Thursday, March 24, 2016

6. திருக்குறளுக்கு ஒரு நூலகம்



6. திருக்குறளுக்கு ஒரு நூலகம்.

திருக்குறள் அதிகமான உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு இந்திய நூல் என்ற பெருமையைக் கொண்டது. பள்ளி மாணவர்களிலிருந்து, கல்லூரி ஆசிரியர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என்று மட்டுமல்லாது சாதாரன மக்களும் அறிந்து போற்றும் ஒரு நூலாக திருக்குறள் விளங்குகின்றது.

உலகத்தனிச்சிறப்பு மிக்க நூல்களின் வரிசையில் இடம் பெறுகின்ற ஒன்றாகக் கருதப்படும் திருக்குறளுக்கென்றே தனியாக ஒரு நூலகம் ஒன்று தமிழகத்தின் சென்னையில் இருக்கின்றது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? 2006ம் ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளையின் களப்பணிக்காகத் தமிழகம் சென்றிருந்த போது இந்த நூலகத்திற்கு நேரில் சென்று பார்த்து வரும் வாய்ப்பினை உருவாக்கிக் கொண்டேன். அப்போது தமிழ் மரபு அறக்கட்டளையின்  செயலாளராக இருந்த,  மறைந்த திரு.ஆண்டோ பீட்டரும் என் உடன் வர, ஒரு நாள் காலை பொழுது  முழுவதும் இந்தத் திருக்குறள் நூலகத்தில் செலவிட்டு தமிழ் மரபு அறக்கட்டளைக்கான பதிவினை இங்கே மேற்கொண்டேன்.  அந்தப் பதிவுகள் புகைப்படங்களாக, ஒலிப்பதிவு கோப்புகளாக, வீடியோ பதிவாக விளக்கக் குறிப்புக்களாக தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில்http://www.tamilheritage.org/baskaran/baskaran.html என்ற பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றேன்.

திருக்குறளுக்கு மட்டுமென்றே ஒரு நூலகமா? என அய்யம் எழலாம். ஆம். இந்த நூலகம் மிகப்பிரத்தியேகமாக திருக்குறள், திருக்குறள் சார்ந்த நூல்கள், திருக்குறள் மொழிபெயர்ப்புக்கள், திருக்குறள் தொடர்பில் வெளிவந்த ஆய்வு நூல்கள், என்ற வகையில் அமைந்த நூல்களாகச் சேகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, பொதுமக்கள் வாசிப்பிற்கும் ஆய்விற்கும் பயன்படும் வகையில் அமைந்திருக்கின்றது என்பது இதன் தனிச் சிறப்பு.

இந்த நூலகத்தை உருவாக்கி அதனை பொதுமக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுத்தி வருபவர் யார் என்பதையும் இந்த நூலகத்தின் பின்னனி பற்றியும் தெரிந்து கொள்ள பலருக்கும் ஆர்வம் இருக்கலாம். பேராசிரியர். திருக்குறள் பாஸ்கரன் தான் இந்த அரும்பணியை செயலாற்றிக் கொண்டிருப்பவர்.  

மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து படிப்படியாக கல்வியில் சிறப்படைந்து தன் வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டவர் பேராசிரியர். திருக்குறள் பாஸ்கரன். 
 தென்காசியில் உள்ள திருக்குறள் கழகம் தான் இவரது திருக்குறள் மீதான பற்றையும் புலமையையும் அறிந்து போற்றி இவருக்குத் „திருக்குறள் பாஸ்கரன்“ என்ற பட்டப்பெயரை வழங்கி சிறப்பித்தது. தன் இளம் வயதில் குடும்ப சூழல் காரணமாகப் பல சிக்கல்களை அனுபவித்தாலும் கூட கல்வியில் கவனம் செலுத்தி மேண்மையடைந்து, அதன் வழியாகத் தன்னை உயர்த்திக் கொண்டு,  கல்லூரியில் ஒரு பேராசிரியராகப் பணியாற்றி பின்னர் கல்லூரியின் முதல்வராகவும் பணியில் உயர்ந்து, தமிழக கல்லூரி கல்வி மண்டல இயக்குனராகவும் பணியாற்றி பின்னர் ஓய்வு பெற்றார். 

தமது ஏழாம் வயதில் இயற்கை எய்திய தமது தாயாரின் நினைவு மலர் நூலை வாசிக்க நேர்ந்த போது,  தன்  தாயார் திருக்குறளைக் கற்று,  குறள் கூறும் நெறிப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு அமைய,  அந்த உந்துதலில் திருக்குறள் மீது தீராத ஒரு பற்று இவருக்கு ஏற்பட்டது. அதன் அடிப்படியில் தானே திருக்குறளைச் சிறப்பிக்கும் வண்ணம் நூலகம் ஒன்றினை அமைக்க வேண்டும் என்ற ஆவல் இவருக்கு எழ இந்த முயற்சியைத் தொடங்கியிருக்கின்றார். இவரது சேகரிப்பில் இருந்த நூல்களைக் கொண்டே முதலில் சிறிய அளவில் இந்த நூலக உருவாக்கம் நிகழ்ந்தது.

பொறியியல் பட்டம் பெற்று சென்னையில் பணியாற்றி வந்த  தன் ஒரே மகனான   கருணாகரனை துரதிஷ்ட வசமாக ஒரு சாலை விபத்தில் இவர் இழக்க நேரிட்டது. ஈடு செய்ய இயலாத இழப்பு அது. அந்த சோகத்தை வேறொரு வகையில் திருப்பி, தன் மகனின் நினைவாக இந்த நூலகத்தை மேலும் விரிவு படுத்தினார் திருக்குறள் பாஸ்கரன். முழுமையானதொரு  நூலகமாக இது  1992ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் முன்னூறு நூற்களுடன் மட்டுமே தொடங்கிய இந்த நூலகம் தற்சமயம் 3000க்கும் மேற்பட்ட  நூல்களின் சேகரிப்புடன் இருக்கின்றது. இரண்டு மாடி வீடான இந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தையும் முதல் மாடியையும் முழுமையாக நூலகமாக உருவாக்கியிருக்கின்றார் இவர். இரண்டாம் மாடியை தன் மகனின் நினைவு இல்லமாக உருவாக்கி அதில் மறைந்த தன் மகன் கருணாகரன் பயன்படுத்திய பொருட்களை காட்சிக்கு வைத்திருக்கின்றார். „குறளகம்“ என்ற இந்த நூலகத்தைக் கருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்“ என்று பெயரிட்டு பொதுமக்கள் பயனுறும் வண்ணம் செயல்படுத்தி வருகின்றார். 

இந்த நூலகத்தில் திருக்குறள் சார்ந்த,  குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உதாரணமாக
  • நாள்தோறும் திருக்குறளை மக்களுக்கு அறிவித்தல் எனும் நடவடிக்கை “நாள்தோறும் இன்று ஒரு குறள்“ என்ற தலைப்பில் சென்னையிலுள்ள அறிஞர் அண்ணா  கோபுரப்பூங்காவில் செயல்படுத்தப்படுகின்றது.
  • ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை  தோறும் காலை பத்து மணிக்கு குழந்தைகளுக்கான திருக்குறள் அறிமுக வகுப்பு நடைபெறுகின்றது.
  • தமிழ் மொழி ஆராய்ச்சி மாணவர்கள் இந்த நூலகத்தை தம் ஆய்வுகளுக்காக பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இளங்கலை, முதுகலை, முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் இங்குள்ள நூல்களை தங்கள் ஆய்வுக்கு பயன்படுத்டிக் கொள்ள இங்கே வந்து இருந்து வாசித்து குறிப்பெடுத்துச் செல்கின்றனர்.
  • நூலகத்தின் உறுப்பினர்களுக்கு நூலகத்தின் இரவல் பிரிவிலிருந்து நூல்கள் இரவலாக வழங்கப்படுகின்றது.
  • திருக்குறள் தொடர்பான நூல்கள் விற்பனையும் இங்கே உள்ளது.
  • புரவலர் சேர்க்கை என்ற திட்டத்தின் படி இந்திய ரூபாய் 1330  வழங்கி இந்த நூலகத்துக்குப் புரவலராக இருக்க விரும்புபவர்கள் தம்மையும் இந்த நூலகத்தோடு இணைத்துக் கொள்ள வாய்ப்பும் உள்ளது. இந்த வகையில் மறைந்த குன்றக்குடி ஆதீனத்தின் தலைவர் பொன்னம்பல அடிகளார் இதன் முதல் புரவலராக இணைந்தார். நான் அங்கிருந்த வேளையில் இந்த நூலகத்தின் செயல்பாடுகளின் மேல் ஆர்வம் கொண்டு 1330 ரூபாயைச் செலுத்தி புரவலாராக என்னையும் இணைத்துக் கொண்டேன்.    

இந்த நூலகம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் காலை 09:00 மணியிலிருந்து மாலை 06:00 மணி வரையில் தனது சேவையை வழங்கி வருகின்றது.

நூலக முகவரி: குறளகம் X33, மூன்றாம் முதன்மை சாலை, அறிஞர் அண்ணாநகர், சென்னை என்பதாகும்.

திருக்குறள் பாஸ்கரன் அவர்களுடன் இந்தப் பதிவின் போது உரையாடிக் கொண்டிருந்த போது தமிழ் மொழியைப் பிழையின்றி எழுதுவது, பேசுவது ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றியும் ஈடுபாட்டுடன் விவரித்தார். தமிழகத்திலேயே கூட அறிவிப்புப் பலகைகளில் காணப்படக்கூடிய பிழையான சொல் பயன்பாடுகள் சில வேளைகளில் கேலிக்குறியனவாக இருக்கின்றன. சுவரொட்டிக்ள், துண்டறிக்கைகள், அறிவிப்புச் செய்திகள் என தயாரிப்பவர்கள் தமிழை பிழையின்றி எழுதுவதில் கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியம். தமிழ் மொழி சொல்வளம் நிறைந்த ஒரு மொழி. ஒரு சொல்லிற்கு பல பொருட்களைக்காணக்கூடிய அதே வேளை, எழுத்தில் சிறு மாற்றம் வரும் போது, ஒரு சொல் முற்றிலும் மாறுபட்டதொரு  பொருளைத் தரக்கூடிய வடிவம் பெருவதை நாம் அறிந்திருக்கின்றோம். சில வேளைகளில் நாம் சாதாரண பிழைதானே என நினைக்ககூடிய எழுத்துப் பிழைகள் மிகத் தவறான பொருளைக் குறிக்கும் வாக்கியத்தை உருவாக்கும் அபாயமும் இருக்கின்றது. ஆக, தமிழை சரியாகப் பயன்படுத்துவதும் தூய தமிழை பயன்படுத்துவதும் தமிழ் மொழி வளர உதவும் என்பது இவரது சிந்தனையாகவும் இருக்கின்றது.

எனது தமிழகக் களப்பணிகளில் பலவகைப்பட்ட மனிதர்களைச் சந்தித்திருக்கின்றேன். சிலர் வாழ்க்கையில் தாம் எதிர்கொள்ளும் சோக நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு நிதானமிழந்து  தன் வாழ்க்கையைச் சீர்குலைத்துக் கொள்ளும் நிலை சிலருக்கு ஏற்படுகின்றது. சிலர் தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சோகத்தை மறைக்க பிறரது வாழ்க்கையில் துன்பத்தை உருவாக்கும் சூழலையும் பார்க்கின்றோம். ஆனால், தன் வாழ்வில் நடந்த துன்ப நிகழ்வை மறக்க ஆக்கப்பூர்வமானதொரு செயல்பாட்டினைச் செய்து பொதுமக்களுக்கும், தமிழுக்கும் சேவையாற்றிக் கொண்டிருப்பவராக பேரசிரியர் திருக்குறள் பாஸ்கரன் அவர்கள் செயல்படுகின்றார். இவரைப் போல தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இயங்கும் தன்னார்வலர்கள் பலர் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் பொதுவாகவே தகவல் ஊடகங்களின் பார்வையில் இத்தகையோரது செயற்பாடுகளும் ஆக்கங்களும் தென்படுவதில்லை என்பது ஒரு குறை தான்.!


1 comment:

  1. ///திருக்குறள் அதிகமான உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்ட /ஒரு இந்திய நூல்/ என்ற பெருமையைக் கொண்டது. /// இந்தக் கருத்து பிழையானது...
    ---------
    திருக்குறள் அதிகமான உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்ட //ஒரு தமிழ் நூல்// என்ற பெருமையைக் கொண்டது. என்று எழுதுவதே சரியானது.

    ReplyDelete