொடர்பு உறுதி செய்யப்பட்டு இந்த உடன்பாடு அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டேனீஷ் வர்த்தகர்கள் தரங்கம்பாடி வந்திறங்கினர். வர்த்தகத்தோடு மதம் பரப்பும் நடவடிக்கைகளிலும் ஈடுபடும் வகையில் ஜெர்மானிய லூத்தரன் பாதிரிமார்கள் தமிழகத்தின் தரங்கம்பாடி வந்தனர். அவர்களில் சீகன்பால்க், ஷூல்ட்ஷெ, க்ருண்ட்லர், ரைனூஸ் போன்றோர் தமிழில் நூல்களை எழுதி ஐரோப்பிய பாதிரிமார்களும் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் ஒரு மொழியாகக் கற்க வகைசெய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இவர்களது நூல்கள் மட்டுமன்றி தமிழகத்தில் இவர்கள் இருந்த காலத்தில் எழுதப்பட்ட இவர்களது நாட்குறிப்புக்கள், கடிதங்கள் ஆகியன தமிழில் எழுதப்பட்டவை. உதாரணமாக டேனிஷ் உயரதிகாரியால் சிறைபடுத்தப்பட்ட சீகன்பால்க் ஒவ்வொரு நாளும் சில பக்கங்கள் நாட்குறிப்புக்களை பனை ஓலைச் சுவடிகளில் எழுதியிருக்கின்றார். இன்னொரு பாதிரியாரான க்ருன்ட்லர், தான் கண்டறிந்த உள்ளூர் மூலிகைகள் பற்றி பனை ஓலைச் சுவடிகளில் எழுதி தொகுத்து வந்ததோடு அவற்றை டென்மார்க்கின் கோப்பன்ஹாகன் நூலகத்திற்கு அனுப்பி வைத்தார்.
லூத்தரன் பாதிரிமார்களின் கையெழுத்துக் குறிப்புக்களாக உள்ள ஆவணங்கள் 17, 18, 19, 20ம் நூற்றாண்டின் தமிழக மக்களின் சமூக, வாழ்வியல், சமய, வரலாற்று, அரசாட்சி, மருத்துவம், ஆய்வு என பல்வகைப்படுவன. லூத்தரன் பாதிரிமார்களின் கையெழுத்து பனை ஓலைச்சுவடி ஆவணங்கள் இன்று டென்மார்க்கின் கோப்பன்ஹாகன் அரச நூலகத்திலும் ஜெர்மனியின் ஹாலே ஃப்ராங்கன் ஆய்வகத்திலும் பாதுகாக்கப்படுகின்றன.  இப்படி பாதுகாக்கப்படும் கையெழுத்து பனை ஓலைச்சுவடி ஆவணங்கள் மின்னாக்கம் செய்யப்பட்டு பொது மக்கள் வாசிப்பிற்கு கிடைக்கும் போது 15ம் நூற்றாண்டு தொடங்கி 20ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையிலான சமூக வரலாற்று விஷயங்கள் மிகப் பல விரிவான ஆய்வுகளுக்குப் பயன்படும் வகையில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இது அக்கால சூழலின் சமூகவிஷயங்களை அறிந்து கொள்ள பல சான்றுகளை வழங்குவதாகவும் நிச்சயம் அமையும் என்ற எண்ணம் எனக்கு உருவானது.

முதன் முதலில் லூத்தரன் பாதிரிமார்களின் தமிழகத்திற்கான வருகை, பின்னர் அது தொடர்பில் படிப்படியாக நிகழ்ந்த செயல்பாடுகள் ஆகியனபற்றிய அறிமுகம் எனக்கு டாக்டர்.மோகனவேலு அவர்கள் எழுதிய German Tamilology  என்ற நூலின் வழி கிடைத்தது.  அப்பாதிரிமார்கள் எழுதிய தமிழ் ஓலைச்சுவடிகளைப் பார்க்க வேண்டும், வாசிக்க வேண்டும்;  அதுமட்டுமன்றி அவற்றைக் கணினி தொழில்நுட்பம் கொண்டு மின்னாக்கம் செய்து தமிழ் மொழியிலும் தமிழக வரலாற்றிலும் ஆர்வம் உள்ள அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும், அது தொடர்பிலான ஆய்வுகள் நடைபெற வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகரித்துக் கொண்டே வந்தது. 

நான் அறிந்து கொண்ட செய்திகளை கட்டுரையாக ஜெர்மனியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் 2014ம் ஆண்டு வாசித்துப் படைத்தேன். தொடர்ச்சியாக 2014ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத்தமிராய்ச்சி மாநாட்டில்  இது தொடர்பான ஒரு கட்டுரையை நான் வாசித்தேன். 2015ம் ஆண்டு திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற மதுரைத் தமிழ்ச்சங்க கருத்தரங்கிலும் ஒரு கட்டுரை இது தொடர்பில் வாசித்தளித்தேன். இதன் வழி ஐரோப்பிய லூத்தரன்பாதிரிமார்களின் தமிழ் முயற்சிகள் பற்றிய செய்திகள் தமிழ் வரலாற்று ஆர்வலகர்களிடையே ஓரளவு கொண்டு செல்ல முடிந்தது.

தமிழ் மரபு அறக்கட்டளை ஐரோப்பாவில் டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹாகனிலும், ஹெர்மனியின் ஹாலேயிலும் பாதுகாக்கும் இந்த ஆவணங்களை கணினி தொழில்நுட்பத்தின் துணை கொண்டு மின்னாக்கம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்குத் தொடர்ச்சியாக இருந்தமையால், கோப்பன்ஹாகன் அரச நூலகத்தின் அரிய கையெழுத்து சுவடிகள் துறையின் பொறுப்பாளர் டாக்டர்.பெண்ட் அவர்களை மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு அதற்குத் தேவையான அதிகாரப்பூர்வ ஏற்பாடுகளைச் செய்த பின்னர், கோப்பன்ஹாகன் அரச நூலகம் எனக்கு அங்கே வருகை தந்து நேரடியாக இவற்றை நான் மின்னாக்கம் செய்ய அனுமதி அளித்தனர். இது என்னுடைய இந்தத் தீவிர முயற்சிக்குக் கிடைத்த முதல் வெற்றி.  அதோடு டென்மார்க்கில் வாழும் கோப்பன்ஹாகன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர். ராமானுஜம் அவர்களின் தொடர்பும்  நட்பும்  ஏற்பட்டதால் மேலும் சில தகவல்களும் எனக்குக் கிடைத்தன. அவர் ஏற்கனவே நூலகத்தின் பட்டியலிலிருந்து எடுத்து பட்டியலிட்டிருந்த தமிழ் ஓலைச்சுவடிகளின் பட்டியல் ஒன்றினை எனக்கு அனுப்பி வைத்தார். 

இந்த முன்னேற்பாடுகளுடன் எனது டென்மார்க்கிற்கான பயணத்தை நான் திட்டமிடலானேன். 2016, மே மாதம் 26ம் தேதி கோப்பன்ஹாகனுக்கு ஸ்டுட்கார்ட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டேன்.அன்றே கோப்பன்ஹாகன் அரச நூலகம் சென்று என்னை நூலகர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டு இந்த அரிய தமிழ்ச்சுவடிகளின் மின்னாக்கப்பணியைத் தொடங்கினேன். மூன்று நாட்கள் இடைவிடா மின்னாக்கப்பணியில் ஈடுபட்டிருந்தேன். காலை 9மணிக்குத் தொடங்கி இரவு ஒன்பது மணி வரை என என் மின்னாக்கப்பணி நடைபெற்றது. இந்த முயற்சியில் முப்பத்தெட்டு தமிழ் பனை ஓலைச்சுவடிகளை, அதாவது ஏறக்குறைய 1200 பனை ஓலைப்பக்கங்கள் கொண்ட தமிழ் ஆவணங்களை மின்னக்கம் செய்து முடித்துள்ளேன்.

நாம் ஏற்கனவே நன்கறிந்த சில கதைகள், ஒரு நிகண்டு, இரண்டு மருத்துவ ஓலைச்சுவடிகள் இவற்றுள் அடங்கும்.  இதுவரை வெளியிடப்படாத சீகன்பால்கின் கையெழுத்து ஆவணங்கள், தமிழிலும் தெலுங்கிலும் என இரு மொழிகளில் அமைந்த ஷூல்ட்ஷேவின் சமய போதனை நூல், சீகன்பால்கின் டைரி, சீகன்பால்கின் உதவியாளர்களின் டைரிகள் என பல புதிய ஆவணங்கள் இந்த மின்னாக்கத்தில் உள்ளன.  இந்த மின்னாக்கப்படிமங்கள் படிப்படியாக நூல் வடிவம் பெறும் வகையிலும், ஆக்கப்பூர்வமான  தொடர் ஆய்வுகள் தொடங்கும் வகையிலும் எமது அடுத்தக் கட்ட செயல் பாடுகள் அமையும். 

இந்த முயற்சியில், தரங்கம் பாடியில் டென்மார்க் அரசின் டேனிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனியிடம் சிறு பகுதியைப் பெற ரூ3111 ஆண்டுக்கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு  உரிமை அளித்த, அச்சமயம் தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த ரகுநாத நாயக்க மன்னரின் கையெழுத்து பொறிக்கப்பட்ட தங்க ஆவணத்தை நேரில் பார்த்து அதனை ஆவணப்படுத்தியது என் வாழிவில் ஒரு மறக்க முடியாத அனுபவம்.  இந்த பத்திரம் தங்கத்தினால் ஆனது. வேறு எந்த உலோகமும் கலக்காதது. பனை ஓலைச்சுவடி போன்ற வடிவத்திலேயே அமைக்கப்பட்டது. இதில் ரூ 3111 ஆண்டுக்கட்டணத்திற்கு தரங்கம்பாடியின் ஒரு பகுதியை டேனீஷ் அரசு பெற்றுக் கொண்டமை தமிழில் எழுதப்பட்டுள்ளன. மன்னர் ரகுநாத நாயக்கரின் கையெழுத்து தெலுங்கில் எழுதப்பட்டுள்ளது. இந்தத் தங்கச்சுவடி கோப்பன்ஹாகன் நேஷனல் ஆர்க்கவில் மிகப்பாதுகாப்பாகன அறையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.

இன்றைய கட்டுரை டென்மார்க், கோப்பன்ஹாகன் விமான நிலையத்திலிருந்து உங்களை வந்தடைகின்றது. அதிலும் குறிப்பாக டென்மார்க் அரச நூலகத்தில் பாதுகாக்கப்படும் ஓலைச்சுவடிகளில் சிலவற்றை தொட்டு மின்னாக்கம் செய்த அனுபவத்தோடு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் அச்செய்திகளை உங்களுடன் இக்கட்டுரையின் வழி பகிர்ந்து கொள்வதில் அகம் மிக மகிழ்கின்றேன்.

10 comments:

  1. அருமை.....அருமை....முயற்சி திருவினையாக்கும். அதுதான் நடந்துள்ளது. "நான் அறிந்து கொண்ட செய்திகளை கட்டுரையாக ஜெர்மனியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் 2014ம் ஆண்டு வாசித்துப் படைத்தேன். தொடர்ச்சியாக 2014ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத்தமிராய்ச்சி மாநாட்டில் இது தொடர்பான ஒரு கட்டுரையை நான் வாசித்தேன். 2015ம் ஆண்டு திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற மதுரைத் தமிழ்ச்சங்க கருத்தரங்கிலும் ஒரு கட்டுரை ", இந்தக் கட்டுரைகள் எங்கே உள்ளன.



    ReplyDelete
  2. அருமை.....அருமை....முயற்சி திருவினையாக்கும். அதுதான் நடந்துள்ளது. "நான் அறிந்து கொண்ட செய்திகளை கட்டுரையாக ஜெர்மனியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் 2014ம் ஆண்டு வாசித்துப் படைத்தேன். தொடர்ச்சியாக 2014ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத்தமிராய்ச்சி மாநாட்டில் இது தொடர்பான ஒரு கட்டுரையை நான் வாசித்தேன். 2015ம் ஆண்டு திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற மதுரைத் தமிழ்ச்சங்க கருத்தரங்கிலும் ஒரு கட்டுரை ", இந்தக் கட்டுரைகள் எங்கே உள்ளன.



    ReplyDelete
  3. மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. Super continue your work and dedication

    ReplyDelete
  5. முயற்சி,பணம். உழைப்பு,திறமை, அறிவு இவை அத்தனையும் பயன்படுத்தியுள்ளீர்கள். இதற்கு பிரதி பலன் கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு இன்றி செய்யும் உங்கள் செயல் தமிழ் சரித்திரத்தில் உங்களுக்கு ஒரு இடம் பிடித்துத் தரும்.மேன்மேலும் காரியவெற்றியடைய வாழ்த்துகிறேன். தமிழன்னை வேண்டுகிறேன். கவிதைகணேசன்

    ReplyDelete
  6. வாழ்த்துக்களும்.,மனமுகிழ்தத நன்றியும் சகோதரி.

    ReplyDelete
  7. அங்கு உள்ள தமிழ்ச்சுவடிகளுக்கு விரிவான அட்டவணை உள்ளதா. அதையும் பதிவிட்டால் நல்லது. தங்களது தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துகள்

    ReplyDelete
  8. தங்களின் கட்டுரை மிக மிக அருமையாக உள்ளது. எனக்கு கணினி பற்றிய அறிவு அவ்வளவு கிடையாது. ஏதேச்சையாக இந்தப் பகுதியைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. தங்களின் இந்தப் பணி மென்மேலும் தொடர ஆண்டவனை மனமார வேண்டுகிறேன். நன்றி. வணக்கம்.

    ReplyDelete